Tuesday 21 June 2011

தமிழ் மொழி தமிழ் மொழியாகவே இருக்கிறதா? தமிழா நீ பேசுவது தமிழா?

இது என்னுடைய முந்திய இடுகை ஒன்று நேற்று நண்பர் சதிஸின் இடுகை ஒன்றை பார்த்ததுமே இந்த இடுகையை மீண்டும் இடுகையிடவேண்டும் என்ற எண்ணம் உதித்தது.  


பல சிறப்புக்களை கொண்ட தமிழ் மொழி இன்று பல மொழிக் கலப்பினால் பாதிக்கப்பட்டு வருவதாக இன்று பலரும் குற்றம் சுமத்திக்கொண்டு இருக்கின்றனர். தமிழ் மொழியை வளர்ப்பதிலே ஊடகங்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும் ஊடகங்களால் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

தமிழ் மொழியோடு பிற மொழி கலப்பதை தடுப்பதிலும், தமிழ் மொழியை வளர்ப்பதிலும் ஊடகங்களின் பங்கு அளப்பெரியது. தமிழ் ஊடகங்கள் தமிழ் மொழியை வளர்ப்பதனையும் தமது நோக்கங்களிலே ஒன்றாக கடைப்பிடிக்க வேண்டும். இன்று பல ஊடகங்களும் ஊடகவியலாளரும் தமிழ் மொழியை வளர்ப்பதிலே ஆர்வம் காட்டிவரும் நேரம் சில ஊடகங்களிலே தமிழ் பயன்பாட்டைப் பார்க்கின்றபோது எல்லோருமே கவலைப்பட வேண்டிய விடயமாக இருக்கின்றது.

நாகரிக உலகில், நாமும் மாற வேண்டும் என்பதற்காக எமது தமிழ் மொழியினை மாற்றி அமைக்க முடியுமா. இன்று தமிழோடு ஆங்கில சொற்களை பயன்படுத்துவது ஒரு நாகரிகமாக மாறிவிட்டது. ஏன் தமிழ் மொழியில் பேசுவதிலே என்ன இருக்கிறது எமது மொழியை நாமே பயன்படுத்த வெறுக்கிறோம். இதற்கு சொல்லும் குற்றச்சாட்டு உண்மையான தமிழ் சொற்கள் எல்லோருக்கும் தெரியாது என்று சொல்லி விடுவார்கள். நான் வேற்று மொழிகளை குற்றம் சாட்டவில்லை ஆங்கிலம் முக்கிய மொழியாக இருக்கலாம் எமது மொழியை மறப்பதா ஆங்கிலம் பேசவேண்டிய இடங்களில் பேசுவது தப்பு இல்லை. ஆனால் சிலர் பேசுவார்கள் தமிழ் வார்த்தைகள் 25 வீதமே கூட இருக்காது. இவர்கள் பேசுவது ஆங்கிலம் தெரியாத பாமர மக்களாக இருந்தாலும் அவர்களது பேச்சிலே மாற்றம் இருக்காது.

தந்தை பெரியார் அவர்களின் அச்சு எழுத்துக்களில் சிக்கனம் காரணமாக உருவானதுதான் தமிழ் சீர்திருத்த எழுத்துகள். னா, ணா, னை, ணை, லை, ளை போன்ற எழுத்துகள் சீர்திருத்தப்பட்டது. இவற்றை மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் MGR அவர்களால் அரசில் பரிந்துரை செய்யப்பட்டது. இன்று இவைகள் பயன்பாட்டில் இருக்கின்றது. நேற்று என் நண்பர்களிடம் பழைய னா, ணா, னை, ணை, லை, ளை எழுதிக்காட்டுங்கள் என்றேன். அவர்களால் ஞாபகத்திற்கு கொண்டு வரமுடியவில்லை அந்த அளவிற்கு மறக்கடிக்கபட்டுள்ளது.

மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பது உண்மையே. இதனை 100 வீதம் ஊடகங்களினால் சாத்தியப் படுத்த முடியும். பல ஊடகங்கள் இதில் வெற்றியும் கண்டன பல ஊடகவியலாளர்கள் தமிழை வளர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். வெதுப்பகம், தொடருந்து, மகிழுந்து போன்ற பல தமிழ் சொற்களை இப்பொழுது ஊடகங்களில் பாவிப்பதனை பார்க்கும்போது சந்தோசமாக இருக்கின்றது. இதனை மக்கள் மத்தியிலே பிரபல்யப் படுத்தியது ஊடகங்களே. அப்படி இருக்கும் போது ஏனைய சொற்களையும் நாம் பயந்படுத்தும்போது மக்களும் பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள் என்பதே உண்மை.

