கிழக்குப் போராளிகளின் பிரிவின் பின்னர் கிழக்கு மக்களின் சுய நிர்ணயமும் கிழக்கின் அரசியல் சக்தி ஒன்றின் அவசியமும் உணரப்பட்டதன் வெளிப்பாட்டில் உருவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கு மாகாண சபையையும் பல உள்ளுராட்சி மன்றங்களையும் கைப்பற்றி முப்பது வருடங்களு்கு மேலாக இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக சின்னாபின்னமாக்கப்பட்டு சிதைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாணம் பல சவால்களுக்கு மத்தியில் துரித அபிவிருத்திப் பாதை நோக்கி சென்றுகொண்டிருந்தது.
அப்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவராகவும் கிழக்கு மக்களின் அபிவிருத்திக்காக கிழக்கு மாகாணம் எவ்வாறான திட்டங்களினூடாக துரிதமாக அபிவிருத்தி அடைய முடியுமென ஆராய்ந்து பல திட்டங்களை உருவாக்கி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வளர்ச்சியிலும், கிழக்கு அபிவிருத்தியிலும் முழு மூச்சாக ஈடுபட்டு வந்தவர் எல்லோராலும் செல்லமாக ரகு என்று அழைக்கப்பட்ட குமாரசுவாமி நந்தகோபன் அவர்கள்.
கிழக்கின் துரிதமான அபிவிருத்தியும், கிழக்கு மாகாணத்துக்கான தனித்துவ கட்சியும் தலைமையினையும் சிலரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. கட்சிக்காகவும், கிழக்கின் அபிவிருத்திக்காகவும் அயராது பாடுபட்ட ரகு அவர்களின் உயிர் பறிக்கப்பட்டது. ரகு அவர்களின் உயிர் பறிக்கப்படவில்லை எனில் கிழக்கு மாகாணம் இன்னும் பல அபிவிருத்திகளைக் கண்டிருக்கும். ரகு அவர்கள் வெளிநாட்டு அராஜதந்திரிகள், வெளிநாட்டுப் பிரமுகர்களோடு நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்ததோடு கிழக்கின் அபிவிருத்தி தொடர்பில் பல திட்டங்களை முன்னெடுத்திருந்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினைப் பொறுத்தவரை அன்றைய காலகட்டத்தில் மக்கள் செல்வாக்கு மிக்க கட்சியாக பரிணமித்திருந்தது. அதன் பிரதிபலிப்பாக கிழக்கு மாகாண சபையையும் பல உள்ளுராட்சி மன்றங்களையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கைப்பற்றியிருந்தது.
இவற்றை புலிகளுக்கு ஆதரவானவர்களாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்ந்தவர்களாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கிழகிலே ஒரு தலைமைத்துவம் இருக்கக்கூடாது கிழக்கும் தமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலே ரகு அவர்கள் இருந்தால் மக்கள் மத்தியிலே செல்வாக்குடைய கட்சியாக உருவெடுத்து நிலைத்து நின்றுவிடும் தமது அரசியல் இருப்பு இல்லாமல் போய்விடும் என்று பல சதித்திட்டங்களை தீட்டிவந்தனர். அவர்களின் சதித்திட்டத்தில் பல உயிர்களைப் பறிகொடுத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கின் தனித்துவக் கட்சியாக கிழக்கின் சுயநிர்ணயத்துக்காக பாடுபட்டு வருகின்றது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மீதான சதித்திட்டங்கள் ரகு அவர்களின் படுகொலையுடன் முடிவுக்கு வந்துவிடவில்லை. அவ்வப்போது பல சதித்திட்டங்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சந்தித்துக் கொண்டிருக்கின்றது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று பலர் பகல் கனவு கண்டுகொண்டிருக்கின்றனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு சேறு பூசி மக்கள் மத்தியில் செல்வாக்கை குறைக்க பல யுத்திகளை பலர் கையாண்டு வருகின்றனர். இதில் பெரும் பங்கு தமிழ் ஊடகங்களுக்கு இருக்கின்றது. கிழக்கு மாகாண சபையினை பிள்ளையான் (சிவநேசதுரை சந்திரகாந்தன்) அவர்கள் பொறுப்பேற்றதன் பின்னர் இடம்பெறும் அபிவிருத்தித் திட்டங்களையும் கிழக்கின் உண்மை நிலைகளையும் மூடி மறைத்து. கிழக்கு முதலமைச்சருக்கு எதிரான செய்திகளை மட்டுமே வெளியிடுகின்றன. தமிழ் ஊடகங்களும் கிழக்கின் அபிவிருத்தியையும் கிழக்கிலே ஒரு கட்சியும் தலைமைத்துவமும் இருப்பதை விரும்பவில்லையா? ஊடக தர்மம் என்பது ஒரு பக்கம் சார்ந்து செயற்படுவதுதானா?
ஊடகங்கள் பல தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டுக்களையும் வதந்திகளையும் பரப்பி மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவை இல்லாமல் செய்ய பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உண்மை நிலைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்கின்றது.
முப்பது வருடங்களாக அபிவிருத்தியே இல்லாமல் யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்குண்டு சின்னாபின்னமாகிய கிழக்கினை ஓரிரு வருடங்களில் அபிவிருத்தி செய்வது என்பது முடியாத காரியம். இருந்தபோதும் முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்கள் கிழக்கு மாகாணசபையை பொறுப்பேற்றதன் பின்னர் துரிதமாக வளர்ச்சி அடைந்து வருவதனை எவராலும் மறுக்க முடியாது. மறுப்பார்களானால் அது அவர்களின் கிழக்கின் அபிவிருத்தியை பொறுத்துக்கொள்ள முடியாத பொறாமையின் வெளிப்பாடாகவோ அல்லது அவர்களின் அரசியல் இலாபத்துக்கான வெளிப்பாடாகும்.
