Wednesday 29 July 2009

தமிழ் மொழியை வளர்ப்பது யார்? தமிழ் மொழியை கொலை செய்வது யார்?..


ஊடகங்களில் தமிழ் கொலை செய்யப் படுகிறதா.. எனும் எனது இடுகை மூலம் பலரும் தமது மனங்களிலே இருந்த உள்ளக் குமுறல்களை கருத்துக்களாக வெளியிட்டு இருந்தனர். காத்திரமான பல கருத்துக்கள் வந்திருந்தன. அந்தக்கருத்துக்களை பார்த்தபோது இந்த விடயம் தொடர்பாக இன்னுமோர் இடுகையின் மூலம் சில விடயங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று ஒரு எண்ணம் என் மனதிலே தோன்றியது. இதனால் இன்னும் பல ஆக்கபூர்வமான கருத்துக்களை பெறமுடியும் என்று நினைக்கிறேன்.


இந்த இடுகையின் மூலம் எந்த ஒரு ஊடகத்தையோ, ஊடகவியலாளரையோ குற்றம் சுமத்துவது என் நோக்கமல்ல. இன்று தமிழ் மொழிக் கொலை என்று வந்தாலே எல்லோரும் குற்றம் சாட்டுவது குறிப்பாக இலத்திரனியல் ஊடகங்களையே. தமிழ் மொழியினை கொலை செய்கின்ற ஊடகங்கள் இருக்கின்ற வேளை தமிழ் மொழியினை வளர்ப்பதிலே பல தமிழ் ஊடக நிறுவனங்களும், தமிழ் ஊடகவியலாளரும் பாடு படுகின்றார்கள் என்பதனை எவரும் மறுக்க முடியாது.


ஒரு சிலர் செய்கின்ற தவறுக்காக எல்லோரையும் குற்றம் சொல்வது சரியல்ல. தமிழ் கொலை செய்கின்ற ஊடகங்களும் ஊடகவியலாளரும் திருந்த வேண்டும். என்பதோடு நாகரிக மோகத்தில் தமிழ் மொழியோடு வேற்று மொழிகளை கலப்பதனையுமே நான் தவறு என்று சொல்கிறேன்.


வானொலி, தொலைக்காட்ட்சி போன்றவற்றிலே அறிவிப்பாளர்கள் விடுகின்ற மொழி உச்சரிப்பு, வேற்றுமொழிக் கலப்பு தொடர்பாகவே பலரும் பேசி இருந்தனர். இந்த இடத்திலே ஒன்றைக் குறிப்பிட வேண்டும் நானும் ஒரு ஊடகவியலாளன்தான், ஒரு அறிவிப்பாளன். நான் தமிழ் மொழி தவறாக உச்சரிப்பதனையும், ஆங்கில வார்த்தைகள் தேவையற்று அதிகம் பயன் படுத்துவதனையும் முற்றாக வெறுப்பவன். தமிழை தமிழாக பயன் படுத்த நினைப்பவன்


ஒரு சிலர் குறிப்பிட்டிருந்தார்கள் நாமும் நாகரிகத்துக்கு ஏற்றாற்போல் மாற வேண்டுமென்று. நான் மாற வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் எமது தமிழ் பாரம்பரியங்களையும், தமிழ் மொழியின் சிறப்பினையும் நாகரிகமென்ற போர்வையில் சாகடிப்பதா.

நான் வேற்று மொழிகளை முற்றாக புறக்கணிக்க வேண்டுமென்று சொல்லவில்லை. ஆங்கில மொழியினை பயன் படுத்த வேண்டிய இடங்களுக்கு பயன்படுத்தத்தான் வேண்டும். அதற்காக தேவையற்ற விதத்தில் அதிகமாக பயன்படுத்தலாமா. இன்று ஆங்கில மொழியினை தமிழ் மொழியோடு பயன் படுத்துவது அதிகரித்து வருகின்றது. அன்று ஒரு பத்து வீதமாக இருந்தது என்று வைத்துக் கொள்வோம் இன்று இருபது வீதமாக அதிகரித்து விட்டது என்றால் எதிர் காலத்தில் தமிழோடு ஆங்கில மொழி பயன்பாடு அறுபது வீதமாக அதிகரித்து விட்டது என்று வைத்துக் கொள்வோம் அந்த மொழியினை தமிழ் மொழி என்பதா அல்லது வேறு ஒரு மொழி என்பதா? போகிற போக்கில் நடக்காமல் விடலாம் என்று சொல்ல முடியாது. தமிழ் மொழி மறைகின்ற நிலைக்கு தமிழர்களாகிய நாம் பங்காளிகளாக இருக்கலாமா.


சில ஆங்கில சொற்களை நாங்கள் பயன்படுத்தியே ஆகவேண்டும். இருந்தாலும் எமது தமிழ் மொழியிலே பல இனிய சொற்கள் இருக்கின்றன. ஒரு சிலரின் குற்றச் சாட்டு சில தமிழ் சொற்கள் எல்லோருக்கும் தெரியாது அதனால் ஆங்கில சொற்களை பயன்படுத்துகிறோம் என்று. இக் கருத்தினை முற்று முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாது.


இன்று இலங்கையின் ஊடகங்களிலே தொடருந்து, சிற்றுந்து, உலங்குவானூர்தி, துவிச்சக்கர வண்டி, மிதி வண்டி, காலுந்து, வெதுப்பி, குளிர்களி.. இன்னும் பல.. இனிய தமிழ் சொற்கள் பாவிக்கப்படுகின்றன. (வெளிநாட்டை பொறுத்தவரை எப்படி என்பது தெரியவில்லை) இந்த சொற்களை பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை எல்லோரும் இன்று ஏற்றுக் கொள்கின்றனர். இந்த சொற்களின் அறிமுகம் எப்போது வந்தது?. ஆரம்பகாலத்தில் இருந்து ஊடகங்களிலே பயன்படுத்தப்பட்டு வந்ததா என்றால் இல்லை. அதிகமானவர்களுக்கு அன்று இந்த சொற்கள் தமிழிலே இருக்கின்றது என்பதே தெரியாது. என்னையும் சேர்த்து.


ஊடகங்களால் முடியாதது எதுவும் இல்லை. தமிழை வளர்ப்பதிலே பல ஊடகவியலாளர்கள் பாடுபட்டிருக்கின்றார்கள். அதன் பயனாகவே இன்று இந்தச் சொற்கள் மக்களால் பயன்படுத்தப் படுகின்றன.



அன்று தொட்டு இன்றுவரை பல ஊடகவியலாளர்கள் தமிழ் மொழி வளர்ச்சியில் பங்காற்றி வருகின்றனர். இந்த இடுகையின் கருத்தாடல்களிலே தனது கருத்துரைகளையும் வழங்கிய லோஷன் கூட தமிழ் மொழியினை வளர்ப்பதில் பாடுபட்டு வரும் ஒருவர். நான் மேலே குறிப்பிட்ட தொடருந்து, சிற்றுந்து, உலங்குவானூர்தி, துவிச்சக்கர வண்டி, மிதி வண்டி, காலுந்து, வெதுப்பி, குளிர்களி.. போன்ற சொற்களை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் லோஷன் என்று சொன்னால் மிகையாகாது. அவர் இதற்கு முன்னர் பணியாற்றிய வானொலியிலே, அவர்களின் கூட்டு முயற்சியிலே இந்த சொற்களை பாவனைக்கு கொண்டு வந்தார்கள். அப்போது ஒரு சிலர் மக்களுக்கு விளங்கவில்லை என்று எதிர்த்தனர். ஆனால் இன்று எல்லாராலும் இந்தச் சொற்கள் பயன் படுத்தப் படுகின்றன.


ஊடகங்களிலே இது போன்ற பாவனையில் இல்லாத சொற்களை அறிமுகம் செய்கின்றபோது காலப்போக்கில் பாவனைக்கு கொண்டு வர முடியும். அதற்காக எல்லாச் சொற்களையும் வேற்று மொழிச் சொற்களையும் தமிழ் படுத்த முடியாது என்பதனையும் ஏற்றுக் கொள்கிறேன். அவற்றை ஒரு பக்கம் வைத்துவிட்டு தேவையற்ற வேற்றுமொழி கலப்பை தவிர்க்க வேண்டும் என்பதே எனது கருத்து.


என் நாம் இன்று வலைப்பதிவுகளிலே இடுகை, அமுக்கவும் போன்ற இனிய சொற்களை பாவிக்கின்றோமே. இன்று இணையமும் கூட ஒரு வகையில் தமிழை வளர்க்கின்றது என்று சொல்லலாம்.