இன்று பலரது குற்றச் சாட்டாகவும் இருப்பது சில இலத்திரனியல் ஊடகங்களிலே தமிழ் கொலை செய்யப்படுகின்றன என்பதே. உண்மையும் அதுதான் தமிழை வளர்க்க வேண்டியவர்கள். நேயர்களோடு பேசும்போது அதிகமாக ஆங்கில சொற்களை பிரயோகிப்பது ஏன். நான் அதிகம் அவதானித்த விடயம் சாதாரண ஆங்கிலம் தெரியாத மக்களோடும் ஆங்கிலத்தில் பேசுவது. இன்று தொலைபேசி பாவனை அதிகரித்து விட்டதனால் கிராமப்புற மக்கள் இலத்திரனியல் ஊடகங்களுக்கு தொலைபேசி அழைப்பினை எடுப்பது அதிகரித்து விட்டது. ஆனால் அவர்களை புரிந்து கொண்டு தமிழிலே பேசுவதை தவிர்த்து ஆங்கில வார்த்தைகளோடு சில அறிவிப்பாளர்கள் விளையாடுவதுதான் ஏன்.

சிலர் தாங்கள் ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தவில்லை என்றால் மற்றவர்கள்தன்னை கீழ்த்தரமாக நினைப்பார்கள் என்று நினைக்கின்றனர். நவின உலகுக்கு ஊடகங்களும் மாறத்தான் வேண்டும். அதற்காக நாம் தமிழை சாகடிப்பதா. இன்று சில ஊடகங்களிலே சில அறிவிப்பாளர்கள் லகர, ழகர வேறுபாடு தெரியாமலே தமிழை கொலை செய்கின்றனர். இவர்கள் தமிழை வளர்ப்பவர்களா. எத்தனையோ திறமையானவர்கள் இருக்கும்போது ஏன் இவர்கள் உள் வாங்கப்பட்டனர். தமிழை வளர்க்க தமிழ் ஊடகங்கள் முன்வர வேண்டும்.

ஒரு போட்டி ஒரு தொலைக்காட்சியிலே நடந்தது அதிலே நடுவர் போட்டியாளரிடம் சொன்னார் உங்கள் தமிழ் உச்சரிப்பில் "பிலைகள்" இருக்கிறது திருத்துங்கள்என்று இவர் பிழை திருத்துகிறாரா. அல்லது தமிழ் கொலை செய்கிறாரா. அவரே தமிழ் கொலை செய்யும் போது எப்படி மற்றவரை திருத்துவது.

ஊடகங்களால் முடியாதது எதுவும் இல்லை வெதுப்பகம், தொடருந்து, உந்துருளி, மகிழுந்து போன்ற சொற்கள் மக்கள் மத்தியிலே பிரபல்யமாக்கப் பட்டது ஊடகங்களால்தான் ஏனைய சொற்களையும் மக்கள் மத்தியிலே பிரபல்யப்படுத்துவதொடு தமிழ் மொழியினை ஊடங்களால் வளர்க்க முடியும் என்பதே உண்மை.

ஒரு சிலர் செய்கின்ற தவறுக்காக எல்லோரையும் குற்றம் சொல்வது சரியல்ல. தமிழ் கொலை செய்கின்ற ஊடகங்களும் ஊடகவியலாளரும் திருந்த வேண்டும். என்பதோடு நாகரிக மோகத்தில் தமிழ் மொழியோடு வேற்று மொழிகளை கலப்பதனையுமே நான் தவறு என்று சொல்கிறேன்.

