Thursday 27 October 2011

தமிழீழம் எனும் அடைய முடியாத இலக்கு நோக்கிய பயணத்தில் சிக்குண்ட கிழக்கு மாகாணம் பகுதி - 1


கிழக்கு மாகாணம் பல வரலாற்றுப் பின்னணியினைக் கொண்ட சகல வழங்களும் நிறைந்த ஒரு அழகிய பிரதேசம். தொன்று தொட்டு மூவின மக்களும் வாழ்ந்து வரும் இப்பிரதேசம் கடந்த முப்பது வருடமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கின்றது.

நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக கிழக்கு மாகாணமே வெகுவாகப் பாதிக்கப்பட்டது என்பதனை எவராலும் மறுக்க முடியாது. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பல விதங்களிலும் கிழக்குப் பிரதேசம் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அதன் பிரதிபலிப்புக்கள் இன்று கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முற்படும்போது பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலே பல களமாடி வெற்றிச் சமர்களைப் படைத்தவர்கள் கிழக்கு மாகாணப் போராளிகளே. அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு போராளிகளே. தமிழீழம் கிடைக்கும் என்ற கனவோடு வீர மரணமடைந்தவர்களில் அதிகமானவர்கள் கிழக்குப் போராளிகளே.

தமிழீழம் கிடைக்கும் என்ற கனவோடு உயிர் நீத்த அந்தத் போராளிகளின் குடும்பங்கள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றனர். தமிழீழம் தமிழீழம் என்று இளைஞர், யுவதிகளை உசுப்பேற்றி வீர வசனம் பேசியவர்கள் அந்தக் குடும்பங்களுக்கு என்ன செய்தனர்.

யுத்தத்தில் பங்குகொண்ட பல கிழக்குப் போராளிகள் தமது அவயவங்களை இழந்து இன்னொருவரிடம் கையேந்தும் நிலையில் இருக்கின்றனர். எத்தனையோ இளம் சிறார்கள் தாய் தந்தையரை சொந்தங்களை இழந்து ஒரு நேர உணவிற்குகூட உணவின்றி அனாதைகளாக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்திலே பல சிறுவர்கள் பாடசாலை செல்ல வேண்டிய வயதில் உடலை வருத்தி கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களின் எதிர்காலம் என்ன என்பதனை நாம் சிந்திக்க வேண்டும். இவ்வாறு சென்றால் எமது மக்களின் கல்விநிலை எதிர்காலம் பற்றி எல்லாம் நாம் சிந்திக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு மாவட்டத்தில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் இருக்கின்றனர். இது எதனால ஏற்பட்டது கடந்தகால தமிழ் தலைவர்கள் அடைய முடியாத இலக்கு நோக்கிய தமது பயணத்தில் மக்களையும் இணைத்துக் கொள்ள முற்பட்டதன் விழைவுதான் இந்த அவல நிலை.

இன்று துரிதமாக அபிவிருத்தி கண்டுவரும் கிழக்குப் பிரதேசத்தின் அபிவிருத்தியிலே விதவைகள் பிரச்சினை பல சாவால்கள் நிறைந்த ஒன்றாகக் காணப்படுகின்றது. இந்த விதவைகள் தமது குடும்ப சுமையை பல கஸ்ரங்களின் மத்தியில் சுமந்து வருகின்றனர். இவர்கள் சந்திக்கின்ற அவலங்கள் எண்ணிலடங்காதவை. சமூக ரீதியான பிரச்சினைகள் ஒரு புறமிருக்க பொருளாதாரப் பிரச்சினைகள் பல பிரச்சினைகளை தோற்றுவித்திருக்கின்றன.

இந்த விதவைகளில் அதிகமானவர்கள் இளம் பெண்கள் என்பது வருந்தத்தக்க விடயம். யுத்தம் இடம் பெற்றுக் கொண்டிருந்த வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கிழக்கிலே கிராமங்கள் தோறும் வீட்டுக்கொரு போராளி எனும் திட்டத்தின் கீழ் பல இளைஞர், யுவதிகள் வலுக் கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

வீட்டுக்கொரு போராளி திட்டத்தின் கீழ் பல இளைஞர், யுவதிகள் தாம் படித்துக் கொண்டிருந்த வேளையில் புலிகள் இயக்கத்தில் கட்டாயத்தின்  பேரில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பல்கலைக்கழக மாணவர்களும் கட்டாயத்தின் பேரில் பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் கல்வியை அன்று இழந்தனர். இன்று அவர்களில் பலர் தமது அவயவங்களை இழந்த நிலையில் இருக்கின்றனர். 