அடுத்து வானொலி, தொலைக்காட்சிகளிலே தமிழ் கொலை செய்யப்படுகின்றன என்ற விடயத்துக்கு வருகின்றேன். நவின உலகத்துக்கு ஏற்றாற்போல் இன்று எல்லாமே மாறி வருகின்றன இதற்கு வானொலி தொலைக்காட்சிகளும் விதிவிலக்கல்ல. கடுமையான போட்டித்தன்மைகளுக்கு மத்தியிலே தாம் நிலைத்திருக்க வேண்டுமானால். காலத்துக்கேற்ற சில மாற்றங்களையும் இன் நிறுவனங்கள் செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது.


இதற்காக இவர்கள் நினைத்த எதனையும் செய்யலாமா இன்று சிலர் தாம் நினைத்தபடி மாறுதல் என்ற பெயரில் தமிழ் கொலை செய்து கொண்டு இருக்கின்றனர். வானொலி, தொலைக்காட்சிகளின் போட்டித்தன்மை காரணமாக நிலைத்திருக்க வேண்டுமானால் சில ஊடக நிறுவனங்கள் மாற்றங்களை செய்யத்தான் வேண்டும். இன்று பல ஊடக நிறுவனங்கள் பேச்சுத்தமிழை பயன்படுத்துகின்றன. பேச்சுத்தமிழில் பேசுகின்றபோது எல்லோருக்கும் இலகுவாக விளங்கிக் கொள்ளமுடியும். இது ஒரு புறமிருக்க இதனை ஒரு சாட்டாக வைத்து வேற்று மொழி கலந்து பேசுவதை சில அறிவிப்பாளர்கள் கடைப்பிடிப்பதுதான் கவலைக்குரிய விடயம்.


சில அறிவிப்பாளர்கள் விடுகின்ற தவறுகளை சொல்வதென்றால் அதற்கென ஒரு வலைப்பதிவு தொடக்கி எழுதிக்கொண்டே போகலாம். அறிவிப்பாளர்கள் எல்லோரும் பிழை விடுவதில்லை, தமிழை கொலை செய்வதில்லை சில அறிவிப்பாளர்கள் இருக்கின்றார்கள் லகர ழகர ளகர தெரியாமல் திண்டாடுகின்றனர். அது மட்டுமல்ல சில தமிழ் சொற்கள் அவர்களின் வாயில் இருந்து வருவதற்கு கஸ்ரப்படுகிறது.


சில அறிவிப்பாளர்கள் இனிய தமிழை மறந்து அளவுக்கு அதிகமாக ஆங்கில வார்த்தைகளை பயன் படுத்துவது என். இவர்களுக்கு தமிழ் தெரியாதா. தமிழ் தெரியவில்லை என்றால் ஏன் தமிழ் அறிவிப்பாளராக வந்தார்கள். ஆங்கில அறிவிப்பாளராக போயிருக்கலாம்தானே. இவர்கள் விடுகின்ற தவறுகளும் ஓட்டு மொத்த அறிவிப்பாளர்களையும் பாதிக்கும் என்பதை இவர்கள் உணர்ந்து திருந்துவதே நல்லது (திருந்துவார்களா)


இன்று பல ஊடக நிறுவனங்களும், ஊடகவியலாளரும் தமிழ் மொழி வளர்ச்சியிலே பங்காற்றி வருகின்றார்கள் என்பதை எவராலும் மறுக்கமுடியாது.



மக்களால் பயன் படுத்தப்படாமல் இருக்கின்ற தமிழ் சொற்களை மக்களுக்கு அறிமுகம் செய்து வேற்று மொழிக்கலப்பை தடுக்க ஊடகங்களால் முடியும் என்பதே உண்மை.



எது எப்படி இருப்பினும் தமிழை தமிழாக பயன் படுத்த வேண்டும். தாய் மொழியினை தமிழாகக் கொண்ட எல்லோரும் தமிழ் மொழி வளர்ச்சியிலே பங்கெடுக்க வேண்டும். என்பதே என் கருத்தாகும்

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

63 comments: on "தமிழ் மொழியை வளர்ப்பது யார்? தமிழ் மொழியை கொலை செய்வது யார்?.."

Radhakrishnan said...

அற்புதமான கட்டுரை. எனது நாவலைப் பார்த்துவிட்டு நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கின்றன, இருந்தாலும் ஆங்கில வார்த்தைகள் தவிர்க்கப்பட்டு இருக்கின்றன என ஒருவர் குறிப்பிட்டார். தமிழ் நாவலில் ஆங்கிலம் கலப்பது என்பது சரி எனும் மனநிலைக்குத் தள்ளப்பட்டதால்தான் அப்படி ஒரு எண்ணம் அவருக்கு வந்திருக்க வேண்டும்.

பொதுவாக எழுத வரும்போது எழுத்து இலக்கணம் அறிந்து எழுதுவது எழுத்துக்கு அழகைக் கூட்டித்தரும். ஆனால் எழுத்து இலக்கணம் படித்து எழுதும் அளவுக்கு என்னை இன்னமும் தயார்படுத்திக்கொள்ளவில்லை. ஆனால் இது ஒரு மனக்குறையாகவே இருக்கிறது.

மேலும் வலைப்பூக்களில் எழுதப்படும் தமிழ் கண்டு வேதனைப்படத்தான் முடிகிறது. கொச்சையான வார்த்தைகளை இச்சையுடன் எழுதித் தீர்க்கிறார்கள். வசைபாடுவது என இருந்தாலும் தமிழில் அழகுடன் எழுதும்போது அவை முகச்சுளிப்புதனை உருவாக்குவதில்லை.

தமிழை வளர்க்க வெகு சிலரே பாடுபடுகிறார்கள். எண்ணங்களை கொண்டுச் சேர்க்க அலங்கார மொழித் தேவையில்லை என்கிற நிலைக்கு மொழி சீர்குலைந்து போய்க்கொண்டிருக்கிறது.

முனைவர்.இரா.குணசீலன் said...

நான் தமிழ் மொழி தவறாக உச்சரிப்பதனையும், ஆங்கில வார்த்தைகள் தேவையற்று அதிகம் பயன் படுத்துவதனையும் முற்றாக வெறுப்பவன். தமிழை தமிழாக பயன் படுத்த நினைப்பவன்/

முனைவர்.இரா.குணசீலன். said...

நான் தமிழ் மொழி தவறாக உச்சரிப்பதனையும், ஆங்கில வார்த்தைகள் தேவையற்று அதிகம் பயன் படுத்துவதனையும் முற்றாக வெறுப்பவன். தமிழை தமிழாக பயன் படுத்த நினைப்பவன்/

மிகவும் மகிழ்வாகவுள்ளது.

முனைவர்.இரா.குணசீலன் said...

சில அறிவிப்பாளர்கள் இனிய தமிழை மறந்து அளவுக்கு அதிகமாக ஆங்கில வார்த்தைகளை பயன் படுத்துவது என். இவர்களுக்கு தமிழ் தெரியாதா. தமிழ் தெரியவில்லை என்றால் ஏன் தமிழ் அறிவிப்பாளராக வந்தார்கள். ஆங்கில அறிவிப்பாளராக போயிருக்கலாம்தானே. இவர்கள் விடுகின்ற தவறுகளும் ஓட்டு மொத்த அறிவிப்பாளர்களையும் பாதிக்கும் என்பதை இவர்கள் உணர்ந்து திருந்துவதே நல்லது (திருந்துவார்களா) /

திருந்த வேண்டும்....

எனது இவ்விடுகையைப் பார்த்தீர்களா?

http://gunathamizh.blogspot.com/2009/04/blog-post_28.html

நேசமித்ரன் said...

சந்த்ரு
ஆக்க பூர்வமான கட்டுரை
மிக மகிழ்வளிக்கிறது

வந்தியத்தேவன் said...

// நான் மேலே குறிப்பிட்ட தொடருந்து, சிற்றுந்து, உலங்குவானூர்தி, துவிச்சக்கர வண்டி, மிதி வண்டி, காலுந்து, வெதுப்பி, குளிர்களி.. போன்ற சொற்களை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் லோஷன் என்று சொன்னால் மிகையாகாது.//

மன்னிக்கவும் லோஷன் அறிவிப்பாளராக வரமுன்னரே இந்தச் சொற்கள் பாவனைக்கு வந்துவிட்டன. வீணாக நல்லதொரு அறிவிப்பாளரின் பெயரைக் கெடுப்பதுபோல் இப்படி எழுதுகிறீர்கள். சிலவேளை லோஷனினால் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம்.

பழமைபேசி said...