வானொலி, தொலைக்காட்ட்சி போன்றவற்றிலே அறிவிப்பாளர்கள் விடுகின்ற மொழி உச்சரிப்பு, வேற்றுமொழிக் கலப்பு தொடர்பாகவே பலரும் பேசி இருந்தனர். இந்த இடத்திலே ஒன்றைக் குறிப்பிட வேண்டும் நானும் ஒரு ஊடகவியலாளன்தான், ஒரு அறிவிப்பாளன். நான் தமிழ் மொழி தவறாக உச்சரிப்பதனையும், ஆங்கில வார்த்தைகள் தேவையற்று அதிகம் பயன் படுத்துவதனையும் முற்றாக வெறுப்பவன். தமிழை தமிழாக பயன் படுத்த நினைப்பவன்

ஒரு சிலர் குறிப்பிட்டிருந்தார்கள் நாமும் நாகரிகத்துக்கு ஏற்றாற்போல் மாற வேண்டுமென்று. நான் மாற வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் எமது தமிழ் பாரம்பரியங்களையும், தமிழ் மொழியின் சிறப்பினையும் நாகரிகமென்ற போர்வையில் சாகடிப்பதா.

நான் வேற்று மொழிகளை முற்றாக புறக்கணிக்க வேண்டுமென்று சொல்லவில்லை. ஆங்கில மொழியினை பயன் படுத்த வேண்டிய இடங்களுக்கு பயன்படுத்தத்தான் வேண்டும். அதற்காக தேவையற்ற விதத்தில் அதிகமாக பயன்படுத்தலாமா. இன்று ஆங்கில மொழியினை தமிழ் மொழியோடு பயன் படுத்துவது அதிகரித்து வருகின்றது. அன்று ஒரு பத்து வீதமாக இருந்தது என்று வைத்துக் கொள்வோம் இன்று இருபது வீதமாக அதிகரித்து விட்டது என்றால் எதிர் காலத்தில் தமிழோடு ஆங்கில மொழி பயன்பாடு அறுபது வீதமாக அதிகரித்து விட்டது என்று வைத்துக் கொள்வோம் அந்த மொழியினை தமிழ் மொழி என்பதா அல்லது வேறு ஒரு மொழி என்பதா? போகிற போக்கில் நடக்காமல் விடலாம் என்று சொல்ல முடியாது. தமிழ் மொழி மறைகின்ற நிலைக்கு தமிழர்களாகிய நாம் பங்காளிகளாக இருக்கலாமா.

சில ஆங்கில சொற்களை நாங்கள் பயன்படுத்தியே ஆகவேண்டும். இருந்தாலும் எமது தமிழ் மொழியிலே பல இனிய சொற்கள் இருக்கின்றன. ஒரு சிலரின் குற்றச் சாட்டு சில தமிழ் சொற்கள் எல்லோருக்கும் தெரியாது அதனால் ஆங்கில சொற்களை பயன்படுத்துகிறோம் என்று. இக் கருத்தினை முற்று முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாது.

இன்று இலங்கையின் ஊடகங்களிலே தொடருந்து, சிற்றுந்து, உலங்குவானூர்தி, துவிச்சக்கர வண்டி, மிதி வண்டி, காலுந்து, வெதுப்பி, குளிர்களி.. இன்னும் பல.. இனிய தமிழ் சொற்கள் பாவிக்கப்படுகின்றன. (வெளிநாட்டை பொறுத்தவரை எப்படி என்பது தெரியவில்லை) இந்த சொற்களை பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை எல்லோரும் இன்று ஏற்றுக் கொள்கின்றனர். இந்த சொற்களின் அறிமுகம் எப்போது வந்தது?. ஆரம்பகாலத்தில் இருந்து ஊடகங்களிலே அடிக்கடி  பயன்படுத்தப்பட்டு வந்ததா என்றால் இல்லை. அதிகமானவர்களுக்கு அன்று இந்த சொற்கள் தமிழிலே இருக்கின்றது என்பதே தெரியாது. என்னையும் சேர்த்து.

ஊடகங்களால் முடியாதது எதுவும் இல்லை. தமிழை வளர்ப்பதிலே பல ஊடகவியலாளர்கள் பாடுபட்டிருக்கின்றார்கள். அதன் பயனாகவே இன்று இந்தச் சொற்கள் மக்களால் பயன்படுத்தப் படுகின்றன.

ஊடகங்களிலே இது போன்ற பாவனையில் இல்லாத சொற்களை அறிமுகம் செய்கின்றபோது காலப்போக்கில் பாவனைக்கு கொண்டு வர முடியும். அதற்காக எல்லாச் சொற்களையும் வேற்று மொழிச் சொற்களையும் தமிழ் படுத்த முடியாது என்பதனையும் ஏற்றுக் கொள்கிறேன். அவற்றை ஒரு பக்கம் வைத்துவிட்டு தேவையற்ற வேற்றுமொழி கலப்பை தவிர்க்க வேண்டும் என்பதே எனது கருத்து.

