Monday 31 October 2011

தமிழீழம் எனும் அடைய முடியாத இலக்கு நோக்கிய பயணத்தில் சிக்குண்ட கிழக்கு மாகாணம். பகுதி - 3


கிழக்குப் போராளிகளின் பிரிவின் பின்னர் கிழக்கு மக்களின் சுய நிர்ணயமும் கிழக்கின் அரசியல் சக்தி ஒன்றின் அவசியமும் உணரப்பட்டதன் வெளிப்பாட்டில் உருவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கு  மாகாண சபையையும் பல உள்ளுராட்சி மன்றங்களையும் கைப்பற்றி முப்பது வருடங்களு்கு மேலாக இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக சின்னாபின்னமாக்கப்பட்டு சிதைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாணம் பல சவால்களுக்கு மத்தியில் துரித அபிவிருத்திப் பாதை நோக்கி சென்றுகொண்டிருந்தது.

அப்போது  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவராகவும் கிழக்கு மக்களின் அபிவிருத்திக்காக கிழக்கு மாகாணம்  எவ்வாறான திட்டங்களினூடாக  துரிதமாக அபிவிருத்தி அடைய முடியுமென ஆராய்ந்து பல திட்டங்களை உருவாக்கி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வளர்ச்சியிலும், கிழக்கு அபிவிருத்தியிலும் முழு மூச்சாக ஈடுபட்டு வந்தவர் எல்லோராலும் செல்லமாக ரகு என்று அழைக்கப்பட்ட குமாரசுவாமி நந்தகோபன் அவர்கள்.

கிழக்கின் துரிதமான அபிவிருத்தியும், கிழக்கு மாகாணத்துக்கான தனித்துவ கட்சியும் தலைமையினையும் சிலரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. கட்சிக்காகவும், கிழக்கின் அபிவிருத்திக்காகவும் அயராது பாடுபட்ட ரகு அவர்களின் உயிர் பறிக்கப்பட்டது. ரகு அவர்களின் உயிர் பறிக்கப்படவில்லை எனில் கிழக்கு மாகாணம் இன்னும் பல அபிவிருத்திகளைக் கண்டிருக்கும். ரகு அவர்கள் வெளிநாட்டு அராஜதந்திரிகள், வெளிநாட்டுப் பிரமுகர்களோடு நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்ததோடு கிழக்கின் அபிவிருத்தி தொடர்பில் பல திட்டங்களை முன்னெடுத்திருந்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினைப் பொறுத்தவரை அன்றைய காலகட்டத்தில் மக்கள் செல்வாக்கு மிக்க கட்சியாக பரிணமித்திருந்தது. அதன் பிரதிபலிப்பாக கிழக்கு மாகாண சபையையும் பல உள்ளுராட்சி மன்றங்களையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கைப்பற்றியிருந்தது.

இவற்றை புலிகளுக்கு ஆதரவானவர்களாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்ந்தவர்களாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கிழகிலே ஒரு தலைமைத்துவம் இருக்கக்கூடாது கிழக்கும் தமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலே ரகு அவர்கள் இருந்தால் மக்கள் மத்தியிலே செல்வாக்குடைய கட்சியாக உருவெடுத்து நிலைத்து நின்றுவிடும் தமது அரசியல் இருப்பு இல்லாமல் போய்விடும் என்று பல சதித்திட்டங்களை தீட்டிவந்தனர். அவர்களின் சதித்திட்டத்தில் பல உயிர்களைப் பறிகொடுத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கின் தனித்துவக் கட்சியாக கிழக்கின் சுயநிர்ணயத்துக்காக பாடுபட்டு வருகின்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மீதான சதித்திட்டங்கள் ரகு அவர்களின் படுகொலையுடன் முடிவுக்கு வந்துவிடவில்லை. அவ்வப்போது பல சதித்திட்டங்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சந்தித்துக் கொண்டிருக்கின்றது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று பலர் பகல் கனவு கண்டுகொண்டிருக்கின்றனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு சேறு பூசி மக்கள் மத்தியில் செல்வாக்கை குறைக்க பல யுத்திகளை பலர் கையாண்டு வருகின்றனர். இதில் பெரும் பங்கு தமிழ் ஊடகங்களுக்கு இருக்கின்றது. கிழக்கு மாகாண சபையினை பிள்ளையான் (சிவநேசதுரை சந்திரகாந்தன்) அவர்கள் பொறுப்பேற்றதன் பின்னர் இடம்பெறும் அபிவிருத்தித் திட்டங்களையும் கிழக்கின் உண்மை நிலைகளையும் மூடி மறைத்து. கிழக்கு முதலமைச்சருக்கு எதிரான செய்திகளை மட்டுமே வெளியிடுகின்றன. தமிழ் ஊடகங்களும் கிழக்கின் அபிவிருத்தியையும் கிழக்கிலே ஒரு கட்சியும் தலைமைத்துவமும் இருப்பதை விரும்பவில்லையா? ஊடக தர்மம் என்பது ஒரு பக்கம் சார்ந்து செயற்படுவதுதானா? 

ஊடகங்கள் பல தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  கட்சி  தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டுக்களையும் வதந்திகளையும் பரப்பி மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின்  ஆதரவை இல்லாமல் செய்ய பல  முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உண்மை நிலைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்கின்றது.

முப்பது வருடங்களாக அபிவிருத்தியே இல்லாமல் யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்குண்டு சின்னாபின்னமாகிய கிழக்கினை ஓரிரு வருடங்களில் அபிவிருத்தி செய்வது என்பது முடியாத காரியம். இருந்தபோதும் முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்கள் கிழக்கு மாகாணசபையை பொறுப்பேற்றதன் பின்னர் துரிதமாக வளர்ச்சி அடைந்து வருவதனை எவராலும் மறுக்க முடியாது. மறுப்பார்களானால் அது அவர்களின் கிழக்கின் அபிவிருத்தியை பொறுத்துக்கொள்ள முடியாத பொறாமையின் வெளிப்பாடாகவோ அல்லது அவர்களின் அரசியல் இலாபத்துக்கான வெளிப்பாடாகும்.

யுத்தத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசம் மட்டக்களப்பு. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு. அறுபது ஆண்டுகளுக்கு மேலான உரிமைப் போராட்டத்தில் இலட்சக் கணக்கான உயிர்களையும் உடமைகளையும் இழந்திருக்கின்றோம். இன்னும் இவ்வாறான போராட்டங்கள் தேவையா? இன்றைய தேவை என்ன? எவ்வாறு தமிழர்களின் உரிமைகளைப் பெறுவது என்பது பற்றி யதார்த்தமான், நடைமுறைச் சாத்தியமான விடயங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

இனிமேலும் தமிழர்கள் இழப்பதற்கு எதுவுமில்லை. சிலர் தமது அரசியல் இருப்புக்காக தமிழர்களை மீண்டும் பலிக்கடாவாக்க நினைக்கின்றனர். மக்கள் இன்று சற்றேனும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழர்கள் மத்தியிலே பிரச்சினைகள் இருக்க வேண்டும் அதனை வைத்தே அரசியல் நடாத்த முடியும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்றவர்கள் நினைத்து விட்டனர்.

