Friday 31 December 2010

காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள்...


யாரும் என்னை திட்ட நினைத்திடாதிங்க இது ஒரு நகைச்சுவைப் பதிவு.

இப்போது சில வலையுலக நண்பர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனை பற்றி இந்த பதிவுல தரலாம் என்று இருக்கிறன்.


1. காதலி எங்கே போகின்றார், வருகின்றார் என்ற விடயங்களை காதலியிடம் கேட்கக்கூடாது. நீங்கள் அதிகம் வெளியில் செல்லக்கூடாது.

2. நீங்கள் அதிக நேரம் எவருடனும் தொலை பேசியில் உரையாடக்கஊடாது. ஆனால் காதலி யாருடனும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கதைக்கலாம். நீங்கள் கண்டுகொள்ளக்கூடாது.
3. நீங்கள் உங்கள் பெண் நண்பிகளோடு காதலி இருக்கும்போது கதைப்பதனை தவிர்த்துக்கொள்ளுங்கள். அல்லது முற்றாக நண்பிகளை மறந்து விடுங்கள். உங்கள் காதலி அவரது நண்பர்களோடு பழகுவதற்கு இடமளியுங்கள்.

4. உங்கள் காதலி அழகில்லை என்றாலும் உன்னைப்போல் அழகி உலகிலில்லை என்று புகழ்ந்து பேசுங்கள்.

5. நீங்கள் காதலிக்க ஆரம்பித்ததும் ஆடம்பரங்களை தவிருங்கள். நீங்கள் அழகாக இருந்தால் ஏனைய பெண்கள் உங்களை அபகரித்து விடுவார்கள் என்ற எண்ணம் உங்கள் காதலிக்கு இருக்கும். நீங்கள் ஆடம்பரமாக இருந்தால் உங்களை நோட்டம்விட ஆரம்பித்து விடுவார். சந்தேகப்பட்டு விடக்கஊடிய சந்தர்ப்பங்கள் இருக்கிறது.

6.உங்கள் காதலிக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ எல்லாவற்றையும். உங்களிடம் பணமில்லை என்றாலும் எங்காவது கடன் பட்டாவது வாங்கிக் கொடுங்கள். ஆனால் உங்களிடம் பணம் இல்லை என்பதனைக் காட்டிக்கொள்ளவேண்டாம்.

7. அதிகமாக இளம் பெண்கள் இருக்கின்ற இடங்களுக்கு போவதனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அல்லது காதலிக்குத் தெரியாமல் போய் வாருங்கள்.

8. உங்கள் காதலி பலர் மத்தியிலே இருக்கும்போது உங்கள் காதலியைப் பற்றி அவர்களிடம் புகழ்ந்து பேசுங்கள். (காதலி இல்லாத நேரங்களில் திட்டித்தீர்க்கலாம்)

9.நீங்கள் இதற்கு மூன்னர் வேறு யாரையும் காதலித்திருந்தாலும் உங்கள் காதலியிடம் எனக்கு பெண்களைப் பார்க்கவே பிடிக்காது ஆனால் உன்னை எப்பவும் பார்த்துக் கொண்டே இருக்கணும்போல இருக்கு என்பது போன்ற வசனங்களை அடிக்கடி பேசுங்கள்.


10. இதுதான் முக்கியமான விதி முதலில் ஒரு பெண்ணை காதலிக்கவேண்டும்.
read more...

கொம்புமுறி விளையாடலாம் வாங்க.. பகுதி 02

கொம்புமுறி விளையாடலாம் வாங்க.. பகுதி - 01

தாயும் தந்தையும் ஒரே குடியாகவும் ஒரே வாரமாகவும் அமையும் வழக்கம் நடைமுறையில் இல்லை சில விதி விலக்குகள் இருக்கலாம் அவை முறை மாறிய திருமணங்களினால் ஏற்பட்டவை. கோவிலிலே பூசைகள் திருவிழாக்கள் என்பன குடிவழி நடக்கும்போது ஏற்படும் போட்டிகளில் தாயுடன் குழந்தைகள் அனைவரும் ஒத்து நிற்பர். தந்தை மட்டும் தனித்து நிற்பார்.


 வாரக் கட்டாக கூத்து வசந்தன் கொம்புமுறி வந்துவிட்டால் குழந்தைகள் அனைவரும் தந்தையின் பக்கம் சார்ந்து நிற்பர்தாய் மட்டும் தனித்து நிற்பாள். வாரக்கட்டு உணர்ச்சியினால் வாய்க்கொழுப்புச் சீலையால் வடிந்த கதை ஒன்றுண்டு. பிள்ளைகள் தாய் தந்தை இருவர் பக்கமும் சார்ந்து நிற்கும் வகையிலே குடிவழியும் வாரக்கட்டும் பிரித்து வைத்த மட்டக்களப்பு மக்களின் மதிநலம் வியந்து போற்றுதற்குரியது.

அம்மன் கோதாரி என்ற நோய்கள் பரவினால் அல்லது பரவும் என்ற எண்ணம் தோன்றினால் அல்லது மழைவளம் வேண்டுமென்று கருதினால் ஊர் நன்மை கருதி கொம்புமுறி விழையாட்டு நடாத்துவது பற்றி ஆலோசிப்பர். கண்ணகை அம்மனை மகிழ்வூட்டி தமது காரிய சித்திகளை பெற முனைவோரும் இது பற்றிச் சிற்திப்பர்.

ஊர்மக்கள் அனைவரும் பங்குபற்றுகின்ற நிகழ்ச்சியாதலால் பொதுத் தீர்மானமின்றி கொம்பு விழையாட்டு நடாத்த முடியாது. கட்சி வேறுபாட்டினால் குழப்பநிலை தோன்றாது என்ற உத்தரவாதம் தேவை. அதுமட்டுமன்றி கொம்புமுறி விழையாட்டு இடைநடுவே குழம்பிவிட்டால் குழப்பிய பகுதியினர் குற்றப்பணம் கட்டவேண்டியும் நேரிடும். ஊர் ஒற்றுமையாகவும் கட்டுப்பாடாகவும் இருந்தால் மட்டுமே கொம்புமுறி விழையாட்டு நடாத்தலாம். இல்லையேல் விழையாட்டு வினையாக முடிந்த கதையாகும். இன்று இந்த விழையாட்டு அருகிப் போனமைக்கு இவையும் காரணம் எனலாம்.

