கொம்புமுறி விளையாடலாம் வாங்க.. பகுதி - 01
தாயும் தந்தையும் ஒரே குடியாகவும் ஒரே வாரமாகவும் அமையும் வழக்கம் நடைமுறையில் இல்லை சில விதி விலக்குகள் இருக்கலாம் அவை முறை மாறிய திருமணங்களினால் ஏற்பட்டவை. கோவிலிலே பூசைகள் திருவிழாக்கள் என்பன குடிவழி நடக்கும்போது ஏற்படும் போட்டிகளில் தாயுடன் குழந்தைகள் அனைவரும் ஒத்து நிற்பர். தந்தை மட்டும் தனித்து நிற்பார்.
வாரக் கட்டாக கூத்து வசந்தன் கொம்புமுறி வந்துவிட்டால் குழந்தைகள் அனைவரும் தந்தையின் பக்கம் சார்ந்து நிற்பர்தாய் மட்டும் தனித்து நிற்பாள். வாரக்கட்டு உணர்ச்சியினால் வாய்க்கொழுப்புச் சீலையால் வடிந்த கதை ஒன்றுண்டு. பிள்ளைகள் தாய் தந்தை இருவர் பக்கமும் சார்ந்து நிற்கும் வகையிலே குடிவழியும் வாரக்கட்டும் பிரித்து வைத்த மட்டக்களப்பு மக்களின் மதிநலம் வியந்து போற்றுதற்குரியது.
அம்மன் கோதாரி என்ற நோய்கள் பரவினால் அல்லது பரவும் என்ற எண்ணம் தோன்றினால் அல்லது மழைவளம் வேண்டுமென்று கருதினால் ஊர் நன்மை கருதி கொம்புமுறி விழையாட்டு நடாத்துவது பற்றி ஆலோசிப்பர். கண்ணகை அம்மனை மகிழ்வூட்டி தமது காரிய சித்திகளை பெற முனைவோரும் இது பற்றிச் சிற்திப்பர்.
ஊர்மக்கள் அனைவரும் பங்குபற்றுகின்ற நிகழ்ச்சியாதலால் பொதுத் தீர்மானமின்றி கொம்பு விழையாட்டு நடாத்த முடியாது. கட்சி வேறுபாட்டினால் குழப்பநிலை தோன்றாது என்ற உத்தரவாதம் தேவை. அதுமட்டுமன்றி கொம்புமுறி விழையாட்டு இடைநடுவே குழம்பிவிட்டால் குழப்பிய பகுதியினர் குற்றப்பணம் கட்டவேண்டியும் நேரிடும். ஊர் ஒற்றுமையாகவும் கட்டுப்பாடாகவும் இருந்தால் மட்டுமே கொம்புமுறி விழையாட்டு நடாத்தலாம். இல்லையேல் விழையாட்டு வினையாக முடிந்த கதையாகும். இன்று இந்த விழையாட்டு அருகிப் போனமைக்கு இவையும் காரணம் எனலாம்.
களுதாவளையில் கொம்புமுறி விழையாட்டு நடாத்துவது பற்றி 1812ம் ஆன்டு ஆவணிமாதம் 1ம் திகதி எழுதப்பட்ட ஆவணம் இப்பொழுதும் இருக்கின்றன. களுதாவளை ஊர் மக்களின் நன்மை கருதி கொம்புமுறி விழையாட்டு நடாத்துவதற்கு ஊர்க்கடுக்கண்டவர்கள் தென்சேரி வடசேரிவாரத்திற்கு தெரிபட்டு குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு அமைய நடநடது கொள்வோம் என்று கையொப்பமிட்டுள்ளனர். அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை பொலிஸ் தலமை உத்தியோகம் பார்த்த அந்நாளைய விதானைமார் வன்னிமை முன்னிலையில் கையொப்பம் வைத்து உத்தரவாதம் அளித்துள்ளனர்.
கொம்பு முறிபற்றி இவ்வாறு எழுதப்பட்ட பல வருடங்களுக்குரிய ஆவணங்கள் உண்டு ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளில் அநேகமானவை ஒரே விதமானவை. ஒருசில விசேட நிபந்தனைகள் சில ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
1894ம் ஆண்டு ஆனிமாதம் 16ம் திகதி மட்டக்களப்பு எருவில் பற்று களுதாவளையில் ஊர் நன்மை கருதி கொம்புமுறி விழையாட்டு நடாத்துவது பற்றிய உடன்படிக்கை எழுதப்பட்டுள்ளது. தென்சேரி வாரக்கடுக்கண்டவர்களும் வடசேரி வாரக் கடுக்கண்டவர்களும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
உடன்படிக்கை விபரமாக எழுதப்பட்டுள்ளது. 5 நிபந்தனைகள் பற்றிய சுருக்கம் பின்வருமாறு அமைந்துள்ளன.
01. இப்போது நடந்தேறிவரும் தேங்காய் அடிப்பதை 15 நாட்களுக்கு நடாத்தவும். இந்த நாட்களிலே தேர் வேலை புரைவேலைகளை முன்னீடு பின்னீடாக முடித்துக் கொள்ளவும்.
02. 11 நாளைக்குள் கொம்புத் தட்டெடுத்து குத்துக்கால் நாட்டி தேர் வரிந்து கப்பல் கேடகம் முதலிய கட்டு வேலைகளையும் முன்னீடு பின்னீடாய் செய்து முடிக்கவும். கொம்புத்தட்டு வழமைப்படி சதங்கை கட்டி வழக்கமான இடங்களிலே அவரவர் வசந்தனாடிக் கொள்ளவும்.
03. கொம்புத் தட்டெடுத்து அடுத்த நாளில் இருவாரத்துக்காரர்களும் பேசி இணங்கியபடிக்கு தங்களாலியன்ற வெடி வாணம் முடி பிறவாடை முதலிய சகல தளபாடங்களும் செய்து தேர் கல்யாணம் முடித்து தேருக்கு தண்ணீர் சொரிந்து சீலை போட்டு முடிகவிழ்த்து வழமைப்படி முடிக்கவும்.
04. தங்களால் இயன்றளவு இரண்டு நாளைக்கு தேர்களைச் சோடித்து ஏழு நாளைக்குள் தேர் இழுக்கவும் நேருக்கு இரண்டே முக்கால் விரக்கடையில் சரி கொம்புக்குத் தோடு இரண்டு விரக்கடை குச்சித் தோடும் பிடித்து அவ்அவ் இடத்தில் பில்லி வைத்து கொம்பு கட்டிக் கொள்ளவும். கொம்பு இரண்டு வாரக் காரர்களும் ஏற்க எடுத்துக் கொள்ளவும். நியாயமாய் கட்டிப்பிடித்து முறித்துக் கொள்ளவும்.
05. முற் சொல்லியபடி தேரிழுத்து முடிந்த அடுத்த நாளில் அம்மனைக் கொண்டு வந்து பொங்கிப் போடவும்.
இவ்வாறு இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப் பட்டுள்ளன.
தொடர்ந்தும் விளையாடலாம்.....
0 comments: on "கொம்புமுறி விளையாடலாம் வாங்க.. பகுதி 02"
Post a Comment