என் நாம் இன்று வலைப்பதிவுகளிலே இடுகை, அமுக்கவும் போன்ற இனிய சொற்களை பாவிக்கின்றோமே. இன்று இணையமும் கூட ஒரு வகையில் தமிழை வளர்க்கின்றது என்று சொல்லலாம்.

அடுத்து வானொலி, தொலைக்காட்சிகளிலே தமிழ் கொலை செய்யப்படுகின்றன என்ற விடயத்துக்கு வருகின்றேன். நவின உலகத்துக்கு ஏற்றாற்போல் இன்று எல்லாமே மாறி வருகின்றன இதற்கு வானொலி தொலைக்காட்சிகளும் விதிவிலக்கல்ல. கடுமையான போட்டித்தன்மைகளுக்கு மத்தியிலே தாம் நிலைத்திருக்க வேண்டுமானால். காலத்துக்கேற்ற சில மாற்றங்களையும் இன் நிறுவனங்கள் செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது.

இதற்காக இவர்கள் நினைத்த எதனையும் செய்யலாமா இன்று சிலர் தாம் நினைத்தபடி மாறுதல் என்ற பெயரில் தமிழ் கொலை செய்து கொண்டு இருக்கின்றனர். வானொலி, தொலைக்காட்சிகளின் போட்டித்தன்மை காரணமாக நிலைத்திருக்க வேண்டுமானால் சில ஊடக நிறுவனங்கள் மாற்றங்களை செய்யத்தான் வேண்டும். இன்று பல ஊடக நிறுவனங்கள் பேச்சுத்தமிழை பயன்படுத்துகின்றன. பேச்சுத்தமிழில் பேசுகின்றபோது எல்லோருக்கும் இலகுவாக விளங்கிக் கொள்ளமுடியும். இது ஒரு புறமிருக்க இதனை ஒரு சாட்டாக வைத்து வேற்று மொழி கலந்து பேசுவதை சில அறிவிப்பாளர்கள் கடைப்பிடிப்பதுதான் கவலைக்குரிய விடயம்.

சில அறிவிப்பாளர்கள் விடுகின்ற தவறுகளை சொல்வதென்றால் அதற்கென ஒரு வலைப்பதிவு தொடக்கி எழுதிக்கொண்டே போகலாம். அறிவிப்பாளர்கள் எல்லோரும் பிழை விடுவதில்லை, தமிழை கொலை செய்வதில்லை சில அறிவிப்பாளர்கள் இருக்கின்றார்கள் லகர ழகர ளகர தெரியாமல் திண்டாடுகின்றனர். அது மட்டுமல்ல சில தமிழ் சொற்கள் அவர்களின் வாயில் இருந்து வருவதற்கு கஸ்ரப்படுகிறது.

சில அறிவிப்பாளர்கள் இனிய தமிழை மறந்து அளவுக்கு அதிகமாக ஆங்கில வார்த்தைகளை பயன் படுத்துவது என். இவர்களுக்கு தமிழ் தெரியாதா. தமிழ் தெரியவில்லை என்றால் ஏன் தமிழ் அறிவிப்பாளராக வந்தார்கள். ஆங்கில அறிவிப்பாளராக போயிருக்கலாம்தானே. இவர்கள் விடுகின்ற தவறுகளும் ஓட்டு மொத்த அறிவிப்பாளர்களையும் பாதிக்கும் என்பதை இவர்கள் உணர்ந்து திருந்துவதே நல்லது (திருந்துவார்களா?)

தமிழ் மொழியின் சிறப்புக்கள் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். அத்தனை சிறப்பு வாய்ந்தது தமிழ் மொழி. வேற்று மொழிகளை தமிழோடு தேவையற்ற முறையிலே அதிகமாகப் பிரயோகிக்கப்படுகிறது ஏன் என்பதுதான் எனது கேள்வி.

வேற்று மொழி பேசுபவர்கள் எமது தமிழ் மொழியினை தங்கள் மொழியோடு கலந்து பயன் படுத்துகிறார்களா. இல்லையே சில தமிழ் சொற்களை எல்லாராலும் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்கின்றார்கள். அப்படி என்றால் தமிழ் மொழிக்கு சொற் பஞ்சம் இருக்கிறதா?

