Saturday 28 January 2012

கூட்டமைப்புக்கு தகுந்த பாடம் புகட்டுவோம் மாற்றத்தை நோக்கிய மக்கள் அமைப்பு

கிழக்கிலங்கை மாற்றத்தை நோக்கிய மக்கள் அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கின்றது அதனை அப்படியே தருகிறேன்.

                                                                  மாற்றத்தை நோக்கிய இளைஞர் அமைப்பு
                                                                 கிழக்கிலங்கை
                                                                 28.01.2012

எமது கிழக்கு மாகாண மக்கள் அன்றுதொட்டு இன்றுவரை அரசியல்தலைவர்களினால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். கிழக்கு மாகாண மக்கள் தொடர்ந்தும் ஏமாறும் சமூகமாக இருக்க முடியாது. கடந்த காலங்களில்தான் எமது மக்கள் ஏமாற்றப்பட்டு வந்தார்கள் தொடர்ந்தும் எமது மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஏமாற்ற நினைத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் போன்றவர்கள் கிழக்கு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கு அண்மையில் நடைபெற்ற பல விடயங்களைச் சுட்டிக்காட்ட மூடியும். அதிலும் தற்போது பரவலாகப் பேசப்படுகின்ற விடயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் எழுதிய கடிதமாகும். இக் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விடயம் என்ன? அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின்போது வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்ந்த பொலிஸ் காணி அதிகாரங்கள் பேசப்படுகின்றபோது அதற்கு தான் ஆதரவு வழங்குவதாகவும் இவ்விடயங்கள் தொடர்பில் கூட்டமைப்புடன் தான் மனந்திறந்து பேசத்தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கின்றார்.

அத்துடன் 15.01.2012 க்குள் தகுந்த பதிலை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் முதலமைச்சருக்கு எந்த விதமான பதிலும் அனுப்பப்படவில்லை. மாறாக கிழக்கு மாகாணத்தில் இல்லாத அமைப்புக்களின் பெயரில் போலி அறிக்கைகளை தமிழ்வின் இணையத்தளம் வெளியிட்டு வருகின்றது. பதில் சொல்ல வேண்டிய சம்பந்தன் அவர்கள் பதில் சொல்லாமல் போலி அமைப்புக்களின் பெயரில் வெளியிடப்படும் அறிக்கைகள் கிழக்கு மாகாண முதலமைச்சரையும் கிழக்கு மக்களையும் அவமதிக்கும் செயலாகும்.

கிழக்கு மாகாண மக்கள்மீது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கோ அல்லது சம்பந்தனுக்கோ அக்கறை இருக்குமாக இருந்திருந்தால் போலியான அமைப்புக்களின் பெயரில் அறிக்கைகளை வெளியிடுவதனை தவிர்த்து முதலமைச்சருக்கு பதில் கடிதத்தினை அனுப்பி இருக்க முடியும். முதலமைச்சர் அவர்கள் முதலமைச்சர் பதவியினை பொறுப்பேற்ற நாள் முதல் மாகாணசபைக்கு பொலிஸ் காணி அதிகாரங்கள் வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றார். கூட்டமைப்பினர் தமிழீழமே இறுதி மூச்சு என்றிருந்தவர்கள் முப்பது வருடமாக இடம்பெற்ற யுத்தத்தில்; பல உயிரிழப்புக்களின் பின்னர் முதலமைச்சர் எதைக் கேட்கின்றாரோ அதனை பெறத்தயாராக இருக்கின்றனர்.

முதலமைச்சர் அவர்கள் அனுப்பிய கடிதத்தினை கூட்டமைப்பினர் அவமதித்த செயலானது கிழக்கு மக்களை அவமதித்தமைக்கு சமமானது. கிழக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட கிழக்கை பிரதிநிதிப் படுத்துகின்ற ஒரு முதலமைச்சரின் கடிதத்தினை அவமதித்தமையை கிழக்கு மக்கள் சார்பாக வண்மையாகக் கண்டிக்கின்றோம். கூட்டமைப்பினர் முதலமைச்சர் அவர்களை அவமதிப்பது இது முதல் தடவையல்ல முன்னர் ஒரு தடவை மாகாணசபை என்று ஒன்று இல்லை. முதலமைச்சரும் இல்லை என்று கிழக்கு மக்களையும் கிழக்கு மாகாண முதலமைச்சரையும் அவமதித்தார்கள். இன்று மாகாணசபை அதிகாரங்கள் தொடர்பில் பேசுகின்றனர்.