களுதாவளையில் கொம்புமுறி விழையாட்டு நடாத்துவது பற்றி 1812ம் ஆன்டு ஆவணிமாதம் 1ம் திகதி எழுதப்பட்ட ஆவணம் இப்பொழுதும் இருக்கின்றன. களுதாவளை ஊர் மக்களின் நன்மை கருதி கொம்புமுறி விழையாட்டு நடாத்துவதற்கு ஊர்க்கடுக்கண்டவர்கள் தென்சேரி வடசேரிவாரத்திற்கு தெரிபட்டு குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு அமைய நடநடது கொள்வோம் என்று கையொப்பமிட்டுள்ளனர். அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை பொலிஸ் தலமை உத்தியோகம் பார்த்த அந்நாளைய விதானைமார் வன்னிமை முன்னிலையில் கையொப்பம் வைத்து உத்தரவாதம் அளித்துள்ளனர்.

கொம்பு முறிபற்றி இவ்வாறு எழுதப்பட்ட பல வருடங்களுக்குரிய ஆவணங்கள் உண்டு ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளில் அநேகமானவை ஒரே விதமானவை. ஒருசில விசேட நிபந்தனைகள் சில ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

1894ம் ஆண்டு ஆனிமாதம் 16ம் திகதி மட்டக்களப்பு எருவில் பற்று களுதாவளையில் ஊர் நன்மை கருதி கொம்புமுறி விழையாட்டு நடாத்துவது பற்றிய உடன்படிக்கை எழுதப்பட்டுள்ளது. தென்சேரி வாரக்கடுக்கண்டவர்களும் வடசேரி வாரக் கடுக்கண்டவர்களும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

உடன்படிக்கை விபரமாக எழுதப்பட்டுள்ளது. 5 நிபந்தனைகள் பற்றிய சுருக்கம் பின்வருமாறு அமைந்துள்ளன.

01. இப்போது நடந்தேறிவரும் தேங்காய் அடிப்பதை 15 நாட்களுக்கு நடாத்தவும். இந்த நாட்களிலே தேர் வேலை புரைவேலைகளை முன்னீடு பின்னீடாக முடித்துக் கொள்ளவும்.

02. 11 நாளைக்குள் கொம்புத் தட்டெடுத்து குத்துக்கால் நாட்டி தேர் வரிந்து கப்பல் கேடகம் முதலிய கட்டு வேலைகளையும் முன்னீடு பின்னீடாய் செய்து முடிக்கவும். கொம்புத்தட்டு வழமைப்படி சதங்கை கட்டி வழக்கமான இடங்களிலே அவரவர் வசந்தனாடிக் கொள்ளவும்.

03. கொம்புத் தட்டெடுத்து அடுத்த நாளில் இருவாரத்துக்காரர்களும் பேசி இணங்கியபடிக்கு தங்களாலியன்ற வெடி வாணம் முடி பிறவாடை முதலிய சகல தளபாடங்களும் செய்து தேர் கல்யாணம் முடித்து தேருக்கு தண்ணீர் சொரிந்து சீலை போட்டு முடிகவிழ்த்து வழமைப்படி முடிக்கவும்.

04. தங்களால் இயன்றளவு இரண்டு நாளைக்கு தேர்களைச் சோடித்து ஏழு நாளைக்குள் தேர் இழுக்கவும் நேருக்கு இரண்டே முக்கால் விரக்கடையில் சரி கொம்புக்குத் தோடு இரண்டு விரக்கடை குச்சித் தோடும் பிடித்து அவ்அவ் இடத்தில் பில்லி வைத்து கொம்பு கட்டிக் கொள்ளவும். கொம்பு இரண்டு வாரக் காரர்களும் ஏற்க எடுத்துக் கொள்ளவும். நியாயமாய் கட்டிப்பிடித்து முறித்துக் கொள்ளவும்.

05. முற் சொல்லியபடி தேரிழுத்து முடிந்த அடுத்த நாளில் அம்மனைக் கொண்டு வந்து பொங்கிப் போடவும்.

இவ்வாறு இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப் பட்டுள்ளன.

தொடர்ந்தும் விளையாடலாம்.....
read more...

உங்களால முடிஞ்சா இதை படிச்சு பாருங்க…



என்ன தலைப்ப பார்த்து ஓடி வந்து எனக்கு திட்டவேண்டாம் முதலில் இதைப் பாருங்க. கொம்புமுறி விளையாடலாம் வாங்க.. பகுதி 02

இன்னும் சில மணித்தியாலங்களில் 2010 ஜ வழியனுப்பி 2011 ஜ வரவேற்கக் காத்திருக்கின்றோம். 2010 பலருக்கு நல்ல ஆண்டாக அமைந்திருக்கும் இருந்தாலும் சில மறக்க முடியாத விடயங்களும் இடம்பெற்றிருக்கலாம்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே கடும் மழை பெய்துகொண்டிருக்கின்றது. பல ஆயிரக்கணக்கான மக்கள் 50 க்கும் மேற்பட்ட முகாம்களிலே தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். சில இடங்களுக்கான போக்குவரத்துக்கள்கூட துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றது. மட்டக்களப்பு மக்கள் வெளியில் வரக்கூட முடியாத அடை மழையில் புதிய ஆண்டை வரவேற்கக் காத்திருக்கின்றனர்.

என்னைப் பொறுத்தவரை நான் நினைத்திருந்த விடயங்கள் எதுவும் நிறைவேறவில்லை என்றே சொல்ல வேண்டும். அனைத்தும் புதிய ஆண்டில் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

வலைப்பதிவைப் பொறுத்தவரை சில நண்பர்களை கருத்து முரண்பாடுகளால் இழந்திருக்கின்றேன். எல்லோருடைய கருத்துக்களும் ஒத்திருப்பதில்லை கருத்துக்கள் முட்டிமோதும்போதுதான் உண்மைகள் வெளிவரும்.


வலைப்பதிவோடு கருத்து முரண்பாடுகள் நின்றுவிடும் என்று நினைத்தேன் ஆனால் சில நண்பர்களின் நட்புக்களைக்கூட இழந்திருக்கின்றேன்.

இலங்கை வலைப்பதிவுலகைப் பொறுத்தவரை பதிவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கவென்றே சிலர் இருக்கின்றனர். அவர்கள் புது வருடத்திலாவது திருந்துவது நல்லதென்று நினைக்கின்றேன்.

