Thursday, 17 May 2012

தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்கும் இரகசிய முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பா.அரியநேந்திரன் - பின்னனியில் சில திரைமறைவு சக்திகள்.

தமி;ழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான திரு.பாக்கியசெல்வம் அரியநேந்திரன், புலம்பெயர்ந்தவர்களால் நடாத்தப்பட்டுவரும் இணையத்தளமான – தினக்கதிருக்கு தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தொடர்பில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இவ்வறிக்கையை வெளியிடுகின்றது.
 
தனது செய்தியில், திரு அரியநேந்திரன் -  எமது அமைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு அங்கமாக இணைத்துக் கொள்வதை ஆட்சேபித்திருப்பதுடன், இதனை மீறி நாம் இணைத்துக் கொள்ளப்பட்டால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்திருக்கின்றார். மேலும் அரியநேந்திரன், எமது அமைப்பை இராணுவத்துடன் தொடர்புபடுத்தி உண்மைக்கு மாறான ஒரு அபிப்பிராயத்தையும் மக்கள் மயப்படுத்த முற்பட்டிருக்கின்றார். அவர் எமது அமைப்பு தொடர்பில் குறிப்பிட்டிருக்கும் அனைத்து விடயங்களும் அடிப்படையற்றவை.
 
சமீபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஐவரோதயம் சம்பந்தன் அவர்களின் தலைமையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் ஓர் ஆரோக்கியமான சந்திப்பு இடம்பெற்றிருந்த சூழலில், உருத்திரண்டு வரும் ஒற்றுமைக்கான சூழலை சீர்குலைக்கும் வகையில், அரியநேந்திரன் திட்டமிட்டு இத்தகையதொரு செய்தியை வெளியிட்டிருக்கின்றார். இதனை நாம் வன்மையாக கண்டிப்பதுடன், இவ்வாறான சீர் குலைவு நடவடிக்கைகள் குறித்து மக்களை விழிப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். 
 
தமிழ் மக்களுடைய விடுதலைக்கான போராட்டத்தில் பங்குகொண்ட எந்தவொரு அமைப்போ அல்லது கட்சிகளோ விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. அந்தவகையில், நாம் கடந்தகாலம் குறித்த ஆரோக்கியமான விமர்சனங்களை எப்போதுமே வரவேற்று வந்திருக்கிறோம். ஆனால் இரண்டாம்தரமான வார்த்தை பிரயோகங்கள் மூலம், எமது அமைப்பை கொச்சைப்படுத்த முற்படும்போது அது குறித்து நாம் அமைதியாக இருக்க முடியாது. இந்த அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனின் அரசியல் நம்பகத்தன்மை குறித்தும், அவரது சமீபகால தீய உள்நோக்கம் கருதிய செயற்பாடுகள் குறித்தும் சில உண்மைகளை மக்கள்முன் வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நாம் ஆளாகியுள்ளோம்.
 
நாம் கடந்த காலத்தில், விடுதலைப்புலிகளின் அணுகுமுறைகளையும், அவர்களால் திணிக்கப்பட்ட ஏகப்பிரதிநிதித்துவ அரசியலையும் எதிர்த்து வந்திருக்கிறோம். இது அனைவரும் அறிந்த உண்மை. கடந்த காலத்தில் விடுதலைப்புலிகள் எமது அமைப்பின் உறுப்பினர்களை கொல்லும் நோக்கத்துடன் எதிர்கொண்ட போது, எமது உறுப்பினர்களும் தங்களை தற்பாதுகாத்துக் கொள்வதற்காக புலிகளின் உறுப்பினர்களை எதிர்கொண்டிருக்கின்றனர். இதுவும் அனைவரும் அறிந்த உண்மை. இவற்றை நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மறைக்க முயன்றதும் இல்லை. அப்படி மறைத்து அரசியல் செய்ய வேண்டிய எந்தவொரு அவசியமும் எமக்கில்லை. நாம் அப்போது மட்டுமல்ல, இப்போதும் எந்தவொரு ஏகப்பிரதிநிதித்துவ அரசியல் வாதங்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏகப்பிரதிநிதித்துவ வாதம் என்பது ஒரு சமூதாயத்தின் பன்முகத் தன்மையை மறுக்கும் ஒரு ஜனநாயக விரோத செயலாகும்.
 
ஒரு கொள்கைநெறியால் வழிநடத்தப்பட்ட அரசியல் இயக்கம் என்ற வகையில் எம்மால் எம்மை பகிரங்கமாக வெளிப்படுத்த முடியும். ஆனால் எம் மீதான அவதூறுகளை பரப்ப முற்படும் அரியநேந்திரனால் அது முடியாது.
 