புலவர்கள் இடது கோடியிலும், ஊடக மற்றும் எழுத்தாளர்கள் வலது கோடியிலும் இருந்து கொண்டு சாமான்யனைத் தமிழிடமிருந்து பிரிக்கிறார்கள். தமிழா விழித்துக் கொள்!

Admin said...

// வெ.இராதாகிருஷ்ணன் கூறியது...
அற்புதமான கட்டுரை. எனது நாவலைப் பார்த்துவிட்டு நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கின்றன, இருந்தாலும் ஆங்கில வார்த்தைகள் தவிர்க்கப்பட்டு இருக்கின்றன என ஒருவர் குறிப்பிட்டார். தமிழ் நாவலில் ஆங்கிலம் கலப்பது என்பது சரி எனும் மனநிலைக்குத் தள்ளப்பட்டதால்தான் அப்படி ஒரு எண்ணம் அவருக்கு வந்திருக்க வேண்டும்.

பொதுவாக எழுத வரும்போது எழுத்து இலக்கணம் அறிந்து எழுதுவது எழுத்துக்கு அழகைக் கூட்டித்தரும். ஆனால் எழுத்து இலக்கணம் படித்து எழுதும் அளவுக்கு என்னை இன்னமும் தயார்படுத்திக்கொள்ளவில்லை. ஆனால் இது ஒரு மனக்குறையாகவே இருக்கிறது.

மேலும் வலைப்பூக்களில் எழுதப்படும் தமிழ் கண்டு வேதனைப்படத்தான் முடிகிறது. கொச்சையான வார்த்தைகளை இச்சையுடன் எழுதித் தீர்க்கிறார்கள். வசைபாடுவது என இருந்தாலும் தமிழில் அழகுடன் எழுதும்போது அவை முகச்சுளிப்புதனை உருவாக்குவதில்லை.

தமிழை வளர்க்க வெகு சிலரே பாடுபடுகிறார்கள். எண்ணங்களை கொண்டுச் சேர்க்க அலங்கார மொழித் தேவையில்லை என்கிற நிலைக்கு மொழி சீர்குலைந்து போய்க்கொண்டிருக்கிறது.//


உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

Admin said...

//முனைவர்.இரா.குணசீலன். கூறியது...
நான் தமிழ் மொழி தவறாக உச்சரிப்பதனையும், ஆங்கில வார்த்தைகள் தேவையற்று அதிகம் பயன் படுத்துவதனையும் முற்றாக வெறுப்பவன். தமிழை தமிழாக பயன் படுத்த நினைப்பவன்/

மிகவும் மகிழ்வாகவுள்ளது.//

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

வந்தியத்தேவன் said...

சந்து காலத்தின் தேவைக்கேற்ற கட்டுரை பல இலத்திரனியல் ஊடகவியளாலர்கள் இன்றைக்கு வலைப்பதிவாளர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இதன் தொடுப்பை அனுப்புங்கள்.

அதே நேரம் தமிழ் மொழிக்கு தாங்கள் தான் பலம் என்கின்ற நிறுவனம் நிச்சயம் தங்களை மாற்றாமாட்டார்கள். நிகழ்ச்சிகளுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்குமளவிற்க்கு அவர்களுக்கு மொழிமேல் வெறுப்பு. சிறந்த தமிழ்ப் பேச்சாளர்களைத் தேடுகின்றார்கள் அந்நிககழ்ச்சியின் பெயர் ஆங்கிலத்தில்.

நீங்கள் இன்னொரு ஊடகத்தில் வேலை செய்வதால் நேரடியாக ஊடகங்களின் பெயர்களை கூறுவதைத் தவிர்க்கின்றேன்.

இன்னொரு ஜெயம்கொண்ட வானொலியில் இரவில் விளையாட்டுச் செய்திகளைத் தொகுத்துத்தருபவர் அவசரமாக அடுத்த வேலைக்கு போவதைப்போல மிகவும் அவசரமாக வாசிப்பார். முற்றுப்புள்ளி கால்ப்புள்ளி எதுவும் இல்லை. அதுமட்டுமல்ல சிலவேளைகளில் எழுவாய், பயனிலை கூட இருப்பதில்லை. இலங்கை அணி பற்றிச் சொல்லிக்கொண்டே இங்கிலாந்து அணியின் தகவல்களையும் சேர்த்துச் சொல்லி நேயர்களைக் குழப்புகின்றார்.

Admin said...

//முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
சில அறிவிப்பாளர்கள் இனிய தமிழை மறந்து அளவுக்கு அதிகமாக ஆங்கில வார்த்தைகளை பயன் படுத்துவது என். இவர்களுக்கு தமிழ் தெரியாதா. தமிழ் தெரியவில்லை என்றால் ஏன் தமிழ் அறிவிப்பாளராக வந்தார்கள். ஆங்கில அறிவிப்பாளராக போயிருக்கலாம்தானே. இவர்கள் விடுகின்ற தவறுகளும் ஓட்டு மொத்த அறிவிப்பாளர்களையும் பாதிக்கும் என்பதை இவர்கள் உணர்ந்து திருந்துவதே நல்லது (திருந்துவார்களா) /

திருந்த வேண்டும்....

எனது இவ்விடுகையைப் பார்த்தீர்களா?

http://gunathamizh.blogspot.com/2009/04/blog-post_28.html//
இதுவரை நான் அந்த இடுகையை பார்க்கவில்லை இப்பொழுதுதான் பார்த்தேன்.


உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

Admin said...

//நேசமித்ரன் கூறியது...
சந்த்ரு
ஆக்க பூர்வமான கட்டுரை
மிக மகிழ்வளிக்கிறது//


உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

Admin said...

//வந்தியத்தேவன் கூறியது...
// நான் மேலே குறிப்பிட்ட தொடருந்து, சிற்றுந்து, உலங்குவானூர்தி, துவிச்சக்கர வண்டி, மிதி வண்டி, காலுந்து, வெதுப்பி, குளிர்களி.. போன்ற சொற்களை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் லோஷன் என்று சொன்னால் மிகையாகாது.//

மன்னிக்கவும் லோஷன் அறிவிப்பாளராக வரமுன்னரே இந்தச் சொற்கள் பாவனைக்கு வந்துவிட்டன. வீணாக நல்லதொரு அறிவிப்பாளரின் பெயரைக் கெடுப்பதுபோல் இப்படி எழுதுகிறீர்கள். சிலவேளை லோஷனினால் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம்.//


ஆரம்ப காலங்களிலே இந்த சொற்கள் பயன்பாட்டில் இருந்தாலும். அவற்றை ஊடகந்கலிலெ பயன் படுத்துவது மிக மிகக் குறைவாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். லோஷன் இதற்கு முதல் பணியாற்றிய உஉடகத்தில்தான் செய்தி அறிக்கைகளில் இந்த சொல்லை பயன்படுத்துவதை கட்டாயப்படுத்தி நடைமுறைப்படுத்தினார்கள் இதில் லோஷன் மட்டுமல்ல அந்த வானொலியின் ஒரு குழு மேற்கொண்டு இருந்தது. அவர்களால்தான் மக்கள் மத்தியில் பிரபல்யப் படுத்தப்பட்டது. அதற்கு முதல் ஊடகங்களிலே பயன் படுத்துவது அரிதாகவே இருந்தது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

ARV Loshan said...

நல்லதொரு கட்டுரை,,
தமிழார்வமுள்ளதால் உங்கள் ஆதங்கம் எல்லாம் கொட்டி இருக்கிறீர்கள்..

எனினும் மிகப்பெரிய தவறு ஒன்று விட்டுள்ளீர்கள்..
நான் உங்களுக்கு ஏற்கெனவே தனிப்பட்ட மின்னஞ்சல் மூலமாக சொல்லி இருந்தேன்..

நீங்கள் மேற்குறிப்பிட்ட தமிழ் கலை சொல் வடிவங்களை நான் அறிமுகப்படுத்தவில்லை..
எனக்கு முன்னரே அவை பாவனையில் இருந்தன.. ஆனால் அதிகமாக செய்திகளில்.. எமது கூட்டு முயற்சியால்(செய்தி & நிகழ்ச்சிப் பிரிவு) மேலும் அவற்றை செய்திகளில் மட்டுமல்லாமல் நிகழ்ச்சிகளிலும் கொண்டு வந்தோம்..

வந்தி சொல்லி இருப்பது மிகச் சரி..
chandhru இவ்வாறான தகவல்கள் தரும்போது முன்னோடிகளை மறப்பது அவர்களை அவமதிப்pathu போலானதாகும்.
நான் வெகுவிரைவில் இந்த ஊடகங்களில் தமிழ்ப் பிரயோகம் பற்றி எழுதியே ஆகவேண்டும் என்பது போல் இருக்கிறது.

