Showing posts with label சிறுவர்கள். Show all posts
Showing posts with label சிறுவர்கள். Show all posts

Saturday, 10 July 2010

ஏன் இப்படி தானும் சீரழிந்து சமுகத்தையும் சீரழிக்கிறார்களோ தெரியவில்லை.

நேற்று நான் பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போது நடந்த சம்பவம் ஒன்று....

இரு நண்பர்கள் எனக்கு பக்கத்து இருக்கைகளில் இருந்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொண்ட விடயம்.

முதல் நண்பன் -: டேய் இப்ப சுதன் குடிக்கிறதே இல்லையாம்டா...

இரண்டாம் நண்பன் -: உண்மைதான்டா. எப்படிடா அவனால இருக்க முடியிது. அவன்.  குடிக்காம இருக்கமாட்டானேடா.

முதல் நண்பன் -: உண்மைதான்டா அவன் நிருத்தல்லடா. அவன்ட அண்ணன் சாராயத்துக்குள்ள ஏதோ குளிசயப் போட்டு  (மாத்திரை) கொடுத்ததாம். அந்த குளிசை சுதனுக்கு தெரியாமல் போட்டதாம். அந்த குளிசை போட்டு கொடுத்தால் அன்று முழுதும் சத்தியா இருக்குமாம் பிறகு ஒரு நாளும் சாராயப் பக்கமே எட்டியும் பார்க்கமாட்டானுகலாம்.

இரண்டாம் நண்பன் -; இந்த குடியால ஒவ்வொரு நாளும் எவ்வளவு காசடா குடிச்சு தொலைக்கிரம். விடியத்தில எழும்பினா இனி குடிக்கப்போடா என்று நினைக்கிற. ஆனா பொழுதுபோக,போக குடிக்கிற எண்ணம்தானே  வருகுது. நம்மளும் இந்த குளிசயத்தான் சாராயத்தில போட்டு குடிக்கணும்.

முதலாம் நண்பன் -; நீ எனக்கு தெரியாமல் எனக்கு போட்டுத்தா. நான் உனக்கு தெரியாமல் போட்டுத்தாரன்....
 இப்படியே தொடர்கிறது...

என்னுடைய நண்பர் என்று சொல்லலாம் ஒவ்வொரு இரவிலும் குடிப்பார். குடிக்கவேண்டாம் என்று பல முறை சொல்லிப்பார்த்தேன் எவர் கதையும் கேட்பதாகவும் இல்லை.

எதற்காக குடிக்கின்றாய் என்று கேட்டால் கவலைகளை மறக்க குடிக்கிறேன் என்று சொல்வார் என்ன கவலை என்று கேட்டால் தினம் ஒரு காரணம் சொல்வார்.

அவர் சொல்லும் காரணங்களை கேட்டால் கோபம்தான் வரும். அப்பா இறந்த கவலை. அவரின் அப்பா இறந்து பல வருடம். கைல காசு இல்லை என்ற கவலை. அப்போ குடிப்பதற்கு மட்டும் காசு இருக்கும்.  தங்கட்சுக்கு வீடு கட்டவில்லை என்ற கவலை. இவ்வாறு தினமும் ஒரு காரணம் சொல்வார்.

என் இவாறு குடித்துக் குடித்து தான் மட்டுமல்ல, தன்னை சார்ந்த சமுகத்தையும் சீரழிக்கின்றனரோ  தெரியவில்லை. 

நாகரீகம் எனும் போர்வையில் இன்றைய இளம் சமூகத்தினர் சீரழிந்து கொண்டிருக்கின்றனர். குடிக்கவில்லை என்றால் தன்னை கீழ் தரமாக நினைப்பவர்களும் இருக்கின்றனர்.

இன்று குடும்பத்தை கொண்டு நடாத்தவேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் குடித்துக் ,குடித்தே தன்னை சார்ந்தவர்களும் தன் பிள்ளைகளும் சீரழிகின்ற நிலைக்கு இட்டு செல்கின்றனர்.

குடித்துவிட்டு வந்து மனைவி, பிள்ளைகளுடன் சண்டை பிடிக்கின்ற, சித்திரவதை செய்கின்ற எத்தனையோ குடும்பத் தலைவர்களை பார்த்திருக்கின்றோம்.

தன் பிள்ளைகள் உணவின்றி, பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கும் ஆனால் சில தந்தையர்கள் தினம் குடித்துவிட்டு வருவர். தன் மனைவி பற்றியோ, பிள்ளைகள் பற்றியோ இவர்களுக்கு அக்கறை இருக்காது.

தினமும் குடித்துவிட்டு வீட்டிலேயே தந்தை சண்டை பிடிப்பதால் பாடசாலையில் வகுப்பு மாணவர்கள் கிண்டல் செய்கிறார்கள் என்பத்தனால் எத்தனையோ பிள்ளைகள் பாடசாலை செல்வதை விட்டிருக்கின்றன.

