வணக்கம்…
நலமாக இருக்கின்றீர்களா?...
எனக்கு பிடித்த மணிதர்களுள் நீங்களும் ஒருவர். நீங்கள் தமிழர்கள் மீதும் தமிழ்மொழி மீதும் வைத்திருக்கின்ற பற்றும் அக்கறையுமே உங்களை எனக்கு பிடிக்கக் காரணமாகும். ஆனாலும் அண்மைக் காலமாக உங்கள் மீது எனக்கு இருக்கின்ற நல்ல அபிப்பிராயங்கள் குறைந்து வருகின்றன.
நீங்கள் உண்மையாகவே தமிழ் மக்கள் மீதும் தமிழ்மொழி மீதும் பற்று வைத்திருக்கின்றீர்களா? அல்லது உங்கள் அரசியல் இருப்புக்காக இலங்கை தமிழர்களையும் தமிழ் மொழியையும் பயன்படுத்திக் கொள்ள நினைக்கின்றீர்களா?
தமிழக அரசியல்வாதிகள் சிலர் இலங்கைத் தமிழர்களை தங்கள் அரசியல் இருப்புக்காக பயன்படுத்தியிருக்கின்றார்கள். நீங்கள் அவர்களைப்போல் அல்லாது உண்மையான தமிழ் பற்றாளனாக இருக்க வேண்டும்.
நீங்கள் தொடர்ந்தும் பல தடைகளைத் தாண்டியும் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வருகின்றீர்கள். உங்களுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உன்னிப்பாக அவதானித்து வருபவர்களில் நானும் ஒருத்தன்.
இலங்கையிலே யுத்தம் நடைபெற்றபோது பாதிக்கப் பட்ட நம் உறவுகளுக்காக குரல் கொடுத்தீர்கள். உங்களது நாம் தமிழர் அமைப்பினூடாக எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்டீர்கள். அவைகளை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை எல்லோரும் அறிவர்.
இன்று இலங்கையின் கிழக்கிலே இருக்கின்ற எமது தமிழ் உறவுகள் பாரிய வெள்ளப்பெருக்கின் காரணமாக பாரிய அழிவினை எதிர் நோக்கியிருக்கின்றனர்.
கடும்மழை வெள்ளப்பெருக்கின் காரணமாக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டம் அதிகளவு பாதிக்கப்பட்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த படுவான்கரைப் பிரதேசமே மிக மோசமாகப் பாதிக்கப் பட்டிருக்கின்றது. வெள்ளம் வடிந்து கொண்டிருந்தாலும் சில பிரதேசங்களுக்கான தரை வழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றது.
காலநிலை வழமைக்குத் திரும்பினாலும் மக்களின் இயல்பு நிலை இப்போதைக்கு வழமைக்குத் திரும்ப காலங்கள் செல்லலாம். பல மக்கள் வீடுகள் உடமைகளை இழந்திருக்கின்றனர். அவர்களின் முக்கிய தொழிலான விவசாயம் முற்றாகப் பாதிக்கப் படடிருக்கின்றது.
இப்பிரதேச மக்களைப் பொறுத்தவரை யுத்தத்தினாலும் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். யுத்தத்தின் வடுக்கள் இன்னும் மாறாத நிலையில் மற்றுமோர் பாரிய அழிவை சந்தித்திருக்கின்றனர்.
கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பாரிய அழிவினை சந்தித்திருக்கின்றனர் என்பதனை நீங்கள் அறியாமல் இல்லை. தமிழர்கள் அவலங்களை சந்திக்கும்போது அவர்களுக்காகக் குரல்கொடுக்கும் உதவிக்கரம் நீட்டும் நீங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக என்ன செய்தீர்கள்.
தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் உங்களது நாம் தமிழர் அமைப்பு அந்த மக்களுக்காக என்ன செய்தது. நானறிந்தவரை எதுவும் செய்ததாகத் தெரியவில்லை.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறுபட்ட அமைப்புக்கள் பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகின்றது. உங்களாலும் உங்கள் நாம் தமிழர் அமைப்பு மூலமாகவும் ஏன் உதவிகளைச் செய்ய முடியாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கின்றேன்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முடியாத அளவில் நீங்களோ உங்கள் நாம் தமிழர் அமைப்போ இல்லை. இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் நீங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டாதது ஏன்? யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மட்டுமே குரல் கொடுப்பீர்காளா? உதவிக்கரம் நீட்டுவீர்களா? வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ் மக்களில்லையா?
நீங்களும் இலங்கை இனப்பிரச்சினையையும் இலங்கை தமிழர்களையும் வைத்து அரசியல் நடாத்த நினைக்கின்றீர்களா?
நீங்களும் உங்களது நாம் தமிழர் அமைப்பும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற உதவிக்கரம் நீட்டுகின்ற அமைப்பு என்பதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எமது தமிழ் உறவுகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யும்படி அன்பாக வேண்டிக் கொள்கின்றேன்.
அன்புடன்…
சந்ரு
1 comments: on "சீமானுக்கு தாயகத்திலிருந்து ஒரு கடிதம்"
சீமான் மட்டுமல்ல உதவ முடிந்தவர்கள் முன்வருவது நல்லது
Post a Comment