மீண்டும் தமிழர்களை உண்ணாவிரதம் மறியல் போராட்டம் என்று தமிழர்களை உசுப்பேற்றி தூண்டிவிட்டு தமிழர்கள் எரிக்கப்படும் நெருப்பில் குளிர்காய நினைக்கின்றனர். தமிழர் உரிமை நோக்கிய ஆயுதப் போராட்டம் ஆரம்பகாலத்தில் இவ்வாறான உண்ணாவிரதம், மறியல் போராட்டம், கடையடைப்பு என்றுதான் ஆரம்பமானது. அதன் பிரதிபலனாக நாம் பல இலட்சம் மக்களையும் உடமைகளையும் இழந்திருக்கின்றோம். இன்னும் அவ்வாறானதொரு போராட்டத்துக்கு தமிழ் மக்கள் செல்ல வேண்டுமா?

மீண்டும் இவ்வாறான போராட்டத்துக்குள் மக்களை தள்ளிவிட நினைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக என்ன தீர்வுத் திட்டத்தை முன்வைக்கிறது? அவர்களிடம் நிரந்தரமான கொள்கைகள் இருக்கின்றதா? அவர்களிடம் சாத்தியமான தீர்வுத் திட்டங்களும் கொள்கைகளும் இருக்கின்றதா? அவ்வாறு இருந்தால் அவர்கள் அதனை மக்களுக்கு முன்வைக்கட்டும். அவர்களிடம் இன்றொரு, நாளையொரு கொள்கை இருக்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு தமது கொள்கை என்ன என்பது இதுவரை தெரியாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினைப் பொறுத்தவரை இரட்டை வேடம் போடுகின்றது. தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. அன்று புலிகளின் அரசியல் சக்தியாக இருந்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். அன்று விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள், இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு தீர்வினைத் தராது, தமிழீழமே தமிழர்களின் கனவு என்ற கொள்கைகளோடு அரசுக்கு எதிராக செயற்பட்ட இவர்கள் இன்று அரசுடன் பல பேச்சுக்களை நடாத்தி வருகின்றனர். இவர்கள் இன்று தமது கொள்கைகளைக் கைவிட்டு  விட்டனரா?

அரசுடன் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளை நடாத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் என்ன விடயங்கள் பேசப்பட்டன. என்ன விடயங்களுக்கு தீர்வு காணப்பட்டன என்பதனை மக்கள் முன் தெளிவுபடுத்தாதது ஏன்? அரசுடன் இரகசிய ஒப்பந்தம் செய்கிறதா? அல்லது இரட்டை வேடம் போடுகிறதா? அரசுடன் பேச்சு நடாத்திக் கொண்டு அரசுக்கு எதிராக உண்ணாவிரதத்தில் இறங்குவதன் நோக்கம் என்ன? தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கொள்கை இல்லாக் கூத்தாடிகளா?

அரசுடனோ அல்லது வெளிநாட்டுப் பிரமுகர்களுடனோ பேச்சுவார்த்தைகளில்  ஈடுபடும்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படுவதில்லை இது ஏன்? மட்டக்களப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை மக்களுக்காக என்ன செய்தனர். அபிவிருத்திக்காக தமக்கு வழங்கப்படுகின்ற ஐம்பது இலட்சம் ரூபாவினையும் என்ன செய்தனர்?

வெறுமனே சொத்துச் சேர்க்கவும் தமது குடும்பமும், உறவினர்களும் வெளிநாடுகளில் உல்லாசமாக வாழ்வதற்காக எமது மக்களை விற்றுக்கொண்டிருக்கின்றனர். கிழக்கிலே அபிவிருத்தி செய்ய என்று சொல்லி புலம்பெயர் தமிழர்களிடம் பல மில்லியன் ரூபாய்களைப் பெற்று சுருட்டிக்கொண்டிருக்கின்றனர். இவர்களின் கடந்தகாலப் பக்கங்களையும் அவர்கள் அரசியலுக்கு வந்த வழியினையும் மக்கள் புரட்டிப் பார்க்க வேண்டும்.....

தொடரும்.... 

read more...

Friday 28 October 2011

தமிழீழம் எனும் அடைய முடியாத இலக்கு நோக்கிய பயணத்தில் சிக்குண்ட கிழக்கு மாகாணம். பகுதி - 2


ருணாவோ அல்லது பிள்ளையானோ புதலில் புலிகளுக்கு எதிராக செயற்பட்டவர்கள் அல்ல. தமிழ் இயக்கங்களின் தோற்றத்திலிருந்து இன்றுவரை பலர் அல்லது பல இயக்கங்கள் புலிகளுக்கு எதிராக செயற்பட்டனர்.

பல தமிழ் இயக்கங்கள் தோற்றம்பெற்றபோதிலும் அவை நிலைத்து  புலிகள் இயக்கத்தைப்போல் வலுப்பெற முடியாமைக்கு பல காரணங்கள் இருக்கின்ற போதிலும் தமிழ் இயக்கங்களிடையே இருந்த போட்டியும் முக்கிய காரணமாகும். மாற்றுக் கருத்துடையோரை       "மண்டையில் போடும் "கலாசாரத்திலே மாற்றுக் கருத்துள்ள பல தமிழ் தலைவர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன.

இருந்தபோதும் அன்று தொட்டு இன்றுவரை பல தமிழ் தலைமைகள் புலிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் வடக்கைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகள் இயக்கத்தை உலகமே வியக்கும்படி உலகையே புலிகள் பக்கம் திரும்பிப் பார்க வைத்த  வீரச் சமர்கள் பல புரிந்து பல வெற்றிகளை பெற்றுத்தந்த பெருமை கிழக்கு மாகாண போராளிகளையே சாரும். வெற்றிச் சமர்களில் சரித்திரம் படைத்த கிழக்குப் போராளிகளை வழிநடாத்தியவர் கருணா அம்மான்.

வெற்றிச் சமர்கள் பல புரிந்து புலிகளை எவராலும் அசைக்க முடியாது எனும் நிலைக்கு கொண்டு சென்ற கிழக்கு போராளிகளும் அவர்களை வழிநடாத்திய கருணாவும் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறியதன் காரணமாகத்தான் இன்று புலிகள் அழித்தொழிக்கப்பட்டனர் என்பது உண்மைதான்.

புலிகள் அமைப்பிலே கிழக்குப் போராளிகள் வெற்றிச் சமர்கள் பல புரிந்து சரித்திர வெற்றிகள் பலவற்றைக் கண்டவர்கள். விடுதலைப்புலிகளின் படைப்பிரிவுகளிலே அசைக்க முடியாத படைபலத்தின் தூண்களாக களமாடியவர்கள் கிழக்கு மாகாணப் போராளிகள். புலிகள் இயக்கத்தின் படைப்பிரிவுகளின் அசைக்க முடியாத தூண்களான கிழக்குப் போராளிகளை புலிகள் இயக்கம் இழந்தமை புலிகளின் அழிவுக்கு காரணமாகிவிட்டது.

புலிகள் இயக்கம் உலகமே வியக்கும் அளவுக்கு ஒரு விடுதலை இராணுவமாக கட்டி எழுப்பப்பட்டிருந்தாலும். புலிகளின் உயர் தலைமைப்பீடங்கள் அவ்வப்போது பல வரலாற்றுத் தவறுகளை செய்திருப்பதுடன். சில விடயங்களுக்கு தீர்வு காண்கின்ற வேளைகளிலே தமது இயக்கத்தின் எதிர்காலம் பற்றி சிந்தித்து முடிவெடுக்க தவறிவிட்டனர்.