அண்மையில் வீதியால் காலை ஒன்பது மணியளவில் வந்துகொண்டிருந்தேன். ஒரு மீன் வியாபாரி மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். வீதியின் இரு மருங்கிலும் மோட்டார் சைக்கிள்தான் தண்ணிபோட்டதுபோல் தள்ளாடி வந்துகொண்டிருந்தது.

அவர் மாத்திரமல்ல 7 , 8 வயதிருக்கும் ஒரு சிறுவனும் (அவர் மகன்) அந்த மோட்டார் சைக்கிளில் இருக்கிறான். பார்க்கும்போது அவருக்கு அடி கொடுக்கவேண்டும் போல் இருந்தது.

பாடசாலை செல்லவேண்டிய அந்த பிள்ளையைக் கொண்டு குடித்தித் திரிகிறான் அந்த திருந்தாத ஜென்மம். இப்படி உழைத்து உழைத்தே குடித்து, குடித்து குடியாலே இறந்த எத்தனையோ பேரைப் பார்த்திருக்கின்றோம்.

சிலர் ஓடி, ஓடி உடலை வருத்தி வேலை செய்வார்கள். பார்த்தாலே பாவமாக இருக்கும். அவர்கள் உழைப்பது எதுவுமே வீடு சென்று சேராது. குடிப்பதற்கு என்றே உழைப்பவர்கள் இருக்கின்றனர்.

சிலரைப் பார்த்திருக்கின்றேன். குடிக்கவில்லை என்றால் உடல் நடுங்குகின்றது என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஏன்தான் குடித்துக், குடித்தே தானும் சீரழிந்து. சமுகத்தையும் சீரழிக்கின்றார்களோ தெரியவில்லை. இவர்களை திருத்தவே முடியாது.
read more...

Tuesday, 12 January 2010

நாளைய தலைவர்களுக்காக நாம்

இன்று எமது சிறார்கள் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. உறவுகளை இழந்த சிறார்கள் ஒருபுறம். பாடசாலையை இடை நடுவிலே கை விட்ட சிறார்கள் ஒருபுறம்,  குடும்ப சுமையைபோக்க  தொழிலாளர்களாக்கப்பட்ட  சிறார்கள் மறுபுறம் என்று நாளைய எமது தலைவர்களின் நிலை கேள்விக்குறியாகிவிட்டது.


இந்த நிலை நாம் மாற்றி அமைக்க வேண்டும். எமது நாளைய தலைவர்களுக்காக, நாளைய சந்ததிக்காக சிந்திப்போம்.... எங்களால் முடிந்தவற்றை செய்வோம்....

மேலதிக விபரங்கள்...
read more...

Friday, 1 January 2010

புது வருடத்திலாவது விடிவு கிடைக்குமா?



இன்று புதிய வருடத்தில் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம். இந்த புதுவருடம் அனைவருக்கும் நல்ல ஆண்டாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த ஆண்டு  பலருக்கு நல்லதொரு ஆண்டாக அமையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். என்னைப் பொறுத்தவரை கடந்த ஆண்டின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கின்றபோது என்  வாழ்க்கையிலே என்னை அதிகம் சங்கடப்படவைத்த ஒரு ஆண்டாக இருக்கின்றது.

தமிழர்களைப் பொறுத்தவரை கடந்த ஆண்டை மறக்கவே முடியாது அந்தளவுக்கு தமிழர்களின் உயிர்களையும், உடமைகளையும் பறித்து தமிழர்களின்  கண்ணீரிலே சந்தோசம் கண்ட ஆண்டு 2009. தமிழர் மனங்களிலே மாறாத வடுக்களை உருவாக்கிய ஆண்டு.

எது எப்படி இருப்பினும் இந்த புதுவருடத்தில் கடந்த காலத்தில் நடந்த அந்த மாறாத வடுக்களை ஒரு கெட்ட கனவாக மறப்போம். புதிய ஒரு நாளில் புதிய சிந்தனைகளோடு நம்பிக்கையோடு நம் வாழ்க்கையை அமைப்போம்.

இன்று ஆரவாரமாக நாம் புது வருடத்தினைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம். நாம் ஒவ்வொரு விசேட பண்டிகைகளையும் மிகவும் சிறப்பான முறையிலே ஒவ்வொருவரு ஒவ்வொரு விதமாக கொண்டாடுவோம். எத்தனையோ ஆடம்பரங்கள் , தேவையற்ற செலவுகள் செய்கின்றோம்.