வந்தி, மற்ற வானொலிகள் பற்றி நான் விமர்சிப்பது முறையல்ல.. எனினும் எங்களைப் பொறுத்தவரை நேரப் பிரச்சினை ஒரு மிகப்பெரிய சிக்கல்.. முடியுமான கொஞ்ச நேரத்தில் கிடைக்கிற அத்தனை விளையாட்டுத் தகவல்களையும் கொடுக்க வேண்டுமென்பதிலேயே அந்த ஜெயம் கொண்ட எமது வானொலியின் அறிவிப்பாளருக்கு அவசரம்.

எனினும் தொடர்ந்து நீங்கள் செவிமடுப்பது மகிழ்ச்சி..

சந்துரு, இன்று எனக்கிருந்த அவசர வேலைகளின் மத்தியிலும் உங்கள் பதிவில் பிழை கண்டதாலேயே உடனடியாகப் பின்னூட்டமிட்டேன்.

வந்தியத்தேவன் said...

//சந்ரு கூறியது...

ஆரம்ப காலங்களிலே இந்த சொற்கள் பயன்பாட்டில் இருந்தாலும். அவற்றை ஊடகந்கலிலெ பயன் படுத்துவது மிக மிகக் குறைவாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். லோஷன் இதற்கு முதல் பணியாற்றிய உஉடகத்தில்தான் செய்தி அறிக்கைகளில் இந்த சொல்லை பயன்படுத்துவதை கட்டாயப்படுத்தி நடைமுறைப்படுத்தினார்கள் இதில் லோஷன் மட்டுமல்ல அந்த வானொலியின் ஒரு குழு மேற்கொண்டு இருந்தது. அவர்களால்தான் மக்கள் மத்தியில் பிரபல்யப் படுத்தப்பட்டது. அதற்கு முதல் ஊடகங்களிலே பயன் படுத்துவது அரிதாகவே இருந்தது.//

யாழ்ப்பாணத்தில் நாம் சர்வசாதாரணமாக 90களின் ஆரம்பங்களில் இந்தச் சொற்களைப் பாவித்தோம். அப்போதுதான் பெரும்பாலான கடைகளின் பெயர்கூட தமிழில் மாறியிருந்தது. சுபாஷ் வெதுப்பகம், ஸ்ரீ மைதிலி நகைப்பூங்கா, மருதம் உந்துருளி நிலையம். லிங்கம் குளிர்களி நிலையம் என பல நிறுவனங்கள் தங்கள் பெயர்களை மாற்றினார்கள்.

சக்தியின் ஆரம்பகாலத்தில் திரு,எழில்வேந்தனும் லோஷனும் இணைந்து நடத்திய வணாக்கம் தாயகம் நிகழ்ச்சியில் ஆங்கிலவார்த்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள், ஊர் பெயர் காரணங்கள் போன்ற பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் நடத்தியபோது இந்தப்பெயர்களை அடிக்கடி பாவித்தார்கள்.

சிலவேளை வடக்குகிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேச மக்களுக்கு இவர்களினால் இந்தப்பெயர்கள் பரவலாக வெளிக்கொணரப்பட்டிருக்கலாம்.

Admin said...

//வந்தியத்தேவன் கூறியது...
சந்து காலத்தின் தேவைக்கேற்ற கட்டுரை பல இலத்திரனியல் ஊடகவியளாலர்கள் இன்றைக்கு வலைப்பதிவாளர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இதன் தொடுப்பை அனுப்புங்கள்.

அதே நேரம் தமிழ் மொழிக்கு தாங்கள் தான் பலம் என்கின்ற நிறுவனம் நிச்சயம் தங்களை மாற்றாமாட்டார்கள். நிகழ்ச்சிகளுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்குமளவிற்க்கு அவர்களுக்கு மொழிமேல் வெறுப்பு. சிறந்த தமிழ்ப் பேச்சாளர்களைத் தேடுகின்றார்கள் அந்நிககழ்ச்சியின் பெயர் ஆங்கிலத்தில்.

நீங்கள் இன்னொரு ஊடகத்தில் வேலை செய்வதால் நேரடியாக ஊடகங்களின் பெயர்களை கூறுவதைத் தவிர்க்கின்றேன்.

இன்னொரு ஜெயம்கொண்ட வானொலியில் இரவில் விளையாட்டுச் செய்திகளைத் தொகுத்துத்தருபவர் அவசரமாக அடுத்த வேலைக்கு போவதைப்போல மிகவும் அவசரமாக வாசிப்பார். முற்றுப்புள்ளி கால்ப்புள்ளி எதுவும் இல்லை. அதுமட்டுமல்ல சிலவேளைகளில் எழுவாய், பயனிலை கூட இருப்பதில்லை. இலங்கை அணி பற்றிச் சொல்லிக்கொண்டே இங்கிலாந்து அணியின் தகவல்களையும் சேர்த்துச் சொல்லி நேயர்களைக் குழப்புகின்றார்.//



நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே இன்று என்ன பேசுகின்றோம் என்று தெரியாமலே சில அறிவிப்பாளர்கள் பேசுவதை பார்த்திருக்கின்றோம். விளையாட்டு செய்திகளை வாசிக்கும் அறிவிப்பாளர்கள் சிலர் பிழை விடுவதற்குக் காரணன் என்னை பொறுத்தவரை அவர்கள் இன்னுமொரு அறிவிப்பாளர் விளையாட்டுச் செய்தி வாசிப்பதுபோல் தாங்களும் வாசிக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். ஆனால் அது விளையாட்டு செய்தியாக இல்லாமல் மற்றவரை தொந்தரவு செய்யும் செய்தியாக மாறுகிறது.

இது எல்லா அறிவிப்பாளர்களும் விடு தவறு இல்லை. ஒரு சிலர் விடும் தவறுதான். ஆனால் அவர்களோ தங்களை விட வேறு எவரும் இல்லை என்று தலைக்கனம் பிடித்து நடப்பதனையும் நான் கண்டு கொள்ளாமல் இல்லை.

உங்கள் தமிழ் பற்றை பாராட்டுகிறேன் நண்பரே. இவற்றை பார்த்தாவது திருந்துவார்களா இவர்கள்.


உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

வந்தியத்தேவன் said...

//வந்தி, மற்ற வானொலிகள் பற்றி நான் விமர்சிப்பது முறையல்ல.. எனினும் எங்களைப் பொறுத்தவரை நேரப் பிரச்சினை ஒரு மிகப்பெரிய சிக்கல்.. முடியுமான கொஞ்ச நேரத்தில் கிடைக்கிற அத்தனை விளையாட்டுத் தகவல்களையும் கொடுக்க வேண்டுமென்பதிலேயே அந்த ஜெயம் கொண்ட எமது வானொலியின் அறிவிப்பாளருக்கு அவசரம்.//

லோஷன் அனைவருக்கும் நேரம் பிரச்சனைக்குரியது. பத்திரிகைகளில் விளையாட்டுச் செய்திகளைத் தேடிப்படிப்பது கஸ்டம். சகல பத்திரிகைகளிலும் அதற்கென பிரத்தியேக பக்கம் இருப்பினும் நேரம் கிடைக்காதவர்கள் தங்கள் மற்ற வேலைகளுடன் வானொலிகேட்டுக்கொண்டே என்னவும் செய்யலாம், இதுதான் வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும் உள்ளவித்தியாசம். பெரும்பாலும் நான் பயணம் செய்யும் போது ஏதாவது ஒரு வானொலி பெரும்பாலும் ஜெயம் கொண்ட வானொலி கேட்பது வழக்கம். அப்படிக்கேட்கும் போது பல‌வேளைகளில் புதிய பல செய்திகளை விளையாட்டுப் பகுதியில் தருவார்கள். அந்த வானொலியில் அறிவிப்பாளர்கள் பலர் மூன்றெழுத்துபபெயர் கொண்டவர்களாக இருப்பதால் அவரின் பெயரை சூசகமாக குறிப்பிடமுடியாது. அவர்மட்டும் தான் பெரும்பாலும் அவசரகதியில் செய்திகளைத் தருபவர், ஏனையவர்கள் கொஞ்சம் ஆறுதலாகத் தான் செய்திகள் தருகின்றார்கள். சம்பந்தப்பட்டவர்கள் ஆவண செய்தார்கள் என்றால் என்னைப்போன்ற வானொலி நேயர்களுக்கு நல்ல செய்திகள் பல கிடைக்கும்.

Admin said...