பாக்கியசெல்வம் அரியநேந்திரனின் அரசியல் நம்பகத்தன்மை எத்தகையது?
 
தொழில் ரீதியாக மிருக வைத்தியரின் உதவியாளரான(மிருக சினைப்படுத்தும் அலுவலர்), திரு.அரியநேந்திரன், அடிப்படையில் ஓரு ஜக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளராவார். அன்று மட்டக்களப்பில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த தினக்கதிர் என்னும் செய்தி பத்திரிகையில் ஒரு செய்திசேகரிப்பாளராக இவரும் இணைந்து கொண்டார். மிருகவைத்திய உதவியாளர்(மிருக சினைப்படுத்தும் அலுவலர்), செய்தியாளர் என்னும் இரு முகங்களுடனும் சமூகத்துடன் ஊடாடிய அரியநேந்திரன், அப்போது விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்த கௌசல்யனுடன் இருந்த உறவுமுறையைப் பயன்படுத்தி புலிகளின் விசுவாசியாக தன்னை உருமாற்றிக் கொண்டார். புலிகளின் தொடர்பு ஜக்கிய தேசியக் கட்சியின் அரியநேந்திரனை, தமிழ் தேசியவாதியாக காட்டிக்கொள்ள உதவியது.
 
2004 இல் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் புலிகளின் மட்டக்களப்புக்கான வேட்பாளர்கள் பட்டியலில் கௌசல்யனூடாக இடம்பிடித்துக் கொண்ட அரியநேந்திரனால்  தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. அன்று புலிகள் இயக்கத்தில் கருணாவின் பிரிவால் ஏற்பட்டிருந்த குழப்பநிலையை சாதுரியமாக பாவித்து அப்போது வெற்றிபெற்றிருந்த சிறந்த சமூக சேவையாளரான கிங்ஸ்லி ராசநாயகத்தை பதவியில் இருந்து விலக்குவதன் மூலம் தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வருவதற்கான சதி முயற்சியை அரியநேந்திரன் எடுத்தார். கௌசல்யனின் ஊடாக கிங்ஸ்லி ராசநாயகத்தை இராஜினாமா செய்யுமாறு அரியநேந்திரன் தூண்டியிருந்தார். ஆனால் ராசநாயகம் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்றவகையில் புலிகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்திருக்கவில்லை. இதன் விளைவாக ஒக்டோபர் 14-2004 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி ராசநாயகம் படுகொலை செய்யப்பட்டு அவரது இடம் அரியநேந்திரனுக்கு வழங்கப்பட்டது. கிங்ஸ்லியின் கொலைக் குருதியால் பாக்கியசெல்வம் அரியநேந்திரன் தனது பட்டாபிசேகத்தை நிறைவு செய்து கொண்டார்.
 
விடுதலைப் புலிகளிலிருந்து கருணா பிரிந்தபோது, கருணாவின் பிளவை நியாயப்படு;த்தி அரியநேந்திரன் செயற்படலானார். ராஐன் சத்தியமூர்;த்தி, ஜெயானந்த மூர்;த்தி, சிவராம் ஆகியோருடன் இணைந்து கருணாவின் செயற்பாட்டை பிரதேசவாதம் பேசி நியாயப்படுத்தினார். ஜக்கிய தேசியக் கட்சியில் இருந்து தமிழ்  தேசியத்திற்கு தாவிய அரியநேந்திரன் இறுதியில் மட்டக்களப்பு வாதத்திற்கு தாவினார். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மை மீளவும் ஸ்திரப்படுத்திய பின்பு அரியநேந்திரன் தடாலடியாக கருணாவிற்கு எதிராக திரும்பியதுடன், புலிகளின் ஆதரவாளனாகவும் தன்னை காட்டிக் கொண்டார். ஒருவேளை கருணாவின் கை மட்டக்களப்பில் ஓங்கியிருந்திருந்தால், இன்;றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் கருணாவின் விசுவாசியாக இயங்கியிருப்பார். இத்தகைய சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொண்டு வரும் அரியநேந்திரன் என்பவரே, எமது அமைப்பின் நம்பகத் தன்மை பற்றி பேசியிருக்கிறார்.  
 