 ஆனாலும் இன்று தாய், தந்தை, சொந்தங்களை இழந்த பல சிறுவர்கள் எத்தனையோ சிறுவர் இல்லங்களிலே அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். ஏனைய சிறுவர்கள் இவ்வாறான விசேட தினங்களிலே புத்தாடை அணிந்து வான வேடிக்கைகளோடு ஆடிப்பாடி விளையாடும் போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதனை நாம் ஒரு நாளாவது எண்ணிப் பார்த்திருக்கின்றோமா?

நாம் இந்த விசேட பண்டிகைகள், தினங்களிலே அனாவசியமாக, ஆடம் பரங்கள் மூலம்   வீண் செலவுகள் செய்வதனை விடுத்து அந்த பணத்தை கொண்டு சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுத்து அன்றைய நாளை அவர்களோடு நம் பொழுதைப் போக்கலமால்லவா?  இதனால் அந்த சிறுவர்களின் மனதிலே ஒரு சந்தோச உயணர்வு தோன்றுமல்லவா?

நாம் எத்தனை பேர் இந்த சிறுவர்களைப் பற்றி சிந்திக்கின்றோம். அவர்கள் குறிப்பிட்ட சிறுவர் இல்லங்களிலே நல்ல முறையிலே நடாத்தப்பட்டாலும் அவர்கள் மனதிலே தான் ஒரு அனாதை என்கின்ற, தன்னால் மற்றவர்களைப்போல் சந்தோசமாக இருக்க முடியவில்லையே என்ற ஒரு கவலை இருக்கும்.

இன்று இலங்கையின் வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை எத்தனையோ சிறுவர் இல்லங்கள்  இருக்கின்றன. இந்த சிறுவர் இல்லங்களிலே ஆண் சிறார்கள் மட்டுமல்ல பெண் பிள்ளைகளும் பலர் இருக்கின்றார்கள். அந்த பெண் பிள்ளைகளின் எதிர் காலம் பற்றி யாராவது சிந்தித்திருக்கின்றோமா?

இன்று பெரிய வசதியான குடும்பத்திலே பிறந்த சில பெண் பிள்ளைகளின் வாழ்க்கையே சீதனம், வரதட்சனை, அது, இது என்று திண்டாட்டமாக இருக்கின்றது. இப்படி அவர்களுக்கு இந்த நிலை என்றால் அனைத்தையும் இழந்து சிறுவர் இல்லமே தஞ்சமென்று இருக்கின்ற சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற அந்த பெண் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி அமைய இருக்கின்றது. இன்று அழகு, அந்தஸ்து பெரிய இடமென்று எல்லோரும் பெரிய இடம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த பெண் பிள்ளைகளின் எதிர் காலத்துக்காக சிந்திப்போம்.

சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற சிறுவர்கள் நன்கு படிக்கக் கூடியவர்களாக இருந்தாலும் அவர்களின் மனதில் இருக்கின்ற கவலையின் காரணமாக படிக்கத்தான் முடியுமா?

நாம் இன்று நம் சிறுவர்களின் கல்வி வளர்சியிலே பின்தள்ளப் படுகின்றபோது நாளைய நம் சமுகத்தின் கல்வி நிலைதான் என்ன?

இன்றைய நம் சிறுவர்களே நாளைய நம் தலைவர்கள் அவர்களின் எதிர் காலத்துக்காக நாம் ஒவ்வொருவரும் சிந்திப்போம்.
read more...

Wednesday, 30 December 2009

இப்படியும் மனிதர்கள்

நாங்கள் பலர் சேர்ந்து பத்து வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த சமுக சேவை அமைப்பான கல்வி அபிவிருத்தி சங்கமானது பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகின்றது. இந்த அமைப்பானது சிறுவர்களின் நலன் தொடர்பிலே பல்வேறுபட்ட செயத் திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றது.

கல்வியை தொடர முடியாத வறிய மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல். மாணவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகுவதை கட்டுப்படுத்தலும், இடைவிலகியவர்களை மீண்டும் பாடசாலையில் சேர்ப்பதற்குரிய  நடவடிக்கைகளை மேற்கொள்ளல், இலவச வகுப்புக்களை நடாத்துதல் என்று பல்வேறு செயத் திட்டங்களை நடை முறைப் படுத்தி வருகின்றது.

இதன் ஒரு செயற்பாடாக மாலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணிவரைக்கும் நாளாந்தம் 360 மாணவர்களுக்கு இலவச வகுப்புக்களை நடாத்தி வருவதோடு மாதாந்த பரிட்சைகளையும் நடாத்தி வருகின்றது.

இவை அனைத்துக்குமான செலவுகளையும் இந்த அமைப்பினுடைய உறுப்பினர்களும்  சில நலன் விரும்பிகளும் செய்து வருகின்றனர்.

இலவச வகுப்புக்களை நடாத்துவதற்கு என்று  ஒரு கல்வி நிலையத்தினையும் கொண்டுள்ளது இந்த அமைப்பு.

