Sunday, 5 February 2012

மட்டக்களப்பு பேச்சுத் தமிழுக்கு செந்தமிழ் அங்கிகாரம்..

மட்டக்களப்பு பேச்சித் தமிழுக்கு யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் செந்தமிழ் அங்கிகாரம் வழங்கியிருப்பது ஒன்றும் ஆச்சரியப்படும் ஒன்றல்ல. மட்டக்களப்பு தமிழர்கள் எவ்வாறு பூர்வீகக் குடிகளோ அவ்வாறே அவர்கள் பேசும் தமிழ் செந்தமிழாகப் போற்றப்படுவதற்க்கு வடமொழிக்கலப்பு மிகவும் குறைவாக இருப்பது ஒரு காரணமாகும் என பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் வெளியான மட்டக்களப்பு மாநாட்டு நினைவு மலர்-1996 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தமிழர்கள் பேசும் தமிழ் பழந்தமிழ் இலக்கியங்களில் எல்லாம் இழையோடி நிற்பதனை சான்றாதாரத்துடன் நிரூபித்திருக்கும், இலங்கையில் ஆரம்ப குடிகளாக இங்குள்ள தமிழர்களும் வாழ்ந்தார்கள் என்பதனை வாகரை வாணன் அவர்களின் ‘”பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ்’ எனும் நூலை ஆதாரமாகக்கொண்டு ஆணியடித்துச் செல்ல இதனை வரைகிறேன்.

மட்டக்களப்புக்குள் இருக்கும் மகிமை உலகின் மூலை முடுக்குகளில் கிழம்பி வருவதற்க்கான சந்தர்ப்பங்கள் நீண்டநாள் யுத்தச் சூழல், அடக்குமுறை, பாராபட்சம், ஒதுக்கித்தள்ளுதல் என்கின்ற தடைகளால் முடங்கிக்கிடந்தமை, அந்த மக்களை பாரம்பரியத்தின் வழிவந்தவர்களா? ஏன உலக அரங்கில் கேள்வி கேட்க வைத்தமை இந்த ஆதாரங்களை பார்க்கும்போது மனம் வருந்த வைக்கிறது.

இதற்க்கு சான்றுகள் தேவையல்லவா இதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னால் தமிழ்துறைத் தலைவர் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் மட்டக்களப்பு தமிழின் சிறப்புகள் பற்றி குறிப்பிடுகையில், ‘மட்டக்களப்பு தமிழகம் சமீபகாலம் வரையில் பிறபகுதி மக்களுடன் தொடர்புகொள்ள முடியாத நிலையில் வாழ்ந்துவந்ததால் அவர்கள் மொழி தன்னியல்பு சிலவற்றினை கொண்டு விழங்குகின்றது. மட்டக்களப்பு தமிழ் சொற்களையும் மலையாளச் சொற்களையும் ஒப்பிட்டு நோக்கும்போது மட்டக்களப்புச் சொற்களில் சில மலையாளச் சொற்க்கள் மட்டும் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’ எனக் கூறுகிறார்( மட்டக்களப்பு பிரதேச சாகித்திய விழா நினைவு மலர்-1993).

இதற்க்கு அவர் மேலும் வலுவூட்டும் ஒன்றாக மட்டக்களப்பு தமிழே மிகவும் செந்தமிழ் பண்புடையது எனும் கருத்து 1966 ஆண்டில் கமில சுவெலபியினால் அறுதியிடப்பட்டுக் கூறப்பட்டுள்ளமை இங்கு எடுத்துச் சொல்லக்கூடியதாக உள்ளது.
கதிரவெளியில் கண்டு பிடிக்கப்பட்ட சிவலிங்க ஆதாரம்.
செந்தமிழ் என்பது அது உயிர்த்துடிப்புள்ள ஆதித் தமிழ். அதற்க்கு சான்றாக ஒரு சமுகம் பேசுகின்ற பேச்சு வழக்கு, பழம்பெரும் இலக்கியங்களில் எழுதப்பட்டிருக்கவேண்டும். அந்த வகையில் மட்டக்களப்பு பேச்சுத்தமிழ், சுவையான தமிழ் இலக்கிய நூல்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளது ஒன்றும் ஆச்சரியம் இல்லை என வாகரைவாணன் அவரது ‘பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ்’ எனும் நூலில் அடிச்சுக் கூறுவது தெழிவாகிறது.
இதில் வரலாற்றுப்பாதையை சற்று திரும்பிப் பார்ப்போமானால், மட்டக்களப்பில் கி.மு 5ம் நூற்றாண்டிலே கதிரவெளி, மற்றும் கட்டுமுறிவில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் ஆதாரங்கள் வரலாற்றுக்குறிப்புகள் எமது முன்னோர்கள் நனி நாகரிகமாக வாழ்ந்துள்ளனர் எனக் கூறுகிறது. இம்மக்கள் பேசிய தமிழ் சொற்க்கள் சில இன்னும் சிதைந்துபோகாமல் அவர்கள் பரம்பரையினர் நாவில் நடமாடுகின்றமையும், அச்சொற்க்கள் பரிபாடல், கலித்தொகை, தொல்காப்பியம், அகநாநூறு, புறநாநூறு, குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றமை மட்டக்களப்புத் தமிழரின் தொன்மையை நிரூபிக்கப் போதுமானவை என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

