Friday, 18 June 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 14

முழு இலங்கையிலும் மொழிப்பிரச்சனையை அடிப்படையாகக் கொண்ட பிரச்சாரங்களே 1956 ஆம் ஆண்டுத் தேர்தலில் முன்நிலை வகித்தது. இதன்காரணமாக சிங்கள மொழி உணர்வின் அடிப்படையில் அணிதிரட்டப்பட்ட மக்களையும்
சிங்களத்தை அரசகரும மொழியாக்குதல் என்பதை நோக்காகக் கொண்டே உருவாகிச் செயற்பட்டு வந்த புரட்சிகர சமாசமாச கட்சி, பாஷா பெரமுனை போன்றவற்றுடன் சிறிலங்கா சுதந்திரக்கட்சி கூட்டுச்சேர்ந்திருந்தது. இந்தக் கூட்டணி பொதுஜன ஐக்கிய முன்னணி என அழைக்கப்பட்டது. அதேபோல் தமிழ் பகுதிகளில் செயற்பட்ட ஜீ..ஜீ. பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் யு.என்.பி. யுடன் இணைந்து போட்டியிட்டது. காங்கிரசில் இருந்து பிரிந்து இயங்கிய தமிழரசுக் கட்சி இந்தத் தேர்தலில் சமஸ்டிச் திட்டத்தினை முன்வைத்து போட்டியிட்டது. வகை வகையான சிங்கள எதிர்ப்பு வடிவங்களுடன் தமது பிரச்சாரத்தை முன்னெடுத்தவர்களுக்கே வடகிழக்கு பகுதிகளில் பெருவெற்றிவாய்ப்பு கிட்டியதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

1956 ஆம் ஆண்டுத் தேர்தலில் தேசிய அளவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட அரசாங்கமானது ஆங்கிலத்தை அகற்றி சுயபாசைகளில் ஒன்றான சிங்களத்தை அரச அந்தஸ்துக்கு உயர்த்தியது. அதேவேளை சிறுபான்மை மொழியான தமிழுக்கு அது அதிகம் பேசப்படுகின்ற வடகிழக்குப் பகுதிகளில் “பிராந்திய அந்தஸ்து” என்பதையும் வழங்கியது. இதையே தனிச்சிங்களச் சட்டம் என தமக்கு வசதியான மொழிபெயர்ப்பை இட்டு தமிழரசுக் கட்சியினர் எதிர்த்தனர். இந்த சட்டமூலத்தின் முழுவடிவங்களை மறைத்து சிங்கள எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னிறுத்தினர்.

இந்தச் சட்டத்தினு}டு இலங்கையின் அரசகரும மொழியாக சிங்களம் பிரகடனப்படுத்தப்பட்டது உண்மைதான். அது காலணித்துவ மொழியான ஆங்கிலத்தை அகற்றும் ஒரு செயற்பாட்டின் இறுதிக்கட்டம் எனும் வகையில் சாதகமான ஒன்றாகவும் சிறுபான்மைமொழியான தமிழையும் அதே தரத்துடன் அரசகரும மொழியாக்கத் தவறியது எனும் வகையில் பெருந்தன்மையற்ற ஒன்றாகவும் மட்டுமே பார்க்கப்பட்டிருக்க வேண்டும்;.

தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் தமிழுக்கும் சம அந்தஸ்து கேட்டு போராட முன்வந்தது நியாயமானதொன்று. ஆனால் தமிழ் பேசும் பகுதிகளில் இந்தப் போராட்டம் நியாயமான வடிவங்களில் முன்னெடுக்கப்படவில்லை. “தனிச்சிங்களச் சட்டம்” என்று திரும்பத் திரும்ப பிரச்சாரப்படுத்தியதன் மூலம் இச்சட்டமானது தமிழ்மொழியை அழித்து சிங்களத்தை மட்டும் இலங்கைவாழ் மக்கள் எல்லோர்மீதும் திணிக்கும் ஒரு சட்டமாக உருவகிக்கப்பட்டது. இந்த உருவகிப்பானது சிங்களப் பெரும்பான்மை இனம்மீது ஒரு அச்ச உணர்வை தமிழ் பேசும் மக்கள் எனும் வகையில் கிழக்கு மாகாணத்தமிழர்களிடமும் ஏற்படுத்தியதில் வியப்பு ஏதும் இல்லை.