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இந்த கல்வி நிலையத்திலே போடப்பட்டிருந்த பல பெறுமதி வாய்ந்த மின் குமிழ்கள் இரவோடு இரவாக திருடப்பட்டிருக்கின்றன. இதன் பெறுமதி 40 ஆயிரம் ருபாவுக்கும் அதிகமாகும். இதுபோல் முன்னர் ஒரு தடவையும் திருடப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த அமைப்பினுடைய செயற்பாடுகள் அனைத்துக்காகவும் அமைப்பின் உறுப்பினர்கள் பல கஸ்ரங்களுக்கு மத்தியிலே தமது பங்களிப்பை செய்து வருகின்றனர். இதனை நன்கு அறிந்தவர்களே இப்பிரதேசத்தை சேர்ந்த அனைவரும். இப்படிப்பட்ட திருட்டுக்களை செய்கின்ற நாகரிகமற்ற, மனித நேயமற்ற  மனிதர்களும் இன்று இருக்கின்றார்களே.

இந்த அமைப்பானது உறுப்பினர்களின் நிதிப் பங்களிப்பிலே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரிடம் பலதடவை சென்றதன் பயனாக எமது தொல்லை தாங்க முடியாமல் ஒரு கணணி உபகரணத்தை வழங்கினார்.

பாராளுமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கியும் பிரதேச செயலக அதிகாரிகள் இரண்டு மாதங்களின் பின்னே எமக்கு கணணி வழங்கினார்கள். இரண்டு மாதங்கள் பிரதேச செயலக அதிகாரிகள் எங்களை திங்கட் கிழமைவாருங்கள், செவ்வாய்க்கிழமை வாருங்கள் என்று ஏமாற்றி இருக்கின்றனர்.  அப்போதே நான் ஒரு பதிவிலே குறிப்பிட்டு இருந்தேன் ஏதோ சுத்து, மாத்து வேலைகள் இடம்பெரப்போவதாக தெரிகிறதென்று.

பிரதேச செயலகத்துக்கு பலநாள் அலைந்து திரிந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கணணி வழங்கப்பட்டது.  ஆனால் எந்த விதமான உத்தரவாதப் பத்திரமும் வழங்கப் படவில்லை. கணணியை கொண்டு வந்து  3 நாட்கள் மட்டுமே பாவிக்கப்பட்டது. 4 வது நாள் கணணி வேலை செய்யவில்லை.

இப்படி ஒரு கணணி பெயருக்கு வழங்கத்தான் வேண்டுமா? இந்த கணணிக்குரிய உத்தரவாதப் பத்திரம் எங்கே போனது. ஏன் இந்த அதிகாரிகள் இப்படிப்பட்ட வேலைகளை செய்கின்றனர்.

இது தொடர்பிலே குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரும், உரிய பிரதேச செயலக அதிகாரிகளும் கவனம் செலுத்துவார்களா?

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..
read more...

Friday, 11 December 2009

என்னடா உலகமிது

இதுதான் அன்று நான் கண்ட
அழகிய தேசமா?
இன்று என் தேசத்தில்
மிஞ்சி இருப்பது என்ன?

இல்லை இல்லை
நிறையவே இருக்கின்றனவே
கிராமங்கள் தோறும்
ஒன்றுக்கு இரண்டு
அனாதை இல்லங்களும்
அகதி முகாம்களும்
நாம் என்ன செய்தோம்
தமிழராய் பிறந்ததை தவிர.

 அனாதை இல்லங்களில் வாழும்
அந்த மழலைகளின் முகத்தில்
எத்தனை எத்தனை
கவலைகளின் முகவரிகள்
ஆறுதல் சொல்வதைத்தவிர
என்னால் எதுவும்
செய்ய முடியவில்லை
வார்த்தைகள் வர மறுக்கின்றன..

நீங்கள் அனாதைகள் இல்லை
அனாதைகள் ஆக்கப்பட்டவர்கள்
நீங்கள் மட்டுமல்ல
நாங்களும்தான் அனாதைகள்
சொந்தங்களை இழந்ததனால்
நீங்கள் அனாதைகள்
சிறுவர் இல்லங்களில்.
தமிழனாய் பிறந்தோம் -இன்று
அனைத்தும் இழந்து
அகதிகளாக அடை பட்டோம்
அகதி முகாம்களில்.

தமிழன் என்றால்
அகதி என்று
மகுடம் சூட்ட
நினைக்கும் தேசமிது
"தமிழன் நாம்'
தலை நிமிர்ந்து சொல்லுங்கள்
தம்பிகளே தங்கைகளே
நாளைய தலைவர்கள்
நீங்கள் அல்லவா
அதுதான் உங்களையும்
முளையிலே கிள்ள நினைக்கிறது
இந்த தேசம்
காலம்தான் பதில் சொல்லும்
காத்திருங்கள் - என்னால்
இதற்கு மேலும்
எதுவும் சொல்லமுடியாது
சொன்னால் நானும் நாளை
அனாதை ஆக்கப்படலாம்
வாய் பொத்தச் சொல்லும்
தேசமல்லவா இது...
read more...