அதன் ஒரு அங்கம்தான் கிழக்கு போராளிகள் புலிகள் இயக்கத்தைவிட்டு பிரிந்து சென்றமை. அன்று கருணாவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை. காலங்காலமாக கிழக்கு மக்கள் தமிழ் தலைமைகளால் ஏமாற்றப்பட்டு வந்தமை மறுக்க முடியாத உண்மை. கருணா பிரிந்து வருவதற்கு முன்னர் கிழக்கு மக்கள் ஏமாற்றப்பட்டு வருவதை பலரும் உணர்திருந்தபோதும் அவற்றை வெளிப்படுத்தத் தயங்கினர்.

மாற்றுக் கருத்துள்ள பலர் அழித்தொழிக்கப்பட்ட வரலாறுகள் அவர்களின் உணர்வுகளை சிறைப்படுத்தியிருந்தன. எது எப்படி இருப்பினும் கிழக்கு மக்கள் கிழக்கின் உரிமைகள், கிழக்கு மக்கள் ஏமாற்றப்படுகின்ற துரோகங்களை சுட்டிக்காட்டிய போதெல்லாம் மட்டக்களப்பான் பிரதேசவாதம் பேசுகின்றான் என்றும் துரோகி என்றும் பட்டம் சூட்டிய வரலாறுகள் பலவுண்டு.

 கிழக்குப் போராளிகள் பிரிந்து வந்தபோது கிழக்குக்கான சுயநிரணயமும் ,கிழக்குக்கான தலைமைத்துவத்தின் தேவையும், கிழக்கு மாகாணத்துக்கு தனித்துவமான கட்சியின் அவசியமும் உணரப்பட்டது. அதன் வெளிப்பாடுதான் தமிழ் மக்கள் விடுதபை் புலிகள் கட்சியும் கிழக்கு மாகாணசபை உருவாக்கமும், கிழக்கின் துரித அபிவிருத்தியும்.

அன்று கிழக்குப் போராளிகள் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்தபோது புலிகளின் தலைமைப்பீடம் சரியான தீர்க்க தரிசனமான முடிவுகளை எடுக்கவில்லை. கருணாவால் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வுகளை காண முற்பட்டிருக்க வேண்டும். அதை விடுத்து கருணாவை பிடிப்பதிலும் தண்டனை வழங்குவதிலுமே அதிக கவனம் செலுத்தினர். அன்று அவர்கள் கனவிலும்கூட நினைத்துப் பார்க்கவில்லை கிழக்குப் போராளிகள் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது என்பதனை.

கிழக்குப் போராளிகள் கருணாவினாலேயே வழி நடத்தப்பட்டனர். அவர்கள் கருணாவின் கட்டளைகளின் பெயரிலே செயற்பட்டு வந்தவர்கள். கருணா கிழக்குப் போராளிகள் புலிகளிலிருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்றதும் கருணாவின் பின்னால் வந்துவிட்டனர். அவர்கள் அப்போது உண்மைகளை, நிஜங்களை உணர்ந்து கொண்டனர்.

கிழக்குப் போராளிகள் பிரிந்து வரும் கால கட்டத்தில்தான் வீட்டுக்கொரு போராளி எனும் திட்டத்தின் மூலம் கிழக்கு மக்கள் புலிகளுக்கு எதிராக குரல்கொடுக்க ஆரம்பித்தனர். அந்தக்கால கட்டத்தில்தான் கிழக்கு மக்கள் தாம் ஏதோ ஒரு வகையில் ஏமாற்றப்பட்டு வருகின்றோம் என்பதனை  உணர்ந்துகொள்ள ஆரம்பித்தனர்.

கிழக்குப் போராளிகளின் பிரிவிற்கான காரணத்தையும் அதற்கான தீர்வுகள் பற்றியும் புலிகளின்  தலைமைப்பீடம் ஆராய்ந்திருக்க வேண்டும். அன்று அவர்கள் எடுத்த திடிர் முடிவுகளின் பிரதிபலிப்பு துரித கதியில் தாங்களே அழிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

கிழக்குப் போராளிகள் பிரிந்து வந்தபோது கிழக்குப் போராளிகளின்  பிரிவைத் தடுப்பதனை விடுத்து சகோதரப் படுகொலைகளை நோக்கி புலிகள் இயக்கம் சென்றது. அதன் ஒரு கட்டமாக வெருகலில் பல நூற்றுக்கணக்கான அப்பாவி கிழக்குப் போராளிகள் கொன்று குவிக்கப்பட்ட வெருகல் படுகொலை கிழக்கு மக்களின் சரித்திரத்தில் மாறாத வடுக்கள். இவ் வெருகல் படுகொலையில் பல பெண் போராளிகள் நிராயுதபாணியாக சொல்லமுடியாத சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். பல களமாடி வெற்றிச் சமர்களை பெற்று வீர சரித்திரங்களை படைத்தமைக்காக விடுதலைப்புலிகள் கொடுக்கும் கைமாறு இதுதானாவிடுதலைப் புலிகளின்  சகோதரப் படுகொலைகள் கிழக்குப் போராளிகள் என்று மட்டுமல்லாமல் கிழக்கு புத்திஜீவிகள் நோக்கியும் புலிகளின் துப்பாக்கிகள் திரும்பின. பல புத்திஜீவிகள் புலிகளின் துப்பாக்கி தோட்டாக்களுக்கு இரையாகினர்.

கிழக்குப் போராளிகளும், கிழக்குப் புத்திஜீவிகளும் படுகொலை செய்யப்படும்போது புலிகளின் அரசியல் சக்தியாக விழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும், வெளிநாடுகளிலே இருந்து தமிழன், தமிழீழம் என்றெல்லாம் வீர வசனம்பேசி வீராப்பு காட்டிக் கொண்டிருப்பவர்களும் மெளனம் சாதித்தமை வேதனைக்குரிய விடயமே. இவர்கள் மெளனம் சாதித்தது சாவது கிழக்கு தமிழன்தானே என்பதனாலா?
அப்போதைய கால கட்டத்தில் கிழக்கிலே அரசியல் நீரோட்டத்தின் மூலமே கிழக்கு மக்கள் தமது தலைவிதியை தாமே தீர்மானிக்க முடியும், கிழக்கில் ஒரு அரசியல் சக்தி உருவாக்கப்படுவதன் மூலமே கிழக்கு மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கவும், கிழக்கின் சுயநிர்ணயத்துக்கான ஒரு அரசியல் சக்தியின் தேவைப்பாடு உணரப்பட்டது.

அதன் பிரதிபலிப்பாக தற்போது கிழக்கு மாகாண சபையையும், மட்டக்களப்பின் பல உள்ளுராட்சி சபைகளையும் ஆட்சி செய்தகொண்டிருக்கின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பல சவால்களுக்கும், பெறுமதிமிக்க உயிர்பலிகளுக்கு மத்தியிலும் தோற்றம் பெற்றது.

