
முதலமைச்சர் சந்திரகாந்தன் மீதும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மீதும் கடந்தகாலங்களில் அவ்வப்போது அரசு கொண்டிருக்கும் அதிருப்தியின் வெளிப்பாடாகவே இச்சம்பவங்களை அவதானிக்கலாம்.
முதலமைச்சர் சந்திரகாந்தன் பதவியேற்ற நாள் முதல் அரசுடன் இணைந்து செயற்பட்டாலும் அவ்வப்போது அரசுடனான முரண்பாடுகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் அவர் கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக பதவி ஏற்ற போது மக்கள் அவர் மீது பாரிய நம்பிக்கை கொண்டிருந்தனர். 30 வருட போராட்டத்தின் பின்னர் கிடைத்திருக்கக் கூடிய மாகாண சபையைக்கொண்டு தமிழ் மக்களின் அபிலாசைகளை ஓரளவுக்காவது ப+ர்த்திசெய்யவேண்டிய பாரிய பொறுப்பும் அவர் மீது சுமத்தப்பட்டது.
அதன் பிரதிபலிப்பாக 13 வது சட்டத்திருத்தத்தின் ஊடாக மாகாணசபைகளுக்க வழங்கப்பட்டுள்ள காணி பொலிசு அதிகாரங்களை கிழக்கு மாகாணசபைக்கு வழங்கும்படி அவர் அரசிடம் அடிக்கடி கோரினார். அந்தவேளையில் கருணா அம்மானை வைத்துக்கொண்டு அரசாங்கம் அவரது கோரிக்கைகளை அவசியம் அற்றவை என்று பகிரங்கமாக அறிக்கைவிட்டது. அதுமட்டுமன்றி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவரும் முதலமைச்சரின் வலது கரமாகவும் இருந்து வந்த நந்தகோபனும் கொலைசெய்யப்பட்டார். அக்கொலை நடந்த இடத்திற்கு ஓரிரு நிமிடங்களில் விரைந்த முதலமைச்சர் தடயங்களை ஆராய்ந்துவிட்டு அவ்விடத்தில் இருந்தே ‘இது புலிகளால் செய்யப்பட்ட கொலை அல்ல’ என்று பத்திரிகைகளுக்கு தெரிவித்தார்.
இப்பகிரங்க அறிவிப்பானது தன்னைநோக்கியே முதலமைச்சரின் சுட்டுவிரல் நீட்டப்படுகின்றது என்பதை அரசினை நன்றாக உணரச் செய்தது. அரசாங்கத்தின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு முதலமைச்சர் பதவியில் இருந்த போதிலும் மக்களின் அபிலாசைகள் என்று வருகின்றபோதோ சரி பிழை நடக்கின்ற போதோ அரசியல் சுளிவு நெளிவுகள் பற்றி அக்கறைப்படாமல் எதையும் நேர்மையாக முன்வைக்கும் சந்திரகாந்தனின் அரசியல்பாணி அரசாங்கத்தரப்பினருக்க உவப்பளிக்கவில்லை.
அதேபோன்று கிழக்கு மாகாணத்தின் கவர்ணர் தனது அதிகார எல்லைகளை தாண்டி மாகாணசபை விடயங்களில் தலையிடுவதையும் முதலமைச்சர் பலமுறை பகிரங்கப்படுத்தி வந்திருக்கின்றார். இது போன்ற முரண்பாடுகளுடனேயே கிழக்குமாகாண சபை கடந்த மூன்று வருடகாலமாக இயங்கிவருகின்றது. இருக்கின்ற அதிகாரங்களைக் கொண்டு 30 வருடகால யுத்தத்தால் அல்லலுற்ற மக்களுக்கு எதையாவது செய்யமுடிகின்றது என்ற குறைந்தபட்ச திருப்தியுடன் முதலமைச்சர் காலம்கடத்தி வந்திருக்கின்றார்.
அதேவேளை கிழக்குமாகாண சபையில் இயற்றப்பட்டுவருகின்ற நியதிச்சட்டங்களும் தீர்மானங்களும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த அதிகாரப்பகிர்வுக்கான சட்டவலுகொண்ட அத்திவாரத்தை உருவாக்கிவருகின்றன என்கின்ற உண்மையை அதிகாரப்பகிர்வுக்கு எதிரானவர்கள் வரவேற்கப்போவதில்லை. இந்தநிலை தொடர்வதனை விரும்பாத அரச தரப்பு அவ்வப்போது முதலமைச்சருக்கு முடிந்தவரையான நெருக்கடிகளையும் கொடுத்துக்கொண்டே வருகின்றது.