2010ஜ பொறுத்தவரை நான் அதிகம் அரசியல் சார்ந்த பதிவுகளை இட்டிருந்தேன். அதனால்தான் சில நண்பர்கள் என்னுடன் கருத்து முரண்பட்டுக் கொண்டனர்.

நம் கருத்துக்கள் முரண்படலாம் ஆனாலும் கருத்து முரண்பாட்டினால் நம் நட்பு இல்லாமல் போகக்கூடாது. நான் எதனையும் துணிந்து சொல்பவன் எத்தனையோ அச்சுறுத்தல்கள் வந்தபோதும். என் கருத்துக்களில் தவறிருந்தால் எவரும் தவறுகளை சுட்டிக் காட்டலாம்.

கருத்து வேறுபாடுகளினால் நட்புக்களை இழக்க நான் விரும்புவதில்லை. அண்மையில் இலங்கைப் பதிவர் சந்திப்ப நடந்தபோது நான் கொழும்பில்தான் இருந்தேன். சந்திப்புக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையிருந்தது. ஆனாலும் மனது இடம் கொடுக்கவில்லை. காரணம் முன்னைய சந்திப்புக்களிலே என்னோடு நன்பர்களாக இருந்தவர்கள் இப்போது என்னுடன் கதைப்பதில்லை.

இனிவரும் காலங்களிலாவது கருத்து வேறுபாடுகளினால் நட்பை முறித்துக் கொள்ளாமல் இருப்போம்.

மறுபுறத்திலே நான் வலைப்பதிவிலே எதனையும் சாதித்து விடவில்லை ஏதோ கிறுக்கியிருக்கின்றேன். புது வருடத்திலாவது ஏதாவது மக்களுக்காகவும் தமிழுக்காகவும் எழுதவேண்டும்.

புது வருடம் இனைவருக்கும் இனிய ஆண்டாக அமையட்டும்.
படங்கள் இணையம்.. 
read more...

Tuesday 28 December 2010

கொம்புமுறி விளையாடலாம் வாங்க.. பகுதி - 01

இது என்னுடைய முன்னைய பதிவு மீண்டும் பதிவாகிறது... கொம்பு முறி விளையாட்டைப் பற்றி தொடர் ஒன்று எழுத வேண்டும் என்று பகுதி 01 பதிவிட்டுவிட்டு வலைப்பதிவு பக்கம் வராததால் பகுதி இரண்டு இன்னும் பதிவிடவில்லை பகுதி 02  இன்று பதிவிட இருப்பதனால் பகுதி ஒன்றை மீண்டும் பதிவிடுகிறேன். 

தமிழருகே  தனித்துவமான கலை, கலாசார, பாரம்பரியங்கள் இருக்கின்றன. அவை இன்று மறைந்து வருகின்றன. அன்று நடைபெற்ற பல விடயங்களை நமது முன்னோர்கள் சொல்லியே நாம் அறியவேண்டி இருக்கின்றது.



எமது பாரம்பரிய கலைகளை நாம் கட்டிக்காக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். பல விடயங்களை நாம் எமது முன்னோர்கள் சொல்லியே அறியவேண்டி இருக்கின்றது. எமது எமது எதிர்கால சந்ததியினர் எமது பாரம்பரிய கலை, கலாசாரங்களை எதிர்காலத்தில் தெரியாமல் இருப்பதற்கும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

தமிழருக்கே தனித்துவமான ஒரு விளையாட்டாக கொம்புமுறி விளையாட்டு விளங்குகின்றது. கொம்புமுறி விளையாட்டுக்கு பிரசித்தி பெற்ற இடமும் எனது கிராமம் களுதாவளை. கொப்புமுறி விளையாட்டு இடம் பெற்ற  இடம் கொம்புச்சந்தி என்று இப்போதும் எல்லோராலும் பயன்படுத்தப் படுகின்றது ஆனால் இங்கே இருக்கின்ற பலருக்கு கொம்புமுறி விளையாட்டு என்றால் என்ன என்று தெரியாது.

கொம்புமுறி விளையாட்டு தொடர்பாக நான் முன்னர் மேலோட்டமாக ஒரு இடுகை இட்டிருந்தேன்.  இந்த பதிவின் மூலம் கொம்புமுறி விளையாட்டு பற்றியும் எமது கிராமத்திலே எவ்வாறு கொம்புமுறி விளையாட்டு இடம் பெற்றது என்ற பல சுவாரஷ்யமான விடயங்களை வரலாற்று தகவல்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன்.

கண்ணகை மாநாய்கரின்  வளர்ப்பு மகள். மாசாத்துவரின் மருமகள். கோவலன் மனைவி. செட்டி குலத்திலே வளர்ந்த செட்டிச்சி அம்மை. மாவின் கனியாக வந்த மாறன் விழி மாற வழி செய்தவள்.  மாதவிக்குப் போன்தோற்ற கணவருடன் பூம்புகார் விட்டுப் புறப்பட்டு மதுரை சென்றாள்.  ஆயர் இடை சேரியில் கண்ணகியை அடைக்கலமாக வைத்து கண்ணகியின் ஒரு கால் சிலம்பு விற்க  சென்றான் கோவலன்.

தட்டான் ஒருவன் கோவலனை "சிலம்புத் திருடன்" என்று குற்றம் சாட்டினான். விதி வலியால் அறிவிழந்த  பாண்டிய மன்னன் தீர்க்கமாக விசாரணை செய்யாமல் கோவலனை மழுவிலே வெட்டிக் கொன்றான். 

தன் கணவன் கள்வன் எனும் குற்ற  சாட்டின் பேரில் கொலை செய்யப் பட்டத்தை அறிந்த கண்ணகை கடும் கோபமுற்றாள். ஒரு கையில் சிலம்பு மற்றொரு கையில் வேப்பம் குழை.  விரித்த தலை முடி  நீர் வடியும் கண்கள் . கோபா வேசமாக சென்று பாண்டியனோடு வழக்குரைத்த கண்ணகை இடது முலை திருகி எரிந்து பாண்டிநகர் எரித்தாள்.