அன்று புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பின் வடுக்கள் இன்று பல சமூகப் பிரச்சினைகளைத்  தோற்றுவித்திருக்கின்றது. புலிகளின் கட்டாய ஆட்ரே்ப்பின் காரணமாக மிகவும் சிறிய வயதில் தமது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர். அதன் பிரதிபலிப்பே இன்று மட்டக்களப்பில் இளம் விதவைகள் அதிகரித்திருப்பதற்குக் காரணமாகும். இவ்வாறு யுத்தம் விட்டுச் சென்ற வடுக்களை அடுக்கிக்கொண்டே போகலாம். 

யுத்தம் முடிவிற்கு வந்திருக்கின்றது. கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டு கிழக்கு மாகாணம் துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாணசபை உருவாக்கத்தின் பின்னர் கிழக்கு மாகாணத்திலே பல சவால்களுக்கும் மத்தியில் சகல துறைகளும் அபிவிரத்தி கண்டு வருவதனை எவராலும் மறுக்க முடியாது. கிழக்கு மாகாணம் அபிவிருத்தி கண்டு வருவதனை சகித்துக் கொள்ள முடியாத பலர் கிழக்கு மாகாண மக்களை குழப்பி கிழக்கின் அபிவிருத்தியை தடைசெய்ய எத்தணித்துக் கொண்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

கிழக்கு மாகாண மக்கள் அன்று தொட்டு இன்றுவரை ஏமாற்றப்பட்டு வந்த சரித்திரங்களை நாம் மறந்துவிடக்கூடாது. இனிமேலும் எமது சமூகம் ஏமாறும் மக்களாக இருக்க முடியாது. வெறுமனே நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களையும், தமிழ் அரசியல்வாதிகளின் இருப்புக்கான உணர்ச்சி வார்த்தைகளின் உண்மைத் தன்மையினையும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழீழம் எனும் அடைய முடியாத இலக்கு நோக்கிய பயணத்தில் நாம் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக பயணம் செய்திருக்கின்றோம் தமிழீழம் நோக்கிய அறுபது ஆண்டுகளுக்கு மேலான பயணத்தில் எமக்கு கிடைத்த பலன் என்ன? பல இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களை இழந்திருக்கின்றோம். எமது உடமைகளை இழந்திருக்கின்றோம், எமது தேசம் சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கின்றது.

தமிழீழம், தமிழனுக்கென்றொரு நாடு கிடைத்தால் ஒவ்வொரு தமிழனும் சந்தோசப்படுவான். சந்தோசப்படவில்லை என்றால் அவன் உண்மையான தமிழனாக இருக்க முடியாது. ஆனாலும் இலங்கையைப் பொறுத்தவரை தமிழீழம் சாத்தியமா என்பதனைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அன்று உணர்ச்சி வார்த்தைகளைக்கூறி எமது மக்களை உசுப்பேற்றிய எமது தலைவர்கள் தமிழீழம் சாத்தியமா என்பதனை சிந்தித்திருந்தால் இத்தனை அழிவுகளையும் அவலங்களையும் எமது தமிழ் சமூகம் சிந்தித்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

இன்றைய நிலையில் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சாத்தியமான தீர்வுத் திட்டங்களை நோக்கிய பயணத்தில் தமிழ் தலைவர்கள் தமது பயணத்தை நகர்த்தி மக்களை வழிநடத்திச் செல்ல வேண்டும் அதனை விடுத்து தமது இருப்பினை தக்க வைத்துக் கொள்வதற்காக உணர்ச்சி வார்த்தைகளை மக்கள் மத்தியில் வதைப்பதனை விடுத்து மக்கள் நலனில் அக்கறையுடன் சாத்தியமான தீர்வுத் திட்டங்கள் நோக்கி பயணிக்க வேண்டும்.

இதுவரை தமிழ் மக்கள் சந்தித்த அவலங்களும் அழிவுகளும் போதாதென்று சில சக்திகள் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களின் அவலங்களில் குளிர் காய நினைக்கும் சில சக்திகளும் மீண்டும் தமிழர்களை உசுப்பேற்றி அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்ல நினைக்கின்றனர். 

சிறிய, சிறிய பிரச்சினைகளை எல்லாம் பூதாகரமான பிரச்சினைகளாக்கி உண்ணாவிரதம் , ஆர்ப்பாட்டம், கடையடைப்பு என்று தமிழர்களை உசுப்பேற்றி மீண்டும் தமிழர்களை அழிக்க நினைக்கின்றனர். தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருந்தால்தான் அப் பிரச்சினைகளைச் சொல்லிச் சொல்லியே அரசியல் நடாத்த நினைக்கும் தமிழ் தலைமைகள் மக்கள் நலனைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு இணப்பு தொடர்பாக பேசி வருகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு இணைப்பின் சாத்தியங்கள் பற்றி ஆராய வேண்டும். வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலே பல பிரச்சினைகள் இருப்பதனையும் வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமான விடயமல்ல என்பதனையும் உணர்ந்துகொள்ள வேண்டும். 