கிழக்கிலே ஒரு கட்சி தோற்றம் பெறுவதனையும் கிழக்கிலே ஒரு தலைமைத்துவம் தோற்றம் பெறுவதனையும் சகித்துக் கொள்ள முடியாத தீய சக்திகள் பல சதித் திட்டங்களை அவ்வப்போது மேற்கொண்டனர். அவ்வாறான சதித்திட்டங்களிலே கிழக்கு மக்களால் எதிர்பார்க்கப்படாத துயரம் நிறைந்த ஒரு நிகழ்வு இடம் பெறுகின்றது.

தொடரும்....










read more...

Thursday 27 October 2011

தமிழீழம் எனும் அடைய முடியாத இலக்கு நோக்கிய பயணத்தில் சிக்குண்ட கிழக்கு மாகாணம் பகுதி - 1


கிழக்கு மாகாணம் பல வரலாற்றுப் பின்னணியினைக் கொண்ட சகல வழங்களும் நிறைந்த ஒரு அழகிய பிரதேசம். தொன்று தொட்டு மூவின மக்களும் வாழ்ந்து வரும் இப்பிரதேசம் கடந்த முப்பது வருடமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கின்றது.

நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக கிழக்கு மாகாணமே வெகுவாகப் பாதிக்கப்பட்டது என்பதனை எவராலும் மறுக்க முடியாது. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பல விதங்களிலும் கிழக்குப் பிரதேசம் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அதன் பிரதிபலிப்புக்கள் இன்று கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முற்படும்போது பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலே பல களமாடி வெற்றிச் சமர்களைப் படைத்தவர்கள் கிழக்கு மாகாணப் போராளிகளே. அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு போராளிகளே. தமிழீழம் கிடைக்கும் என்ற கனவோடு வீர மரணமடைந்தவர்களில் அதிகமானவர்கள் கிழக்குப் போராளிகளே.

தமிழீழம் கிடைக்கும் என்ற கனவோடு உயிர் நீத்த அந்தத் போராளிகளின் குடும்பங்கள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றனர். தமிழீழம் தமிழீழம் என்று இளைஞர், யுவதிகளை உசுப்பேற்றி வீர வசனம் பேசியவர்கள் அந்தக் குடும்பங்களுக்கு என்ன செய்தனர்.

யுத்தத்தில் பங்குகொண்ட பல கிழக்குப் போராளிகள் தமது அவயவங்களை இழந்து இன்னொருவரிடம் கையேந்தும் நிலையில் இருக்கின்றனர். எத்தனையோ இளம் சிறார்கள் தாய் தந்தையரை சொந்தங்களை இழந்து ஒரு நேர உணவிற்குகூட உணவின்றி அனாதைகளாக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்திலே பல சிறுவர்கள் பாடசாலை செல்ல வேண்டிய வயதில் உடலை வருத்தி கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களின் எதிர்காலம் என்ன என்பதனை நாம் சிந்திக்க வேண்டும். இவ்வாறு சென்றால் எமது மக்களின் கல்விநிலை எதிர்காலம் பற்றி எல்லாம் நாம் சிந்திக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு மாவட்டத்தில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் இருக்கின்றனர். இது எதனால ஏற்பட்டது கடந்தகால தமிழ் தலைவர்கள் அடைய முடியாத இலக்கு நோக்கிய தமது பயணத்தில் மக்களையும் இணைத்துக் கொள்ள முற்பட்டதன் விழைவுதான் இந்த அவல நிலை.

இன்று துரிதமாக அபிவிருத்தி கண்டுவரும் கிழக்குப் பிரதேசத்தின் அபிவிருத்தியிலே விதவைகள் பிரச்சினை பல சாவால்கள் நிறைந்த ஒன்றாகக் காணப்படுகின்றது. இந்த விதவைகள் தமது குடும்ப சுமையை பல கஸ்ரங்களின் மத்தியில் சுமந்து வருகின்றனர். இவர்கள் சந்திக்கின்ற அவலங்கள் எண்ணிலடங்காதவை. சமூக ரீதியான பிரச்சினைகள் ஒரு புறமிருக்க பொருளாதாரப் பிரச்சினைகள் பல பிரச்சினைகளை தோற்றுவித்திருக்கின்றன.

இந்த விதவைகளில் அதிகமானவர்கள் இளம் பெண்கள் என்பது வருந்தத்தக்க விடயம். யுத்தம் இடம் பெற்றுக் கொண்டிருந்த வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கிழக்கிலே கிராமங்கள் தோறும் வீட்டுக்கொரு போராளி எனும் திட்டத்தின் கீழ் பல இளைஞர், யுவதிகள் வலுக் கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

வீட்டுக்கொரு போராளி திட்டத்தின் கீழ் பல இளைஞர், யுவதிகள் தாம் படித்துக் கொண்டிருந்த வேளையில் புலிகள் இயக்கத்தில் கட்டாயத்தின்  பேரில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பல்கலைக்கழக மாணவர்களும் கட்டாயத்தின் பேரில் பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் கல்வியை அன்று இழந்தனர். இன்று அவர்களில் பலர் தமது அவயவங்களை இழந்த நிலையில் இருக்கின்றனர். 

அன்று புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பின் வடுக்கள் இன்று பல சமூகப் பிரச்சினைகளைத்  தோற்றுவித்திருக்கின்றது. புலிகளின் கட்டாய ஆட்ரே்ப்பின் காரணமாக மிகவும் சிறிய வயதில் தமது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர். அதன் பிரதிபலிப்பே இன்று மட்டக்களப்பில் இளம் விதவைகள் அதிகரித்திருப்பதற்குக் காரணமாகும். இவ்வாறு யுத்தம் விட்டுச் சென்ற வடுக்களை அடுக்கிக்கொண்டே போகலாம். 

யுத்தம் முடிவிற்கு வந்திருக்கின்றது. கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டு கிழக்கு மாகாணம் துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாணசபை உருவாக்கத்தின் பின்னர் கிழக்கு மாகாணத்திலே பல சவால்களுக்கும் மத்தியில் சகல துறைகளும் அபிவிரத்தி கண்டு வருவதனை எவராலும் மறுக்க முடியாது. கிழக்கு மாகாணம் அபிவிருத்தி கண்டு வருவதனை சகித்துக் கொள்ள முடியாத பலர் கிழக்கு மாகாண மக்களை குழப்பி கிழக்கின் அபிவிருத்தியை தடைசெய்ய எத்தணித்துக் கொண்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

கிழக்கு மாகாண மக்கள் அன்று தொட்டு இன்றுவரை ஏமாற்றப்பட்டு வந்த சரித்திரங்களை நாம் மறந்துவிடக்கூடாது. இனிமேலும் எமது சமூகம் ஏமாறும் மக்களாக இருக்க முடியாது. வெறுமனே நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களையும், தமிழ் அரசியல்வாதிகளின் இருப்புக்கான உணர்ச்சி வார்த்தைகளின் உண்மைத் தன்மையினையும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழீழம் எனும் அடைய முடியாத இலக்கு நோக்கிய பயணத்தில் நாம் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக பயணம் செய்திருக்கின்றோம் தமிழீழம் நோக்கிய அறுபது ஆண்டுகளுக்கு மேலான பயணத்தில் எமக்கு கிடைத்த பலன் என்ன? பல இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களை இழந்திருக்கின்றோம். எமது உடமைகளை இழந்திருக்கின்றோம், எமது தேசம் சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கின்றது.

