நண்பர் ஒருவரின் பின்னூட்டம் இதோ...
////Sabarinathan Arthanari on 29 ஜூன், 2010 12:21 pm சொன்னது…
நண்பரே நான் தமிழக தமிழன். இலங்கை நிலை குறித்து இலங்கை நண்பர்கள் சொல்வதை வைத்தே அறிந்து கொள்ள இயலும்.
//1974 இல் தமிழாராட்சி மாநாட்டில் இனவெறி பித்து தலைக்கேறிய சிவகுமாரன் தலைமையிலான இளைஞர் குழாமினால் திட்டமிடப்பட்டபடியே 9 உயிர்களை மின்சாரத்துக்கு பலிகொடுத்தனர்//
எனும் கருத்து கீழே உள்ள நண்பரின் கருத்துக்கு மாற்றாக அமைந்துள்ளது.
http://santhyilnaam.blogspot.com/2010/06/blog-post_28.html
விளக்க இயலுமா ?//
அவருக்குரிய விளக்கங்கள்..
“நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலை” என்பது இலங்கை தமிழர்களது அரசியல் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகும். மிகவும் பிரபல்யமானதொரு மாநாட்டை யாழ்பாணத்தில் நடாத்தவிடாமல் சிறிமா பண்டாரநாயக்கா தலைமையிலான சிங்கள பேரினவாத அரசு முட்டுக்கட்டைபோட்டது. “பொலிசாரை அனுப்பி மாநாட்டில் கலந்துகொண்ட 9 அப்பாவி தமிழர்களை காட்டுமிராண்டித்தனமாக சுட்டுகொன்றது” என்பதே வரலாறாக ஒவ்வொரு தமிழர் மனதிலும் இன்றுவரை உலாவரும் செய்தி ஆகும்.
இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகள்தான் இன்றுவரை தமிழர் தரப்பு போராட்டங்களுக்கு நியாயம் சேர்த்து வருபவையாக இருக்கின்றன. ஆனால் உண்மை சம்பங்களாக விபரிக்கப்படுகின்ற குரூரங்களின் வரலாற்று சூழலையும், இச்சம்பவங்களின் பின்னணியில் மறைக்கப்பட்டிருக்கின்ற தகவல்களையும் தேடி ஆராய்கின்றபோது மேலும் பலவிதமான அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிவரகாத்திருக்கின்றன.
அது மட்டுமன்றி இது போன்ற இழப்புகளை தவிர்த்திருக்கக்கூடிய வாய்ப்புகளை தமிழ் தலைவர்கள் திட்டமிட்டே கருத்தில் எடுக்காதிருக்கின்றனர். சிலவேளைகளில் இன்னுமொருபடி மேலேபோய் தமிழ் தலைமைகளே இதுபோன்ற குரூரமான வரலாற்று நிகழ்வுகளை ஏற்படுவதற்கு காரணகர்த்தாக்களாக இருந்திருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.
1970 ஆண்டு தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து இடதுசாரிகள் கூட்டணி அரசாங்கம் அமைத்திருந்தனர். தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலான மக்கள் நல திட்டங்கள் பல நாடெங்கும் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் உப உணவுப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசாங்கம் அதிக கவனமெடுத்து செயற்பட்டது.
வெங்காயம், மிளகாய்…போன்ற பயிரிடல்களில் ஈடுபட்ட ஏழை விவசாயிகள் பலர் இந்த சிறிமா ஆட்சியில்தான் கூடிய இலாபம் சம்பாதித்து சமூகத்தில் முன்னணிக்கு வரும் அரியவாய்ப்புகளை பெற்றுகொண்டனர். அதேபோன்று உழைப்பாளர்கள் நலன்சார்ந்த கூட்டுறவு சங்கங்கள், தொழிற்சங்கங்கள்…… போன்ற அமைப்புகளும் இந்த காலத்தில்தான் அதிக வளர்ச்சி கண்டன. அதேபோன்று அந்தகாலகட்டத்தில் யாழ்மேயராக இருந்த அல்பிரட் துரையப்பா கூட சிறிலங்கா சுதந்திர கட்சி சார்ந்தவராக இருந்தார்.
இதன்காரணமாக யாழ் மாவட்டத்தினை மேலும் பலவழிகளிலும் அபிவிருத்தி செய்ய அவருக்கு அரசாங்கத்தின் பூரண ஆதரவு கிட்டியது. இதனை மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் அந்த காலத்தில் (1970-1977) பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இராஜன் செல்வநாயகம் அவர்களின் அபிவிருத்தி திட்டங்களுடன் ஒப்பிடலாம்.