வடக்கு, கிழக்கு இணைப்பினால் தமிழீழம் கிடைத்துவிடுமா? வடக்கு, கிழக்கு பிரிந்து இருப்பதனால் என்ன? இன்று கிழக்கு பிரிந்து இருப்பதனால்தான் மாகாணசபை முறைமையினால் யுத்தத்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட கிழக்கு பிரதேசம் துரித வழர்ச்சி கண்டு வருகின்றது. மாகாணசபை முறைமை மூலம்தான் அழிவடைந்த எமது பிரதேசத்தை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன அவர்களின் கொள்கைகள்தான் என்ன? தமிழ் மக்களுக்காக என்ன தீர்வுத் திட்டத்தினை முன் வைக்கின்றனர். எதிலும் அவர்கள் தெளிவில்லை, வெளிப்படையில்லை அவர்களிடம் இன்று ஒரு கொள்கை நாளை ஒரு கொள்ளை. தமிழீழம், தமிழீழ் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்றும் அரசுக்கு எதிராக கோசமிட்டு வந்தவர்கள் இன்று அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பேச்சுவார்த்தைகளில் என்ன நடக்கிறது என்ற வெளிப்பாடுகூட இல்லை. இவர்கள் தங்கள் கொள்கைகளை மாற்றிவிட்டனரா? அப்படியானால் அவர்களின் கொள்கைகள் என்ன? 

மட்டக்களப்பு மாவட்டம் பல்வேறு விதமாக தொடர்ந்தும் தமிழ் தலைமைகளினால் ஏமாற்றப்பட்டு வருகின்றது. இப்போது அரசுடனோ அல்லது வேறு சாராருடனோ இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தைகள் சந்திப்புக்கள், நிகழ்வுகளில் மட்டக்களப்பில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடம் கொடுக்கப்படுவதில்லை. 

இந்த இடத்திலே கிழக்கு மாகாண மக்கள் வடக்குத் தலைமைகளினால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். கிழக்கு மக்களுக்காக தனியான ஒரு கட்சி வேண்டும் என்று தமிழ் மக்கள் விடுதலைப்  புலிகள் கட்சியின் தலைவராகவும் கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராகவும் இருக்கின்ற பிள்ளையான் (சிவநேசதுரை சந்திரகாந்தன்) அவர்களினதும் அவர்களது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினதும் கொள்கைகள் நிலைப்பாடுகள், கிழக்கு மாகாண சபையை சி.சந்திரகாந்தன் பொறுப்பேற்றதன் பின்னரான செயற்பாடுகள் தொடர்பாகவும் நாம் ஆராயவேண்டி இருக்கின்றது.

பிள்ளையான் அரசாங்கத்தோடு சேர்ந்து அரசாங்கத்தின் அடிவருடியாக இருக்கின்றான் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட வடக்கு தலைமைகளும் தமிழீழ ஆதரவாளர்களும், ஊடகங்களும் குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால் அன்றுதொட்டு இன்றுவரை வடக்கைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் அரசுடன் அங்கம் வகித்து அமைச்சுப் பொறுப்புக்களை பெற்று வடக்கிலே தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்தனர் செய்து வருகின்றனர்.

வடக்கு அரசியல்வாதிகள் அரசுடன் சேர்ந்து தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதை ஏற்றுக் கொள்கின்ற இவர்கள் பிள்ளையான் அரசுடன் சேர்ந்துவிட்டார்  என்பதனை ஏன் ஏற்றுக் கொள்ள முடியாது. கிழக்கு மாகாணசபை மூலம் கிழக்கு அபிவிருத்தி செய்யப்படுகின்றதே என்ன பொறாமையா? அல்லது காலம் காலமாக கிழக்கிலே தலைமைத்துவம் இல்லாமல் இருந்தது பிள்ளையான் கிழக்கின் கட்சி ஒன்றின் தலைவனாகிவிட்டான் வடக்கு தலைமைகளினால் கிழக்கு மக்களை ஏமாற்ற முடியாமல் போய்விடும் என்ற பயமா?