அடைக்கலமாக இருந்த ஆயர்ப்பாடிக்கு வந்தபோது ஆய்ச்சியர்கள் வெண்ணெய், தயிர் முதலானவற்றை கண்ணகியின் வேப்பம் தனிவித்தனர். கண்ணகை சீரிய தோற்றம் மாறவில்லை. பொங்கிய சினம் தணியவில்லை. இளைஞர்கள் கண்ணகி கட்சி கோவலன் கட்சி என்று இரண்டு பிரிவாகப் பிரிந்து கொம்பு எனப்படும் வளைந்த தடிகள்  இரண்டினை ஒன்றோடு ஒன்று கொழுவி இழுத்து முறித்து விளையாடி கண்ணகை கட்சிக்கு வெற்றி கொடுத்து ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.

இந்த வினோத விளையாட்டினை கண்ணுற்ற கண்ணகை கோபம் தணிந்து மணம் மகிழ்வுற்று சிரித்ததாகவும் கண்ணகையை மகிழ்சி அடைய செய்யும்  நோக்கிலே தோன்றி வளர்ச்சி அடைந்ததே இந்த கொம்புமுறி விளையாட்டு. இது விளையாட்டு என்று பேர் பெறினும் சமய சம்மந்தமானதும் இலக்கிய இராசனைக்குரியதும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலே வெற்றிலை செய்கையின் மூலம் புகழ் பெற்ற கிராமம் களுதாவளை கிராமம். பழம் பெருமை மிக்க இக் கிராமத்தின் வெற்றிலை தனி சுவை மிக்கது. "காலி  விளை பாக்கிற்கும் களுதாவளை வெற்றிலைக்கும் ஏலம் கிராம்பிட்கும் ஏற்றதுதான் உன் எழில் வாய்"  என்று நாட்டுப்புற பாடலிலே பாடும் அளவுக்கு பிரசித்தி பெற்றதுதான் இக் கிராமம்.

கண்ணகை வழிபாடு இந்தியாவிலே ஆரம்பமானது. சேரன் செங்குட்டுவன் இமய மலையில் கல்லெடுத்து கனக, கனக விஜயன் தலைமையிலே சுமந்து வர செய்து கண்ணகிக்கு சிலை செய்தான். கோவில் கட்டி விழாக் கொண்டாடினான். விழாவுக்கு சென்ற இலங்கை கஜபாகு வேந்தன் கண்ணகை சிலைகளையும், வழிபாட்டினையும் இலங்கைக்கு கொண்டு வந்ததாக சிலப்பதிகாரம் சொல்கின்றது.

கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்திலே கண்ணகை வழிபாடு பிரசித்தி பெற்றது.  கொம்புமுறி விளையாட்டு கண்ணகை அம்மனை முன்னிறுத்தியே நடை பெறும். அம்மை, கொப்பளிப்பான், கண்நோய், போன்ற நோய்களை "அம்மன் கோதாரி"  என்று அழைப்பது மட்டக்களப்பு பிரதேச வழக்கு.

மழை வளங்குன்றி, வரட்சி அதிகமான காலத்திலேயே இந்த நோய்கள் அதிகம் பரவும். மஞ்சலும், வேப்பிலையும் இதற்கு மருந்து. கண்ணகை அம்மனுக்கு விழா நடத்தினால் கண்ணகை மகிழ்சியுற்றால் மழை பொழியுமெனவும் கோதாரிகள் (நோய்கள்) குறையும் எனவும் மக்கள் நம்பினர். இதனாலேயே கண்ணகையை வேண்டி மக்கள் மழைக் காவியம் பாடினர்.

"கப்பல் திசை கேட்டது கரைக்குள் அடையாதோ
கட்டையினில் வைத்த பின மற்றுயிர் கொள்ளாதோ
உப்பளமத்தில்  பதர் விதைக்க முளையாதோ 
உத்தரவு ஊமையனுரைக்க அறியானோ
இப்பிரவியர் குருடு இப்ப தெளியாதோ
எப்பமா மழை தருவ தென்றினி திருந்தாய் 
தப்பினால் உலக முறுவார்கள்  துயர் கண்டாய் 
தற்பரா பரனுதவு சத்தி கண்ணகையே"

என்பது மழைக் காவியத்தில் சில வரிகள்.

கொம்புமுறி விளையாட்டு நடத்துவதானாலும் கண்ணகையினுடைய அருளையும், கருணையும் பெற்று நோய் நொடியின்றி  மழைவளம் பெற்று வளமாக வாழலாம் என்று மக்கள் நம்பினர். அவர்களுடைய நம்பிக்கை நிறைவேரியமையினாலேயே இன்றும் கண்ணகை வழிபாடு நிலைத்து நிக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலே கொம்புமுறி விளையாட்டு பரவலாக நடைபெற்றிருக்கின்றது. களுதாவளையிலே மிக நீண்ட காலமாக இக் கொம்புமுறி விளையாட்டு சிறப்பாகவும், ஒழுங்காகவும் திட்டமிட்டும் நடைபெற்று வந்திருக்கின்றது. மட்டக்களப்பு தமிழகம் எனும் நூலில்  இது பற்றி விபரமாக குறிப்பிடப் பட்டுள்ளன.

கொம்பு என்ற சொல் பல்வேறுபட்ட கருத்திலே வழங்குகின்றது. பழங்காலத்தில் கொம்பு என்றோர் துளைக் கருவி இருந்தது. கொம்பு போன்று வளைந்த இதனை "ஊதிடு கொம்பு" என்றனர். கோடு, இரலை, ஆம்பல், வபிர், என்றும் அதனைக் குறிப்பிட்டனர்.

கோடு என்பது ஏரிக்கோடி, கோல், நந்து, மேன்மை, விலங்கின் கொம்பு, மரக் கொம்பு என்பனவற்றையும் குறிக்கும். "கொம்பு விளையாட்டு என்று சொல்லும்போது அது மரக் கொம்பினையே குறிக்கின்றது. அதிலும் இதற்கு என்று குறிக்கப்பட்ட அளவு, தகமை பெற்ற வளைந்த மரக் கொம்பே இதனால் கருதப் படுகின்றது.

கொம்புமுறி விளையாட்டு நடைபெறுவதற்கு இரண்டு கட்சிகள் தேவை ஒன்று கோவலன் கட்சி மற்றொன்று கண்ணகை கட்சி. கோவலன் கட்சியை வடசேரி என்றும், கண்ணகை கட்சியை தென்சேரி என்றும் குறிப்பிடுவர். வடசேரி, தென் சேரி  என்பவற்றை வடசேரி வாரம் தென் சேரி வாரம் என்று அழைப்பது மட்டக்களப்பு வழக்காறு.