மன்னிக்க வேண்டும் லோஷன் அண்ணா... அவசரத்தில் தவறு விட்டு விட்டேன். மக்கள் மத்தியிலே பிரபல்யப்படுத்திய பெருமை என்றே குறிப்பிட்டிருக்க வேண்டும்.

வந்தியத்தேவன் said...

இதனைவிட இன்னொரு விடயம் சந்ரு பெரும்பாலான செய்தி வாசிப்பவர்கள்(குறிப்பாக தொலைக்காட்சிகளில்) நாட்டு நடப்புகள், வெளிநாட்டுத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் பெயர்களை கடித்துக் குதறுவார்கள். ஜெனீவாவை நாடென்ற மிகப்பெரிய பிரபலமும் நம் நாட்டில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கின்றார். இவர்களுக்கு செய்தியின் விடயம் முதலே தெரிந்திருந்தால் ஓரளவு சில இடங்களில் தவறு வந்தால் சமாளிக்கலாம். ஒருமுறை ஒரு தொலைக்காட்சியில் வீரேந்திர சேவாக்கை வீரேந்திர வெசாக் என வாசித்தார்கள். அந்த செய்திவாசிக்கும் காலம் வெசாக் காலம். இன்றைக்கும் அந்த செய்திவாசிப்பாளினி திரையில் வந்தால் வீட்டில் அவரை வெசாக் என்றே அழைப்போம்.

தவறுகள் பலருக்கும் ஏற்படும் ஆனால் சில தவறுகள் செய்தியின் அர்த்ததையே மாற்றிவிடும். ஒரு பிரபல எழுத்துஊடகத்தில் ஒருமுறை முன்னாள் ஜனாதிபதி அவர்கள் நாடு திரும்பியதை " ஜனாதிபதி சனியன் நாடு திரும்புகின்றார்" என செய்தியாக வெளியிட்டார்கள். சனியன்று என்பது றுவை அச்சுப்பேய் தின்று சனியனாகிவிட்டது. அதேபோல் பிரபல அமைச்சரின் 45 பிறந்தநாளை "அமைச்சருக்கு இன்று 45" எனவும் செய்தியிட்டார்கள்.

Admin said...

//பழமைபேசி சொன்னது…
புலவர்கள் இடது கோடியிலும், ஊடக மற்றும் எழுத்தாளர்கள் வலது கோடியிலும் இருந்து கொண்டு சாமான்யனைத் தமிழிடமிருந்து பிரிக்கிறார்கள். தமிழா விழித்துக் கொள்!//

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

dharshini said...

நான் 3,4 வருடங்களுக்கு முன்பெல்லாம் இலங்கை வானொலி அதிகமாக கேட்டுக்கொன்டிருப்பேன்.. அதன் முக்கிய காரனமே அழகான தமிழ் உச்சரிப்புகளே என்னை கவர்ந்தது. சரியாக சொன்னீர்கள் சந்ரு.

நிலாமதி said...

தமிழ் மொழியின் பற்றுள்ள உங்களது ஆக்கம் மிக நன்று பிழைகளை பிழை என்றே தெரியாதவர்களும் இருக்கிறார்கள். காலபோக்கில் ஆங்கில உச்சரிப்பே தமிழாகி விடுகிறது . அது தமிழ் சொல் அல்ல என்றே தெரியாமல் இருக்கிறது. வானொலிகளில் உண்மை தமிழை புகுத்தும் உங்க நட்புகளுக்கு என் பாராட்டை தெரிவித்து விடுங்கள். மொழி வளர்ச்சி பெற்றால் தான் தமிழ் வளரும். தமிழை வளர்ப்போம் தமிழனாக் வாழ்வோம். தமிழ் வாழ்க .

Admin said...

நான் இந்த இடத்திலே சில விடயங்களை குறிப்பிட்டாக வேண்டும் தொடருந்து, சிற்றுந்து, உலங்குவானூர்தி, துவிச்சக்கர வண்டி, மிதி வண்டி, காலுந்து, வெதுப்பி, குளிர்களி.. போன்ற சொற்களை அறிமுகப் படுத்திய பெருமை லோஷனையும் அவரது குழுவினையும் சாரும் என்று குறிப்பிட்டிருந்தேன்.

வந்தி குறிப்பிட்டது போல் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலே ஆரம்ப காலங்களில் இந்தச் சொற்கள் பாவனையில் இருந்தது உண்மையே. காலப்போக்கில் நாகரீகம் என்ற போர்வையில் இந்த சொற்கள் மறக்கப்பட்டு வந்தது என்பது உண்மையே. இச் சொற்களை பாவிப்பது மிகவும் அரிதாக இருந்த வேளை இச் சொற்களை மீண்டும் பாவனைக்கு கொண்டுவர வேண்டும் என்று லோஷன் இதற்கு முன்னர் பணியாற்றிய வானொலி நிலையத்தின் ஒரு குழுவினரின் முயற்சியின் பயனாக அந்த வானொலியின் செய்திகளில் இந்த சொற்கள் பயன்படுத்துவது வழக்கத்திற்கு வந்தது. மக்களின் பயன் பாட்டில் இருந்து மருவி வந்த இந்த சொற்களை மீண்டும் மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தியவர்களுள் லோஷனும் அவர்களது ஒரு குழுவினரும் என்பது மறுக்கமுடியாது.

நேற்று லோஷன் அண்ணா எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தனது பெயரை குறிப்பிட வேண்டாம் என்று சொல்லி இருந்தார். என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

வந்தியத்தேவன் said...

சந்ரு உங்களுக்கான சில பதில்கள் இந்தப் பதிவில் இருக்கின்றது.

http://enularalkal.blogspot.com/2009/07/blog-post_29.html

குறை ஒன்றும் இல்லை !!! said...

//தமிழ் மொழியை வளர்ப்பது யார்? தமிழ் மொழியை கொலை செய்வது யார்?..//

மற்ற மொழி கற்றவர் கூட கற்க ஆசைப்படும் தமிழ் மொழியை கொலை செய்வது தமிழர்களான நாமே !!!

வால்பையன் said...

//விடயத்துக்கு//

இது விஷயம்!
சரி வடமொழி எழுத்து வேணாம்!
விசயம்னு சொல்லலாமே!
ஏன் விடயம்!
அப்போ விஷத்தை விடம்னு சொல்லுவிங்களா?

(நன்றி:ஆதிமூலகிருஷ்ணன்)

Anonymous said...

//வால்பையன் சொன்னது…
//விடயத்துக்கு//

அப்போ விஷத்தை விடம்னு சொல்லுவிங்களா?//

வால்ப்பையன் அவர்களே விஷத்துக்கு விடம் என்ற தமிழ்ப் பெயர் இருப்பது தங்களுக்குத் தெரியாதா? ஆலகாலவிசமுண்ட சிவனை விடமுண்ட கண்டன் என்பார்கள். என்ன செய்வது ஆங்கிலத்திலே தவழ்ந்து ஆங்கிலேயர்கள் போல வாழ நினைக்கின்ற வான்கோழிகளுக்கு எங்கள் தமிழ் சிரிப்பாகத் தான் இருக்கும்.

வால்பையன் said...

//ஆங்கிலத்திலே தவழ்ந்து ஆங்கிலேயர்கள் போல வாழ நினைக்கின்ற வான்கோழிகளுக்கு எங்கள் தமிழ் சிரிப்பாகத் தான் இருக்கும்.//

நான் ஊமையா பொறந்துருக்க வேண்டியது தெரியாத்தனமா பேசறா மாதிரி பொறந்துட்டேன்!

மத்தபடி எனக்கு தெரிந்ததெல்லாம் தமிழ்,தமில்,தமிள்,டமில் மட்டுமே!

Maximum India said...

தமிழ் மொழி மீது உங்களுக்கு இருக்கும் அக்கறையையும் அன்பையும் பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது. உங்களைப் போன்றவர்கள் பல்லாயிரம் காலம் கட்டிக் காத்த நமது தமிழ் இன்னும் பல ஆயிரம் ஆண்டு காலம் வாழும் என்பது திண்ணம்.

சமீபத்தில் ஒரு பன்னாட்டு நிகழ்ச்சி ஒன்றில் ஒரு இலங்கை தமிழ் பெண்ணை சந்தித்தேன். அவருடைய தமிழை கேட்க ஆனந்தமாக இருந்தது. அவரை திரும்பத் திரும்ப தமிழில் உரையாட சொல்லி அமுதெனும் தமிழை புசித்தேன். தமிழை இன்று தூய்மை மாறாமல் வைத்திருப்பதில் பெரிய பங்கு இலங்கைத் தமிழர்களுக்குத்தான் உரியது என்று நினைக்கிறேன்.