தமிழீழம், தமிழனுக்கென்றொரு நாடு கிடைத்தால் ஒவ்வொரு தமிழனும் சந்தோசப்படுவான். சந்தோசப்படவில்லை என்றால் அவன் உண்மையான தமிழனாக இருக்க முடியாது. ஆனாலும் இலங்கையைப் பொறுத்தவரை தமிழீழம் சாத்தியமா என்பதனைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அன்று உணர்ச்சி வார்த்தைகளைக்கூறி எமது மக்களை உசுப்பேற்றிய எமது தலைவர்கள் தமிழீழம் சாத்தியமா என்பதனை சிந்தித்திருந்தால் இத்தனை அழிவுகளையும் அவலங்களையும் எமது தமிழ் சமூகம் சிந்தித்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

இன்றைய நிலையில் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சாத்தியமான தீர்வுத் திட்டங்களை நோக்கிய பயணத்தில் தமிழ் தலைவர்கள் தமது பயணத்தை நகர்த்தி மக்களை வழிநடத்திச் செல்ல வேண்டும் அதனை விடுத்து தமது இருப்பினை தக்க வைத்துக் கொள்வதற்காக உணர்ச்சி வார்த்தைகளை மக்கள் மத்தியில் வதைப்பதனை விடுத்து மக்கள் நலனில் அக்கறையுடன் சாத்தியமான தீர்வுத் திட்டங்கள் நோக்கி பயணிக்க வேண்டும்.

இதுவரை தமிழ் மக்கள் சந்தித்த அவலங்களும் அழிவுகளும் போதாதென்று சில சக்திகள் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களின் அவலங்களில் குளிர் காய நினைக்கும் சில சக்திகளும் மீண்டும் தமிழர்களை உசுப்பேற்றி அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்ல நினைக்கின்றனர். 

சிறிய, சிறிய பிரச்சினைகளை எல்லாம் பூதாகரமான பிரச்சினைகளாக்கி உண்ணாவிரதம் , ஆர்ப்பாட்டம், கடையடைப்பு என்று தமிழர்களை உசுப்பேற்றி மீண்டும் தமிழர்களை அழிக்க நினைக்கின்றனர். தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருந்தால்தான் அப் பிரச்சினைகளைச் சொல்லிச் சொல்லியே அரசியல் நடாத்த நினைக்கும் தமிழ் தலைமைகள் மக்கள் நலனைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு இணப்பு தொடர்பாக பேசி வருகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு இணைப்பின் சாத்தியங்கள் பற்றி ஆராய வேண்டும். வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலே பல பிரச்சினைகள் இருப்பதனையும் வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமான விடயமல்ல என்பதனையும் உணர்ந்துகொள்ள வேண்டும். 

வடக்கு, கிழக்கு இணைப்பினால் தமிழீழம் கிடைத்துவிடுமா? வடக்கு, கிழக்கு பிரிந்து இருப்பதனால் என்ன? இன்று கிழக்கு பிரிந்து இருப்பதனால்தான் மாகாணசபை முறைமையினால் யுத்தத்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட கிழக்கு பிரதேசம் துரித வழர்ச்சி கண்டு வருகின்றது. மாகாணசபை முறைமை மூலம்தான் அழிவடைந்த எமது பிரதேசத்தை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன அவர்களின் கொள்கைகள்தான் என்ன? தமிழ் மக்களுக்காக என்ன தீர்வுத் திட்டத்தினை முன் வைக்கின்றனர். எதிலும் அவர்கள் தெளிவில்லை, வெளிப்படையில்லை அவர்களிடம் இன்று ஒரு கொள்கை நாளை ஒரு கொள்ளை. தமிழீழம், தமிழீழ் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்றும் அரசுக்கு எதிராக கோசமிட்டு வந்தவர்கள் இன்று அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பேச்சுவார்த்தைகளில் என்ன நடக்கிறது என்ற வெளிப்பாடுகூட இல்லை. இவர்கள் தங்கள் கொள்கைகளை மாற்றிவிட்டனரா? அப்படியானால் அவர்களின் கொள்கைகள் என்ன? 

மட்டக்களப்பு மாவட்டம் பல்வேறு விதமாக தொடர்ந்தும் தமிழ் தலைமைகளினால் ஏமாற்றப்பட்டு வருகின்றது. இப்போது அரசுடனோ அல்லது வேறு சாராருடனோ இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தைகள் சந்திப்புக்கள், நிகழ்வுகளில் மட்டக்களப்பில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடம் கொடுக்கப்படுவதில்லை. 

இந்த இடத்திலே கிழக்கு மாகாண மக்கள் வடக்குத் தலைமைகளினால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். கிழக்கு மக்களுக்காக தனியான ஒரு கட்சி வேண்டும் என்று தமிழ் மக்கள் விடுதலைப்  புலிகள் கட்சியின் தலைவராகவும் கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராகவும் இருக்கின்ற பிள்ளையான் (சிவநேசதுரை சந்திரகாந்தன்) அவர்களினதும் அவர்களது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினதும் கொள்கைகள் நிலைப்பாடுகள், கிழக்கு மாகாண சபையை சி.சந்திரகாந்தன் பொறுப்பேற்றதன் பின்னரான செயற்பாடுகள் தொடர்பாகவும் நாம் ஆராயவேண்டி இருக்கின்றது.

பிள்ளையான் அரசாங்கத்தோடு சேர்ந்து அரசாங்கத்தின் அடிவருடியாக இருக்கின்றான் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட வடக்கு தலைமைகளும் தமிழீழ ஆதரவாளர்களும், ஊடகங்களும் குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால் அன்றுதொட்டு இன்றுவரை வடக்கைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் அரசுடன் அங்கம் வகித்து அமைச்சுப் பொறுப்புக்களை பெற்று வடக்கிலே தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்தனர் செய்து வருகின்றனர்.

வடக்கு அரசியல்வாதிகள் அரசுடன் சேர்ந்து தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதை ஏற்றுக் கொள்கின்ற இவர்கள் பிள்ளையான் அரசுடன் சேர்ந்துவிட்டார்  என்பதனை ஏன் ஏற்றுக் கொள்ள முடியாது. கிழக்கு மாகாணசபை மூலம் கிழக்கு அபிவிருத்தி செய்யப்படுகின்றதே என்ன பொறாமையா? அல்லது காலம் காலமாக கிழக்கிலே தலைமைத்துவம் இல்லாமல் இருந்தது பிள்ளையான் கிழக்கின் கட்சி ஒன்றின் தலைவனாகிவிட்டான் வடக்கு தலைமைகளினால் கிழக்கு மக்களை ஏமாற்ற முடியாமல் போய்விடும் என்ற பயமா?

கருணாவும், பிள்ளையானும் புலிகளைக் காட்டிக் கொடுத்துவிட்டனர் என்று சொல்கின்றனர். காட்டிக் கொடுப்பவன்தான் மட்டக்களப்பான் என்று சொல்கின்றார்கள் முதலில் புலிகளைக் காட்டிக் கொடுத்தவர்கள் யார் ? நிட்சயமாக மட்டக்களப்பான் அல்ல. 

தொடரும்...



read more...

