தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 26
1975ஆம் ஆண்டு யூலை மாதம் 27ஆம் திகதி பொன்னாலை என்னும் ஊரின் வரதராஜப் பெருமாள் கோயில் வாசலின் முன்னால் வைத்து துரையப்பா மீதான படுகொலை நிகழ்த்தப்பட்டது. அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபன் தயாரித்துக் கொடுத்த திட்டமொன்றின்படியே பிரபாகரன் இப்படுகொலையை நிறைவேற்றியிருந்தார். பொலிசாரின் கெடுபிடிகளில் இருந்து தப்ப கொலையாளி பிரபாகரனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களின் (அமிர்தலிங்கம், தர்மலிங்கம்) மனைவிமார் நகைகளைக் கழட்டிக் கொடுத்து உதவி செய்தும் இருந்தனர். (‘ஈழப்போராட்டத்தின் எனது சாட்சியம்’ பக்:160)
1975ஆம் ஆண்டு யூலை மாதம் 27ஆம் திகதி பொன்னாலை என்னும் ஊரின் வரதராஜப் பெருமாள் கோயில் வாசலின் முன்னால் வைத்து துரையப்பா மீதான படுகொலை நிகழ்த்தப்பட்டது. அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபன் தயாரித்துக் கொடுத்த திட்டமொன்றின்படியே பிரபாகரன் இப்படுகொலையை நிறைவேற்றியிருந்தார். பொலிசாரின் கெடுபிடிகளில் இருந்து தப்ப கொலையாளி பிரபாகரனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களின் (அமிர்தலிங்கம், தர்மலிங்கம்) மனைவிமார் நகைகளைக் கழட்டிக் கொடுத்து உதவி செய்தும் இருந்தனர். (‘ஈழப்போராட்டத்தின் எனது சாட்சியம்’ பக்:160)
இந்த நிகழ்வுகள் தான் “தமிழ்” அரசியலில் துரோகிகள் என்று யாரையும் சுட்டுக் கொல்லலாம் என்னும் வரலாற்றை தொடங்கி வைத்தது. இந்த சித்தாந்தம் எந்த மூளையில் இருந்து பிறந்ததோ அந்த மூளைக்குரிய மனிதன் அதே சிந்தாந்தத்துக்கு பின்னாளில் பலியாகிப் போனதையும் தவிர்க்க முடியவில்லை.
இந்த நிகழ்வுகள்தான் “தமிழ்” அரசியலில் துரோகிகள் என்று யாரையும் சுட்டுக் கொல்லலாம் என்னும் வரலாற்றை தொடங்கி வைத்தது. இந்த சித்தாந்தம் எந்த மூளையில் இருந்து பிறந்ததோ அந்த மூளைக்குரிய மனிதன் அதே சிந்தாந்தத்துக்கு பின்னாளில் பலியாகிப் போனதையும் தவிர்க்க முடியவில்லை. இவற்றையெல்லாம் முன்னுணர முடியாமல் அமிர்தலிங்கம் போன்றவர்கள் தமது தலைமைப் போட்டிகளுக்காக கண்மூடித்தனமாக இளைஞர்களை வெறியூட்டி வளர்த்தார்கள்.
தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைத்த அரசியலுக்கு வெளியே எந்தவிதமான கட்சிகளினதும் செயற்பாடுகள் இருக்கக்கூடாது எனும் நோக்கில் அவையனைத்தையுமே துரோகம் எனும் சமூகரீதியான ஒரு உளவியல் மனப்பாங்கை உருவாக்கும் பணியில் கூட்டணியின் பேச்சாளர்கள் முக்கிய பங்காற்றினர். த.வி.கூட்டணி தவிர்ந்த வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிடுவதோ, அவற்றோடு இணைந்து செயற்படுவதோ, அவற்றுக்கு ஆதரவளிப்பதோ கூட மரண தண்டனைக்குரிய குற்றமாகும் என்கின்ற எச்சரிக்கையுடனான செய்தியையே துரையாப்பாவின் கொலை எங்கும் பரப்பியது.