Wednesday, 25 November 2009

இன்றைய சிறுவர்களின் கல்வி நிலைதான் என்ன?

எனது ஆரம்பகாலப் பதிவொன்று மீண்டும் பதிவாகிறது...


இந்தப்பதிவு மூலமாகவும் சிறுவர்கள் பற்றியே பேசப்போகின்றேன். என்னடா இவன் சிறுவர்கள் பற்றியே பேசிக்கொண்டு இருக்கின்றான் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. எமது சிறுவர்கள் பல்வேறு வழிகளிலே பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.அவர்களைப் பற்றிவும் அவர்களின் எதிர்காலம் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இன்று இலங்கையைப் பொறுத்தவரையில் எமது சிறுவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகுகின்ற வீதம் அதிகமாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகளிலேதான் இந்நிலை அதிகமாகக் காணப்படுகின்றது

நாட்டில் இடம் பெற்ற உள்நாட்டு யுத்தம் முக்கிய காரணம் என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதற்கில்லை. இதைத்தவிர இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன.


ஆறாம் ஏழாம் தரங்களிலே கல்வி கற்கின்ற சிறுவர்களே அதிகமாக பாடசாலையை விட்டு இடை விலகிச் செல்கின்றனர். இதன் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்த பொழுது ஆறாம், ஏழாம் தரங்களுக்கு வருகின்றபோதே அவர்களுக்கு சமுகத்தை பற்றிய உணர்வு தோன்றுகின்றது. அவர்கள் ஆறாம்,ஏழாம் தரங்களை அடையும் வரை அவர்கள் தாங்கள் எழுத வாசிக்க தெரியாமல் இருக்கின்றோமே படிக்கவேண்டுமே என்று சிந்திக்காமல் விளையாட்டுத்தனமாக இருந்து விடுகின்றனர்.

இவர்கள் சமுகத்தை பற்றிய உணர்வு வருகின்ற போது. தாங்கள் எழுத வாசிக்க தெரியாமல் இருக்கின்றோமே, என்ற ஒரு சிந்தனை தோன்றுகின்றது. இவர்கள் பாடசாலையை விட்டு விலக நினைக்கின்றார்கள். காரணம் வகுப்பிலே இருக்கின்ற சக மாணவர்கள் தங்களை கேலியாக பார்ப்பார்கள், தாங்கள் கேலி நிலைக்கு சென்று விட்டோமே என்ற ஒரு மனப் பாண்மை தோன்றுகின்றது. இதனால் படிப்படியாக பாடசாலையை விட்டு இடை விலகுகின்றனர்.

இவ்வாறு இடை விளகுகின்றவர்களின் நிலை .கேள்விக்குறியாகின்றது இவர்கள் பல்வேறு பட்ட பிரட்சனைகளை எதிர் நோக்குகின்றனர். இது ஒரு புறமிருக்க. இவர்கள் இவ்வாறு இடை விலகுவதை தவிர்ப்பதற்குரிய வழிகளை ஆராய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.


இவ்வாறு இடை விளகுபவர்களின் வீதம் கிராமப்புரங்களிலேதான் அதிகமாகக் காணப்படுகின்றன. இவர்களை பற்றி ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது. இவர்களது பெற்றோரும் கல்வியிலே பின் தங்கி இருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது. இவர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியிலே அக்கறை செலுத்தாதவர்களாக இருக்கின்றனர். முதலிலே இப்படியான பெற்றோருக்கு சிறுவர்களின் கல்வியின் அவசியம் பற்றி. பல விழிப்புணர்வுக் கருத்தரங்கு போன்ற பல்வேறு செயற்பாடுகளை செயட்படுத்த வேண்டி இருக்கின்றது.