அரியநேந்திரன் இவ்வாறு செயற்படுவதன் பின்னணி என்ன?
                                            
சமீபகாலமாக அரியநேந்திரன் அவ்வப்போது அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் தன் மீதான கவனஈர்ப்பை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றார். இதன் தொடர்ச்சியாகவே தற்போது மட்டக்களப்பு தமிழசுக் கட்சியை மீறி, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் எமது அமைப்பை இணைத்துக் கொண்டால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என்றும் எச்சரிக்கை ஒன்றை விட்டிருக்கின்றார். இதன் மூலம், தன்னை மட்டக்களப்புக்கான தமிழரசுக் கட்சியின் தலைவராக காண்பிக்க முயன்றிருக்கிறார். இந்த இடத்தில் கருணாவின் மட்டக்களப்பு அரசியலை ஆதரித்து புலிகளை உடைக்கத் துணைபோனது போன்று, மட்டக்களப்புக்கான தமிழசுக் கட்சியின் தலைமையாக காட்டி, தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்க முற்படுகின்றார். நாம் மேலே குறிப்பிட்ட பாக்கியசெல்வம் அரியநேந்திரனின் தீய உள்நோக்கம் இதுவே ஆகும். சூழ்ச்சியாலும் சதியாலும் நாடாளுமன்ற கதிரையில் அமர்ந்த அரியம், தன்னை மட்டக்களப்பின் ஏகதலைவனாக காட்டிக்கொண்டு தனது பதவி-பட்டங்களுக்கு இடைய+று வந்துவிடக்கூடாதென்ற  முன்னெச்சரிக்கையுடன் தமிழ் மக்களின் ஒற்றுமையையும், கட்சிகளின் கூட்டினையும் சவாலுக்கு உட்படுத்துகின்றார். அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூட்டத்தின்போது கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை பல தடவைகள் துரோகி என விளித்துப் பேசியதும் கூட்டமைப்பை சிதைக்கும் முயற்சியின் ஒரு அங்கம் என்பதில் சந்தேகமில்லை.
 
இலங்கைக்குள் ஒரு நியாயமான அரசியல் தீர்வுக்கான முயற்சியில் தமிழ் மக்களாலும், சர்வதேசத்தாலும் தலைவராக அங்கீகரிகப்பட்டிக்கும் திரு. இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் எடுத்துவரும் முயற்சிகளை சீர்குலைக்கும் வகையில், இலங்கைக்குள்ளும் வெளியிலிருந்தும் சில தீய சக்திகள் மிகவும் நுட்பமாக செயற்பட்டுவருவதாகவே எமது அமைப்பு திட்டவட்டமாக நம்புகிறது. அத்தகையதொரு சக்தியின் ஏவலாளியாக நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அரியநேந்திரன் செயற்பட்டு வருகின்றாரா என்னும் சந்தேகம் வலுக்கின்றது.
 
இதன் மூலம் அத்தகைய சக்திகள் இரண்டு விடயங்களை எதிர்பார்க்கின்றன…
 
1.    இன்றைய இக்கட்டானதொரு அரசியல் சூழலில், தமிழ் மக்களின் அரசியல் சக்தியாகவும், மக்களின் ஒன்றுபட்ட குரலாகவும் செயற்பட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைபபில் இருந்து ஒரு சில கட்சிகளை வெளியேற்றுவதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதற்கான அரசியல் கட்டமைப்புசார் பலத்தை சிதைப்பது.
2.    ஜக்கியப்பட்ட இலங்கைக்குள் நியாயமான தீர்வு என்னும் இலக்கில் முன்னேறி வரும் இராசம்பந்தருக்கு உள்ளுக்குள்ளும் வெளியிலும் நெருக்கடிகளை கொடுப்பதன் மூலம் அவரின் மீது ஒருவகை உளவியல் தாக்குதலை தொடுப்பதன் மூலம் அவரை அரசியலில் இருந்து ஒரங்கட்டுவது. 
 
இந்த இரண்டு விடயங்களையும் மேற்கோள்ளும் நோக்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேந்திரன் களமிறங்கியிருக்கின்றார். இது போன்ற செயற்பாடுகளை எமது அமைப்பு வன்மையாக எதிர்த்து நிற்கும் என்பதை நாம் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம். இது போன்று எத்தகைய அவதூறுப் பிரச்சாரங்களை அரியநேந்திரன் போன்றவர்கள் மேற்கொண்டாலும், எமது அமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமது மக்களை மேலும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் எந்தவொரு செயற்பாடுகளையும் அனுமதிக்கப் போவதில்லை என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
 
 
ரி. பாலசிங்கம்,
மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர்,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்,
15.05.2012.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்கும் இரகசிய முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பா.அரியநேந்திரன் - பின்னனியில் சில திரைமறைவு சக்திகள்."

Post a Comment