யுத்தத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசம் மட்டக்களப்பு. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு. அறுபது ஆண்டுகளுக்கு மேலான உரிமைப் போராட்டத்தில் இலட்சக் கணக்கான உயிர்களையும் உடமைகளையும் இழந்திருக்கின்றோம். இன்னும் இவ்வாறான போராட்டங்கள் தேவையா? இன்றைய தேவை என்ன? எவ்வாறு தமிழர்களின் உரிமைகளைப் பெறுவது என்பது பற்றி யதார்த்தமான், நடைமுறைச் சாத்தியமான விடயங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
இனிமேலும் தமிழர்கள் இழப்பதற்கு எதுவுமில்லை. சிலர் தமது அரசியல் இருப்புக்காக தமிழர்களை மீண்டும் பலிக்கடாவாக்க நினைக்கின்றனர். மக்கள் இன்று சற்றேனும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழர்கள் மத்தியிலே பிரச்சினைகள் இருக்க வேண்டும் அதனை வைத்தே அரசியல் நடாத்த முடியும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்றவர்கள் நினைத்து விட்டனர்.
மீண்டும் தமிழர்களை உண்ணாவிரதம் மறியல் போராட்டம் என்று தமிழர்களை உசுப்பேற்றி தூண்டிவிட்டு தமிழர்கள் எரிக்கப்படும் நெருப்பில் குளிர்காய நினைக்கின்றனர். தமிழர் உரிமை நோக்கிய ஆயுதப் போராட்டம் ஆரம்பகாலத்தில் இவ்வாறான உண்ணாவிரதம், மறியல் போராட்டம், கடையடைப்பு என்றுதான் ஆரம்பமானது. அதன் பிரதிபலனாக நாம் பல இலட்சம் மக்களையும் உடமைகளையும் இழந்திருக்கின்றோம். இன்னும் அவ்வாறானதொரு போராட்டத்துக்கு தமிழ் மக்கள் செல்ல வேண்டுமா?
மீண்டும் இவ்வாறான போராட்டத்துக்குள் மக்களை தள்ளிவிட நினைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக என்ன தீர்வுத் திட்டத்தை முன்வைக்கிறது? அவர்களிடம் நிரந்தரமான கொள்கைகள் இருக்கின்றதா? அவர்களிடம் சாத்தியமான தீர்வுத் திட்டங்களும் கொள்கைகளும் இருக்கின்றதா? அவ்வாறு இருந்தால் அவர்கள் அதனை மக்களுக்கு முன்வைக்கட்டும். அவர்களிடம் இன்றொரு, நாளையொரு கொள்கை இருக்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு தமது கொள்கை என்ன என்பது இதுவரை தெரியாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினைப் பொறுத்தவரை இரட்டை வேடம் போடுகின்றது. தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. அன்று புலிகளின் அரசியல் சக்தியாக இருந்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். அன்று விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள், இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு தீர்வினைத் தராது, தமிழீழமே தமிழர்களின் கனவு என்ற கொள்கைகளோடு அரசுக்கு எதிராக செயற்பட்ட இவர்கள் இன்று அரசுடன் பல பேச்சுக்களை நடாத்தி வருகின்றனர். இவர்கள் இன்று தமது கொள்கைகளைக் கைவிட்டு விட்டனரா?
அரசுடன் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளை நடாத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் என்ன விடயங்கள் பேசப்பட்டன. என்ன விடயங்களுக்கு தீர்வு காணப்பட்டன என்பதனை மக்கள் முன் தெளிவுபடுத்தாதது ஏன்? அரசுடன் இரகசிய ஒப்பந்தம் செய்கிறதா? அல்லது இரட்டை வேடம் போடுகிறதா? அரசுடன் பேச்சு நடாத்திக் கொண்டு அரசுக்கு எதிராக உண்ணாவிரதத்தில் இறங்குவதன் நோக்கம் என்ன? தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கொள்கை இல்லாக் கூத்தாடிகளா?
அரசுடனோ அல்லது வெளிநாட்டுப் பிரமுகர்களுடனோ பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படுவதில்லை இது ஏன்? மட்டக்களப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை மக்களுக்காக என்ன செய்தனர். அபிவிருத்திக்காக தமக்கு வழங்கப்படுகின்ற ஐம்பது இலட்சம் ரூபாவினையும் என்ன செய்தனர்?
வெறுமனே சொத்துச் சேர்க்கவும் தமது குடும்பமும், உறவினர்களும் வெளிநாடுகளில் உல்லாசமாக வாழ்வதற்காக எமது மக்களை விற்றுக்கொண்டிருக்கின்றனர். கிழக்கிலே அபிவிருத்தி செய்ய என்று சொல்லி புலம்பெயர் தமிழர்களிடம் பல மில்லியன் ரூபாய்களைப் பெற்று சுருட்டிக்கொண்டிருக்கின்றனர். இவர்களின் கடந்தகாலப் பக்கங்களையும் அவர்கள் அரசியலுக்கு வந்த வழியினையும் மக்கள் புரட்டிப் பார்க்க வேண்டும்.....
தொடரும்....
0 comments: on "தமிழீழம் எனும் அடைய முடியாத இலக்கு நோக்கிய பயணத்தில் சிக்குண்ட கிழக்கு மாகாணம். பகுதி - 3"
Post a Comment