இதனையே மட்டக்களப்பு தமிழக ஆசிரியர் பண்டிதர் வி.சீ.கந்தையா அவர்கள் கூறிய பின்வரும் கூற்று அணிசெய்யும். ஒரு நாட்டின் பண்டைய வரலாற்றை அறிவதற்க்கு புத்தகங்களும் செய்யுளம்தான் வேண்டும் என்பதற்க்கில்லை. அந்நாட்டு மொழி அல்லது சொல்க்கூட வரலாறாருரைக்கும் பெருங்காவியமாய் அமையும் (மட்டக்களப்புத் தமிழகம் -பக்.86)
நான் முன்பும் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன் அது மட்டக்களப்பில் பேசப்படும் சொற்க்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் வருவதாகக் கூறியதற்க்கு, ஆதாரக்குறைவு இருந்தமையை பல அன்பர்கள் சுட்டிக்காட்டியமைதான் எனது தேடலை தூண்டியது. அவர்களில் குறிப்பாக டீடீஊ யின் எமது மதிப்பிற்க்குரிய நிருபர் சீவகன் அவர்கள் என்னை இவளவு ஆதாரத்துடன் எழுதத் தூண்டியவர் என பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

எனவே பண்டிதர் வி.சீ.கந்தையா அவர்களின் கூற்றுக்கு அணிசேர்க்கும் வரலாருரைக்கும் வழக்காறுகள் சிலவற்றினை தொட்டுச் செல்லலாம்.
மட்டு மண்வாசனை மாறாத மூதாட்டி ஒருவர்.
முதலில் மட்டக்களப்பின் கிராமப்புறங்களில் இன்றும் வழக்கிலுள்ள ‘கா’ எனும் சொல் வயதானவரை அல்லது தமக்கு மிகவும் நெருக்கமானவர் ஒருவரைக் கண்டால் ‘எங்ககா போறா’ என்ன கா பாடு? ஏன்று வினவுதல் வழக்கு. இது அவர்களது நாட்டுப்பாடல்களிலும் இடம் பெறுவதை வாகரை வாணர் இவ்வாறு காட்டுகிறார்.

‘வாழைப்பழம் எடுகா, வம்பரையில் தேனெடுகா’ எனும் பாடலும் அதுபோல், சிலப்பதிகாரம், கலித்தொகை ஆகிய நூல்களிலும் சான்றாக வருகிறது.
பொய்யாமை நுவலும் நின் செங்கோல் அச்செங்கோலின்
செய்தொழிற் கீழ்ப்பட்டாளோ இவள் காண்டிகா! –மருதக்கலி
அதுபோல் சிலப்பதிகாரத்தில் இது “கணிகா வாய்வதின் வந்த குரவையின் வந்தீண்டும்” எனவும் வருவது இம்மக்கள் பேசும் தமிழ் அன்று இலக்கியத்தில் வந்துள்ளதை காட்டுகிறது.