நீண்டகாலமாக இராஜன் செல்வநாயகத்திற்கு முன்பிருந்தே தமிழரசு கட்சி எம்.பி.யாக இருந்துவந்த செ.இராஜதுரையினால் செய்யப்பட்ட அபிவிருத்திகளை விட 1970 – 1977 வரையான காலப்பகுதிகளில் இராஜன் செல்வநாயகம் பன்மடங்கான வளர்ச்சி திட்டங்களை மட்டக்களப்பில் செய்து முடித்திருந்தமை இன்னும் பலருக்கு ஞாபகமிருக்கலாம்.
அதேவேளை 1970 ம் ஆண்டு தேர்தலில் வட்டுக்கோட்டை தொகுதியில் படுதோல்வி கண்டதனால் பாராளுமன்ற வாய்ப்பைகூட இழந்திருந்தார் அமிர்தலிங்கம். அந்தவகையில் அல்பிரட் துரையப்பா அமிர்தலிங்கத்தினை விஞ்சிய ஒரு மக்கள் தலைவனாக யாழ்பாணத்தில் வளர்ந்துவந்தார்.
துரையப்பாவின் வேலைத்திட்டங்கள் யாழ்ப்பாணத்தின் ஏழைகள், விவசாயிகள், மற்றும் சமூகத்தின் தாழ்நிலை வகுப்பிலிருந்தவர்கள் போன்ற பலதரப்பட்டோரதும் வாழ்க்கைத்தரத்தினை அதிகரித்தது. தமது அரசியல் வாழ்வில் எப்போதும் மேனிலை வர்க்கத்தினருக்கான அரசியலை முன்னெடுத்து வந்த தமிழ் தலைமைகள் இந்த சமூகமாற்றத்தை ஒரு போதும் விரும்பியிருக்கவில்லை.
இந்த கீழ்நிலை வகுப்பினரது வளர்ச்சிநிலையானது அமிர்தலிங்கம் போன்ற தமிழரசுகட்சி பிரமுகர்களும் அவர்களது ஆதரவு தளமான மேட்டு குடியினரும் கொண்டிருந்த சமூக அதிகாரத்தை ஆட்டம் காணச்செய்யும் அல்லது கேள்விக்குள்ளாக்கும் நிலையை நோக்கி நகர்ந்தது. இதுவும் அவர்களுக்கு உவப்பானதொன்றாக இருக்கவில்லை. அடுத்து வரபோகின்ற 1977 ம் ஆண்டு பொதுதேர்தலில் இன்னிலைமைகள் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் அச்சமுற்றனர்.
எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கடுமையான வயோதிப தளர்வினை எதிர்நோக்கியதன் காரணமாக 1970 இன் பின்னர் தமிழரசுக் கட்சிக்குள் அடுத்தகட்டத் தலைமையை நோக்கிய குடும்பிப் சண்டைகள் ஆரம்பமாயிற்று. கிழக்கில் இருந்து இரண்டாம் தலைமையாக வளர்ச்சி பெற்றிருந்த சொல்லின் செல்வர் இராஜதுரை அவர்களுக்கே அந்த வாய்ப்புகள் அதிகம் இருந்தது.
ஆனாலும் அ.அமிர்தலிங்கம் தாம் சார்ந்த குழாம் ஒன்றினை தமிழரசுக் கட்சிக்குள் மறைமுகமாக கட்டிவளர்த்து தலைமைப் பதவியைப் பிடிக்க குள்ளத்தனமாக செயற்பட்டு வந்தார். அதேவேளை கட்சியின் செயற்பாடுகளில் கூடிய கவனம் செலுத்துபவராக தன்னை எப்பொழுதும் அடையாளப் படுத்துவதில் கண்ணாயிருந்தார்.
1972 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்களாதேசம் எனும் ஒரு நாட்டின் உருவாக்கம் நிகழ்ந்தது. இதற்கு பாகிஸ்தான் பிரச்சனையில் இந்தியா தலையிட்டு புதியதொரு நாட்டை உருவாக்க முன்நின்று உழைத்ததே காரணமாகும். இந்த வங்காளதேஷ் எனும் நாட்டின் உதயத்தை வரவேற்றுப் பேசிய அமிர்தலிஙம் இதேபோன்று இலங்கையிலும் இந்தியா தலையிட்டு ஒரு “யாழ்தேஷ்” மலர உதவவேண்டும் என அன்னை இந்திரா காந்தியை கேட்டுக்கொண்டார்.