ஆகவே வடக்கு கிழக்கு மக்கள் விரும்பியோ விரும்பாமலோ புரிந்தோ புரியாமலோ இந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் அலைக்குள் அமிழ்த்தப்பட்டார்கள். 1977ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த நேரம் தமிழர்விடுதலைக் கூட்டணி யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் தனது முதலாவது மாநாட்டைக் கூட்டியது. அந்த மாநாட்டில் இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் விருப்பம் என்பது சுதந்திர தமிழீழத்தை அடைவதே என்ற பிரகடனத்தை நிறைவேற்றினர். 14-05-1976 இல் நிறைவேற்றப்பட்ட இந்த பிரகடனமே இன்றுவரை “வரலாற்று புகழ்மிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானம்” என புகழப்படுகிறது. இதன்படி தமிழீழம் பெறுவதே ஒரே வழி என்கின்ற கொள்கையை தமிழ் மக்கள் அனைவரினதும் ஏக கொள்கையாக தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பிரச்சாரம் செய்தனர்.
இந்த நேரத்தில் கூட்டணியினரால் தூண்டி விடப்பட்ட இளைஞர் குழாத்தினர் தீவிரவாத நடவடிக்கைகள் மூலம் மக்களின் கவனத்தை இந்த இளைஞர் குழுக்கள் அதிகமாக ஈர்த்தன. இதன் காரணமாக மிதவாதிகளாக இருந்த கூட்டணியினரின் மீதான அபிமானம் திசைதிரும்பத் தொடங்கியது. இன்னிலைமையை சமாளிக்கும் முகமாகவே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை நிறைவேற்றி கூட்டணியினர் ஹீரோக்களாயினர்.
ஆனால் தமிழீழம், தமிழீழம் எனச் சொல்லிக் கொண்டு அடுத்து வரவிருந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதையே நோக்காகக் கொண்டு செயற்பட்டனர். தாம் தேர்தலில் போட்டியிடுவது பாராளுமன்றக் கதிரைகளைக் கைப்பற்றிக் கொள்வதற்கே என்ற பகிரங்கமான அசிங்கத்தை மூடி மறைத்துக் கொண்டு தமிழீழத்துக்கான ஆணை கோரியே தேர்தலில் போட்டியிடுவதாக மக்களிடம் கூட்டணியினர் பிரச்சாரம் செய்தனர்.
பாராளுமன்றக் கதிரைகளை கைப்பற்றுவதற்காக போட்டியிடுகின்ற இவர்கள் தமிழீழத்துக்கான ஆணையை மக்களிடம் எதிர் பார்ப்பதாக சொல்லிக் கொண்டு கொழும்பில் போய் எப்படி தமிழீழத்தைப் பெறப்போகிறார்கள் என்கின்ற கேள்விகள் கிழக்கு மாகாணத்தில் இருந்து அப்போது எழும்பவில்லை.
இந்தத் தேர்தல் நடைபெறுவதற்கு சிலமாத இடைவெளிகளுக்கு முன்பு தான் மு.திருச்செல்வம் (1976-நவம்பர்), ஜீ.ஜீ.பொன்னம்பலம் (1977-பெப்ரவரி), செல்வநாயகம் (1977-ஏப்ரல்) போன்ற பெருந்தலைவர்களினுடைய இயற்கை மரணங்கள் சம்பவித்தன. இச்சோக நிகழ்வுகள் வடகிழக்கு மக்கள் எல்லோரையும் ஒருவித அனுதாப அலையினூடாக ஒன்று சேர்த்தது. இந்த ஒவ்வொரு மரணங்களின் போதும் தன்னையே அடுத்த தலைமையாக திட்டமிட்டு முன்னிறுத்தி வருவதில் அமிர்தலிங்கம் மிகக்கவனமாகவும், வெற்றிகரமாகவும் காய்களை நகர்த்திக் கொண்டே வந்திருந்திருந்தார்.
1977ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலும் இராசதுரையை ஓரம்கட்டிய அமிர்தலிங்கமும்… எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் மறைவுக்குப் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக ஆகும் முழுத் தகுதிகளும் கொண்டிருந்தவர் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினராயிருந்த செல்லையா இராசதுரை அவர்களாகும். 1956ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக மட்டக்களப்பு மக்களால் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி வந்த இவர் தமிழர்கள் மத்தியில் பழம்பெரும் தலைவராக மதிக்கப்பட்டு வந்தவர்.