அத்தோடு நாங்கள் உடனடியாக இடைவிலகிய சிறுவர்களை பாடசாலையில் சேர்த்துக் கொள்வதனால் அவர்கள் மீண்டும் இடை விலகக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவே காணப்படுக்கின்றன. முதலிலே இவர்களை தனிப்பட்ட ரீதியிலே அணுகி இவர்களை எழுத வாசிக்க பழக்க வேண்டும். பல சிறுவர்கள் நன்றாக படிக்கக்கூடியவர்கள் இன்று பாடசாலையை விட்டு இடை விலகியவர்களாக இருக்கின்றனர். அவர்கள் கண்டறியப்பட்டு இன்று கல்வியிலே முன்னிலையில் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை தனிப்பட்ட ரீதியிலே எழுத வாசிக்க பழக்கிய பின்னர் அவர்களை பாடசாலையில் சேர்க்கின்ற போது அவர்களது மனதிலே இருந்த படிக்கத் தெரியாதவர்கள் என்ற குற்ற உணர்வு நீங்குகின்றது. கல்வியிலே முன்னிலைக்கு வரக்கூடிய சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கின்றன. இதில் பாடசாலையை விட்டு இடை விலகிய மாணவர்கள் தொடர்பாக பல்வேறு செயத் திட்டங்களை மேற்கொண்டு வரும் களுதாவளை கல்வி அபிவிருத்தி ஒன்றியம் வெற்றியும் கண்டுள்ளது. பல இடை விலகிய மாணவர்களின் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி அவர்களை பாடசாலைகளிலே மீண்டும் சேர்த்து இன்று கல்வியிலே நல்ல நிலையில் இருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது.


இன்னும் பல காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். காரணங்களையும் தடுப்பதற்குரிய வழிவகை என்ன?... அவ்வப்போது உங்களுக்காக வந்து சேரும்.


படங்கள் பல இணையத் தளங்களிலிருந்து பெறப்பட்டவை.

read more...

Thursday, 1 October 2009

நாளைய தலைவர்களின் இன்றைய நிலை..

நம் சிறுவர்களின் எதிர்காலம் தொடர்பிலே அதிகம சிந்திப்பவன் நான். பல்வேறு காரணங்களினால் நமது சிறார்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகிவிட்டன... சரி முதலில் படங்களைப் பாருங்கள் அப்புறம் கதைகளை சொல்லுங்கள்...

இதுதான் நம் வாழ்க்கையா?


என்ன பாவம் செயதேனோ

தமிழனாய் பிறந்ததால் கையேந்தும் நிலை

சிறுவர்நாம் என்ன கொடுமை செய்தோம்






ஏன் கை ஏந்துகிறீர்கள் கை ஏந்தவேண்டியவர்களா நீங்கள்....
காத்திருப்பே எமது வாழ்க்கையாகிப்போனதேன்....
என்றுதான் எமக்கு விடிவு கிடைக்குமோ.....
இதுதான் என் அழகிய தேசம்...
தொலைத்துவிட்ட எம் நிம்மதியைத் தேடிடும் பயணம்....
என் சொந்த மண்ணிலும் காலுன்ற முடியவில்லை என்னதான் நடக்கிறது உலகமென்பது இதுதானா...
தடைகளை தாண்டுவதா இல்லையா .... முளையிலே தடை போடும் தேசமிது....
இங்கேயாவது சற்று நிம்மதியாக விளையாடலாமா....


ஏக்கத்தோடு சந்தொசப்படுவதேன்றால் முடியுமா.....
வாழ்க்கையின் சுமை கையிலும், மனதிலும்.....




அறியாத பருவம் விடுங்கள்........ அவன் எதையும் அறியும் காலம் தொலைவில் இல்லை....


வாழ்க்கையின் சுமை என்பது இவ்வளவுதானா இன்னும் இருக்கிறதா


எதற்காக இந்த ஆழ்ந்த சிந்தனை நம் சிந்தனைகள் சிதறடிக்கப்பட்டு விட்டனவே...

????????????இதுதான் வாழ்க்கை என்பதா.....
இதுதான் உலகமென்பதா....

இதுதான் நம் விதி....


இதனையும் பாருங்கள்

இன்றைய சிறுவர்களின் கல்வி நிலைதான் என்ன....

படங்கள் பல இணையத்தளங்களில் பெறப்பட்டவை.

read more...

Monday, 28 September 2009

நானும் அரசியலுக்கு வரப்போகின்றேன்.

இன்று இலங்கையில் யுத்தம் ஓய்ந்திருக்கின்றது. நாட்டை அபிவிருத்தி செய்கின்றோம் என்று பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்.

தமிழ் மக்கள் பல காலமாக பல்வேறு இன்னல்களை எதிர் நோக்கி வருவருகின்றனர் அது நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. இன்று அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிப் பேசுகின்றவர்கள். தமிழ் மக்கள் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சனைகள் பற்றி ஏன் பேசாமல் இருக்கின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை.


கடந்த காலத்திலேயே இடம் பெற்ற யுத்தத்தின் காரணமாக எமது சிறுவர்கள் பலர் தாய், தந்தையர்களை இழந்து சிறுவர் இல்லங்களிலே சொந்தங்கள், நிம்மதி, மற்றும் அத்தனையையும் இழந்து. பல கஸ்ரங்களுக்கு மத்தியிலே வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் எதிர் காலம் பற்றி சிந்திக்கின்றார்களா?