மட்டக்களப்பு பிரதேசத்திலே கோவில் உரிமை அதிகமாக குடிவழியாக கணிக்கப்படுகின்றது.  பல குடிகள் இருக்கின்றன, குடும்பம் என்றும் சில இடங்களிலே சொல்வார்கள். ஒரு தாயின் பிள்ளைகள் ஆண் என்றாலும் சரி பெண் என்றாலும் சரி அனைவரும் தாயின் குடியினராகவே கணிக்கப் படுவர்.

வடசேரி, தென்சேரி வாரம் கணிக்கப்படும்போது மாறாக தந்தையின் வாரமாகவே ஆண் பெண் பிள்ளைகள் அனைவரும் கருதப்படுவர். வாரம் என்பதனை வாரக் கட்டு என்றும் சொல்வதுண்டு...



தொடரும். 
read more...

Saturday 25 December 2010

கோவணம் (கச்சை) கட்டினால் தண்டனை... பொலிஸ் தொல்லை தாங்க முடியல...

Free Christmas Powerpoint Background 6
அனைத்து நண்பர்களுக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்.

தலைப்பை பார்த்ததுமே என்னடா இவன் இப்படி எல்லாம் எழுதுரானே என்று யோசிக்கிறிறீர்களா? உண்மையை சொல்லணும் என்றால் இப்படி எல்லாம் எழுதத்தான் வேண்டும்.

எமது பிரதேசத்திலே கோவணம்(கச்சை) கட்டினால் பொலிசாரால் தண்டப் பணம் அறவிடப்படுகின்றது. இது தற்போது எமது பிரதேசத்தில் பேசப்படும் விடயம். எங்கள் ஊரில் ஒருவர் வாழைப்பழக் கடை வைத்திருக்கின்றார். அவர் கோவணம்தான் கட்டுவார் அவரது கோவணத்தைக் கண்ட பொலிசார் அவரை பிடித்துவிட்டனர் என்று பரவலாக பேசப்படுகின்றது. ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லை.

இக்கதை வருவதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. இப்போது எமது பிரதேசத்திலே பொலிஸ் தொல்லை தாங்க முடியவில்லை. எதற்கெடுத்தாலும் தண்டப்பணம் விதிப்பது.

எமது கிராமமானது விவசாயக் கிராமம் பல விவசாயிகள் மிளகாய்ச் செய்கையிலே ஈடுபட்டு வருகின்றனர். மிளகாய்ச் செய்கைக்கு மாட்டெரு மிக மிக அவசியமான ஒன்று மாட்டெரு இல்லையேல் மிளகாய்ச் செய்கை பண்ணமுடியாத நிலை இருக்கின்றது. தனது விவசாய நிலத்தில் மாட்டெரு ஏற்றி வைத்திருக்கின்ற விவசாயிகளை கைது செய்து அடைத்து வைத்து தண்டப்பணம் அறவிட்டு வருகின்றனர் பொலிசார். பொலிசார் சொல்லும் விளக்கம் சூழல் மாசடைகின்றது என்பதே.

ஆனால் விவசாயிகள் மாட்டெருவினை உடனடியாகவே பயிர்களுக்கு போட்டுவிடுகின்றனர். அல்லது ஒருசில நாட்கள் மாத்திரமே பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வர். இதனால் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அத்தோடு மிளகாய்செய்கைக் காலம் ஆரம்பித்திருக்கின்றது இந்தநிலை தொடருமாக இருந்தால் மிளகாய்ச் செய்கை பண்ண முடியாத நிலை ஏற்படலாம்.

இது மாத்திரமல்ல அண்மையில் இரண்டு இடங்களிலே கஞ்சாவினை பொலிசாரே கொண்டு வைத்துவிட்டு அந்த காணியின் உரிமையாளரை கைது செய்து அபராதம் விதித்த சம்பவங்களும் இடம் பெற்றிருக்கின்றன. இவ்வாறான செயற்பாடுகள் பணம் படைத்தவர்களுக்கு நடந்தால் பாதிப்படையமாட்டார்கள். ஆனால் அன்றாடம் கூலிவேலை செய்பவர்களுக்கே இந்த நிலை. தண்டப் பணத்துக்கே ஒரு மாதம் கூலிவேலை செய்யவேண்டும். இவ்வாறு பல விடயங்கள் இடம்பெறுகின்றன.

இலஞ்சம் வாங்கி செயற்படுகின்ற பொலிசாரும் இல்லாமல் இல்லை கடலிலே மண் அகழ்வது தடை செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் பொலிஸ் நிலையத்துக்கு அருகிலேயே இரவோடு இரவாக மண் அகழ்ந்து விற்பனை செய்துகொண்டிருக்கின்றனர். குறித்த பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொலிஸ் துரித அழைப்பு இலக்கமாகிய 119 க்கு பல தடவை அறிவித்தும் எந்தப் பயனும் இல்லை.

எனக்கும் எனது நண்பர்களுக்கும் அண்மையில் இடம்பெற்ற சம்பவம்.

நாங்கள் நண்பர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் சந்தோசமாக ஏதாவது செய்வோம். அதிகமாக இரவு 12 மணிக்கு பின்னர்தான் வீட்டுக்கு செல்வோம். இப்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான மழை பெய்து கொண்டிருக்கின்றது. மழை காலத்தில் குளத்திலே இரவு நேரத்தில் மீன் வெட்டுவார்கள். அதிகமாக மீன் வெட்டப்படுகிறது என்பதனை அறிந்த நாம் நாமும் சந்தோசமாக மீன் வெட்ட ஆசைப்பட்டோம். மழையில் நனைவதென்றால் எனக்கு மிக மிக பிடித்த விடயமாச்சே.

குளத்துக்குச் சென்று விரால் மீன்கள் உட்பட பல மீன்களை வெட்டிவிட்டோம். திரும்பி வந்துகொண்டிருக்கும்போது பிரதான வீதியில் நின்ற பொலிசார் எங்களைப் பிடித்துவிட்டனர். எங்கள் கைகளில் மீன்களும் மீனை வெட்டுவதற்காக கொண்டு சென்ற  கொண்டு சென்ற மெல்லிய தகடுமே. அப்போது நேரம் இரவு 12 மணியை தாண்டிவிட்டது.

