வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் 2012ம் ஆண்டு நடைபெறும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அலரிமாளிகையில் இடம்பெற்ற பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் கூறியிருந்தார்.
வடமாகாண சபைக்கான தேர்தலுக்கு முன் ஏற்ப்பாடாகவே யாழ் மாவட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெற்றன. அமைச்சர்கள் பட்டாளமும், அரச இயந்திரமும் முழுமையாக அரசாங்கத்துக்கு சார்பாக முடிக்கிவிடப்பட்ட நிலையிலே அவ் உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் நடைபெற்றன. ஆனாலும் பெரும்பாலான உள்ளுராட்சி சபைகளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியது. 2012ம் ஆண்டு நடைபெற உள்ள வட மாகாண சபைத்தேர்தல்லானது அரசாங்கத்திற்கும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் மிக முக்கியமானது மட்டுமின்றி சவால் நிறைந்ததும் கூட.
இலங்கையின் ஏனைய மாகாண சபை தேர்தல்களை விட வட,கிழக்கு மாகாண சபைத்தேர்தல்களுக்கு தேசிய, சர்வதேச ரீதியில் அதிகளவான முக்கியத்துவம் உண்டு. 1987ம் ஆண்டு கையெழுத்தான இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக அறிமுகம் செய்யப்பட்ட மாகாண சபை முறைமையானது வட,கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களை மையப்படுத்தியும், இனப்பிரச்சனை தீர்வில் அதிகாரப்பரவலாகத்திற்கான அடிப்படை தொடக்க மையமாக கொண்டு வரப்பட்ட போதும் இம்முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு இரு தசாப்தங்கள் கடந்து விட்ட நிலையில் இணைந்த வட, கிழக்கிற்க்கு ஒரு தடவையும் 20வருடங்களுக்கு பின் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்திற்கு ஒரு தடவையும் மாகாண சபைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.
வட மாகாணத்துக்கு இதுவரை மாகாண சபை தேர்தல் நடைபெறவில்லை. ஏனைய மாகாணங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை எனும் அடிப்படையில் கிரமமாக தேர்தல்கள் நடைபெற்று இருக்கின்றன. 2008ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலுக்கு சர்வதேச ரீதியாக கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் வட,கிழக்கு மாகாண சபைக்கான அங்கீகராத்தின் சிறந்த வெளிப்பாடாகும்.
சமீபத்தில் வட மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல்களின் படியும், இன்றைய அரசியல் நிலைமைகளின் படியும் வடமாகாண சபைக்கான தேர்தலில் அரசாங்கத்தை விட தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. வட மாகாணத்தின் தேர்தல் மாவட்டங்களில் ஒன்றான யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான EPDP சில இடங்களில் பலமாக இருக்கின்ற போதும் பெரும்பாலான இடங்களில் தமிழ்த்தேசியக்கூட்டமைப் பின் ஆதிக்கமே காணப்படுகின்றது.
மற்றொரு தேர்தல் மாவட்டமான வன்னியில் அரசாங்கமோ, பங்காளிக்கட்சிகளோ வலுவான மக்கள் செல்வாக்குடன் இல்லை. இதனை விட வட மாகாணத்தில் செயற்படுகின்ற தமிழ்கட்சிகளில் EPDP தவிர ஏனைய கட்சிகள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் இணக்கமாக செயற்படுவதால் வன்னித்தேர்தல் மாவட்டத்திலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கையே ஒங்கியுள்ளது.
தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமை ரீதியாகவோ, அபிவிருத்தி ரீதியாகவோ தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எதுவும் செய்யாத போதும் அதன் மிகப்பெரிய பலம் தமிழ் மக்களின் பலவீனங்களை நன்றாக புரிந்து கொண்டு உரிய தருணத்தில் அப்பலவீனங்களுக்கு ஊடாக தமது பலத்தைக்காட்டுவது தான். வட மாகாண சபைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை காரணம் காட்டி அதற்கு காரணமான மஹிந்த அரசாங்கத்தை சர்வதேச குற்றவாளி கூண்டில் ஏற்ற வட மாகாண சபைக்கான ஆணையைத்தருமாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வட பகுதி மக்களிடம் உணர்ச்சி பூர்வமாக கேட்கும். மக்களும் அதற்கு ஆணை வழங்கலாம்.