இன்று ஊருக்கு ஒன்று என்று சொல்லுமளவுக்கு சிறுவர் இல்லங்கள் இருக்கின்றன. இங்கே இருக்கின்ற சொந்தங்களை இழந்த பெண் பிள்ளைகளின் எதிர் காலம் தொடர்பில் மட்டுமாவது சிந்திக்கின்றார்களா? அந்த பெண் பிள்ளைகளின் எதிர் காலம்தான் என்ன?. அவர்களின் எதிர் காலம் தொடர்பில் நாம் அனைவரும் சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம். எமது எதிர்கால சந்ததியினர் பாதிக்கப்படுவது எமது தமிழினத்தின் பாரிய வீழ்ச்சியல்லவா? நாளை தமிழினத்தின் சரித்திரம் படைக்கவேன்டியவர்கள் அனாதைகளாக்கப்பட விடுவதா?


இன்று பலர் அரசியல் இலாபம் தேட நினைக்கின்றனர். பலர் அரசியலிலே ஈடுபடும் நோக்கோடு இந்த அபிவிருத்தித் திட்டங்களிலே பங்கெடுக்கின்றனர். எதிர்காலத்திலே புதிதாக பலர் அரசியலிலே குதிக்க திட்டமிட்டுள்ளதை அறிய முடிகின்றது. அரசியல் எதிர்காலம் தேடும் புதியவர்களாவது எமது சொந்தங்களை இழந்து சிறுவர் இல்லங்களிலே தவிக்கும் சிறுவர்கள் தொடர்பில் நல்ல திட்டங்களை முன்னெடுப்பார்களா?


இருக்கின்ற தமிழ் அரசியல்வாதிகள் மீது எந்த நம்பிக்கையும் அற்றவனாகவே இருக்கின்றேன். எனக்கு சிறு வயதிலே இருந்த இருந்த ஆசைகள் இரண்டு. ஒரு அறிவிப்பாளனாக வரவேண்டும், ஒரு அரசியல்வாதியாக வரவேண்டும். (காரணம் பல கஸ்ரங்களுக்கு மத்தியிலே வாழ்ந்தவன் என்பதனால் ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கம்)



சிறு வயதிலே அரசியல் கட்சிகளின் பின்னாலும் ஈடுபட ஆரம்பித்தேன். என் அரசியல் பேச்சிலே எதிர்த்து வாக்களிக்க இருப்போரும் தங்களுக்கு வாக்களித்து விடுவார்கள் என்று சில அரசியல்வாதிகளே சொல்லி இருக்கின்றனர். தேர்தல் வந்தால் என்னை யார் பிரச்சாரத்துக்கு பிடிப்பது என்ற போட்டி வேறு.


இன்றுதான் நான் யோசிக்கின்றேன் நான் எந்தளவுக்கு தவறு செய்திருக்கின்றேனென்று. இப்படிப்பட்டவர்களுக்கா உதவி செய்தேன் என்று. இன்று உணர்கின்றேன் அரசியல் என்பது என்ன என்று. எப்படி நல்லவர்களாக இருந்தவர்கள் இன்று எப்படி இருக்கின்றார்கள். இன்று யோசிக்கின்றேன் அன்று மக்களுக்காக வாழ்ந்தவர்களா இன்று மக்களுக்காக அரசியலுக்கு வந்து மக்களை சுரண்டி வாழ்கின்றார்கள். என்னால் நம்பமுடியவில்லை.


இன்று அரசியல் எதிர்காலம் தேடுவோர் இவர்கள்போலல்லாமல், இவர்கள்வளி செல்லாமல் நம் எதிர்கால சந்ததி தொடர்பில் நல்ல திட்டங்களை முன்னெடுப்பார்களா?

என்னடா இவன் திடிரென அரசியல் பேசுகின்றான் என்று நினைக்கின்றீர்களா. அரசியல் எதிர்காலம் தேடும் சிலர் அவர்களின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு எனது உதவி தேவைப்படுவதாக சொன்னார்கள். அவர்களில் சிலரிடம் நான் நேரடியாக சொன்னேன் நீங்கள் அரசியலில் இறங்கினால் நான் உங்களுக்கு எதிராக இறங்குவேன் என்று.


சிறு வயதில் ஏன் இந்த அரசியல் சாக்கடை பற்றி யோசித்தேன் என்று இப்போது கவலைப் படுகின்றேன். கஷ்டப்படும் மக்களின் வயிற்றிலடித்து பிழைப்பு நடத்துபவன் மனிதனா?
read more...

Monday, 7 September 2009

அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த நிகழ்வு...


மட்டக்களப்பு களுதாவளை கல்வி அபிவிருத்தி ஒன்றியம் பல வருடங்களாக நம் சிறார்களின் கல்வி நடவடிக்கைகளிலே பல்வேறு பட்ட செயத்திட்டங்களிலே ஈடுபட்டு வருகின்றது அதிலும் குறிப்பாக பல்வேறு காரணங்களினால் பாடசாலையினை விட்டு இடை விலகிய மாணவர்களின் எதிர் காலம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி வருவதோடு பல செயத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.


