Sunday, 15 May 2011

இப்போ எந்த உலகத்தில் ஐயா இருக்கிறீங்க கலைஞருக்கு ஒரு கடிதம்


தேர்தல் நடந்து முடிந்து இருக்கின்றது அம்மா ஆட்சிக்கு வந்திருக்கின்றார். தமிழக அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை இலங்கை தமிழர்களையும் இலங்கையின் இனப்பிரட்சினையையும் வைத்து அரசியல் நடாத்த நினைப்பவர்கள். 

யார் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசியல்வாதிகளால் எதுவும் கிடைக்கப்போவதில்லை.

இலங்கைத் தமிழர்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவிக்கின்றபோது கண்டும் கானாதவர்கள்போல் இருக்கின்ற தமிழக அரசியல்வாதிகள் தேர்தல் நெருங்குகின்றபோது இலங்கை தமிழர்களை தமது துருப்பு சீட்டாக பயன்படுத்துவது யாவரும் அறிந்ததுதான்.

இலங்கையின் இறுதிக் கட்டப்போரின்போது உலகமே தமிழருக்காக குரல்கொடுத்தபோது தமது இனம் படுகொலை செய்யப்படுவதையே காணாததுபோல் இருந்த தமிழக அரசியல்வாதிகள் அன்று இறுதி யுத்தத்தின்போது தமிழனுக்காக குரல்கொடுக்காத தமிழக அரசியல்வாதிகள் இன்று இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிடுவது சிரிக்கத் தோன்றுகின்றது.

இன்று குரல் கொடுப்பவர்கள் அன்று தமிழன் யுத்த முனையில் சிக்கித் தவிக்கும்போது குரல் கொடுத்திருக்கலாம்தானே.

 கலைஞருக்கு மக்கள் சரியான தீர்ப்பை வழங்கி இருக்கின்றனர். இருந்தபோதும் ஆட்சிக்கு வந்திருக்கின்ற அம்மாவினாலும் இலங்கை தமிழர்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. இதற்கு அவரது கடந்தகால நடவடிக்கைகள் சாட்சி...


எது எப்படி இருப்பினும் அன்று தமிழனுக்காக தனது இனத்துக்காக குரல் கொடுக்காத தமிழக அரசியல்வாதிகள் இன்று இலங்கை அரசுக்கு எதிராக குரல்கொடுப்பதட்கு அருகதை அற்றவர்களே.

அன்று கலைஞருக்கு நான் எழுதிய கடிதம் மீண்டும் தருகிறேன். காலத்துக்கு பொருத்தமாக இருப்பதனால். 


வணக்கம் ஐயா....




நலம்தானே..... நலமாக இருப்பிர்கள் என்று நம்புகின்றேன்.....


உங்களை நான் அறிந்த நாள் முதல் எனக்குப் பிடித்த முதன்மையான மனிதர்களில் ஒருவராக நினைத்துவந்தேன். இருந்தும் இன்று இலங்கைத் தமிழர்கள் மீதான உங்களின் பாராமுகமும், நடவடிக்கைகளுக்கும் உங்கள் மீதிருக்கின்ற எனது நல்ல அபிப்பிராயங்களை தவிடுபொடியாக்கிவிட்டன.




உங்களின் தமிழ் பற்றே எனக்கு உங்களைப் பிடிப்பதற்குக் காரணம். ஆனால் இன்று பார்க்கின்றபோது உங்களிடம் உண்மையான தமிழ் பற்று இருக்கின்றதா? அல்லது உங்களின் இருப்புக்கான தமிழ் பற்றா என்றெல்லாம் எண்ணத் தோன்றுகின்றது. 
உங்கள் தமிழ் பற்று உண்மையானதெனில் பாராட்டப்படவேண்டியதுதான். இருந்தாலும் சில விடயங்களிலே நீங்கள் பாராமுகம் காட்டியிருப்பது வேதனையளிக்கின்றது.
இலங்கையிலே இருக்கின்ற தமிழ் மக்கள் பல காலங்களாக பல அடக்கு முறைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகிவருகின்றனர். இது நீங்கள அறியாமல் இல்லை. இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக அவ்வப்போது நீங்கள் குரல் கொடுத்தமைக்கு நன்றிகள். இதனை எமது பிரதேசத்திலே குரைத்துவரும் நாய்க்கு தேங்காய்க் கட்டி போடுவது என்று சொல்வார்கள். இலங்கைத் தமிழர்கள் உங்களை நம்பி கையேந்துகின்றபோது உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று ஏதாவது செய்து இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி விடுவிர்கள்.