Wednesday 26 October 2011

பிச்சையும் அரசியல்வாதிகளும்


தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போட்ட பிச்சைதான் மட்டக்களப்பு மாவட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும்
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு மக்களைச் சந்தித்து அவர்களின் பிசச்சினைகளை ஆராயும் விசேட கலந்துரையாடல்க் கூட்டம் 23.10.2011 புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போட்ட பிச்சைதான் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசுகையில் உண்ணாவிரதம் தமிழர் பிரதேசங்கள் பறிபோகின்றதென்றெல்லாம் மக்கள் மத்தியிலே பூதாகரமான பிரச்சினையாக தோற்றுவித்து தமிழ் மக்களை தூண்டிவிட்டு அரசியல் நடாத்த நினைக்கின்னர். குhணிப்பதிவு என்பது தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் சொல்வதுபொல் பூதாகரமான பிரச்சினை இல்லை. மக்கள் உண்மைத்தன்மையினை புரிந்து கொள்ள வேண்டும். எமது மக்கள் முன்னேற்றமடைய வேண்டும் எமது பிரதேசம் அபிவிருத்தி அடைய வேண்டும் என்று நாம் நினைக்கின்றோம். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எமது மக்கள் தொடர்ந்தும் அவலங்களைச் சந்திக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
அண்மையில் ஒரு பத்திரிகையில் பிள்ளையானுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்ட பிச்சைதான் முதலமைச்சர் பதவி என்று ஒரு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் முதலமைச்சர் பதவி எனக்கு வாக்குப் போட்ட மக்கள் போட்டபிச்சைதான். தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போட்ட பிச்சைதான் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் என்பதை கூட்டமைப்பினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்துப் போட்டியிடாது அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகரித்திருக்கும் கூட்டமைப்பினருக்கு ஆசனங்கள் குறைந்திருக்கும். நாம் போட்ட பிச்சைதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று குறிப்பிட்டார்.
அங்கு உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உரையாற்றுகையில்… எமது மக்கள் தொடர்ந்தும் பின்தங்கிய மக்களாக இருக்க கூடாது அதற்காக நாம் பல வேலைத்திட்டங்களை செய்து வருகின்றோம். எமது மக்களும் பிரதேசமும் அபிவிருத்தி அடைவதை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விரும்பவில்லை அதுதான் துரிதமாக கிழக்கு மாகாணம் அபிவிருத்தி கண்டுவரும் நிலையில் மக்களை உசுப்பேற்றி குழப்பத்தை ஏற்படுத்தி அபிவிருத்தியினை தடுக்கும் முயற்சியை செய்து வருகின்றனர்.
துமிழ் தேசியக் கூட்டமைப்பினர் 60 வருடங்களாக மக்களுக்கு என்ன செய்திருக்கின்றனர். வெறுமனே எமது பிரதேசங்கள் அழிவடைந்தமைதான் மிச்சம். இனியும் எமது மக்கள் நிம்மதியற்ற வாழ்க்கை வாழக்கூடாது என்று நாம் நினைக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.
read more...

Saturday 22 October 2011

கிழக்கு மக்கள் எப்போதும் கையேந்தும் நிலையிலேயே இருக்கவேண்டும் என்பதுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் விருப்பம்

அண்மையில் ஓர் பத்திரிகையிலே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் அறிக்கை அரசனுமான அரியனேந்திரன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார், அவுஸ்ரேலியாவிலே இருக்கின்ற வடமாகாண மக்கள் ஒன்றியம் ஒன்று கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்ற பல செயற்பாடுகளைச் செய்திருக்கின்றார்கள் என்று. அதுவும் வடக்கு கிழக்கு இணைந்த தமிழீழ பிரதேசம் என்பதனாலே தான் அவர்கள் தொடர்ந்து எமது மாகாணத்திற்கு உதவி செய்து கொண்டிருக்கின்றார்கள்.  எனவே நாம் வடக்கு கிழக்கை பிரிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலே குறிப்பிட்டுள்ள அவுஸ்ரேலியாவில் உள்ள ஓர் வடமாகாண அமைப்பு வழங்கிய நிதியின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஓர் பாராட்டுவிழாவில் கலந்து கொள்ளும் போதுதான் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். ஏன் இவர்களுக்கு கிழக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்ட பல அமைப்புக்கள் இன்னமும் வெளிநாட்டிலிருந்து கொண்டு பல்வேறு உதவிகளை எமது மாவட்டத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு ஏதாவது கொடுத்தால் கணக்கு கேட்டுவிடுவார்கள் என்ற பயம்.
நல்ல ஒரு உதாரணம் கடந்த வெள்ள அனர்த்தத்தின் போது எமது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் லண்டனுக்குச் சென்று எமது மாவட்டத்திலே பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு நிவாரணநிதி  சேகரித்தார்;.  மிகவும் பெரியதொரு தொகைப்பணத்தை அங்குள்ள எமது மாகாண மக்கள் சேர்த்துக் கொடுத்திருந்தார்கள். ஆனால் அதற்கு எந்தவொரு கணக்கறிக்கையும் இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லையாம்.
இதனால்   அப்பணங்களை சேகரித்து அனுப்பிய அந்த அமைப்பின் தலைவர் ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருக்கிறார்.  கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற ஒரு முக்கிய அரசியல் பிரமுகருக்கு, அதற்கு அந்த அரசியல் பிரமுகர் குறித்த அந்த ஈமெயிலுக்கு பதிலளிக்கையில் இதனை  நான் விசாரனை செய்யமுடியாது. வெளியில் இதுபற்றி நான் மக்களுக்கு தெரியப்படுத்தினால் அது அரசியல் பழிவாங்கல், பொய்ப்பிரச்சாரம் என்று கூறுவார்கள்.  எனவே பாவம் அந்த உதவி செய்த மனிதர். அவர் சாதாரணமானவர் அல்ல அவர் ஒரு டாக்டர்;, தற்போது மனம் நொந்து போய் இருக்கின்றார்.
இவ்வாறான செயற்பாடுகளினால் எமது மாகாணத்தவர்கள் எமது மாவட்டத்திற்கு செய்கின்ற உதவிகளும் இல்லாமல் போகின்றது. இத்தனை சாகசங்களையும் புரிந்த அந்த ஆசாமி வேறுயாருமல்ல நெற்றியில் பட்டையும் களுத்தில் உருத்திராக்கக் கொட்டையும் அணியும் அந்த ஆசாமிதான். இந்த ஆசாமியால் கையூட்டு செய்யப்பட்ட தொகை சுமார் 3கோடிரூபாய் ஆகும்.
எனவே தொடர்ந்து எமது மாவட்ட மக்களை கையேந்துகின்ற சமூகமாகவே வைத்திருக்க விரும்புகின்ற இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு மட்டக்களப்பான் என்ற வகையில் ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன். அதாவது தற்போது எமது மாவட்ட மக்கள் தங்களது பொருளாதாரத்தை தாங்களே ஈட்டி சுயகௌரவமாக வாழ விரும்புகின்றார்கள். மீண்டும் மீண்டும் யாரையோ நம்பி இருக்கவேண்டிய தேவயில்லை.
அவர்கள் தங்களது மாவட்டத்திலே இருக்கின்ற வளங்களை பூரண பயன்பாடுள்ளதாக மாற்றி முழுமையான உற்பத்தியினைப் பெற்று பொருளாதாரத்தை உயர்த்தி வாழ்வாதாரத்தில் மேலோங்க முயற்சிப்பார்கள். நீங்கள்தான் தேவையற்ற பசப்பு வர்த்தைகளை கூறி மீண்டும் மீண்டும் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டாம் என்பது எனது தயவான வேண்டுகோள். நான் சிந்திப்பது உன்மையான விடையம் இதை நீங்கள் ஏன் சிந்திக்க வில்லை? மிகவும் கவலையாக உள்ளது. எமது மாவட்ட மக்களை நினைத்தால்.
தொடரும்………….