எங்களைப் பிடித்த பொலிசார் விரட்ட ஆரம்பித்துவிட்டனர். என்னைப் போன்றுதான் என் நண்பர்களும் எதற்கும் பயந்தவர்களல்ல. நாம் மீன் வெட்ட கொண்டு சென்ற மெல்லிய தகட்டை வைத்து கூரிய ஆயுதங்களுடன் வந்தோம் என்று கைது செய்யப்போகின்றார்களாம். பொலிசாருக்கும் எமக்கும் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. இது வேற யாருமாக இருந்தால் பணம் பறித்திருப்பார்கள்.

இவ்வாறு தேவையற்ற விடயங்களுக்கெல்லாம் மக்களிடம் பணம் பறிக்கின்ற நிலை காணப்படுகின்றது. சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே சட்டத்தை கையிலெடுத்திருக்கின்றனர்.


read more...

Friday 24 December 2010

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பும் அதிகார மையமும்

கடந்த 19 ம் திகதி இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு மிகவும் சிறப்பான முறையிலே நடை பெற்று இருக்கின்றது. வலைப் பதிவுலகைப் பொறுத்தவரையில் இலங்கை வலைப்பதிவர் சந்திப்புக்களானது வலைப்பதிவுலகில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்று சொன்னால் எவராலும் மறுக்க முடியாது. (சில விதிவிலக்கானவர்கள் இருக்கின்றனர் அவர்களுக்காகவே இந்தப் பதிவு)

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு பற்றி பேச ஆரம்பித்தாலே பதிவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க இருக்கின்ற ஒரு சில பதிவர்கள் இலங்கைப் பதிவர்கள் பற்றியும் பதிவர் சந்திப்பு பற்றியும் தவறான முறையில் பேசுவதை பதிவிடுவதை நிறுத்துவது நல்லதென்று நினைக்கின்றேன்.

இலங்கையிலே இடம்பெற்ற ஒவ்வொரு வலைப்பதிவர் சந்திப்பும் இலங்கை வலைப்பதிவர்கள் மத்தியிலே பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. இதன் மூலம் பல புதிய புதிய பதிவர்கள்கூட உருவாகிக் கொண்டிருக்கின்றனர்.

நான் சில காலம் பதிவிடுவதிலிருந்து ஒதுங்கி இருந்தாலும் பதிவுலகில் என்ன நடக்கின்றது என்று பார்க்கத் தவறுவதில்லை. பதிவர்களுக்கிடையே கருத்து முரண்பாது இருக்கலாம் அதற்காக எடுத்ததற்கெல்லாம் பிழை என்று சொல்லி முரண்பட்டுக்கொண்டிருப்பது. நாகரீகமான விடயமல்ல.

இறுதியாக இடம்பெற்ற இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு தொடர்பான பேச்சுக்கள் ஆரம்பமானதன் பின்னர் அதிகார மையம் என்ற சொல் பரவலாக இலங்கை இலங்கை வலைப்பதிவர் மத்தியிலே பேசப்படுகின்றது. இது தொடர்பாக நானும் சில கருத்துக்களை சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றேன்.

இலங்கை வலைப்பதிவர்களைப் பொறுத்தவரை தலைமைத்துவம் அதிகார மையம் என்றொன்று இருந்ததில்லை அப்படி இருப்பதை நானும் விரும்பப் போவதுமில்லை. பதிவர் சந்திப்புக்கள் கொழும்பில் நடப்பதனால் இதிகார மையம் கொழும்பு பதிவர்களிடம் இருக்கின்றது. என்று பதிவர்களக்கிடையே சண்டைய ஏற்படுத்தும் நினைக்கும் ஒரு செயலாகவே நான் பார்க்கின்றேன். என்ன கொடுமை சார் என்று சொல்லிவிட்டு நாம் நம் வேலையை பார்ப்போம்.

என்னைப் பொறுத்தவரை பதிவர் சந்திப்புக்களை கொழும்பைவிட வேறு இடங்களிலே நடாத்துவதை அதிகமான பதிவர்கள் விரும்புகின்றனர். ஆனால் வேறு பிரதேசங்களிலே இருக்கின்ற பதிவர்கள் சந்திப்புக்களை அந்தந்த பிரதேசங்களிலே நடாத்துவதற்கு முன் வருவது குறைவு முன் வந்தாலும் இடை நடுவிலே ஏற்பாடுகளை கைவிடுகின்றனர். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஏனைய பிரதேசங்களைப் பொறுத்தவரை குறைந்தளவான பதிவர்கள் இருப்பதும் அதிகமான பதிவர்கள் கொழும்பிலே இருப்பதனால் கொழும்பிலே சந்திப்புக்களை ஏற்பாடு செய்வதும் இலகுவான விடயம்.

சில பதிவர்கள் மட்டக்களப்பிலே நடாத்தலாம் என்று என்னிடம் கேட்டுக் கொண்டனர் நானும் நடாத்துவதற்கு தயாராக இருந்தேன் அந்தக் காலகட்டத்தில் நான் அரசியல் சார்ந்த பதிவுகளை பதிவிட்டதனால் எனக்கும் சில பதிவர்களுக்கும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. நான் அரசியல் சார்ந்த பதிவுகளை பதிவிட்டதனால் குழுமத்திலிருந்தும் விலகி இருந்தேன். ஆனாலும் குழுமத்தில் நடக்கும் விடயங்களை பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். எனது அரசியல் சார்ந்த பதிவுகள் மற்றும் கருத்து முரண்காடுகள் (அரசியல் சார்ந்த குருத்து முரண்பாடுகள்) காரணமாக சந்திப்பு ஏற்பாடுகளைக் கைவிட்டேன்.

பதிவர் சந்திப்பு வேறு பிரதேசங்களிலே இடம்பெறாமல் அதிகார மையம் கொழும்பிலேதான் இருக்கின்றது என்ற குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கின்றேன். ஒவ்வொரு பிரதேச பதிவர்களுக்கும் நிறையவே சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பதிவர்களாகிய நாங்கள்தான் முன்வரவில்லை.

சில பதிவர்கள் எல்லாவற்றையும்;; எதிர்ப்பதை நிறுத்திக் கொள்வது நல்லது. கருத்து முரண்பாடு இருக்கவேண்டும் அப்போதுதான் உண்மைகள் தெரியவரும். அதற்காக கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க வேண்டியதில்லை. எங்களிடையே கருத்து முரண்பாடு இருந்தாலும் நல்ல விடயங்களுக்காகவாவது ஒன்று சேரவேண்டும்.