இன்னும் பல நல்ல பதிவுகள் இட வாழ்த்துக்கள்.

அதே சமயம், பாரதி சொன்ன படி, பல நுண்ணிய கலைகள் இன்று உலகம் முழுக்க உருவாகிக் கொண்டே வருகின்றன. அந்த கலைகளை தமிழர்கள் கற்க வேண்டும். அந்த கலைகள் உருவாகி உள்ள மொழிகளை மதிக்க வேண்டும், அந்த மொழிகளை கற்க வேண்டும் மற்றும் அவற்றிலுள்ள நல்ல கருத்துக்களை தமிழுக்கு கொண்டு வந்து தமிழை இன்னும் வளமாக்க வேண்டும். வளமாகும் தமிழ் மூலம் தமிழரின் வாழ்வும் வளமாக வேண்டும்.

தமிழைப் போலவே தமிழர் நல்வாழ்வின் மீதும் அக்கறை கொண்ட எனது இந்த கருத்துக்களில் எந்த ஒரு மாறுதலும் இல்லை.

நன்றி.

ஜெட்லி... said...

நண்பர் சந்துரு,

உங்கள் கருத்துக்கள் அனைத்தையும் வழிமொழிகிறேன்.
ஆனால் நீங்கள் சொல்வது போல் சில அறிவிப்பாளர்கள்
தமிழ் மொழியை கொலை செய்வது உண்மை மற்றும்
ஆங்கில மொழியை பின்பற்றுவதும் உண்மை......
அவர்களாகவே திருந்த வேண்டும் அல்லது அவர்களின்
மேல் அதிகாரிகள் முயற்சி செய்ய வேண்டும்.
அவர்களுக்கு தேவை பணம்,,,,, அவ்வளவே......

sakthi said...

தொடருந்து, சிற்றுந்து, உலங்குவானூர்தி, துவிச்சக்கர வண்டி, மிதி வண்டி, காலுந்து, வெதுப்பி, குளிர்களி..

அழகுத்தமிழ் வார்தைகள்

sakthi said...

அருமையான கட்டுரை வாழ்த்துக்கள்

சிநேகிதன் அக்பர் said...

நல்லதொரு கட்டுரை சந்ரு,

மொழியை வளர்ப்பதிலும் , தேய்ப்பதிலும் ஊடகங்களின் பங்கு அதிகம் உண்டு.

- இரவீ - said...

நல்ல பதிவு... வாழ்த்துக்கள்.

jothi said...

சந்ரூ இந்த மாதிரி ஒரு கட்டுரை படிக்கிறதே சந்தோசமாய் இருக்கிறது,.. காரணம் சுத்த தமிழில் எழுத நிறைய வார்த்தைகள் தெரியவில்லை. ஒரு நல்ல பதிவை தந்தமைக்கு நன்றி

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நிறைய தகவல்களைக் கொண்ட நல்ல கட்டுரை சந்துரு.

ஆ.ஞானசேகரன் said...

//ஊடகங்களால் முடியாதது எதுவும் இல்லை. தமிழை வளர்ப்பதிலே பல ஊடகவியலாளர்கள் பாடுபட்டிருக்கின்றார்கள். அதன் பயனாகவே இன்று இந்தச் சொற்கள் மக்களால் பயன்படுத்தப் படுகின்றன.//

உண்மைதான் நண்பா.. இன்னும் வேற்று மொழி சொற்களை களைய வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை. அப்படிபட்டி சேவையை ஊடகங்களால் மட்டுமே செய்ய முடியும் அதற்கு அரசின் பரிந்துரைகளும் அவசியம்.

என்னுடைய இடுகை இந்த அளவிற்கு தாக்கம் ஏற்படுத்துள்ளது மிக்க மகிழ்ச்சியே. இதுவும் ஒரு நல்ல நோக்கம் என்பதே இதன் சிறப்பு... பாராட்டுகள் நண்பா..

KABEER ANBAN said...

தங்களது கவலை நியாமானதே. தமிழை வளர்க்காமல் போனாலும் தொலைக்காமல் இருந்தால் அதுவே பெரும் சேவை. :)

இதே கருத்தில் எனது பழைய கட்டுரை ஒன்றை
முள்ளால் எடு என்ற தலைப்பில் காணலாம்

///தமிழை கொலை செய்வதில்லை சில அறிவிப்பாளர்கள் இருக்கின்றார்கள் ///

'கொலை செய்வதென்றே’ என்று வந்திருக்க வேண்டுமோ ?

வாழ்த்துகள்

சூர்யா ௧ண்ணன் said...

நல்லதொரு கட்டுரை சந்ரு,

//மொழியை வளர்ப்பதிலும் , தேய்ப்பதிலும் ஊடகங்களின் பங்கு அதிகம் உண்டு.//

தமிழார்வமுள்ள நம் பதிவர்கள் உள்ள வரையில்,
மெல்லத் தமிழ் இனி சாகாது

வெல்லத் தமிழ் இனி வெல்லும்.

ஆ.ஞானசேகரன் said...

ஊடகங்கள் மூலம் பல கலைச்சொற்கள் மக்களை சென்றுள்ளதை நான் ஒப்புக்கொள்கின்றென். அதே சமயம் தமிழில் கலந்துள்ள வடமொழி சொல், ஆங்கிலம், மேலும் பக்கத்து மாநில மொழி சொற்கள் கலந்துள்ளது. ஏன் இலங்கை தமிழில் சிங்களம் கலந்தும் இருக்கு என்பதும் உண்மைதான். இவற்றை எல்லாம் தனி ஒரு மனிதனால் திட்டம் போட்டி மாற்றம் கொண்டு வரமுடியாத காரியம். ஆனால் ஊடகங்களால் அப்படிப்பட்ட மாற்றத்தை எழிதாக கொண்டு வர முடியும் என்பதுதான் என் எண்ணங்கள். அதை ஏன் செய்யக்கூடாது? அரசும் ஏன் பரிந்துரை செய்யக்கூடாது? என்ற கேள்விகள்தான்.. ஒரு சில ஊடகங்கள் அப்படிபட்ட சேவைகளை செய்வது, உங்களை போன்றவர்கள் செய்வதும் பாராட்டக்கூடியது. அதே சமயம் போதிய அளவிற்கு எல்லா ஊடகங்களும் செய்ய மறுக்கப்படுகின்றதுதான் வேதனை...


நல்ல இடுகை நண்பா பாராட்டுகள்

Suresh Kumar said...

அருமையான இடுகை எதுவுமே நடைமுறையில் இருந்தால் சில நாட்கள் கடினமாக இருக்கலாம் பின்னர் பழகி விடும் . தமிழ் வார்த்தைகளை ஏட்டிலே வைப்பதை விட நடை முறையில் கொண்டு வந்தால் தான் அனைவரும் அறிய முடியும் . அது ஊடகங்களால் மட்டும் தான் முடியும் .

இதை போன்ற விழிப்புணர்வு இடுகைகள் பல எழுதி ஊடக்னகளுக்கு அறிவுறுத்துவோம்

அ.மு.செய்யது said...

அதிரடி பதிவு...

விவாதங்களை வேடிக்கை பார்த்து விட்டு வருகிறேன்.

உங்கள் ராட் மாதவ் said...

நல்ல இடுகை நண்பா பாராட்டுகள்....

Anonymous said...

சந்ரு இதைப் பற்றிப் பேசப்பேச பேசிக்கொண்டும்,
எழுத எழுத எழுதிக்கொண்டும் இருக்கலாம்
முடிவு கிடையாது.இந்த இடுகையை பார்தாவது
திருந்தினால் நன்று.சுட்டிக் காட்டுவதில்
தவறில்லை தொடருங்கள்.

Anonymous said...

சந்ரு இதைப் பற்றிப் பேசப்பேச பேசிக்கொண்டும்,
எழுத எழுத எழுதிக்கொண்டும் இருக்கலாம்
முடிவு கிடையாது.இந்த இடுகையை பார்தாவது
திருந்தினால் நன்று.சுட்டிக் காட்டுவதில்
தவறில்லை தொடருங்கள்.

ரி.கே

Admin said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் dharshini , நிலாமதி மற்றும் குறை ஒன்றும் இல்லை

Admin said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் வால்பையன், Maximum India , மற்றும் ஜெட்லி...

Admin said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் sakthi , அக்பர், மற்றும் Ravee (இரவீ )

Admin said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் ஜோதி, அத்திவெட்டி ஜோதிபாரதி, மற்றும் ஆ.ஞானசேகரன்...