எமது தமிழ் அறிஞர்கள் எல்லோரும் ஏனைய மொழிகளையும் படிக்கவேண்டும் என்று சொன்னார்களே தவிர தமிழ் மொழியோடு கலந்து பயன் படுத்தும் படி சொல்லி இருக்கின்றார்களா.

இன்று பல சிறப்புக்கள் மிக்க எமது தமிழ் மொழியின் சில சொற்களை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அதற்கு யார் காரணம். நாம்தான் காரணம். நாகரிகமென்ற போர்வையில் வேற்று மொழிகளின்பால் நாம் ஈர்க்கப்பட்டதே முக்கிய காரணம்.

இன்று நாம் தமிழ் இலக்கியங்களை வெறுப்பதற்கு என்ன காரணம் அதிலே பயன்படுத்தப்பட்டிருக்கின்ற சொற்களுக்கு விளக்கம் தெரியாமையே முக்கிய காரணம். நான் கேட்கின்றேன் அன்று தமிழ் அறிஞர்கள் மக்களிடம் பாவனையில் இல்லாத சொற்களை ஏன் பயன்படுத்தவேண்டும். அன்று அந்தச் சொற்கள் பயன் பாட்டில் இருந்ததே காரணம். அன்று இலக்கியங்களிலே வேற்று மொழி கலப்பு இருந்ததா?. இல்லையே.

ஆனாலும் இன்று கிராமப் புறங்களிலே அந்தச் சொற்களை எமது முன்னோர்கள் பயன் படுத்துவதை கானக்கூடியதாக இருக்கின்றது. இன்றைய நாகரிகம்தான் எம்மை மாற்றிவிட்டது.

சில சொற்களுக்கு தமிழ் படுத்த முடியாது என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன். வளர்ச்சி அடைந்து வருகின்ற நாடுகளின் விஞ்ஞான கண்டு பிடிப்பு, அவர்களின் பொருட்களுக்கு எங்களால் தமிழ் சொல்லை தேடிக்கொண்டு இருக்கமுடியாதுதான். ஆனால் காலப்போக்கில் அதற்கும் தமிழ் சொற்களை அறிமுகப் படுத்த முடியுமல்லவா. computer என்பது தமிழ் வார்த்தை இல்லை அது காலப்போக்கில் கணணி அல்லது கணினி என்று நாம் தமிழ் படுத்தவில்லையா.

சில தமிழ் சொற்களுக்கு அகராதிகளைத்தான் தேடி பொருள் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்கிரிஇர்கள். அப்படி என்றால் அன்று இலக்கியங்களை எல்லோரும் படித்தார்கள். அன்று குருகுல முறையிலே ஒரு குருவின் வழிகாட்டலுக்கமைய படித்தவர்களே எமது தமிழ் அறிஞர்கள் பலர்.

அன்று அவர்கள் அகராதியும் கையுமாகவா திரிந்தார்கள். இல்லையே இந்தச் சொற்கள் பாவனையில் இருந்தது என்பதே உண்மை. சரி அவர்கள் அகராதி கொண்டுதான் படித்தார்கள் என்றால் இன்று ஏன் எங்களால் அந்த அகராதிகளை எங்களால் பயன்படுத்த முடியாது.

அன்று எமது தமிழ் மொழிச் சொற்கள் பயன்பாட்டில் இருந்தது என்பது புலனாகின்றது. இதற்கும் காரணம் நாமேதான்.

சரி புத்தகங்கள் தமிழில் இல்லை என்றால் அது யாரில் தவறு இருக்கிறது. தமிழிலே புத்தகங்களை எழுதுவதற்கு தமிழிலே நல்ல பொறியியலாளர்கள் இல்லையா. இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் தமிழ் மொழியை விட்டு விலகி ஆங்கில மொழியின்பால் சென்றதே காரணம்.

எனது கேள்வி இன்று கணணி மென் பொருட்கள் கூட தமிழிலே அதுவும் அற்புதமான தமிழ் சொகளைக்கொண்டு வடிவமைக்கப் படுகின்ற போது தமிழிலே சில துறைகளுக்கு புத்தகங்கள் இல்லை என்பது ஏன். உலகத்துக்கே நல்லா கருத்துக்களை சொல்லக்குகூடிய எத்தனையோ புத்தகங்களுக்கு சொந்தம் கொண்டாடுகிறது தமிழ் மொழி. ஆனால் நாமே இன்று தமிழ் மொழியினை கொலை செய்து கொண்டு இருக்கின்றோம்.