அடுத்த சந்திப்பு வேறு பிரதேசங்களிலே அடம்பெற வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். அடுத்த சந்திப்பை மட்டக்களப்பில் நடாத்துவதாக இருந்தால் அதற்கான ஏற்பாடுகளையும் நான் செய்ய தயாரயக இருக்கின்றேன்.

நல்லவற்றுக்காக ஒன்றுபடுவோம்.

read more...

Thursday 23 December 2010

அரங்கேறாத அந்தரங்க அசிங்கங்கள்

எனது முன்னைய பதிவின் தொடராகவே இந்தப் பதிவும் அமைகின்றது. நல்ல சமூகத்தை உருவாக்கவேண்டிய கல்விக் கூடங்கள் காதலர் கூடங்களாக மாறுவதும். நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டிய ஆசிரியர்களே மாணவர்களுடன் காதல் மற்றும் காம லீலைகளில் ஈடுபடுவதோடு மாணவர்களை தீய செயல்களிலே ஈடுபடுத்துகின்ற செயற்பாடுகளும் பரவலாக இடம்பெற்று வருகின்றன.

இன்றைய இளம் சமூகத்தைப் பொறுத்தவரை அவன் சார்ந்திருக்கின்ற சூழலும் சமூகமும் அவனது அவனது நடவடிக்கைகளிலே பெரும் பங்காற்றுகின்றன. கல்விக் கூடங்களாக இருக்கவேண்டிய பாடசாலைகள் காதலர் கூடங்களாக மாறியிருக்கின்றன. சில மாணவர்கள் கல்வி கற்கச் செல்கின்ற இடமாக அல்லாமல் காதலிக்கும் இடமாக பாடசாலையை பயன் படுத்துகின்றனர். கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட காதலுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். சில மாணவர்களால் பாடசாலைகளிலே வாயினால் சொல்ல முடியாத அசிங்கங்களும் அரங்கேறி இருக்கின்றன. மறு புறத்திலே மாணவர்களை காதலிக்கின்ற ஆசிரியர்களும் இல்லாமல் இல்லை.

இது ஒருபுறமிருக்க சில ஆசிரியர்களினால் பல காதல் மற்றும் காம லீலைகள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. இவை அந்த மாணவர்களின் எதிர்காலம் கருதி மறைக்கப்பட்டிருக்கின்றன. இவை மறைக்கப்படுவதனால் தன்னை எவருக் கண்டு கொள்ளவில்லை என்று அந்த ஆசிரியர்கள் தங்கள் காம லீலைகளை தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர்.

குறிப்பிட்ட ஒரு பாடசாலையில் ஒரு ஆசிரியர் படிப்பிக்கின்றபோது மாணவிகளின் முதுகில் தட்டி அவர்களது உள் ஆடையை லேசாக இழுத்து விடுவதும் மாணவிகளுடன் இரட்டை அர்த்தத்துடன் பேசுவதும் ஒரு சில மாணவிகளோடு நெருக்கமாகப் பழகி கணனி அறைக்கு தனியாக அழைத்துச் சென்று செக்ஸ் படங்களை போட்டுக்காட்டிய சம்பவங்கள் பல இடம்பெற்றிருக்கின்றன. அத்தோடு நின்று விடவில்லை சில மாணவிகளிடம் ஆசை வார்த்தைகளை கூறி தன் காம லீலைகளையும் அரங்கேற்றி இருக்கின்றார்.

அண்மையில் தரம் 11 படிக்கும் மாணவியையும் தன் காம லீலைகளுக்குப் பயன்படுத்தி இருக்கின்றார். குறித்த மாணவிகளின் எதிர்காலம் கருதி இவற்றை வெளியிட எவரும் முன் வருகின்றார்கள் இல்லை. இதே போன்றுதான் பிரத்தியக வகுப்புக்களை நடாத்துகின்ற சில ஆசிரியர்களும் சில மாணவிகளை தங்களது தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதே போன்று இன்னொரு ஆசிரியர் தன்னுடைய பிரத்தியக வகுப்புக்கு வருகின்ற மாணவர்களை தன்னுடைய தேவைகளுக்கு (ஓரினச் சேர்க்கை) பயன்னடுத்திய சம்பவங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

இன்று பல ஆசிரியர்கள் நல்ல எதிர்கால சந்ததியினரை உருவாக்க வேண்டுமென்று அர்ப்பணிப்போடு செயலாற்றிக் கொண்டிருக்கும்போது ஒரு சில ஆசிரியர்கள் இவ்வாறு நடப்பது வேதனைக்குரிய விடயமே.

திருந்துவார்களா இவர்கள்?

read more...

Wednesday 22 December 2010

11 வயதில் மலர்ந்த காதலின் கதை

நாம் 6ம், 7ம், 8ம், 9ம் தர மாணவர்களுக்கு தினமும் இரவு நேர வகுப்புக்களை இலவசமாக நடாத்தி வருகின்றோம். (300 மாணவர்களுக்கு மேல்) இதன்போது பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடப்பதுண்டு. மாணவர்களுக்குள் காதல் கற்பிக்கின்ற ஆசிரியரை மாணவி காதலிப்பது இன்னும் பல சம்பவங்கள் நடப்பதுண்டு.

6ம் தரம் படிக்கின்ற மாணவன் (11 வயது) தன் வகுப்பில் படிக்கின்ற மாணவிக்கு காதலர்தின வாழ்த்து ஒன்றினை கொடுத்திருந்தான். மாணவி உடனடியாக எங்களிடம் தந்து விட்டார். மாணவனை கூப்பிட்டு விசாரித்தோம் இது என்ன வாழ்த்து என்று எனக்கு தெரியாது கடையில் இருந்தது வாங்கிக் கொடுத்தேன். என்று சொல்லிவிட்டான்.

நாங்களும் பெரிதுபடுத்தவில்லை காரணம் இது காதலர் தினத்தில் வழங்கப்படவில்லை. ஒரு மாதத்துக்கு முன்னர் நடந்த சம்பவம் இது.

சில நாட்களின் பின்னர் அதே மாணவனால் குறித்த மாணவிக்கு ஒரு கடிதத்தை கொடுத்திருந்தான். மாணவி உடனே எங்களிடம் தந்துவிட்டார்.