கிழக்கு மாகாணம் துரிதமாக அபிவிருத்தி அடைந்து வருவது யாவரும் அறிந்ததே. கிழக்கு மாகாண சபை உருவாக்கத்தின் மூலமாகத்தான் இத் துரித அபிவிருத்தி இடம்பெறுகின்றது என்பதனை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். 

தமிழ்வின் இணையத்தளத்தினால் போலி அமைப்புக்களின் பெயரில் வெளியிடப்படுகின்ற அறிக்கைகளின் நோக்கம் என்ன? தமிழ் மக்கள் நிம்மதியாக வாழக்கூடாது என்று தமிழ்வின் இணையத்தளம் நினைக்கின்றதா? தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சினைகள் இருக்கின்றபோதுதான் தாம் பிரச்சினைகளை எழுதி தமது இணையத்தளத்தை வளர்க்கலாம் என்று நினைக்கின்றனரா? அல்லது கிழக்கு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற நினைக்கின்றனரா? அல்லது கிழக்கு மக்களை மடையர்கள் என்று நினைத்துவிட்டனரா?

இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மக்களை ஏமாற்ற நினைக்கும் செயற்பாடுகளுக்கு துணைபோகும் மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிழக்கு மாகாண மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். 

தொடர்ந்தும் கிழக்கு மக்களை ஏமாற்ற நினைப்பார்களாக இருந்தால் கிழக்கு மக்கள் கூட்டமைப்பிற்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். கிழக்கு மக்களுக்காக குரல் கொடுப்பார்கள் என்பதற்காகவே மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பினார்கள் ஆனால் அவர்கள் கிழக்கு மக்களுக்காக என்ன செய்கின்றனர். சம்பந்தன் போன்றவர்கள் கிழக்கு மக்களை ஏமாற்ற நினைக்கும் செயற்பாடுகளுக்கு துணைபுரிகின்றனர்.

கிழக்கு மக்களே சிந்தியுங்கள் எமது இன்றைய தேவை என்ன? இன்று கிழக்கில் என்ன நடக்கின்றது? கடந்த 30 வருட போராட்டத்தில் பல உயிர்களையும் உடமைகளையும் இழந்திருக்கின்றோம். தொடர்ந்தும் இவ்வாறான இழப்புக்கள் இடம்பெற வேண்டுமா? அல்லது நலிவடைந்த எமது பிரதேசத்தை கட்டியெழுப்ப வேண்டுமா என்பதனை தீர்மானியுங்கள். இன்று மக்களுக்காக சேவை செய்துகொண்டிரப்பவர்கள் யார் என்பதனை தீர்மானியுங்கள். தமிழ் தேசியம் என்று மீண்டும் ஓர் அழிவினை நோக்கிச் செல்ல நீங்கள் தயாரா? அல்லது துரித அபிவிருத்தி மூலம் எமது பிரதேசத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதனை நீங்கள் விரும்புகின்றீர்களா? சிந்தித்து செயற்படுங்கள். கூட்டமைப்பினரின் போலி முகங்களை நம்பிவிடாதீர்கள். மக்களுக்காக சேவை செய்பவர்கள் யார் என்பதை தீர்மானியுங்கள்.

மறு புறத்திலே கூட்டமைப்பினர் கிழக்கு மாகாண முதலமைச்சரையும் கிழக்கு மாகாண மக்களையும் அவமதிப்பதனை வண்மையாகக் கண்டிப்பதோடு முதலமைச்சர் அவர்கள் கூட்டமைப்பினருக்கு இனிமேலும் மரியாதை கொடுக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கின்றோம். காரணம் முதலமைச்சரின் கடிதத்தினை அவமதித்த ஒரு தலைவரையும் கட்சியையும் முதலமைச்சர் அவர்கள் மரியாதை கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

கிழக்கு மாகாண மக்கள் கிழக்குத் தலைமைத்தவத்தின்கீழ் கிழக்கு மக்களாகவே இருக்கட்டம்.

பா.ஜேசுதாஸ் வை.தர்சன்
தலைவர்      செயலாளர்
மாற்றத்தை நோக்கிய மக்கள் அமைப்பு
கிழக்கிலங்கை


Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "கூட்டமைப்புக்கு தகுந்த பாடம் புகட்டுவோம் மாற்றத்தை நோக்கிய மக்கள் அமைப்பு"

Post a Comment