 நன்றிகள் மீன்மகள் 
read more...

Thursday 20 October 2011

சங்கரியும் சம்பந்தனும் தமிழர்களை மீண்டும் பலிக்கடாவாக்கும் சதி முயற்சியில்

பல்வேறு உட்கட்டமைப்புக்களுடன் கூடிய வகையில் கிழக்கு மாகாணம் துரித அபிவிருத்தி கண்டு வருகின்றது. இந் நிலையினைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் பழம் பெருங் கட்சி என இனங்காட்டும் த.வி.கூட்டணி போன்ற கட்சிகளை ஏவி விட்டு வெளிநாட்டிலுள்ள சில சக்திகள் கிழக்கின் இயல்பு நிலையை குழப்ப முயற்சிகள் பல எடுத்த வண்ணமே உள்ளார்கள். இவர்களை மக்களே இனங்கண்டு அவர்களுக்கு சரியான பாடத்தினை எமது மக்களே புகட்ட வேண்டும் என கிழக்குமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
(19.10.2011) மட்டக்களப்பு ஒருங்கிணைக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டம் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்வை உத்தியோகபூர்வமாக நாட்டின் ஜனாதிபதி அதி மேதகு மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற் கண்டவாறு அவர் தெரிவித்தார்.


அவர் தொடர்ந்து பேசுகையில், எமது நாட்டின் ஜனாதிபதி மற்றும் அவரது சகோதரராக இருக்கின்ற பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோரினது வழிகாட்டலின் கீழ் மிகவும் பாரிய அபிவிருத்திகள் கிழக்கு மாகாணத்திலே மேற்கொள்ப்பட்டு வருகின்றன. விவசாயத்தில் தொடங்கி பாதை அபிவிருத்தி வரை சகலதுறை சார்ந்த அபிவிருத்திகளிலும் அதிக அக்கறை கிழக்கு மாகாணத்தில் காட்டப்படுகின்றமை விடேச அம்சமாகும்.
கடந்த 30ஆண்டுகளில் நாம் இழந்தவைகளை மீளப் பெறுவதற்கான ஓர் வழி தற்போது எம் அனைவருக்கும் திறந்துள்ளன. இதனை பயன்படுத்தி எமது மாகாண மக்கள் முன்னோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத வடபுலத்தை தலைமையாகக் கொண்டமைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பானது எமது மாவட்ட த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர்களை உசுப்பேற்றி கிழக்கின் நிலையை குழப்ப முயற்சிக்கிறார்கள் அதற்கு எமது மாகாண மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள்.
அண்மையில் வடக்கில் தமிழ்த் தேசிய கட்சிகளால் பேசப்பட்டு வருகின்ற காணி அளவீடு தொடர்பான பிரச்சினையை கிழக்கிலும் ஓர் பூதாகரப் பிரச்சினையாக தோற்றுவித்து அதில் குளிர் காய நினைக்கின்றார்கள். இன்றைய நிகழ்விற்கு எமது நாட்டின் ஜனாதிபதி வருவதனை அறிந்து ஒரு சிலரை கல்லடி பாலத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்வதற்கு ஏவிவிட அவர்கள் எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை.

மக்கள் நன்றாக உணர்ந்து விட்டார்கள். கடந்த காலங்களில் விடுதலைக்காக கூட்டம் கூட்டமாக ஆட்களைச் சேர்த்து கொலைக் களத்திற்கு அனுப்பினார்கள் அது பயனளிக்கவில்லை. இன்று அகிம்சை என்ற போர்வையில் எமது மக்களின் நிம்மதியை குழப்ப இந்த தீய சக்திகள் முயற்சிக்கின்றன. இவர்களின் கதைகளையும் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுக்களையும் நம்பி நாம் அனுபவித்த வேதனைகள் போதும். இனியாவது எமது எதிர்கால இளைய சந்ததி இரத்தக்கறை படியாத ஓர் நிம்மதியான வாழ்வை தேடிக் கொள்ளட்டும்;;. அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். இதனை பெறுவதற்கு தடையாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நாம் கிழக்கு மக்கள் ஓரங்கட்டுவோம் எனவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் தனது உரையில் குறிப்பிட்டார்.

இத்திட்டமானது

மக்கள் செறிந்து வாழும் மட்டக்களப்பு நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நிலக்கீழ் நீரானது மாசடைந்தும் உவர்ப்புத் தன்மை கொண்டதாகவும் மாறி வருகின்றது. இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்வதில் பல சிக்கல்கள் எதிர் கொள்கின்றார்கள். இதனை நிவர்த்திக்கும் முகமாகவே இன்று இப் பாரிய குடி நீhத் திட்டம் எமது நாட்டின் அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களினால் மக்களின் பாவனைக்காக கைளிக்கப்பட்டது.
சுமார் 11000 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டமானது 106 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்ட சுமார் 246000 மக்களுக்கான குடிநீரை வழங்குகின்றது. அதே வேளை 40000கன மீற்றர் நீர் கொள்ளளவுடைய சுத்திகரிப்பு நிலையம் அமையப் பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


இந் நிகழ்வில் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், நீர் வழங்கல் வடிகாலமைப்பு பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஸ மற்றும் பிரதி அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.
read more...

Tuesday 18 October 2011

கிழக்கில் அஸ்தமனமாகிறதா? தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் பயணம்

அன்றில் இருந்து இன்றுவரை உரிமை உரிமை என்று உரத்துக் குரல் கொடுத்து உரிமை போதைக்கு தமிழ் மக்களை அடிமையாக்கிய வரலாறுகள் இன்று மெல்ல மெல்ல அஸ்தனமாகிறது? வட்டுக் கோட்டை தீர்மானத்தில் தமிழ் ஈழத்தை பிரகடனப்படுத்தி உரிமை அரசியலுக்கு பிள்ளையார் சுழி போட்டது தமிழ் அரசுக் கட்சி அதன் பின் ஈழத்திற்கும் சுயநிர்ணய உரிமைக்கும் பல போராட்டக் குழுக்களை பிரசவம் செய்தது. அன்றில் இருந்து ஆரம்பமாகிய போராட்டம் ஈழத்தின் விடுதலை காணாமல் தொடர்ந்து வந்தது இதில் கைகோர்த்த ; சில குழந்தைகள் அரசுடன் அங்கமாகியதும் இறுதிவரை விடுதலைப் புலிகள் மட்டுமே பலமான அமைப்பாகவும் கொள்கையில் போராடினர். அப்போது அவர்கள்தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் எனக்கூறி அதில் அரசியல் குளிர் காய்ந்தனர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர். இன்று இலங்கை அரசு விடுதலைப் புலிகளை முற்றாக தோல்வியடைய செய்யப்பட்டதன் பின் தாம்தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் பயணம் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. போராட்ட வேளையிலும்; கூட்டமைப்பும் சுகபோகமாக வாழ்ந்தவர்களே தவிர போராட்டத்தில் தாமே தம்மை சார்ந்தவர்களோ ஈடுபடவில்லை.
இது ஒரு பக்கம் இருப்பினும் இன்று கிழக்கு மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் கொள்கைகளை விமர்சித்துள்ளனர் அல்லது ஒதுங்குகின்றனர் என்பதை அண்மையில் கல்முனை மாநகரசபைத் தேர்தல் மூலம் வெளிக்காட்டப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 06 ஆசனங்களை பெற்றது. ஆனால் அண்மையில் நடைபெற்ற தேர்தலின் 04 ஆசனங்கள் பெற்றுள்ளது. இது ஒரு பாரிய பின்னடைவு என்றே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
இது பற்றி ஊடகங்களுக்கு கருத்துக் கூறிய மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா பின்னடைவு ஏற்பட்டதனை ஏற்றுக் கொண்டார். 