அதாவது ஒரு நாடு பிளவுபடும் அளவிற்கு இனமுரண்பாடுகள் இல்லாத சூழலில் எடுத்த எடுப்பில் அவ்வப்போது உணர்ச்சி மேலிட உரத்துப் பேசுவதின் பழக்கதோசமே இந்த கருத்தாகும்;. சே.பொன் அருணாசலம் காலத்தில் இருந்து தேவையான போது இப்படித் தனிநாடு குறித்தும் தமிழ் அரசு குறித்தும் தடாலடியாகப் பேசுவது யாழ்த்தலைமைகளின் வழக்கமாக இருந்தது.
அமிர்தலிங்கம் காலத்துக்கு முன்னர் கூட பாகிஸ்தான் உருவான வேளையில் தமிழ் காங்கிரஸின் தலைவராக இருந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் அதேபோன்றதொரு தனிநாட்டுப் பிரிவினையை தானும் ஏற்படுத்தப் போகிறேன் என்றும் அதை செய்துமுடிக்கப் போகும் “ஜின்னா” தானே என்றும் பிரச்சாரம் செய்தார்.
ஆனால் அதுவெல்லாம் எப்படிப் போலிப் பேச்சாகவும் உணர்ச்சி வசப்பட்ட வெற்றுவார்த்தைகளாக இருந்ததோ அதே போன்றே அமிர்தலிங்கமும் “யாழ்தேஸ்” கேட்டமையும் அமைந்தது. கிழக்கில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளும் சமூக பொருளாதார தேவைகளும் கவனத்தில் எடுக்கப்பட்டு இவையனைத்துக்குமான தீர்வு ஒரு தனிநாடே என்ற சிந்தனை இவர்கள் மனதில் உருவாகி இருந்திருந்தால் இப்படி எடுத்த எடுப்பிலேயே தனிநாட்டைக் குறிக்க “யாழ்தேஸ்” எனும் வார்த்தை வெளிவந்திருக்க முடியாது.
ஆகவே அமிர்தலிங்கமும் தனது கடந்தகால ஆசான்களின் பாணியில் யாழ்ப்பாணத்தின் பிரச்சனைக்காக மட்டுமே போராடினார். தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான முடிவு என்பது யாழ்ப்பாணத்தின் படித்த வர்க்கத்தின் பிரச்சனைகளுக்கான முடிவு காண்பதே எனும் எண்ணமே அவர் மனதில் இருந்தது.
மக்களின் வாழ்வியல் தேவைகளை ஓட்டிய வேலைத்திட்டங்களை கொண்டிராத தமிழரசு கட்சியினர் சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் மோதுவதென்பது சற்று சிரமமானதொன்றாக இருப்பதை அவர்கள் உணர்ந்தனர். ஆகவேதான் மக்களின் மனங்களை கவரும் மொழியுணர்வுகளே வழமைபோல் தமிழரசு கட்சிக்கு கைகொடுத்தது.
தமிழை வளர்க்கின்றோம், தமிழை ஆராய்ச்சி செய்கின்றோம், தமிழுக்கு தொண்டுசெய்கின்றோம் என்று மொழிசார்ந்த வேலைத்திட்டக்களையே மக்களின் முன்வைத்தனர். இந்த வேலைத்திட்டங்களின் முதுகெலும்பாகதான் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு யாழ்பாணத்தில் நடாத்தப்படுவதற்கான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டது.
இந்த நாலாவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு 1974 ல் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்ட வாய்ப்பினை அமிர்தலிங்கம் தனது எதிர்கால அரசியலை ஸ்திரப்படுத்தி கொள்ளும் நோக்கில் நன்றாக பயன்படுத்த முனைந்தனர்.
அமைதியாக நடாத்தபட வேண்டிய ஆராய்ச்சி மாநாட்டை ஆர்ப்பாட்டமாக நடத்துவது என்பது அறிவுடமையானதொன்றல்ல. ஆனால் சாதாரணமாக நடத்தப்பட வேண்டிய இம்மாநாட்டை பெரியதொரு விழாவாக்கி நடத்த முயன்றனர்.
தொடரும்...
1 comments: on "நாலாவது உலகத் தமிழாராட்சி மாநாட்டுப் படுகொலை."
விளக்கமளிக்க முயற்சியும், நேரமும் எடுத்து கொண்டமைக்கு நன்றி. மேலும் விளக்கங்கள் அடுத்தடுத்த பகுதிகளில் வருமென எதிர் பார்க்கிறேன்
Post a Comment