இதற்கு வசதியாக வடகிழக்குப் பிராந்தியத்துக்கு வெளியே அரச உத்தியோகத்தர்களாய் இருந்த பல யாழ்ப்;பாணத்தவர்கள் இடைநிறுத்தப்பட்டமை அமைந்தது. கிழக்கு மாகாணத்தில் இருந்து வெகுசிலரே இச்சட்டத்தினால் (தென்னிலங்கைப் பகுதியில்) வேலைவாய்ப்பினை இழந்தனர். இது எப்படியிருந்தபோதும் ஆங்கிலம் தெரியாத சிங்கள பாமர மக்களிடையே பணிபுரிகின்ற அரச உத்தியோகஸ்தர்கள் அம்மக்களுக்குப் புரியக்கூடிய சிங்கள மொழியில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும் என கேட்கப்படுவதில் எவ்வித தவறும் இருக்கமுடியாது. இதையே தமிழ் பகுதியில் பணிபுரிந்தவர்களிடமும் சிங்களத்தைக் கற்கக் நிர்ப்பந்தித்திருந்தால் அதுவே இனவாதமாக இருக்கமுடியும். அதைவிடுத்து பொத்தாம் பொதுவாக “சிங்களம் தெரியாவிட்டால் அரசபணி புரியமுடியாது” என்கின்ற நிலை ஏற்பட்டுவிட்டதாக திரிபுபடுத்தல் பிரச்சாரங்களை தமிழரசுக்கட்சி மேற்கொண்டது. இப்படியான ஒரு மாயையை தமிழ் மக்களிடையே பரப்பும் விதமான ஒருபிரச்சாரம் அதிக கல்விபெறாது தமது கிராமிய பொருளாதார வாழ்வினில் நிம்மதியுடன் வாழ்ந்து வந்த கிழக்கிலங்கை மக்களிடத்தில் “கலவர” மனநிலையை உருவாக்கியது.

தமிழ் மொழியின் எதிர்காலப் பாதுகாப்புச் சம்பந்தமாக பாரிய ஆபத்தொன்;றை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருப்பதாக யாழ்ப்பாணத்து அரசியல்வாதிகள் மேற்கொண்ட பிரச்சார யுத்தி கிழக்கிலங்கை மக்களை வெகுவாக அச்சமடையச் செய்தது. சிங்களக் கிராமங்களைக் கொண்ட நீண்ட எல்லைப்புறங்களை மிக அண்மித்ததாக உடைய கிழக்கிலங்கை மக்களுக்கு தமது எதிர்காலப் பாதுகாப்பு என்ன என்கின்ற கேள்விகள் எழுந்தது. இதன்காரணமாக தமது பாதுகாப்பு உணர்வினைக் கருத்தில் கொண்டு செயற்படும் பெரும்பான்மை தமிழர்களைக் கொண்ட வடமாகாணத்து அரசியலுடன் இணைந்து கலப்பதே ஒரே வழியென கிழக்கிலங்கை எங்கும் பொதுசன மனநிலையொன்றை தோற்றுவிப்பதில் யாழ்ப்பாணத்து அரசியல்வாதிகள் வெற்றி கண்டனர்.

துரோகங்கள் தொடரும்...

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 comments: on "தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 14"

Anonymous said...

கல்லோயா திட்டத்தை உங்க யாழ்பான குஞ்சிபோடியாரா கொண்டாந்தாரு?

Post a Comment