தொடர்ந்து பார்க்க இங்கு செல்க 
read more...

Monday 17 October 2011

சிறப்பான முறையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண கலை இலக்கிய விழா

கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் மாகாண கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் தமிழ் இலக்கிய விழா கடந்த மூன்று நாட்களாக மட்டக்களப்பில் இடம்பெற்றுவருகின்றது. இவ் இலக்கிய விழாவானது இலக்கிய ஆய்வரங்கு, பண்பாட்டு பேரணி, இலக்கியவாதிகள் மற்றும் கவிஞர்களுக்கான முதலமைச்சர் விருது வழங்கல் நிகழ்வு நடைபெற்று வருகின்றன. இறுதி நாளான இன்று முதலமைச்சர் விருது வழங்கும் நிகழ்வு மட்/மகாஜனக் கல்லூரியின் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அரங்கில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட 12கலைஞர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கி கௌரவித்தார்;. அத்ஆதாடு இலக்கியத்தில் தேர்ச்சி பெற்றவர்களை கொளரவிக்கும் நிகழ்வும் இவ் அரங்கில் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு உரையாற்றும் போது,.



கிழக்கு மாகாணத்திற்கென்று தனித்துவமான கலை, பண்பாடு, இலக்கியம்சங்கள் இயல்பாகவே அமையப் பெற்றிருக்கின்றன. அந்த வகையில் எமது பண்பாட்டுடன் பின்;னி பிணைந்து இருக்கின்ற கலை இலக்கிய அம்சங்களை பேணி பாதுகாப்பதற்கு இது போன்ற ஆக்கபூர்வமான நிகழ்வுகள் ஓர் ஆரம்பமாகும். கிழக்கு மாகாணத்திற்கே உரித்தான கலைஞர்களையும், இலக்கிய ஆர்வலர்களையும் பண்பாட்டு கலை சார்ந்த விரும்பிகளையும் இவ்வாறான நிகழ்வின் ஊடாக நாம் முன்னிலைப்படுத்தி கௌரவிப்பது கிழக்குமாகாணத்தில் பிறந்த ஒவ்வொருவருக்குமுரிய கடமையாகும்.




பண்பாட்டுடன் கூடிய கலையம்சங்களை பேணி பாதுகாப்பதென்பது இலக்கிய படைப்பாளிகளின் பொறுப்பு மாத்திரம் அல்ல. அவ் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கலை, இலக்கிய துறையில் ஆர்வம் காட்டுகின்ற ஒவ்வொருவரினது தேவையாகும். காலத்தின் கட்டாய தேவை உணர்ந்தும் தமிழருக்கான இலக்கிய பாரம்பரியம், கலாச்சார விழுமியங்கள் என்பது தொன்றுதொட்டு வளர்க்கப்பட்டதொன்றாகும். இவ்வாறாக வளர்க்கப்பட்டு வந்த எமது மக்களின் அரும்பெரும் பொக்கிசமாக விளங்குகின்ற இக் கலையம்சங்களை தொடர்ந்தும் நாம் பேணி பாதுகாப்பதற்கு களம் அமைக்க வேண்டும். 

பாரம்பரிய உள்ளுர் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதனூடாக மறைந்த எமது கலையம்சங்களை இளம் தலைமுறையினருக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் கோடிட்டுக்காட்ட முடியும். எது எவ்வாறாயினும் கிழக்கு மாகாணத்திற்கு கிடைத்த சமாதான சூழலிலே கிழக்கு மாகாணத்திலே பிறந்த ஒவ்வொரு இலக்கிய துறையினருக்கும் எம்மாலான இயன்ற பணிகளை ஆற்றுவதற்கு நாம் அனைவரும் முன்வர வேண்டும். எனவும் தனது உரையில் கேட்டுக்கொண்டார்.

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரும், கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளரும் ஏ.எம்.ஈ.போல் தலைமையில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், வலயக்கல்வி பணிப்பாளர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி கே.பத்மராஜா, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் இலக்கிய திறனாய்வாளர்கள், பண்பாட்டலுவல் திணைக்கள பணிப்பாளர், மற்றும் கலாசார உத்தியோகஸ்த்தர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.



 இலக்கிய விழாவில் இறுதி நாளான நேற்று புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை கலையரங்கில் 3இனங்களின் கலாச்சாரத்தை  பிரதிபலிக்கின்ற கலை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


முதலமைச்சர் விருதுபெற்ற கலைஞர்களின் விபரம் 


திருகோணமலை மாவட்டம்:

1. அபுசாலி மீராமுகைதீன் - பல்துறை
2. தேவசகாயம் நந்தினி சேவியர் - ஆக்க இலக்கியம்
3. மு.பத்மநாத சர்மா - சிற்பம்
4. ஆ.அரசரெத்தினம் - பல்துறை


மட்டக்களப்பு மாவட்டம்:

1. அசோகாதேவி யோகராசா - கவிதை
2. அ.அரசரெத்தினம் - ஆக்க இலக்கியம்
3. உமாதேவி கனகசுந்தரம் - சாஸ்திரீய நடனம்
4. எஸ்.பி. பொன்னம்பலம் - ஆக்க இலக்கியம்


அம்பாறை மாவட்டம்:
1. திருமதி யோ.யோகேந்திரன் - சிறுகதை
2. அலியார் பீர்முகமது - கவிதை
3. எஸ்.அப்துல் ஜலீல் - ஓவியம்
4. க.யோன்ராஜன் - ஊடகம்


2010 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நூல் பரிசுப் போட்டியில் பரிசுபெற்ற நூல்கள்

1. எஸ் ..அரசரத்தினம் - "சாம்பல் பறவைகள்" -நாவல்
2. திருமதி ஆ.சின்னத்துரை - "நீலாவணன் காவியங்கள்"- காவியம்
3. செல்லில்லிதாசன் - "செம்மாதுழம்பூ"- கவிதை
4. அ.தி.மு.வேலழகன் "செங்கமலம்"- கவிதை
5. ச.அருளானந்தம் – "இசையோடு அசைபோடுவோம்"- சிறுவர் பாடல்கள்
6. ச.அருளானந்தம் –"சின்னஞ்சிறு கதை" -சிறுவர் சிறுகதை
7. ஓ.கே.குணநாதன் – "பறக்கும் ஆமை"- சிறுவர் நாவல்

8. பால.சுகுமார் – "கொட்டியாரம்"- இலக்கிய ஆய்வு










read more...