இலங்கை தமிழ் மக்கள் படுகின்ற இன்னல்களை நீங்கள் அறியாதவர் இல்லை இதுவரை நீங்கள் இலங்கைத் தமிழர்கள் தொடர்பிலே காத்திரமான என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றீர்கள். 
எமது மக்களின் குரல்கள் நசுக்கப்பட்டு எமது மக்கள் மரணத்தின் பிடியிலே சிக்கித் தவித்தபோது எமது மக்கள் மட்டுமன்றி உலகத் தமிழர்களே உங்களை நம்பியிருந்தனர். உங்கள் மூலமாக, இந்திய மூலமாக தமிழர்களின் இறுதி மரண ஓலங்கள் நிறுத்தப்படுமென்று. அன்றைய நாட்களில் எம் மக்கள் பட்ட,சந்தித்த அவலங்களைப் பார்த்து உலக மக்களே கண்ணீர் வடித்தனர். நீங்கள் என்ன செய்தீர்கள்? 
அன்றைய நாட்களில் உங்கள் காதுகள் செவிடானதா? கண்கள் பார்வை இழந்ததா? அல்லது வேறு உலகத்திலே இருந்தீர்களா? எம் தமிழினம் அழிந்துகொண்டிருக்கும்போது பாராமுகமாக இருந்துவிட்டு தமிழ் மொழியை வளர்ப்பதுபற்றிப் பேசுவது சிரிக்கத் தோன்றுகின்றது. 


தமிழ் மொழியை வளர்ப்பதுபற்றிப் பேசுவது சிரிக்கத் தோன்றுகின்றது. தமிழை வளர்ப்பதற்கு முன்னர் தமிழைப் பேசுகின்ற மக்கள் அழிக்கப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுங்கள் அம்மக்களால் தமிழ்மொழி தானாகவே வளர்க்கப்படும்.



செம்மொழி மாநாடு பற்றிப் பேசுகின்றீர்கள் இன்றைய காலத்தில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று அறியாத தலைவராக இருக்கின்றிர்களா நீங்கள்? இன்றைய தேவை தமிழை வளர்ப்பதனைவிட தமிழ் மொழியை வளர்க்கின்ற தமிழர்கள் அழிக்கப்படுவதை நிறுத்துவதே. அத் தமிழர்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பதே.



தமிழர்களே அழிந்து போகும்போது தமிழ் மொழியை வளர்த்து என்ன பயன்? முதலில் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் அத் தமிழர்களால் தமிழ்மொழி வளர்க்கப்படும். 
இலங்கைத் தமிழர்கள் பல இன்னல்களை அனுபவித்தபோது, அவர்களின் மரண ஓலங்கள் உலகெங்கும் சென்றடைந்தபோது உங்கள் காதுகளுக்கும் வந்திருக்கும்.



அப்போது மெளனம் சாதித்த நீங்கள் இன்று தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பியதன் நோக்கம்தான் என்ன? இன்று எத்தனை தமிழர்கள் மீதமிருக்கின்றார்கள் என்று பார்ப்பதற்காகவா? அல்லது இன்னும் எத்தனை தமிழர்கள் அவலங்களை எதிர்நோக்கக் காத்திருக்கின்றார்கள் என்பதனை அறியவா? 



அவர்களின் வருகையின் நோக்கம் என்னால் புரியமுடியவில்லை. எம் மக்கள் அகதி முகாங்கலிலே படுகின்ற அவலங்களை பார்வையிடவா வந்தனர், நாடு சுற்றிப் பார்க்கவா வந்தனர், பொன்னாடை போர்த்தவா வந்தனர்? அல்லது எதற்காக வந்தனர்? என்ன செய்தனர்? அவர்கள் வந்து என்ன நடவடிக்கைகளை எடுத்தனர்? 



தமிழ் மொழியை வளர்க்கவேண்டும் என்று சிந்திக்கும் நீங்கள் தமிழர்கள் அழிக்கப்படுவதனையும், தமிழர்களின் உரிமைக்காகவும் குரல்கொடுப்பதோடு இலங்கைத் தமிழர்கள் தொடர்வில் அதிக அக்கறை செலுத்துங்கள் என்றும் பணிவாக வேண்டிக் கொள்கின்றேன்.



அன்புடன்...
சந்ரு

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இப்போ எந்த உலகத்தில் ஐயா இருக்கிறீங்க கலைஞருக்கு ஒரு கடிதம்"

Post a Comment