ஆனால் தனது சொந்த தொகுதி மக்களாலேயே 1970 ஆண்டு தேர்தலில் வட்டுக்கோட்டையில் தோல்வி கண்ட அமிர்தலிங்கம் இராசதுரையின் வளர்ச்சியையோ அவர் தலைவராவதையோ விரும்பியிருக்கவில்லை. 1970 ஆண்டின் பின்னர் அமுலான கல்விதரப்படுத்தல் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்கின்ற தமிழ் தரப்பினரின் முடிவினை கட்சிக்குள்ளேயே ஆட்சேபித்தவர்கள் எனும் வகையில் இராசதுரையும் தங்கத்துரையும் முக்கியம் வாய்ந்தவர்கள். இதன் காரணமாகவும் இவர்கள் மீது அமிர்தலிங்கத்துக்கு இவர்களை ஓரங்கட்டியாக வேண்டும் என்கின்ற நீண்டநாள் திட்டம் இருந்தது.
அத்தோடு யாழ்ப்பாணத்துக்கு வெளியே தமிழ் மக்களுக்கான தலைமைப் பதவி செல்லுகின்ற வாய்ப்பை அமிர்தலிங்கம் போன்றவர்களால் ஜீரணிக்கமுடியவில்லை. இதற்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த த.வி.கூட்டணியின் முக்கியஸ்தர்கள் பலரும் அமிர்தலிங்கத்துடன் சேர்ந்து இராசதுரையை ஓரம் கட்டும் முயற்சிக்கு ஆதரவு அளித்தனர்.
இந்த யாழ்ப்பாணத்தினுடைய மேல்தட்டு வர்க்க பண்பு முதன்முறையாக மட்டக்களப்பு மக்களால் மெதுவாக உணரப்படும் வாய்ப்பினை 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலே வழங்கியிருந்தது. இத்தேர்தலில் தனது வெற்றி வாய்ப்பின் மீது சந்தேகம் கொண்ட அமிர்தலிங்கம் வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட அஞ்சினார். அவ்வேளை தந்தை செல்வாவின் இறப்பினால் அவரது தொகுதியான காங்கேசன்துறைக்கான இடம் வெறுமையானதைப் பயன்படுத்தி அங்கே போட்டியிட முன்வந்தார்.
அதுமட்டுமன்றி மட்டக்களப்பில் இராசதுரையின் வெற்றி வாய்ப்பபுகளை குறைப்பதற்கான சாத்தியப்பாடுகளையும் அதிகரிக்கச் செய்தார். இதற்காக காசி ஆனந்தனையும் மட்டக்களப்பு தேர்தல் களத்தில் இறக்கி தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட வைத்தார் அமிர்தலிங்கம். இந்த முடிவை மட்டக்களப்பின் கூட்டணிக் கட்சிக் கிளைகள் கடுமையாக எதிர்த்தன.
பொத்துவில் தொகுதியில் போட்டியிடுவதற்கு கூட்டணியின் சார்பில் பொருத்தமான ஆள் இல்லாத நிலையில் அங்கு காசி ஆனந்தனைப் போட்டியிட வைக்க முடியும் என அவர்கள் வாதிட்டனர். ஆனாலும் அமிர்தலிஙகத்தின் விடாபிடியும் அதிகாரமும் மட்டக்களப்பு மக்களை பிரித்தாளும் சூட்சியுமே இறுதியில் வெற்றி கொண்டது. அதாவது த.வி.கூட்டணியின் சார்பில் சூரியன் சின்னத்தில் இராசதுரை போட்டியிட தமிழரசுக்கட்சி சார்பில் வீடு சின்னத்தில் காசிஆனந்தனை மட்டக்களப்பில் போட்டியிட வைத்ததன் மூலம் மட்டக்களப்பு தமிழர்களின் வாக்கை இரண்டாகப் பிரிக்கும் முயற்சியை அமிர்தலிங்கம் மேற்கொண்டார். அதனு}டாக இராசதுரையின் வெற்றி வாய்ப்புக்களை இல்லாதொழித்து கட்சிக்குள் முடிசூடா மன்னனாக தானே திகழ வேண்டும் என அமிர்தலிங்கம் கனவு கண்டார். ஒரே கட்சிக்குள்ளேயே கிழக்கில் ஒரு தலைமை உருவாகி விடக்கூடாது என்பதற்காக இந்தக் குழிபறிப்பு அரங்கேறியமையானது எமது வரலாறுகளில் காணக் கிடைக்கும் உண்மைகள்.