நான் சிறுவனாக இருக்கும் பொழுதுகளில் என்னுடைய மாமாவின், அப்பப்பாவின் வெற்றிலைத் தோட்டத்துக்கு செல்லுவது வழக்கம், அங்கு துரவு கிண்டி அதற்க்குள் ஒரு பழய பொந்துள்ள மரத்தை நிறுத்தி பூவல் அமைத்து அதில் இருந்து கிடைக்கும் நீரை குடிக்கப்பயன்படுத்துவதை பார்த்திருக்கிறேன். ஆனால் அவை 2000 ஆணடுகளுக்கு முன்னமே கூவல் என அழைக்கப்பட்டதுடன், இவை பழந் தமிழ் இலக்கியங்களில் ‘ அரிது உன் கூவல்’ ‘கண்படு கூவல் தோண்டி’ என புறநாநூற்றிலும், ‘ஐங்குறு கூவல் கீழ்’ என ஐங்குறுநூற்றிலும் சொல்லப்படுகிறது.
மட்டக்களப்பு மதுரத்தமிழில் முக்கியமாக பேசப்படும் இன்னொரு சொல் ‘மருங்கை’ இது ஒரு குழந்தையின் பிறப்பை ஒட்டி நடைபெறும் சடங்கு ஆகும். இச்சடங்குக்கு பக்கத்தில் உள்ளவர்களை அழைப்பதனாலேயே (மருங்கு-பக்கம்) இச்சடங்கு மருங்கை எனச் சொல்லப்பட்டது. இச் சொல் பண்டைய இலக்கியங்களில் பல இடங்களில் பாவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புனர்ந்த ஐந்திணை மருங்கின்- தொல்காப்பியம்.
மருங்கில் கொண்ட பல்குறுமாக்கள்- புறநாநூறு.
பெருவழி மருங்கில் -அகநாநுர்று.

என அடுக்கிக் கொண்டு போகலாம். இன்னொரு மறக்கமுடியாத மட்டக்களப்பாருக்கே உரித்துடைய சொல் என்றும் சொல்லிவிடலாம். அது சூடு எனும் சொல்லன்றி வேறில்லை. வயலில் விளைந்த கதிர்களை தாக்கத்தி (தாள்10 கத்தி) கொண்டு அறுத்தெடுத்து களத்தில் அகலப்பரப்பி அவற்றின் மீது அவற்றின் மீது எருமைக் கடாக்களை நடக்கவிட்டு மிதித்து வைக்கோலில் இருந்து நெல்லை வேறாக்கும் செயலே சூடு போடுதல் எனப்படும். சூடுபோடும் போது நெல் மிகுதியாகக் கிடைக்க வேண்டும் என்ற பெருஆசையில் பெருமக்கள் பொலி பொலிதாயே பொலி குரல் எடுத்து பாடுவார்களாம்.
இந்த முறையில் சூடு போட்டு அவுரியில் மீது நின்று பதர் போகத் தூற்றி எடுத்து, அவணக்கணக்கில் சாக்கில் கட்டி வண்டியில் கொண்டுவந்து வீட்டு முற்றத்தில் பட்டறை கட்டி வைப்பர். உழவுத் தொழிலுடன் இரண்டறக்கலந்த வெள்ளாமை, சூடு, களம், பொலி, பட்டடை(பட்டறை), ஆகிய சொற்க்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் பதியப்பட்டுள்ளமை, தமிழர் வாழ்வோடு அத்தொழில் ஒன்றித்தமையைக் காட்டுகிறது என வாகரைவாணன் புட்டுக்காட்டுவது மட்டக்களப்பு தமிழின் மகிமையை தொட்டுக்காட்டுகிறது அல்லவா.

நீடு கதிர்கழனி சூடு தடுமாறும் – புறநாநூறு.
வயல்வெளி ஆம்பல் சூடு தடுப்புதுப்பூக்
கன்றுடை புனிற்றா தின்ற மிச்சில் -நற்றினை.
வட்டில் வாய்வைக்கும்..
பெட்டியால் வாரிப் பட்டடை நெல்லெல்லாம் -முக்கூடற்ப்பள்ளு
பல வெள்ளாமையிட்டேன் மணல் வாரியைப்
பண்டு நம் பெருமான் கட்டழித்தார்- முக்கூடற்ப்பள்ளு
பொலி தூற்றி ஆற்றிப் பொலி
பொலி யென்றளப்பார்- முக்கூடற்ப்பள்ளு
என்பன அவை பழந்தமிழ் இலக்கியச் சொற்கள் என்ற சான்றை கொண்டுள்ளது என்பதற்கு தக்க எடுத்துக்காட்டு.

