Saturday, 22 January 2011

அதிகம் சொத்து சேர்க்க விரும்புகிறிர்களா? இருக்கிறது இலகுவான வழி

ஆரயம்பதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தனின் கருத்துக்கள். 

எனக்கு சொத்துச் சேர்க்க நான் அரசியலுக்கு வரவில்லை மக்களின் விடிவே எமது முடிவு-கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்

prasanthan-annan-photo1தொடர்ந்தும் மக்களை மடையர்களாக கையேந்தும் சமூகமாக மாற்றி அரசியல் தலைமைகளின் எண்ணங்களுக்கு ஆடும் பொம்மைகளாக மாற்றுவதற்கோ தனிப்பட்ட ரீதியில் எமது வங்கி இருப்பையோ, சுகபோகங்களை அனுபவிக்கவோ அரசியல் பாதைக்கு வந்தவனல்ல. நான் சாதாரண ஏழைக் குடும்பத்தில் எங்கோ ஓர் மூலையில் பிறந்த என்னை ஆட்சிபீடம் ஏற்றிய மக்களின் அபிலாசைகளையும், உரிமைகளையும் மக்கள் பிரதிநிதியாக ஜனநாயக ரீதியில் பெற்றுக்கொடுப்பதற்காகவே மக்கள் எனக்கு வாக்களித்தார்கள்.
நான் சார்ந்த எனது கட்சியும், அதன் தலைவர் கௌரவ.சி.சந்திரகாந்தனும் அவ் வழியே தன்னுயிரைத் தியாகம் செய்யத் துணிந்த நேர்மை மிக்க தலைவன். அவரின் பாசறையிலுள்ள நாம் அநியாயத்திற்கும், ஊழலுக்கும், அடாவடித்தனங்களுக்கும் ஒரு போதும் துணை நிற்கப் போவதில்லை என்பதை அனைவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். உண்மை ஆரம்பத்தில் கசக்கும். ஆனால் அது தான் நிரந்தரம். ஒரு பொய்யை மறைத்து மக்களுக்கு துரோகம் செய்ய முற்பட்டதன் விளைவே மண்முனைப்பற்று பிரதேச செயலகம் மீதான மக்களின் கிளர்ச்சிக்குக் காரணம். இதில் எந்த அரசியல் பின்புலமும் இல்லை. இருக்கவும் தேவையில்லை.

 அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் பணிப்பில் கௌரவ.பசில் ராஜபக்ச அவர்களின் நேரடி கண்காணிப்பில் பெருந்தொகையான பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதும் அவை அப் பகுதி மக்களுக்கு சென்றடையாது போவதும் மக்கள் அறிந்த உண்மை. பசித்த வயிற்றுக்கு புசிப்பதற்கே அரச நிவாரணம். மாறாக ஒரு சில ஊழல் பேர்வழிகளின் வங்கிக் கணக்கையும், மாடிவீடுகளையும் அமைப்பதற்கல்ல. பல அரச அதிகாரிகள் வெள்ளம், புயல் என அனைத்து அனர்த்தத்திலும் இரவு பகல் பாராது அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர். இவர்களுள் அரச அதிகாரி என்ற பெயரில் ஒரு சிலர் செய்யும் துரோகமே மக்களை அரசு மீது வெறுப்படையச் செய்கின்றது.
மண்முனைப்பற்று சம்பவமும் அவ்வாறே அவசரப் பொலிஸ் கையும் களவுமாகப் பிடித்த கிராம சேவையாளர் S.A.சுரேஸ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படாது தேக்கிவைக்கப்பட்டுள்ளது என்றே மறு நாள் ஆர்ப்பாட்டத்தில் குறித்த மக்கள் கூக்குரலிட்டனர். எது எவ்வாறு இருப்பினும் முறைப்பாடு கிடைத்தால் நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரதேச செயலாளர் அதனை மூடி மறைக்க முற்பட்டதாகவும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிவாரணப் பொருட்கள் பிரதேச செயலகத்தில் வைக்கப்பட்டமை குறித்துமே மக்கள் புரட்சி கிளர்ந்தெழுந்தது.

அரசினால் கிடைக்கும் நிவாரணப் பொருட்கள் குறைவாகப் பகுதி பகுதியாகக் கிடைத்தாலும் அதனை முறையாக பங்கீடு செய்வதற்காகவே அனர்த்த முகாமைத்துவப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது. மாறாக அனைத்தும் வரும்வரை சேமித்து வைப்பது சிறந்த முகாமைத்துவமுமல்ல. மனிதாபிமானமுமல்ல. அனைவரும் முதலில் மனிதர்கள். அதன் பின்பே அதிகாரிகள். இதனை தட்டிக் கேட்க வேண்டிய ஜனநாயக உரிமை மக்களுக்கு உண்டு.
மிக சிரமப்பட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களும் கிழக்கு மக்களின் மத்தியில் ஜனநாயகக் காற்றை சுவாசிக்க இடம் கொடுத்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனும் மக்களிடம் விதைத்தது ஜனநாயகப் பாதையையே ஆகும்.

ஜனநாயக அடிப்படையில் மக்கள் தமக்கு நிகழ்ந்த அநீதியை தட்டிக் கேட்க முற்பட்ட போது மக்களால் குறிப்பிடப்பட்டது போல் குற்றம் புரிந்த கிராம சேவையாளரை கைது செய்யாது மூடி மறைக்க முற்பட்டது தான் ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக கைகலப்பிற்குக் காரணமாக அமைந்தது என்பதே வெளிப்படை.

மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மக்களுக்கு எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அங்கு சென்று மக்கள் குறைதீர்க்க வேண்டியது எனது கடமை. அதே போல் ஆளும் கட்சி பிரதிநிதி என்ற ரீதியில் அரச நிருவாகத்தினை பாதுகாத்து நெறிப்படுத்த வேண்டியதும் எனது பொறுப்பு. அதற்கு மேலாக மண்முனைப்பற்று மக்கள் எனக்கும் எனது த.ம.வி.கட்சிக்கும் 91மூ வாக்கு வழங்கி ஆட்சிபீடம் ஏற்றியவர்கள். அங்கு பெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டால் அவ்விடம் செல்லவேண்டியது எனது தார்மீகப் பொறுப்பாகும். அதன்படியே நான் அங்கு சென்றேனே தவிர பிரதேச செயலாளருக்கோ எனக்கோ தனிப்பட்ட எந்த குரோதமும் கிடையாது. குறித்த பிரதேச செயலாளர் மண்முனைப்பற்றிற்கு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட வேண்டும் என்பதில் முனைப்போடு இருந்தவன் நான் என்பது வெளிப்படையான உண்மை.


குற்றம் எவர் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. அதற்கு மாறாக அதிகாரிகள் சிலர் குற்றத்தினை புரிந்த ஓர் அதிகாரிக்கு குற்றத்தினை மறைக்க எத்தனிப்பது நொந்துபோன எம் சமூகத்தின் எதிர்கால சுபீட்சத்திற்கு வழிசமைக்காது.
ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் கடந்த சுனாமி அனர்த்த நிவாரணத்தின் போதும் இதே முறைப்பாடு மக்களால் கிடைக்கப்பெற்றது. அதே போல் யுத்த கால நிவாரணத்தின் போதும் இதே முறைப்பாடு. வெள்ள நிவாரணத்தின் போதும் இதே முறைப்பாடு. எங்கு தவறு உள்ளது. அதனை கண்டுபிடிக்க வேண்டுமே தவிர மூடி மறைக்க யாரும் துணைபோகக் கூடாது என இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கின்றேன்.

எடுத்தோம் கவுத்தோம் என சில முக்கிய அரசியல் தலைவர்களும் உண்மை அறியாது அநீதிக்கு துணை போக முற்படுவதும் எதிர்கால வாக்கு வங்கியைத் தக்க வைக்க முனைவதும் வேதனைக்குரியது.

இறைவனால் கொடுக்கப்பட்ட அரசியல் மக்கள் பிரதிநிதி என்ற பொறுப்பு மிக்க சுமையை மக்களுக்காக சுமக்க வேண்டுமே தவிர சுயநலத்திற்காக சுமக்கக் கூடாது. சுயநலம் மேலோங்கியதன் விளைவே 60 வருட மக்களின் துன்ப நிலைக்குக் காரணம்
அரச சொத்துக்களை சேதம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அப்படியெனில் முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர் குறித்த கிராம சேவையாளரே. குறித்த கிராம சேவையாளரே மக்களுக்காக வழங்கப்பட்ட அரச நிவாரணத்தினை பதுக்கி வைத்தவர் என மக்கள் கூறுகின்றனர். இதற்கான தீர்வு கிடைக்காதததன் விளைவே 16.01.2011ம் திகதி மக்கள் கிளர்ச்சிக்குக் காரணம் என்பது மக்களின் உள்ளங்கனி நெல்லிக்கனியான கருத்து.

குறித்த கிராம சேவையாளரையோ அல்லது அம் முகாம் நடாத்தியதாகக் குறிப்பிடப்படும் குறித்த குற்றச் செயலுடன் தொடர்புபட்ட அமைப்புக்களையோ மக்கள் மத்தியில் ஆராய்ந்து மக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கவேண்டியதும் அதிகாரிகளின் பொறுப்பு என்பதனை நான் உணர்கின்றேன்.

அரசும், அரசு சாரா நிறுவனங்களும், ஊடகங்களும், தனிநபர்களும் ஏனையவர்களிடமும், வெளிநாடுகளிடமும் பாதிக்கப்பட்ட மக்குளுக்காக யாசகம் கேட்டு பாடுபடும் நிலையில் பதுக்கல்கள், சுருட்டல்கள், முறைகேடுகள் எவராலும் அனுமதிக்க முடியாது. அரசியல்வாதிகளையும், அரச அதிகாரிகளையும் மக்கள் அனர்த்த காலங்களில் தெய்வமாக, துயர்துடைப்பவர்களாக நேசிக்கின்றனர்.

 அதற்கு தகுதி உடையவர்களாக நாம் அனைவரும் பாடுபட வேண்டும். கதிரைகளைச் சூடாக்கும் கடந்த கால நிலைக்கு யாரும் தூபமிடக் கூடாது என்பதே வற்றிய வயிற்றுடனும், ஒட்டிய மார்புடனும், மனச்சுமைகளுடனும் இருக்கும் மக்களின் எதிர்பார்ப்பு. எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில் மக்களின் குமுறலை திசை திருப்பாது குற்றம் சுமத்தப்பட்ட கிராம சேவையாளர் ளு.யு.சுரேஸ், அவருடன் சம்பந்தப்பட்ட குழு, பிரதேச செயலாளர் ஆகியோர் மீது அரசு விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். 
நன்றி
என்றும் மக்கள் சேவையில்,
கி.மா.ச.உ.பூ.பிரசாந்தன்
மாகாணசபை உறுப்பினர்,
கிழக்கு மாகாணம்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அதிகம் சொத்து சேர்க்க விரும்புகிறிர்களா? இருக்கிறது இலகுவான வழி"

Post a Comment