இன்று மறைந்து வரும் தமிழர் நம் கலைகளை வளர்ப்பதிலும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. வருடா வருடம் சிறுவர் கலை விழாவினையும் நடாத்தி வருகின்றது


இவ வருடத்துக்கான கலை விழாவானது 05.09.2009 சனிக்கிழமை மாலை 05.31 க்கு ஆரம்பமானது. (அழைப்பிதழிலே குறிப்பிடப் பட்டதுபோல் சரியாக 05.31 க்கே நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.) இந் நிகழ்விலே பல துறை சார்ந்த்தவர்கள் கலந்து சிறப்பித்ததோடு சிறார்களின் திறமைகளைக் கண்டு வியந்து போனார்கள்.


மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம், தமிழ் மொழி வாழ்த்து என்று ஆரம்பமான நிகழ்ச்சிகள் நான்கு மணித்தியாலங்கள் பார்வையாளர்கள் ஒருத்தரைக்கூட எழுந்து செல்ல முடியாமல் தங்கள் வசம் ஈர்த்திருந்தார்கள் சிறுவர்கள். இன்று பார்வையாளர்களை இறுதி வரை வைத்துக் கொள்வதென்பது முடியாத காரியம் ஆனால் இந்தச் சிறுவர்களால் முடிந்துவிட்டது.


இன் கலை விழாவிலே தமிழர்களுக்கே உரித்தான கரகம், கும்மி, கோலாட்டம் வில்லிசை, நாடகம்..... என்று எல்லோரையும் மகிழ்வித்தனர்.


இங்கே குறிப்பாக ஒன்றைச் சொல்ல வேண்டும். சிறுவர்களால் மேடை ஏற்றப்பட்ட நிகழ்ச்சிகள் எதிலுமே எமது பங்களிப்பு இருக்கவில்லை. நாடகமானாளும்சரி, நடனமானாலும் சரி அவர்களாலேயே தயாரிக்கப்பட்டது. நாங்கள் மேற் பார்வை செய்தது மட்டுமே. அவர்களின் திறமைகளைக் கண்டு வியப்படைந்து விட்டோம்.


இந்த கலைவிழாவின் நிகழ்ச்சி தொகுப்பாளர் அடியேன்தான். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்பட்டன. (அறிவிப்பு ) ஆங்கிலத்தில் அறிவிப்பு செய்தது நான் இல்லை எட்டாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவிதான்.


அடியேன் நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைக்கின்றேன்.





பார்வையாளர்களில் ஒரு பகுதியினர்.









எமது கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்களில் சிலர்.
இன்றைய தினக்குரல் பத்திரிகையிலே. சிறுவர் கலைவிழா தொடர்பான படங்களும், செய்திகளும் வெளிவந்தது இருக்கின்றன. தினக்குரல் பத்திரிகைக்கு நன்றிகள்

(சிறுவர் கலைவிழா வீடியோ விரைவில் உங்களை வந்து சேரும்)
read more...

Wednesday, 22 July 2009

நம் சிறுவர்களின் எதிர்காலம் என்ன படங்கள் சொல்லும் கதைகள்....

நம் சிறுவர்களின் எதிர்காலம் தொடர்பிலே அதிகம சிந்திப்பவன் நான். பல்வேறு காரணங்களினால் நமது சிறார்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகிவிட்டன... சரி முதலில் படங்களைப் பாருங்கள் அப்புறம் கதைகளை சொல்லுங்கள்...

ஏன் கை ஏந்துகிறீர்கள் கை ஏந்தவேண்டியவர்களா நீங்கள்....
காத்திருப்பே எமது வாழ்க்கையாகிப்போனதேன்....
என்றுதான் எமக்கு விடிவு கிடைக்குமோ.....
இதுதான் என் அழகிய தேசம்...
தொலைத்துவிட்ட எம் நிம்மதியைத் தேடிடும் பயணம்....
என் சொந்த மண்ணிலும் காலுன்ற முடியவில்லை என்னதான் நடக்கிறது உலகமென்பது இதுதானா...
தடைகளை தாண்டுவதா இல்லையா .... முளையிலே தடை போடும் தேசமிது....
இங்கேயாவது சற்று நிம்மதியாக விளையாடலாமா....


ஏக்கத்தோடு சந்தொசப்படுவதேன்றால் முடியுமா.....
வாழ்க்கையின் சுமை கையிலும், மனதிலும்.....

(இந்த படங்கள் பல வலைத்தளங்களில் இருந்து பெறப்பட்டவை)
இப்போ கதைகளை நீங்களே சொல்லுங்கள்...
read more...