இன்னும் ஒரு உன்னதமான சொல் மட்டக்களப்பில் இவர்கள் பயன்படுத்துவார்கள் அது ‘ஏமம்சாமம்’ என்பதுதான். இங்கு ‘சாமம்’ இது இரவு என்று பொருள்படும். இதற்கு சூடாமணி, நிகண்டு என்பன சாட்சியளிக்கின்றன. ஏமம் என்கின்ற சொல் மலையாள மொழியிலும் உண்டு என்பார் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள்.
குறிஞ்சி, கூதீர் யாமம் என்மனார் புலவர் (தொல்காப்பியம்)
இடையிருள் யாமத்து என்னையீங்கு
அழைத்தனை (மணிமேகலை)

நளன் யாமத்தும் பள்ளிகொள்ளான் (நெடுநல்வாடை)
இன்னொரு சொல் மட்டக்களப்பு தமிழகத்தில் இதை உச்சரித்தாலே பக்தி, பயம், சந்தோசம், தூய்மை என்பன குடிகொண்டுவிடும் அந்தச் சொல் தான் ‘சடங்கு’ (வைகாசிச் சடங்கு, வைரவர் சடங்கு). சடங்குகளின்போது, கண்ணூறு, நாவூறு கழிப்பதற்க்காகச் செம்பில் தண்ணீர் ஓதிக் கொடுத்தல் என்பன பட்டி தொடங்கி பட்டினம் வரைக்கும் விசேசமாக நடைபெறும் வழக்குகள். புழந்தமிழ் இலக்கியங்களும் இதனைப் பறைசாற்றுகிறது.
சீர் மறைத் தொழிற் சடங்கு செய்திருந்து
நூல் முனிவர்…..(பெரிய புராணம்)
போற்றுஞ் சடங்கை நன்னாதே…(கடு வெளிச் சித்தர்)
இன்னொரு மட்டக்களப்பு தமிழகத்தில் எம்முன்னோர் இன்றும் பேசும் ஒரு மரக்கறி வகை வழுதுணங்காய் என்கின்ற சொல். அதை ஒரு நாட்டுப்புறக் கவிஞர்கூட இப்படிச் சொல்லியது ஞாபகம் வருகிறது.
‘வாழக்காய் மந்தம்
வழுதுணங்காய் செங்கிரந்தி
கீரை குழுமை –என்
கிளிமொழிக்கு என்ன கறி?’
அதுபோலவே பழந்தமிழ் செப்பேடுகளில் அவை வந்துள்ளமை ஆச்சரியமில்லை.

‘வட்டும் வழுதுணையும் போல் வாரும்’ (நாலடியார்)
மட்டக்களப்பு தமிழக மக்கள் அனேகமாக சமைப்பதற்கு தேவைப்படும் விறகினை ‘கொள்ளி’ என்றே பேச்சு வழக்காக இன்றும் கொண்டுள்ளமையும் அவை அன்றே பழந்தமிழில் செந்தமிழாக வந்துள்ளமையும் இம்மக்களின் பூர்வீகத்துக்கு எடுத்துக்காட்டே.
குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி (புறநாநூறு)
கொள்ளி வாய்ப் பேய்க் குழவிக்கு (கலிங்கத்துப் பரணி)
ஆனால் இப்போது இம்மக்கள் கொள்ளி என்பது ஏதோ கொச்சைத் தமிழ், படியாதவன் பேசும் ஒன்று என நினைத்து அவர்களது நல்ல வழக்காறுகளை வழுக்க விட்டுக்கொண்டிருப்பது பரிதாபமே.
அடுத்தது ஆணம் எனும் மட்டக்களப்பு தமிழர்களின் கறிவகைகளில் ஒன்று. கொச்சிக்காய் தூள் போடாமல் தேங்காய்ப்பால் நிறைய விட்டு ஆக்கப்படும் சுவையான கறி இது. அதற்க்கு மரணவீட்டு அமுதுகளில் நல்ல மரியாதை உண்டு. மண்டல புருடர் வழங்கிய சூடாமணி நகண்டு ‘ஆணமே குழம்பொடு’ என்று சொல்கிறது. இது போலவே தமிழர் திருநாள் தைப்பொங்கலிலும், கோயில் திருவிழாக்களிலும் புக்கை அல்லது பொங்கலுக்கு பஞ்சம் இருக்காது. புழந்தமிழ் இலக்கியங்களிலும் புக்கை, புற்கை என்று இருப்பதனை இங்கே காணலாம்.