Admin said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் KABEER ANBAN, சூர்யா ௧ண்ணன் மற்றும் Suresh Kumar....

Admin said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் அ.மு.செய்யது, RAD MADHAV மற்றும் ரி.கே...

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது சொன்னது…

அதிரடி பதிவு...

விவாதங்களை வேடிக்கை பார்த்து விட்டு வருகிறேன்.

நானும்

இளைய அப்துல்லாஹ் said...

உண்மையில் ஐரோப்பாவில் இருக்கும் தமிழ் ஊடகங்கள் நல்ல தமிழில் உரையாடுகின்றன. இலங்கை தமிழ் பத்திரிகைககள் நல்ல மொழி வளத்தை இன்னும் பாதுகாக்கின்றன. தமிழக இலத்திரனியல் ஊடகங்களை விட்டு விடுவோம். மக்கள் தொ காட்சி நல்லது. ஊடகங்கள்தான் மொழிக்கு ஆதாரம்

உங்கள் கருத்து மிக்க நல்லது

Unknown said...

உங்களுக்கு தமிழ்மொழி மீது இருக்கும் அன்பையும் அக்கறையையும் பார்க்கும் போது வியப்பாக உள்ளது. மிகவும் அருமையான கட்டுரை.

Nathanjagk said...

அன்பு சந்ரு,
சீரிய முயற்சி. வாழ்த்துக்கள்! நான் நினைப்பது,
1. மொழி மற்ற மொழிகளோடு இணக்கமாக இருப்பது அதன் வளர்ச்சியைக் குறிக்கும்
2. பேச்சுத் தமிழில் மொழிக்கலப்பை பாவேந்தர் பாரதிதாசன் ஆதரித்திருக்கிறார்!!
3. இலத்திரனியல் என்றால் என்ன? இந்த வார்த்தையின் வயது என்ன? இந்தமாதிரி அருஞ்சொற்பொருள்களின் அகராதி எங்கு கிடைக்கும்? இணையத்தில் ஓசியில் கிடைக்குமா? (​மெர்ஸலாகிறது-க்கு இணையத்தில விளக்கம், அர்த்தம் கிடைக்குது)
3.5. தங்கள் கருத்துக்கு மாற்றாகவோ, இல்லை மனதைப் புண்படுத்துவதாகவோ இருப்பின் இதற்கு மேல் படிக்காதீங்க! எனக்கு மொழித் தூய்மையை விட சந்ருவின் அன்புதான் முக்கியம்.
4. //மொழி கலப்பதை தடுப்பதிலும், தமிழ் மொழியை வளர்ப்பதிலும் ஊடகங்களின் பங்கு அளப்பெரியது// ​நல்ல கருத்து. ஆனால், ஊடகம் இந்த அளவுகோலில் செயல்பட்டால் ​மொழியறிவு இருக்கும் தொழிலறிவு வளராது. (flightக்கு தமிழ் வார்த்தை இருக்கு, cockpit, fins, rudder, propeller. kinetic velocity, aerofoil, போன்ற தொழில் நுட்பங்களுக்கு புதுசாத்தான் உருவாக்கணும் - அதிலேயும் ஒரே அர்த்ததுக்கு பல பிரயோகங்கள் வர வாய்ப்புள்ளது) ஊடகங்கள் என்பதைவிட கல்விமுறை என்பதே மொழிச்செழுமைக்கு முக்கியமானது ​
5. யெஸ். மொழிப்பாதுகாப்பு என்று யாரும் மந்திரித்துவிட்டால், நம்பிடாதீங்க சந்ரு. மொழி யாராலும் பாதுகாக்கபட வேண்டியதில்லை. ​செழுமைப்படுத்தப்பட வேண்டியது.
5.1. ஸாரி. எனக்கு அவ்வளவா சுத்தத் தமிழ்ல எழுதத் தெரியாது - வராது.
5.2. இதுமாதிரியான தமிழ்ல எழுதுனா படிக்கிறது ஈஸியா இருக்கும்னு நினைக்கிறேன்
5.3. ஒரு வார்த்தைய கொடுத்து இது அக்மார்க் தமிழ் வார்த்தைதான் தரப்பரிசோதனை ​செய்யவும் தெரியாது.
5.4. சந்திப்பிழைகளை(ச்?)) சந்திக்கிறேன் - இதுக்கும் இணையத்தில தேடுறேன் - தெரிந்தால் சொல்லவும்
5.5. சீரியஸ் இடுகையில லந்து பண்றான்னு நினைக்காதீங்க, இப்பவும் சந்ருவின் அன்புதான் முக்கியம்னு சொல்லிக்கிறேன்.. ​தொடரப் போறீங்களா!!?
(.....)
(இங்கு பின்னூட்டம் ​போடாமல் இதன் முந்திய இடுகையில் போட்டுவிட்டேன்)

Nathanjagk said...

6. மொழிப்​பெயர்ப்புகளால கூட மொழி​செழுமையாகும்னு நினைக்கிறேன். என்னை தமிழிலில் ஆர்வமா இலக்கியத்தைப் படிக்கத் தூண்டியது, காமிக்ஸ் புத்தகங்கள் அப்புறம் ரஷ்ய இலக்கியங்கள்.
6.5 காமிக்ஸ்ல டெக்ஸ்வில்லர், ஹுப்ஹுப்ஹீரே, நவ்ஜோ, பிஸ்டல் பின் ரஷ்ய இலக்கியத்தில வர்ற கெழாக்குகள், வோட்கா, இனியாக்​போன்ற பதங்களும் ​பொருள்களும் பிற​மொழிக்கலப்புதானே? ஆனா இதை தவிர்த்து இந்த இலக்கியத்தை அணுக சாத்தியமான்னு தெரியலே.
7. ​மொழிக்கலப்புன்னா ஏன் இங்கிலீஷை மட்டும் நினைக்கிறோம்? சாவி (திறவுகோல்தான்) ஒரு டச்சு வார்த்தைன்னு கேள்விப்பட்டிருக்கேன்
8. நான் பொறியியல்... வேணாம் மெக்கானிக்கல் இன்ஜினீரிங் படிச்சிருக்கேன். இன்னும் ​மேற்படிப்பெல்லாம் படிக்க வேண்டியிருக்கு. முனைவர் பட்டம் வரைக்கும் கூட ​போகலாம்! இதுவரைக்கும் டிப்ளமோ தாண்டி தமிழ் பாடபுத்தகத்தில வந்ததில்ல (அந்த தமிழுக்கு இங்கிலீஷையே படிச்சுக்கலாம்) இந்த மாதிரி டெக்னிக்கல் படிப்புக்கு நான் இங்கிலீஷைதான் கட்டிண்டு அழணும். அப்படி தமிழ்ல இன்ஜினியரிங் பி. ஹெச்டி பண்ண வழியிருக்கா சொல்லுங்க?
8.1. எனக்கு(ம்) ழ,ல,ள உச்சரிப்பெல்லாம் சுத்தமா வராது. ​
8.2. ல - பிரச்சினையில்ல
8.3. குவாட்டர் மாதிரி அடிச்சிருந்தேன்னா ழ நழ்ழாவே வரும்
8.4. ள - யாராச்சும் பாடம் எடுத்தா உண்டு
8.5. எழுதும் போது எந்த பிரச்சினையும் இல்லை
9. நான் உன்னைய இங்கிலீஷ் படிக்க வேணாம்னு சொல்லலியேன்னு கேக்கறீங்கதானே? இப்படி பிற​மொழியில் பலவருஷம் படிச்சு, கேட்டு, எழுதிக்கிட்டு இருந்தா அந்த மொழி​யோட தாக்கம் தாய்மொழியிலும் வரத்தானே செய்யும்? இங்க யார அல்லது எத குத்தம் சொல்றது?

Nathanjagk said...