கருணாவும், பிள்ளையானும் புலிகளைக் காட்டிக் கொடுத்துவிட்டனர் என்று சொல்கின்றனர். காட்டிக் கொடுப்பவன்தான் மட்டக்களப்பான் என்று சொல்கின்றார்கள் முதலில் புலிகளைக் காட்டிக் கொடுத்தவர்கள் யார் ? நிட்சயமாக மட்டக்களப்பான் அல்ல. 

தொடரும்...



Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

7 comments: on "தமிழீழம் எனும் அடைய முடியாத இலக்கு நோக்கிய பயணத்தில் சிக்குண்ட கிழக்கு மாகாணம் பகுதி - 1"

நிவாஸ் said...

நீங்கள் சந்துருவா இல்ல சத்துருவா?

உங்களைப் போன்றவர்கள் இருக்கும்வரை தமிழ் ஈழம் மட்டுமல்ல, தமிழினம் என்பதே இல்லாமல்தான் போகும். நல்ல பதிவு, பிரிவினையின் உச்சத்தை தொடும் பதிவு. இப்படி இருங்கள் வானத்திலிருந்து வந்துவிடும் தமிழ் ஈழம்

Admin said...

//நிவாஸ் கூறியது...
நீங்கள் சந்துருவா இல்ல சத்துருவா?

உங்களைப் போன்றவர்கள் இருக்கும்வரை தமிழ் ஈழம் மட்டுமல்ல, தமிழினம் என்பதே இல்லாமல்தான் போகும். நல்ல பதிவு, பிரிவினையின் உச்சத்தை தொடும் பதிவு. இப்படி இருங்கள் வானத்திலிருந்து வந்துவிடும் தமிழ் ஈழம்//

உண்மைகளைச் சொல்லப்போனால் எவரும் ஏற்பதில்லை. ஊடகங்களும் அப்படித்தான் உண்மைகளை மூடி மறைக்கின்றன.

நான் குறிப்பிட்டவற்றில் எங்கே தவறிருக்கின்றது என்பதனை சுட்டிக் காட்டுங்கள் அடுத்தடுத்து வரும் தொடர்களை வாசியுங்கள் உண்மை நிலைமை புரியும்.எந்த இடத்தில் நான் பொய் சொல்லி இருக்கின்றேன் என்பதனைச் சுட்டிக் காட்டுங்கள்.

தமிழீழம் என்பது அடைய முடியாத இலக்கு இல்லையா? அந்த அடைய முடியாத இலக்கினால் நாம் பல உயிர்களையும் உடமைகளையும் அழக்கவில்லையா? கிழக்கிலே கட்டாய ஆட்சேர்ப்பின் மூலம் இளைஞர் யுவதிகள் பலர் தமது வாழ்க்கையை தொலைக்கவில்லையா? நான் சொன்ன விடயங்களில் எங்கே பொய் இருக்கிறது, தவறிருக்கிறது. உண்மை சொல்ல வருபவர்களை பிரதேசவாதம் என்று எவரும் அடக்கி ஆழ நினைக்கவேண்டாம் உண்மைகள் உறங்குவதில்லை.

நிவாஸ் said...

கர்ணா பிரிவதற்கு முன்னால் இது உங்களுக்கு தெரியாதா?

கிழக்கு பிராந்திய தலைவராய் இருந்தவர் அவர்தானே?

கிழக்கு பிராந்திய புலிகள், புலிகளுடன் சண்டை செய்தபோது இது நடக்கவில்லையா? இல்லை அவர்கள் அப்போது போராளிகளாக இருக்க வில்லையா? அதில் இருந்த பல்லாயிரம் புலிகள் ஆயுதங்களை போட்டுவிட்டு கர்ணாவின் பின் சென்று விடவில்லையா? இதற்க்கெல்லாம் காரணம் கிழக்கு பிராந்தியத்தை பிரபாகரன் சரியாக கவனிப்பதில்லை என்பது மட்டுமே என்று கருணா சொன்னரே அது ஏன்?

இப்படி பட்ட பிரச்சனைகளாலும், எண்ணோட்டத்தினாலும் நாம் இழந்து புலிகளை மட்டுமல்ல, ஈழம் என்னும் கனவை மட்டும் அல்ல இலச்ச கணக்கான அப்பாவி மக்களை, அவர்களை விட்டுவிட்டு உயிரையும் பற்றி கவலைபடாத போராளிக் குடும்பங்களைப் பற்றி மட்டும் யோசிக்கிறீர்கள்?