ஆனால் இதனால் எதுவுமே நடைபெறாது என தமிழ்த்தேசியக்கூட்டமைப்புயின் தலைவர்களுக்கு நன்கு தெரியும். இறுதியில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஜெயிக்க மக்கள் தோற்ப்பார்கள். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பpன் பிரதான அரசியல் மார்க்கமே தமிழ் மக்களின் இரத்தமும், மரணக்கிடங்குகளும் தான். இவற்றின் மீதே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தனது அரசியல் பாதையைக் கொண்டு செல்கின்றது. ஆனால் இவ்இரத்தம் சிந்தலுக்கும், மரணக்கிடங்குகளுக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கனமான பாத்திரம் வகித்தது என்பதை பலரும் மறந்து போவது தான் ஆச்சரியம்.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல், உள்ளராட்சிமன்ற தேர்தல்களை சந்தித்திருக்கின்றது. மூன்று தேர்தல்களிலும் ஒரே நோக்கத்திற்காகவே மக்களின் ஆணையைக்கேட்டது. மக்களும் ஆணை கொடுத்தார்கள் ஆனால் இதற்காக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மேற்கொண்ட முன் நகர்வுகள் தான் என்ன? குறைந்த பட்சம் இலங்கையில் போர்க்குற்றம் அல்லது இனப்படுகொலை நடைபெற்றது என்று உத்தியோக பூர்வமாக சொல்லக்கூட இல்லை.
அரசாங்கம் நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் நோக்கம் எதுவாக இருந்த போதும் அதன் இறுதி அறிக்கைக்கு சர்வதேச ரீதியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதனை பயன்படுத்தி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் எந்தத்தலைவராவது நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் போர்க்குற்றம் நடந்ததாகவோ அல்லது தமிழ் மக்களுக்கான இறுதி அரசியல் தீர்வு தொடர்பாகவோ சான்று பகின்றார்களா?. பேச்சுவார்த்தைகளில் திருப்தி இல்லை என்று கூறிக்கொண்டே அரசாங்கத்துடன் 10 சுற்றுக்கள் பேச்சு வார்த்தைகள் நடத்தியுள்ளனர். இதில் அரசியல் தீர்வுக்காக முன் வைக்கப்பட்ட எழுத்து பூர்வமான ஆவணம் என்ன?. எனவே நடைபெறவுள்ள வட மாகாண சபை தேர்தலிலும் தன்னால் செய்யமுடியாததை உணர்ச்சி பூர்வமாக முன்வைத்து மக்களின் ஆணையைப்பெறும் ஆவலில் தான் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தலைவர்கள் இருப்பார்கள் என்பதில் ஜயமில்லை.
அரசாங்கமும் தமிழ்மக்களின் இனப்பிரச்சனைக்கான காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் மட்டும் பேச்சுவார்த்தை எனும் நாடகத்தை நடாத்துவதும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு வாய்ப்பாகவுள்ள விடயம் தான். வட மாhகண சபைத்தேர்தலானது தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு பாரிய சவாலாக அமைய உள்ளதுடன் அக்கட்சியின் பிளவுக்கான களமாகவும் அமையலாம்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கொள்கை அடிப்படையில் நோக்கினால் வட மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிக்கூடாது. கிழக்கு மாகாணசபைத்தேர்தல் நடைபெற்ற போது வட,கிழக்குப்பிரிப்பை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனக்கூறி அத்தேர்தலில் போட்டி இடவில்லை.
அத்துடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புத்தலைவர் சம்பந்தரை பாராளுமன்ற தேர்தல் விடயமாக சந்தித்த போது தாம் கிழக்கு மாகாணத்தையோ கிழக்கு முதலமைச்சரையோ ஏற்றுக்கொள்ளவில்லை என சம்பந்தர் கூறியதாக கிழக்கு முதலமைச்சர் கூறியதும் இங்கு சுட்டிக்காட்டதக்கது. 2012ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் இணைந்த வட,கிழக்கிற்கான தேர்தல் அல்ல. பிரிக்கப்பட்ட வடக்கு மாகாணத்திற்கான தேர்தல.; 2008ம் ஆண்டு கடைப்பிடித்த கொள்கையை 2012ம் ஆண்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கடைப்பிடிக்காது என்றே தோன்றுகின்றது.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார்?. என்பதில் தான் அக்கட்சியின் மிகப்பெரிய சவாலே உள்ளது. வட மாகாண முதலமைச்சர் பதவி என்பது பதவி நிலை அடிப்படையில் மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவிக்கு இணையானது.
அத்துடன் வட மாகாண முதலமைச்சருக்கு தேசிய, சர்வதேச ரீதியில் பெரும் அங்கீகாரம் கிடைக்கும். எனவே பதவி நிலை அடிப்படையிலும் அங்கீகாரத்திலும் முதலமைச்சர் பதவியானது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கட்சித்தலைவர், செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் போன்றோரை விட உயர்வானது. இவ்வகையில் நோக்கையில் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பில் பிரேரிக்க பதவி நிலையிலும், மூப்பு அடிப்படையிலும் பொருத்தமானவர் கட்சித்தலைவரான இரா. சம்பந்தர் மட்டுமே. ஆனால் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சம்பந்தரை வட மாகாண முதலமைச்சராக அவரது கட்சி ஏற்றுக்கொள்ளுமா? வட பகுதி மக்கள் ஏற்றுக்கொள்வாரர்களா! வட,கிழக்கு என்று தங்களுக்குள் பாகுபாடு கிடையாது என கூறும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கட்சியினர் தமது பிரதேச பாகுபாட்டு இன்மையை சம்பந்தரை வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பதன் மூலம் நிரூபிப்பார்களா?