தெள்நீர் புற்கை ஆயினும் தாள் தந்து
உண்ணலின் ஊங்கு இனியது இல் (திருக்குறல்)
நெடுநீர் புற்கை நீத்தனம் வரற்கே (புறநானூறு)
அடுத்து ஒசில் என்னும் மட்டக்களப்பு தமிழ் ஒயில் எனும் சொல்லின் திரிபாகும். இதற்க்கு அழகு என்று பொருள். ஆனால், ஒசில் என்பது சந்தர்ப்பத்தைப் பொறுத்து அழகின்மையையும் சுட்டும். பட்டினத்தார் இச்சொல்லை பல இடத்தில் பயன்படுத்தியுள்ளார். அது ‘ஒயிலான வன்னமயிற் கொத்தவளென்றும்’ எனும் சான்றாகும்.
மட்டக்களப்புச் சொல்லில் பிறகு என்பது பேச்சுத் தமிழில் பின்ன என்று வரும். திருவாசகத்திலும், பெரிய புராணத்திலும் இதன் திருத்திய வடிவமான பின்னை இருக்கிறது.
‘படுவேன் படுவதெல்லாம் நான்
பட்டாற் பின்னை பயனென்னே!’ (திருவாசகம்)
குழறுதல் என்னும் மட்டக்களப்புத் தமிழ் சொல்லுக்கு புலம்புதல் என்று பொருள். இது இலக்கியங்களில் இவ்வாறு வருகிறது.
குயில் பைதல் காள் கண்ணன் நாமமே
குழறிக் கொன்றீர்’ (நம்மாழ்வார்)

இவ்வாறு மட்டக்களப்பு தமிழகம் பயின்று வந்திருக்கும் அழகு தமிழ் சொற்க்கள் போன்று இன்னும் உழக்குதல், திண்ணை, வெட்டைக்குப்போ, கச்சை, அறுநாக்கொடி, குடி, குரவை போன்ற நற்தமிழ் சொற்க்கள் இன்றும் இம்மக்களின் நாவில் தவழ்வது அன்றய பழந்தமிழ் இலக்கியங்களில் அழியா மறைச் சான்றாதாரங்களாக மிழிர்வது இம்மக்களின் பூர்வீகம், உரித்து, என்பனவற்றை பறை சாற்றுகிறது. இந்த எடுத்துக்காட்டுகள் மட்டக்களப்பில் வழங்கும் தமிழ் சொற்க்களின் பழமையையும் செழுமையையும் சங்க இலக்கியங்கள் உட்பட பழந்தமிழ் இலக்கியங்களை சான்றுகாட்டி மேலே விழக்கியதன் மூலம் மட்டக்களப்பு உட்ப்பட ஈழத்திருநாடு எங்கும் தமிழர்கள் மிகப் பழங் காலந்தொட்டே வாழ்கிறார்கள் என்பதனை உறுதிப்படுத்துவதுடன். மட்டக்களப்பின் தமிழ் செந்தமிழ் அந்தஸ்த்து பெறுவதற்க்கு அவர்களின் இனிய எழிய மொழிவழக்கும் ஒரு காரணம் என்று பேராசிரியர் கூட அழுத்திச் சொல்வது இம்மக்களின் பாரம்பரியத்தினை உறுதிப்படுத்துகிறது அல்லவா.
ஆக்கம்: சி.தணிகசீலன்

நன்றிகள் www.battinews.com www.meenmagal.net

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

4 comments: on "மட்டக்களப்பு பேச்சுத் தமிழுக்கு செந்தமிழ் அங்கிகாரம்.."

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இதில் நீங்கள் குறிப்பிடும் பல சொற்கள் இலங்கையின் பல பாகங்களிலும் கேட்டுள்ளேன்.
வழுதுளங்காயென்பது கத்தரிக்காயா?
வரகரிசிச்சோறும் வழுதுளங்காய் சாறும்...எனும் ஔவை பாடலும் உள்ளது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மன்னிக்கவும்- வழுதுணங்காய் என வாசிக்கவும்.

சந்ரு said...

கத்தரிக்காய்தான் நண்பா

சந்ரு said...

ம்... வழுதுளங்காய் என்றுதான் சொல்வதுண்டு

Post a Comment