Thursday, 13 May 2010

படுவான்கரை மக்களுக்கு விடிவு விரைவில் கிடைக்கட்டும்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலே படுவான்கரை, எழுவான்கரை என்று சொல்வார்கள்.  சூரியன் உதிக்கின்ற திசையினை எழுவான்கரை என்றும், சூரியன் மறைகின்ற பகுதியை படுவான்கரை என்றும் சொல்வார்கள். எழுவான்கரை, படுவான்கரை என்பதனை மட்டக்களப்பு வாவியை வைத்துப் பிரித்துக் கொள்வார்கள்.

படுவான்கரைப் பிரதேசம் அழகிய வயல்வெளிகளையும், சிறிய மலைகள், காடுகள் என்று பல இயற்கை அம்சங்களைக் கொண்டுள்ளது. ஆனாலும் அப்பிரதேசங்களிலே இருக்கின்ற மக்கள் பல பிரட்சினைகளை எதிர் நோக்கி வருகின்றனர். பல இடங்களிலே அடிப்படை வசதிகளற்ற மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

உள் நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தினால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசமும் இதுவாகும். கடந்த காலங்களிலே இப் பிரதேசங்கள் புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் அப்பிரதேசத்தின் அத்தனை கிராமங்களுக்கும் செல்ல வேண்டிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அவர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

பல வீதிகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன தப்போது பல வீதிகள் விஷ்த்தரிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன.   அதிகமான பகுதிகளிலே மின்சார வசதி இல்லை. காட்டுப் பிரதேசமாக இருப்பதனால். யானையின் அட்டகாசம், பாம்புகளின் தொல்லை என்று பல பிரச்சினைகளை மின்சார வசதி இன்மையால் எதிர் நோக்கி வருகின்றனர்.

மின்சார வசதி இன்மையால் தொலைக்காட்சி வசதிகளோ, வானொலி கேட்கின்ற வசதிகளோ இல்லை. பின்தங்கிய பிரதேசங்களாகையால் பத்திரிகைகள் வாசிக்கின்ற பழக்கங்களும் பல மக்களிடம் இல்லை. உலக நடப்பு விவகாரங்களையும்  இந்த மக்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர். அத்தோடு படிக்கின்ற மாணவர்களும் மின்சாரமின்றி பல சிக்கல்களை எதிர் நோக்குகின்றனர்.

போக்குவரத்துப் பிரச்சினையே மக்களின் மற்றுமோர் பிரச்சினையாகும். வாகன போக்குவரத்து வசதிகள் மட்டுப் படுத்தப் பட்ட அளவில் குறிப்பிட்ட சில பிரதேசங்களிலேயே  இருப்பதனால் நீண்ட தூரம்  என்றாலும்  மக்கள் நடந்து செல்லவேண்டி இருக்கின்றது.

அத்தோடு அப்பிரதேசங்களிலே சுகாதார வசதிகளோ, வைத்தியசாலைகளோ இல்லை என்பதனால் வாகன போக்குவரத்து வசதி இல்லாததனால் பல மரணங்களை எதிர் கொள்ளவேண்டி இருக்கின்றனர். இலகுவாக காப்பாற்றப் படக் கூடிய நோயாளர்கள் நீண்ட  தூர வைத்திய சாலைகளுக்கு  மாட்டு வண்டிகளில் கொண்டு சென்று மரணம் சம்பவித்த பல நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கின்றன.

இவ்வாறு பல்வேறுபட்ட இன்னல்களை படுவான்கரை மக்கள் எதிர் நோக்கி வருகின்றனர்.

இன்று பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள் அப்பிரதேசங்களிலே கிழக்கு மாகாண சபை மூலம் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இருந்தாலும் அப்பிரதேசத்துக்குரிய அபிவிருத்தித் திட்டங்களையும், அம்மக்களின் நலனில் அக்கறையினையும் துரிதப் படுத்தவேண்டிய பொறுப்பு கிழக்கு மாகாண முதலமைச்சரையும், அப்பிரதேச மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையுமே சாரும். 

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 comments: on "படுவான்கரை மக்களுக்கு விடிவு விரைவில் கிடைக்கட்டும்"

ஸ்ரீராம். said...

இனிய மாற்றம்...

Post a Comment