அனைவரும் ஒன்றுதானே, இன்று இத்தனை இழப்பிற்கு காரணம் இந்த பிரிவினைவாதம் தானே! இன்னும் ஏன் அதையே கட்டிக் கொண்டு அழுகிறோம் நாம் என்றுதான் எனக்கு தெரியவில்லை? தமிழ்நாட்டு மக்கள்தான் சாதியில் புரண்டுகிடக்கிறார்கள் ஆனால் எம் ஈழமக்கள் ஒற்றுமையுடன் போரிட்டு கதிகலங்கச் செய்து தனி ஈழம் அமைக்க போகிறார்கள் என்று இருந்த ஒட்டுமத்த தமிழனின் கனவும் காணமல் போனது இந்த பிரிவினையால் தானே?

இதனால் பலி கொடுத்தது போதாதா? இன்னும் எத்தனை மக்களை பலியிட இந்த பிரிவினை வாதத்தை கடைபிடிப்போம் நாம்

கடைசி இரண்டு தமிழன் இருக்கும் வரை என்கிறீர்களா?

மிக்க மகிழ்ச்சி

Robin said...

//உண்மைகளைச் சொல்லப்போனால் எவரும் ஏற்பதில்லை//

கசக்கும் உண்மை வேண்டாம்; இனிக்கும் பொய்யே போதும் :)

Anonymous said...

anaththum unmai pakuthi 2 viraivil varaddum.

Anonymous said...

நிவாஸ் தமிழ்நாட்டில் இருந்து வந்திட்டார். அவருக்கு என்ன பிரச்சனை அப்படி தனிநாட்டில் ஆசைபட்டால் இந்தியாவில் போர் நடத்தி தனிநாடு எடுக்க வேண்டியது தானே இலங்கை தமிழனை நிம்மதியாக வாழ விடுங்கோ

நிவாஸ் said...

யார் உங்களை வாழவேண்டாம் என்று சொன்னார்கள்? தமிழ்நாட்டு தமிழர்களா? என்னகொடுமை இது?

நாங்கள்தான் வந்து யாழ்ப்பான கலவரம் செய்தோம், நாங்கள்தான் அதிகாரப் பகிர்வு கேட்டு உண்ணாவிரதம் இருந்தவர்களை கொன்றோம், நாங்கள்தான் கருப்பு ஜூலையை நடத்தி முடித்தோம், இன்னும் எவ்வளவோ சொல்லலாம்
அனைத்தையும் நாங்கள்தானே செய்தோம்

மோப்பது வருடம் உங்களை அடிமைத் தனத்திலிருந்த காத்துநின்ற புலிகளை பற்றி பேச எப்படி முடிகிறது உங்களால் அவர்கள் ஒன்றும் வானத்திலிருந்து குதிக்கவில்லை உங்களை காப்பாற்ற

உங்களைவிட பல்லாயிரம் மடங்கு வலிகளை உணர்ந்ததால்த்தான் ஆயுதம் எடுத்தார்கள் அவர்களில் எத்தனை பேருக்கு உங்களைப் போல வாழவேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும்

என்னதான் கசப்புக்கள் இருந்தாலும் சில தவறுகள் நடந்திருந்தாலும் ஒட்டுமொத்தமாக அவர்களின் தியாகத்தை அசிங்கப் படுத்துவதுபோல் வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுவது என்பது என்னமாதிரியான செயல் என்று புரிந்து கொள்ளுங்கள்

எங்கள் மனதில் இருக்கும் வலியில் ஒரு பங்குகூட அங்கேயே இருந்து அனுபவித்த உங்களைப் போன்றவர்களுக்கு இல்லையே என்று நினைக்கும்போது இன்னும் வலிக்கிறது

யார் என்ன சொன்னாலும் சரி ஒரு ஈழத் தமிழன் எங்களை நோக்கி கையேந்தினாலும் எங்களால் இயன்றதை செய்வோம்

எம்ஜியார், முத்துக்குமரன், செங்கொடி இவர்கள் ஆத்மா உங்களைப் போன்றவர்களை மன்னிக்கட்டும்

என்ன சொன்னீர்கள் தனிநாடு வேண்டும் என்றால் இந்தியவுடன் போரிட வேண்டுமா? ஏன் முடியாதா இல்லை நடக்காத?

நிச்சயம் நடக்கும், எதற்காக நடக்குமோ இல்லையோ இந்திய துரோகத்தால் கொன்று குவிக்கப்பட்ட எம் ஈழ மக்களுக்கவே நடக்கும், தமிழ்நாட்டில் ஒரு பிரபாகரன் உருவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை

தமிழற்க்காக ஒரு தனிநாடு அமைந்ததே தீரும், அது ஈழமாகவும் இருக்கலாம், தமிழ்னடகவும் இருக்கலாம்

இவை ஒரு இரவுக்குள் நடக்கும் காரியமல்ல என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்

Post a Comment