அன்பின் சுகந்திக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்...


நான் உன்னை காதலிக்கிறேன். நீ என்னைக் காதலிக்கவில்லை என்றாலும் நான் உன்னைக் காதலித்துக் கொண்டே இருப்பேன். நீ இல்லை என்று மட்டும் சொல்லிவிடாதே நான் செத்துவிடுவேன். நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது. நீ இல்லை என்று சொன்னாலும் நான் சாகவும்மாட்டேன். ஏன் என்றால் எனக்குள்தான் நீ இருக்கின்றாய்.


நல்ல பதில் தருவாய் என்று எதிர் பார்த்துக் காத்திருக்கின்றேன்.


ன்புடன்
கீர்த்தி 

கடிதத்தைப் பார்த்ததும் சிரிப்புத்தான் வந்தது. உடனே மாணவனை கூப்பிட்டு கடிதம் கொடுத்தாயா என்று கேட்டோம் மாணவன் உடனே சொன்ன பதில் நான் காதலிக்கிறேன் கடிதம் கொடுத்தேன்.
read more...

Monday 20 December 2010

கடவுளின் பெயரால் ஏமாற்றப்படுகின்றோமா?

இன்று சிலர் கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றி உழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆசாமிகளென்றும் மந்திரவாதிகளென்றும் பல விதத்திலே மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

இதன் காரணமாக கடவுள்மீது மக்களுக்கிருந்த நம்பிக்கை குறைந்து கொண்டு வருகின்றது.

இது ஒருபுறமிருக்க அண்மைக் காலத்திலே இடம் பெற்ற சில சம்பவங்களைப் பார்க்கின்றபோது.... என்னவென்று சொல்லத் தெரியவில்லை. நாம் ஏமாற்றப் படுகின்றோமா அல்லது உண்மையாகவே  இவை எல்லாம் நடக்கின்றனவா என்று எண்ணத் தோன்றுகின்றன.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலே கடவுள் அதிகமாக நடமாடுகின்றார் போன்று இருக்கின்றது. பல இடங்களிலே பல சம்பவங்கள் இடம் பெற்றிருக்கின்றன. மரத்தில் பால் வடிதல் பிள்ளையார் வடிவில் மரக்கிளை பிள்ளையார் வடிவில் மாங்காய் வீட்டிற்குள் தங்கத்தாலான சிலை தோன்றுதல் என்று பல சம்பவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இவற்றிலே சில சம்பவங்கள் நம்பக்கூடியதாக இருப்பினும் பல சம்பவங்கள் மனிதர்களை முட்டாள்களாக்கும் சம்பவங்களாக இருக்கின்றன. 

சாமியார்கள் காலம் மாறி இப்போ மனிதக் கடவுளர்கள் காலம் வந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. பலர் தெய்வங்களாக மாறி தெய்வம் ஆடி கட்டுச் சொல்லுகின்ற நிலை காணப்படுகின்றது. இதில் எந்தளவில் உண்மை இருக்கின்றதோ தெரியவில்லை.

அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள்.....

இரவு ஏழு மணியளவில் ஒரு வீட்டை நோக்கி கூட்டம் கூட்டமாக எல்லோரும் சென்று கொண்டிருந்தனர். என்ன என்று விசாரித்தபோத. ஒரு வீட்டிலே சாமி அறையில் ஜந்து தலை நாகம் படமெடுத்து ஆடிய நிலையில் ஆதி பராசக்தி அமர்ந்திருக்கிறார். அதனை பார்க்கவே ஓடிக்கொண்டிருந்தனர். 

நானும் பார்க்கலாமே என்று போனேன் சனக்கூட்டமாக இருந்தது. உள்ளே சென்றேன். ஆதிபராசக்தியின் படம்தான் என் கண்ணுக்கு தெரிந்தது. எல்லோரும் செல்லிடத் தொலைபேசியை வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தொலைபேசியின் வீடியோவில்தான் தெரிகிறது என்று சொன்னார்கள். பல தொலைபேசிகளில் பார்த்தேன். சாமி அறையில் வைத்திருக்கின்ற ஆதிபராசக்தியின் படத்தினைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே. 

அங்கே வந்தவர்களில் பலர் வீட்டுக்காரர்களுக்கு திட்டிக்கொண்டு திரும்பிச் சென்றதை காணமுடிந்தது. 

இன்று பரபரப்பாக எமது பகுதியிலே பேசப்படுகின்ற விடயம். 12 வயது சிறுமி தெய்வம் ஆடி கட்டுச் சொல்லி செய்வினை சூனியம் எடுத்துக் கொண்டிருப்பதுதான். அந்த சிறுமியை நாடி கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். 
இவை எல்லாம் சாத்தியமா? அல்லது நாம் ஏமாற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றோமா?

அண்மையில் பிள்ளையார் வடிவிலான மாங்காய் என்று இணையத்தளங்களிலே படத்தினைப் போட்டிருந்தபோது என் நண்பர்களிடம் நான் சொன்னேன் என் நண்பன் ஒருவனுடைய வயிறு பிள்ளையாரின் வயிற்றைப் போன்று இருக்கின்றது. அவனை ஒரு மரத்தடியில் அமர வைத்து கோவில் கட்டி கும்பிடப் போகிறேனென்று.

read more...

Sunday 19 December 2010

வந்தாச்சு... வந்தாச்சு...

நலமாக இருக்கின்றீர்களா நண்பர்களே...

சில காலம் வலைப்பதிவுப் பக்கம் வர முடியவில்லை. நிறைய விடயங்களை எழுதவேண்டி இருக்கின்றது. பல முக்கிய விடயங்களை பதிவிடவேண்டும். இன்று முதல் தொடர்ந்து பதிவிட வேண்டும் என்று நினைத்திருக்கின்றேன். 

நான் வலைப்பதிவுப் பக்கம் வரமுடியாமல் இருந்த அந்த நாட்களில்  பல விடயங்கள் நடந்தேறி இருக்கின்றன. அவற்றை பதிவிட நினைத்தும் முடியாமல் போனது... இன்று முதல் எனது வழமையான பதிவுகள் உங்களை வந்து சேரும் என்ற  நம்பிக்கையோடு தொடர்கின்றேன்.

தொடருங்கள் நண்பர்களே...
read more...