தமிழ் மொழியினை வளர்க்க வேண்டும். தமிழ் மொழி தமிழ் மொழியாக பயன்படுத்த வேண்டும் என்பதே எனது அவா.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

17 comments: on "தமிழ் மொழி தமிழ் மொழியாகவே இருக்கிறதா? தமிழா நீ பேசுவது தமிழா?"

சி.பி.செந்தில்குமார் said...

முதல் தமிழ் முத்தமிழ்

Anonymous said...

சிலர் தாங்கள் ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தவில்லை என்றால் மற்றவர்கள்தன்னை கீழ்த்தரமாக நினைப்பார்கள் என்று நினைக்கின்றனர். நவின உலகுக்கு ஊடகங்களும் மாறத்தான் வேண்டும். அதற்காக நாம் தமிழை சாகடிப்பதா./// உண்மை தான் தமிழை சாகிடிக்கிற உரிமை எமக்கு இல்லை, எமது சந்ததிக்கு விட்டு செல்ல இருப்பது ஒன்றேயொன்று , அது மொழி மட்டும் தான் (( மிக சிறந்த கட்டுரை ....

Admin said...

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

முதல் தமிழ் முத்தமிழ்//

முத்தமிழை செத்த தமிழாக்க நினைக்கின்றான் தமிழன்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//கந்தசாமி. கூறியது...

சிலர் தாங்கள் ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தவில்லை என்றால் மற்றவர்கள்தன்னை கீழ்த்தரமாக நினைப்பார்கள் என்று நினைக்கின்றனர். நவின உலகுக்கு ஊடகங்களும் மாறத்தான் வேண்டும். அதற்காக நாம் தமிழை சாகடிப்பதா./// உண்மை தான் தமிழை சாகிடிக்கிற உரிமை எமக்கு இல்லை, எமது சந்ததிக்கு விட்டு செல்ல இருப்பது ஒன்றேயொன்று , அது மொழி மட்டும் தான் (( மிக சிறந்த கட்டுரை ....//

தமிழை வழர்க்கவேண்டிய நாமே தமிழை சாகடித்துக் கொண்டிருக்கின்றோம் நம் தாய்மொழி தமிழை ஒழுங்காக பேசத்தெரியாத நாம் எதற்காக நாம் தமிழன் என்று சொல்ல வேண்டும்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

ஸ்ரீராம். said...

இதற்கு முன்னரே பின்னூட்டம் போட்டு விட்டேனே சந்ரு....!!

Unknown said...

சரிங்கண்ணே திருத்திக்கறேன்!

Admin said...

//ஸ்ரீராம். கூறியது...

இதற்கு முன்னரே பின்னூட்டம் போட்டு விட்டேனே சந்ரு....!!//

ம்... வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//விக்கியுலகம் கூறியது...

சரிங்கண்ணே திருத்திக்கறேன்!//

அப்படியா? திருந்த வேண்டியவங்க என்ன சொன்னாலும் திருந்துவதாக இல்லையே என்ன செய்வது.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

A.R.ராஜகோபாலன் said...

ஆக்கபூர்வமான பதிவு, அற்புத செய்திகளை தாங்கி பதிந்து கண்டு மனம் மகிழ்கிறேன், வானொலியிலும் , தொலைக்காட்சியிலும் இதுப் போன்ற தவறுகள் களையப்பட்டே ஆகவேண்டும், எல்லாமே விளம்பர நோக்கில் செயல்படுகின்றன , தமிழை பற்றி இவைகளுக்கு கவலை இல்லை , ஆனால் பெரும்பாலான தொலைகாட்சிகள் தமிழை வளர்ப்போம் என்று சொல்லி பணம் சம்பாதித்த தலைவர்களால் நடத்தப்படுவதுதான் கொடுமையிலும் கொடுமை

Angel said...

என் வலைப்பூவுக்கு வருகை தந்ததற்கு நன்றி .
ஒரு சின்ன உதவி .,என் ப்லோகிற்கு வரும் அனைவரிடமும் நான் கேட்டது தான் .நான் எழுதும் தமிழில் ,குறை இருப்பின் தயவாய் சுட்டி காட்டவும்
நான் திருத்தி கொள்ள உதவியாக இருக்கும் .