காசி ஆனந்தன் மட்டக்களப்பைச் சேர்ந்தவரே ஆயினும் ஒரு யாழ்ப்பாண ஆதிக்க சூதில் அகப்பட்டு பகடைக்காயானார். இராசதுரையின் வெற்றி வாய்ப்புக்களை குறைப்பதற்காக காசி ஆனந்தனுக்கு பிரச்சார உதவிகளை அமிர்தலிங்கம் திட்டமிட்டு தயார் செய்தார். யாழ்ப்பாணத்தில் இருந்து ஈழவேந்தன், கோவை மகேசன், மாவை சேனாதிராஜா போன்ற உணர்ச்சிமிகு பேச்சாளர்களும் மட்டக்களப்பில் முகாமிட்டு தங்கி காசி ஆனந்தனுக்காக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காசி ஆனந்தனுக்கு மட்டும் வழங்கப்பட்ட இந்தப் பிரச்சாரங்களின் முன்னுரிமையானது மட்டக்களப்பு மக்களின் சந்தேக நரம்புகளை மெல்லியதாக அரட்டி விட்டது.
இதன் காரணமாக மட்டக்களப்பில் படித்த இளைஞர் கூட்டம்; இராசதுரையை வெல்ல வைப்பதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு பிரச்சாரக் களத்தில் குதித்தனர். மட்டக்களப்பில் நடந்த இறுதி நாள் பிரச்சாரக் கூட்டத்தில் இராசதுரையே கட்சிக்குள் நடக்கும் குழிபறிப்பை பகிரங்கமாகவும் மக்களிடம் வெளிப்படுத்தினார். யாழ்ப்பாணமா? மட்டக்களப்பா? என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என அவர் உரையாற்றினார்.
இறுதியில் காசி ஆனந்தன் படுதோல்வியடைய வழமை போல் இராசதுரையே மட்டக்களப்பில் முதலாவது எம்.பியாக தெரிவானார். இந்தத் தேர்தலில் இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில் இருந்து இரண்டாவது எம்.பியாக ஐ.தேசியக் கட்சியைச் சேர்ந்த பரீட் மீராலெப்வை தெரிவு செய்யப்படார்.
தேர்தலில் வென்ற இராசதுரை தமிழ் அரசியல் வானில் தன்னை ஒரு தமிழனாக அன்றி மட்டக்களப்பானாகவே நடாத்தி கேவலப்படுத்திய யாழ்ப்பாணத் தலைமைகளின் புறக்கணிப்பிற்கு பாடம் புகட்ட எண்ணி விரக்தியுற்று யு.என்.பி. அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டார். கட்சிமாறி யு.என்.பி.யில் சேர்ந்தது பெரும் துரோகம் என்று அமிர்தலிங்கம் உட்பட யாழ்ப்பாணத் தலைமைகள் கூக்குரலிட்டன. ஆனால் மட்டக்களப்பு மக்களுக்கு அமிர்தலிங்கத்தினுடைய கீழ்த்தரமான அரசியல் சூதுகளுக்கு முன்னால் இராசதுரை கட்சிமாறியது ஒன்றும் துரோகமாகப்படவில்லை. இராசதுரை யாழ்ப்பாணத் தலைமைகளுக்கு தகுந்த பாடம் கற்பித்ததாகவே அவர்கள் பேசிக்கொண்டார்கள்.