இது சாத்தியமாகாத பட்சத்தில் தனக்கு கீழ் நிலையில் உள்ள மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன் போன்றோரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து பதவி நிலையையும், மூப்பு நிலையையும் விட்டுக்கொடுக்க சம்பந்தர் முன் வருவாரா? தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் இரண்டாம்கட்ட தலைவர்களில் சுரேஸ் பிரேமச்சந்திர முன்னாள் ஆயுத குழுவின் தலைவர் புலிகளின் உயிர் அச்சுறுத்தலுக்கு பயந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் ஜக்கியமானவர். அவர் முதலமைச்சர் வேட்பாளர் பதவிக்கு பிரேரிக்கப்படுவதை பழம் பெரும் கூட்டமைப்பு தலைவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதே நேரம், சுமத்திரன், ஸ்ரீதரன் போன்ற புதியவர்களையும் பழையவர்களையும் ஏற்க்கமாட்டார்கள். இவ்வாறான நிலையில் முற்றிலும் புதியவரை தேடினாலும் பதவி நிலைமை, நீண்ட கால உறுப்புரிமை போன்ற ஈகோக்களும் மேலாதிக்க மனப்பாங்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தலைவர்களை விடப்போவது இல்லை. இதனை விட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பாக முதலமைச்சர் வேட்பாளர் கனவு புலம்பெயர் வாழ் முக்கியஸ்தர்கள் சிலருக்கும் யாழ்பல்கழைகலக போராசிரியர்கள் இருவருக்கும் உள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனால் இவர்களை பிரேரிப்பதில் கட்சி தலைமை முரண்படும் என்றே தோன்றுகின்றது. இவ்வாறான நிலையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அடுத்த தெரிவு என்னவாக இருக்கும்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தர் முதலமைச்சராக தனது கட்சியை சேர்ந்த வேறொருவர் தெரிவு செய்யப்பட்டால் தனது நிலைமை என்னவாக இருக்கும் என்பதை நன்கு அறிவார். நிச்சயமானக தனக்கு கீழ் பணியாற்றுகின்ற மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோர் தனது பதவியை விட உயர்ந்த பதவியான முதலமைச்சர் பதவிக்கு வருவதை அவர் விரும்பப்போவதில்லை. எனவே தனக்கு மிகவும் விசுவாசமான தனது பணிப்புரையின் கீழ் செயற்படக்கூடிய பல்கலைகழக முன்னால் பேராசிரியர் ஒருவரும், கட்சியில் தேர்தலில் போட்டியிடாமல் பதவியை அநுபவிக்கின்ற ஒருவரும் அவரின் சிந்தனையில் இருக்கலாம்.
ஆனால் கட்சி தலைவரின் இம்முடிவை மாவை சேனாதிராஜா, சுரேஸ்பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கல நாதன் போன்றோர் ஏற்பார்கள் என்றால் அது கடினம் தான். எனவே வட மாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எனும் குட்டை குழம்பப்போகின்றது. இக்குட்டைக்குள் அரசாங்கம் மீன் பிடிக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
அரசாங்க தரப்பில் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட அமைச்சர் டக்கிளஸ் தேவாநந்தா பகிரங்கமாக விருப்பம் தெரிவித்திருக்கின்றார்.
ஆனால் யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் மாத்திரமே செல்வாக்குடன் இருக்கும் அவர் தனது நிலையை இன்னும் விஸ்திரப்படுத்த வேண்டும். அவரும் அவரின் கட்சியும் எல்லாவற்றுக்கும் அரசாங்கத்துக்குப் பின் ஒழித்துக் கொள்ளாமல் தனித்துவத்தையும் சர்வதேச அங்கீகாரத்தையும் பெற வேண்டும். ஆயுதக்குழு, கப்பம் பெறுபவர்கள் எனும் பெயரை போக்கி வெளிப்படைத்தன்மையுடன், சிவில் சமூகத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டும். அண்மையில் அமெரிக்காவின் வெளி உறவு உதவிச்செயலாளர் றொபட் ஓபிளேக் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த போது EPDP நடவடிக்கைகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாயின இது போன்ற செயல்கள் தவிர்க்காவிட்டால் அமைச்சர் டக்கிளஸ் தேவாநந்தனின் வட மாகாண முதலமைச்சர் கனவு கனவாகவே போய்விடும்.
நன்றிகள் - உண்மைகள்
2 comments: on "நடைபெற உள்ள வட மாகாணசபைக்கான தேர்தலும் எதிர்நோக்க இருக்கும் சவால்களும்"
அரசியலா.... உன்னை திருத்தவே முடியாது.
unmaiya solli solliye.. aliyappokirai .. hi .. hiii....hii....
Post a Comment