பல நியதிச் சட்டங்களுக்கான ஒப்புதல் கையொப்பங்களை வழங்குவதை கவர்ணர் இழுத்தடித்துக்கொண்டு வருகின்றார். முதலமைச்சரதும் அவர் கட்சி பிரமுகர்களதும் பாதுகாப்புகளை அவ்வப்போது வாபஷ் வாங்கிய நிகழ்வுகளும் இடம்பெறற்று வந்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்சவை ஆதரித்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் செயற்பட்ட போதிலும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தனித்துப்போட்டியிட எடுக்கப்பட்ட முடிவு அரசு தரப்பினருக்கு பெரும் கோபத்தை உண்டுபண்ணியது.
தாம் அரசுடன் இணைந்து செயற்படுகின்ற போதிலும் சுதந்திரமானவர்கள் என்று தமது கட்சியின் தனித்துவத்தை விட்டுக்கொடுக்காத ஒரு போக்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளிடம் காணப்படுகின்றது. கொழும்பில் இருக்கின்ற தமிழ் தலைவர்களை போன்று தலையாட்டிப் பொம்மைகளாக அல்லாது “கௌரவமான பங்காளிகளாக” கிழக்கு மகாண மண்ணில் இருந்துகொண்டு நேர்மையாக அரசியல் செய்துவருவது முதலமைச்சர் சந்திரகாந்தனின் பாணியாகும். அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளுராட்சி மன்ற திருத்தச்சட்டத்தினை கடந்த ஒரு வருடத்திற்கு முன்னரேயே மாகாணசபைகளினூடாக நிறைவேற்றி பாராளுமன்றத்திற்கு கொண்டுசெல்கின்ற அரசினுடைய உத்தி கிழக்குமாகாண சபை ஒன்றினது ஒப்புதல் இன்மை காரணமாக தடுக்கப்பட்டது. சிறுபான்மை இனங்களுக்கு எதிர்காலத்தில் பாரிய ஆபத்தை விளைவிக்கக்கூடிய இச்சட்டத்தை நிறைவேற்றாமல் கிழக்கு மாகாணசபை காலங்கடத்தியது.
இவ்வாறாக மக்களின் நலன் சார்ந்த விடயங்களில் விட்டுக்கொடுக்காத சமரசம் செய்யாத ஒரு அரசியல் சக்தியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எதிர்காலத்தில் வளர்ச்சியடைவதை விரும்பாதவர்கள் பலர் உண்டு. அண்மையில் கூட ஐ.நாடுகளால் வெளியிடப்பட்ட தருஷ்மன் அறிக்கையை முன்வைத்து இலங்கையின் அனைத்து அரசியல் தரப்பினரும் கண்டனமா? ஆதரவா? என்று கன்னை பிரித்து நிற்கின்றார்கள். ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளோ முதலமைச்சரோ இது பற்றி ஒற்றை வரியில் கருத்துக்கூறுவதை தவிர்த்து வந்துள்ளனர். முரளிதரன், டக்ளஷ் தேவானந்தா, நோயல் நடேசன், அலவி மௌலானா என்று ஐ.நா. அறிக்கைக்கு எதிராக கண்டனக்கணைகளை அள்ளிவீசி வருகின்ற நிலையில் கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சரிடமிருந்தோ, மாகாண சபையிடம் இருந்தோ இதுபோன்ற கண்டன அறிக்கை ஏதும் வெளிவராமை அரசுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. கடந்த வாரம் கிழக்கு மாகாணசபை அமர்வின்போது ஐ.நா. அறிக்கைக்கு எதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கொழும்பு மட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டது.
யாருடைய எதிர்பார்ப்புகளுக்காகவும் கிழக்குமாகாணசபை இயங்கமுடியாது என்பதையும் மக்களினுடைய எதிர்பார்ப்பு ஒன்றே மாகாணசபையின் செயற்பாடுகளை தீர்மானிக்கும் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாத சக்திகள் கிழக்குமாகாண சபைக்கும் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கும் எதிரான சதி முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்று மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் பரவலாக மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
இப்பொழுது இடம்பெற்று வருகின்ற கொலைகளும், அதையொட்டிய கைதுகளும், விசாரணைகளும், இராணுவத்தினரின் அத்துமீறல்களும் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு எதிராக அதிகார உயர்மட்டங்களால் தீட்டப்படும் சதிகளே ஆகும்
2 comments: on "ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு தமிழ் அரசியல்வாதிகள் கண்டனமா? ஆதரவா? தமிழ் தலைவர்களை மிரட்டும் மகிந்த அரசு"
அரசியலப்பா....
இது ஆரம்பம் தான். இடைவேளை வரும் போது பாருங்க. இன்னும் நிறைய வேடிக்கை இருக்கு?
Post a Comment