இருந்தபோதிலும் இந்த தேர்தலில் 13 ஆசனங்களை பெற்றுக் கொண்ட த.வி.கூட்டணி இலங்கையில் வரலாற்றின் முதலாவது தடவையாக பிரதான எதிர்கட்சியாகும் வாய்ப்பு பெற்றது. சிறிலங்கா சுதந்திரக்கட்சியடைந்த படுதோல்வியே த.வி.கூட்டணிக்கு இந்த வாய்ப்பை வழங்கியது. ஆனால் இலங்கையின் எதிர்கட்சியாகிவிட்ட தகுதி ஒன்றே தமக்கு தமிழீழக் கோரிக்கைக்கான ஆணையை வழங்கி விட்டதாக பரபரப்பாக த.வி.கூட்டணி பிரச்சாரத்தில் ஈடுபட்டது. இந்த ஆணையைத் தான் இன்றுவரை தமிழீழ விடுதலைப் புலிகளும் முன்னிறுத்திப் பேசிவந்தனர்.
இதேவேளை தேர்தல் வெற்றி வாய்ப்புகளுக்காக யாழ்ப்பாணத்தில் வன்முறைகளுக்கு தூபமிட்டு வந்த தமிழ்த் தலைமைகளின் செயற்பாடுகள் அங்கிருந்த இளைஞர் குழாமை தீவிரவாதப் பாதைக்கு அணிதிரட்டியிருந்தது. ஆகவே அவர்கள் த.வி.கூட்டணி பெற்றுக் கொண்ட ஆணையைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தில் தமிழீழத்தை பிரகடனப்படுத்துமாறு அமிர்தலிங்கத்துக்கு நெருக்குவாரம் கொடுத்தனர். தேர்தல் கணக்கு வழக்குகளை அனுசரித்து தமிழ்த் தலைமைகள் மேற்கொண்ட தில்லுமுல்லுத் தனமாக வட்டுக்கோட்டைத் தீர்மானமும் தேர்தலில் தமிழீழத்துக்கு மக்களிடம் ஆணைகேட்ட கோமாளித்தனமும் தமிழீழம் பற்றிய கற்பனாவாதப் பிரச்சாரங்களும் உண்மையென்றே இந்த இளைஞர்குழாம் நம்பியிருந்தது.
அதன்காரணமாகவே பாராளுமன்றத்தில் தமிழீழத்தை பிரகடனப்படுத்தக் கோரி அமிர்தலிங்கத்துக்கு அவர்கள் நெருக்குவாரம் கொடுத்தனர். ஆனால் இவை அனைத்தும் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணி பண்ணிய வெற்று கயமைத்தனங்கள் என்பதை அந்த இளைஞர்கள் புரிந்திருக்கவில்லை. ஆனால் அமிர்தலிங்கமும் அவரது பரிவாரங்களும் தமது உண்மையான இலக்குகளில் கவனமாகவே இருந்தனர்.
தேர்தலில் தமக்கு போடப்படுகின்ற ஒவ்வொரு வாக்கும் தமிழீழத்துக்காகப் போடப்படுகின்ற ஒவ்வொரு ஆணையாகும் என்று தமிழ் மக்களை உசுப்பி விட்டு உணர்ச்சி மேலிட்ட இளைஞர்களிடம் இருந்து இரத்தத் திலகம் பெற்றுக் கொண்ட அமிர்தலிங்கம் போன்றவர்கள் தமது சந்தர்ப்பவாத அரசியலில் சங்கமமானார்கள். இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் சட்டதிட்டங்களுக்கும் இறைமைக்கும் விசுவாசமாக நடப்போம் என்று இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் முன்னிலையில் சத்தியம் செய்து எதிர்கட்சி ஆசனங்களில் அமர்ந்து கொண்டார்கள்
தொடரும்
2 comments: on "அல்பிரட் துரையப்பாவின் படுகொலையும் வட்டுக்கோட்டைத் தீர்மானமும்."
வீர தமிழா உன் சிறப்பு மென்மேலும் பெருகட்டும், நல்ல பதிவு நண்பா. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந் வாழ்த்துக்கள்
//சசிகுமார் கூறியது...
வீர தமிழா உன் சிறப்பு மென்மேலும் பெருகட்டும், நல்ல பதிவு நண்பா. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந் வாழ்த்துக்கள்//
உங்கள் கருத்துக்களுக்கும் வரழத்துக்களுக்கும் நன்றி நண்பா..
Post a Comment