10. மொழி​பெயர்க்கிறவங்க ஏன் தொழில்நுட்பம் பக்கம் அதிக கவனம் எடுக்கிறதில்ல? நான் ஒரேயொரு ரஷ்ய மொழிப்​பெயர்ப்பு அறிவியல் புத்தகம் படிச்சிருக்கேன் (ரிலேட்டிவிட்டி பத்தி லெந்தாவு எழுதினது)
10.1. இந்த மொழிப் பெயர்ப்பு ஆளுகளுக்கு ஒரு ஆணியக் கூட சுத்தியல் வச்சு அடிக்கத் ​தெரியாது. அப்புறம் எப்படி டெக்னிகல் பக்கம் வருவாங்க?
10.2. அதுக்கு தொழில்நுட்ப வல்லுநர்கள், மொழியியல் ஆய்வாளர்கள் என ஒரு sync up ​வேணும். எப்ப / எப்படி சாத்தியப்படும்னு தெரியலே (நடந்திருந்தால் தெரியப்படுத்துக)
10.3. சைனாக்காரங்க நல்ல​வேளையா இங்கிலீஷ் இப்பத்தான் ஒழுங்கா கத்து, வாய் வழியா பேச டிரை பண்றாங்க. இத ஒரு நூற்றாண்டு முன்னாடியே செஞ்சிருந்தாங்கன்னா, ITல அவங்க நம்பர்.1 ஆயிருப்பாங்க. கம்ப்யூட்டர் இந்தியாவில இப்படிப் பரவியிருக்காது. நம்ம கருத்துக்களை போற​போக்கில இடுகையா போட சான்ஸே இருந்திருக்காது. வேணா எழுதி ஏதாவது பத்திரிக்கைக்கு போஸ்ட் பண்ணிட்டு நகத்தை கடிச்சிட்டு உக்காந்திருக்கலாம்.
10.4. பிற​மொழிக்கலப்பில்லாம எழுதறதும் பேசறதும் ஒரு வித்தையா எடுத்துச் செய்ய ஆரம்பிச்சவங்க நிறைய பேரு இலக்கியத்தில காணாம போயிருக்காங்க (பேரெல்லாம் தெரியாது - அந்தளவுக்கு காணாம போயிருக்காங்க..!)
10.5. எப்படிச் சொல்றேன்னா, வாசகனுக்கு இணக்கமான நடையில எழுதறவங்கதான் நிலைத்து நிற்கிறார்கள் (சுஜாதா எனக்குத் தெரிஞ்சு ஒரு ஆங்கில வார்த்தை கூட இல்லாமா ஒரு கதை எழுதியிருக்காரு, என்ன பேரு சொல்லுங்க பாப்பம்? கி.ரா எழுத்து அப்படியே வட்டாரம் + பிற மொழிக்கலப்பு இருக்கு.. ஆனா இதைத் தவிர்த்திட்டு அந்த இலக்கியத்தை எழுத முடியுமா?)
10.6. மொழி​ஒரு சாதனம். நல்ல இலக்கியம்தான் ஒரு மொழியை மேம்படுத்தும்.
10.6.1. தயவுசெஞ்சு வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டைக்கு வராதீங்க - ஏன்னா என் கருத்து சுதந்திரம் இந்த பயத்தாலேயே பாதிக்கப்படுது (அ) பாதி செத்திடுது!
10.7. ஒரு வார்த்தையோட மூலம் என்னன்னு தேடிக்கிட்டு போனா.. வரலாறு, கல்வெட்டு, ​போர்-படையெடுப்பு, பிராகிருதி மொழி, பாலி, சமஸ்கிருதம், சரஸ்வதி ஆறுன்னு தாறுமாறா ஓடி எங்கியோ போயி நிக்க வேண்டியதா போயிடும்
10.8. ஆவணம், படிப்பு, ஆய்வு, சுயஅர்ப்பணிப்பு, தீவிரம், களப்பணி, பல்துறை அறிவு - இந்த மாதிரி எந்த கூறுகளும் இல்லாம தமிழ் பாதுகாப்பு - தூய்மைன்னு பேசறவங்க (10.6.1க்கு போயிட்டு வந்து தொடரவும்) தான் தமிழ் மொழியின் பேராபத்து. மொழிய வச்சு அரசியல் பண்றவங்கள நாமதான் அடையாளம் தெரிஞ்சுக்கணும்.
10.9. ஒரு மொழிக்கு மொழிக்கொலைங்கிறது பிற​மொழிக்கலப்பால வராது (அ. முத்துலிங்கம் எழுதின ஒரு கதை உயிர்மையில் வந்தது. படிச்சுப்பாருங்க) பிற மொழி பற்றிய அறிவு இல்லைங்கிறதுதான் தற்கொலைக்கு சமம்.
10.10. கடைசியா (அப்பாடா..!) ஒரு குட்டிக்கதை: ஒருத்தன் குளக்கரை பக்கமா புதையல் இருக்குன்னு தெரிஞ்சு பூமியத் தோண்ட ஆரம்பிச்சானாம்.​தோண்டுனான் ​தோண்டுனான் தோண்டிக்கிட்டே இருந்தானாம். அவன் பண்ணுனது பரவலா தோண்டாம ஒரே குழியையே ஆழமா தோண்டிக்கிட்டு இருந்ததுதான். கடைசிலே பாத்தா குழிதான் ஆழமாச்சு. புதையல் கிடைக்கலே. தோண்டுனது போதும்டா மேலே ஏறலாம்னு பாத்தா ​ரொம்ப ஆழமாயிருக்கு. கத்தி கத்தி பாத்தான். பாவம் யாருக்குமே கேக்கலே.

வந்தியத்தேவன் said...

//. //மொழி கலப்பதை தடுப்பதிலும், தமிழ் மொழியை வளர்ப்பதிலும் ஊடகங்களின் பங்கு அளப்பெரியது// ​நல்ல கருத்து. ஆனால், ஊடகம் இந்த அளவுகோலில் செயல்பட்டால் ​மொழியறிவு இருக்கும் தொழிலறிவு வளராது. (flightக்கு தமிழ் வார்த்தை இருக்கு, cockpit, fins, rudder, propeller. kinetic velocity, aerofoil, போன்ற தொழில் நுட்பங்களுக்கு புதுசாத்தான் உருவாக்கணும் ‍ //

ஜெகநாதன் எங்கள் நாட்டிலை கணிதம் இரசாயணவியல் பெளதீகவியல் எல்லாம் தமிழில் தான் படித்தோம். நீங்கள் மேலே கூறிய வார்த்தைகளுக்கான தமிழ் எம்மிடம் இருக்கின்றது. தேடிப்பிடித்துதான் தரவேண்டும்.

Admin said...

வருகைக்கும் தங்கள் கருத்துக்களுக்கும் நன்றிகள் S.A. நவாஸுதீன், இளைய அப்துல்லாஹ், மற்றும் Mrs.Faizakader...........

Admin said...

ஜெகநாதன் உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் முதலில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்..

நான் இந்த இடுகையோடு இந்த விடயத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம் என்று நினைத்திருந்தேன். பலரும் பல்வேறு பட்ட கருத்துக்களை முன்வைத்துக்கொண்டு இருக்கின்றனர். இன்னும் சில விடயங்களை என்னால் தெளிவு படுத்தப்பட வேண்டி இருக்கின்றது. ஆகவே நான் எனது அடுத்த பதிவில் இது தொடர்பான சில விடயங்களை தெளிவு படுத்துகின்றேன்.

என்.கே.அஷோக்பரன் said...

நல்ல கட்டுரை. நானும் இதைப் பற்றி நிறையக் கவலைப்பட்டிருக்கின்றேன். எல்லாவற்றிலும் கொடுமை என்ன தெரியுமா? தமிழில் 10வீதம் ஆங்கிலம் கலந்தால் பரவாயில்லை ஆனால் இவர்கள் பேச்சில் ஆங்கிலத்தில் 10வீதம் தமிழல்லவா கலந்திருக்கிறது....

இந்தப் பதிவைப் படித்தீர்களா? நேரமிருந்தால் படித்துப்பாருங்கள் -
http://nkashokbharan.blogspot.com/2009/07/blog-post_07.html

Admin said...

//என்.கே.அஷோக்பரன் கூறியது...
நல்ல கட்டுரை. நானும் இதைப் பற்றி நிறையக் கவலைப்பட்டிருக்கின்றேன். எல்லாவற்றிலும் கொடுமை என்ன தெரியுமா? தமிழில் 10வீதம் ஆங்கிலம் கலந்தால் பரவாயில்லை ஆனால் இவர்கள் பேச்சில் ஆங்கிலத்தில் 10வீதம் தமிழல்லவா கலந்திருக்கிறது....

இந்தப் பதிவைப் படித்தீர்களா? நேரமிருந்தால் படித்துப்பாருங்கள் -
http://nkashokbharan.blogspot.com/2009/07/blog-post_07.html//



இப்பொழுதுதான் பார்த்தேன் நண்பரே உங்கள் ஆதங்கமும் இதேதான். உரியவர்கள் திருந்தினால் சரிதான்.அல்லது தமிழ் மொழிக் கொலையினை நிறுத்தினால் சரிதான்.

கோவி.மதிவரன் said...

வணக்கம்

சிறப்பான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே..

தமிழைக் காப்பது தாயைக் காப்பதற்குச் சமம்.

தமிழே தமிழரின் முகவரி

Post a Comment