Pavi said...

இப்போது எல்லோரும் தங்கிலீஷ் தான் பேசுகிறார்கள் .
சில சுத்தமான தமிழ் வார்த்தைகளை நாம் பிரயோகிக்கும் போது பலருக்கு அது புரிகிறதில்லை . அதனால் எல்லோரும் உண்மையான தமிழ் வார்த்தைகளை மறந்தே விடுகின்றனர் . அறிவிப்பாளர்கள் சிலர் பல உச்சரிப்புகளை வடிவாக உச்சரிப்பதில்லை . நாம் தமிழர் . தமிழ் நமது தாய்மொழி என்பதை நாம் மறக்க கூடாது .
அருமையான பதிவு சந்ரு .

JAWID RAIZ (ஜாவிட் ரயிஸ்) said...

ஹ்ம்ம்ம்... இந்த பதிவில் பின்னூட்டங்களும் தமிழில் மட்டுமே இருப்பது மகிழ்ச்சி. நல்ல பதிவு சந்ரு

Admin said...

//angelin கூறியது...

என் வலைப்பூவுக்கு வருகை தந்ததற்கு நன்றி .
ஒரு சின்ன உதவி .,என் ப்லோகிற்கு வரும் அனைவரிடமும் நான் கேட்டது தான் .நான் எழுதும் தமிழில் ,குறை இருப்பின் தயவாய் சுட்டி காட்டவும்
நான் திருத்தி கொள்ள உதவியாக இருக்கும் .//

உங்கள் பதிவிலே கருத்துரையிட்டிருக்கின்றேன். தொடர்ந்து எழுதுங்கள்

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//Pavi கூறியது...

இப்போது எல்லோரும் தங்கிலீஷ் தான் பேசுகிறார்கள் .
சில சுத்தமான தமிழ் வார்த்தைகளை நாம் பிரயோகிக்கும் போது பலருக்கு அது புரிகிறதில்லை . அதனால் எல்லோரும் உண்மையான தமிழ் வார்த்தைகளை மறந்தே விடுகின்றனர் . அறிவிப்பாளர்கள் சிலர் பல உச்சரிப்புகளை வடிவாக உச்சரிப்பதில்லை . நாம் தமிழர் . தமிழ் நமது தாய்மொழி என்பதை நாம் மறக்க கூடாது .
அருமையான பதிவு சந்ரு .//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//Pavi கூறியது...

இப்போது எல்லோரும் தங்கிலீஷ் தான் பேசுகிறார்கள் .
சில சுத்தமான தமிழ் வார்த்தைகளை நாம் பிரயோகிக்கும் போது பலருக்கு அது புரிகிறதில்லை . அதனால் எல்லோரும் உண்மையான தமிழ் வார்த்தைகளை மறந்தே விடுகின்றனர் . அறிவிப்பாளர்கள் சிலர் பல உச்சரிப்புகளை வடிவாக உச்சரிப்பதில்லை . நாம் தமிழர் . தமிழ் நமது தாய்மொழி என்பதை நாம் மறக்க கூடாது .
அருமையான பதிவு சந்ரு .//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

A.R.ராஜகோபாலன் கூறியது...

ஆக்கபூர்வமான பதிவு, அற்புத செய்திகளை தாங்கி பதிந்து கண்டு மனம் மகிழ்கிறேன், வானொலியிலும் , தொலைக்காட்சியிலும் இதுப் போன்ற தவறுகள் களையப்பட்டே ஆகவேண்டும், எல்லாமே விளம்பர நோக்கில் செயல்படுகின்றன , தமிழை பற்றி இவைகளுக்கு கவலை இல்லை , ஆனால் பெரும்பாலான தொலைகாட்சிகள் தமிழை வளர்ப்போம் என்று சொல்லி பணம் சம்பாதித்த தலைவர்களால் நடத்தப்படுவதுதான் கொடுமையிலும் கொடுமை//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

நிரூபன் said...

தமிழின் இன்றைய நிலையினை விளக்கும் காத்திரமான ஒரு கட்டுரையினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

நாகரிகம் எனும் முகமூடியால் போர்த்தப்பட்டு பிற மொழிகளைத் தமிழோடு,
தெரிந்தே கலந்து பேசும் நபர்களால் தான் எம் தமிழ் தாழ்ந்து போகிறது,

Post a Comment