Monday 21 November 2011

தமிழீழம் எனும் அடைய முடியாத இலக்கு நோக்கிய பயணத்தில் சிக்குண்ட கிழக்கு மாகாணம். பகுதி - 5

தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமிழ் தலைமைகளினால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். உணர்ச்சி வார்த்தைகளை மக்கள் தமிழ் மத்தியிலே விதைத்து தமிழ் மக்களின் அவலங்களிலும், கண்ணீரிலும் அரசியல் நடாத்திக் கொண்டிருப்பவர்கள் இனிமேலாவது மக்கள் நலன் நோக்கி சிந்திப்பார்களா? தொடர்ந்தும் தமிழ் மக்களின் அவலங்களில் குளிர்காய நினைக்கின்றனரா?
தமிழ் மக்களின் இன்றைய தேவை என்ன என்பதனை ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்பட வேண்டும். முப்பது வருடகால யுத்தத்தில் சின்னாபின்னமாக்கப்பட்ட எமது பிரதேசத்தின் அபிவிருத்தி நோக்கியும், தமிழர்களின் உரிமை, சுயநிர்ணயம் தொடர்பில் சாத்தியமான தீர்வுத்திட்டங்கள் நோக்கியும் தமிழ் தலைமைகள் சிந்திக்க வேண்டும். அதை விடுத்து தமது இருப்பினை நிலை நாட்டுவதற்காக வீர வசனம் பேசி மக்களை உசுப்பேற்றி தொடர்ந்தும் தமிழர்களை அழிக்க நினைக்கும் கைங்கரியங்களை உரியவர்கள் நிறுத்த வேண்டும்.
கடந்த அறுபது ஆண்டுகளாக தமிழர்களை உசுப்பேற்றி, உசுப்பேற்றியே தமிழர்களை கொன்றழித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் தமிழர்களின் கண்ணீரிலும், அவலங்களிலும் அரசியல் நடாத்த நினைத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் இன்றைய நிலைப்பாடு என்ன? கொள்கைகள் என்ன? தமிழ் மக்களுக்காக என்ன தீர்வுத் திட்டங்களை முன் வைக்கின்றனர். இவர்களிடம் நிரந்தரமான, உறுதியான கொள்கைகள் இல்லை. இன்று ஒரு கொள்கை நாளை ஒரு கொள்கை. ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஒவ்வொரு கொள்ளை? தமிழ் மக்கள் தொடர்பில் எந்த விதமான தீர்வுத் திட்டங்களும் இல்லை. எதிலும் வெளிப்படை இல்லை.
அண்மையில் அனைவராலும் பேசப்பட்ட விடயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் அமேரிக்க, கனடா விஜயம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களும், தமிழீழ ஆதரவாளர்களும், புலம்பெயர் தமிழர்களும் தமிழ் ஊடகங்களும் கூட்டமைப்பினரின் அமேரிக்க, கனடா விஜயத்தினை தமிழீழம் கிடைத்துவிடும் என்பதுபோல் பெரிதாக பிரச்சாரம் செய்தனர். அமேரிக்காவிற்கு எதற்காகச் சென்றனர். யார், யாருடன் பேச்சுவார்த்தை நடாத்தினர், இவர்களின் இந்த விஜயத்தின் மூலம் என்ன தீர்வு கிடைத்திருக்கின்றது? அமேரிக்காவிலும், கனடாவிலும் என்ன நடந்தது?
கூட்டமைப்பினரை அமேரிக்க அரசாங்கமோ, கனடா அரசாங்கமோ தானாக பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை. கூட்டமைப்பினர் அமேரிக்காவிற்கு செல்வதற்கு கோரிக்கை விடுத்தனர். அதனால் அவர்கள் அழைக்கப்பட்டனர். நாம் ஒருவரின் வீட்டுக்கு செல்வதற்கு அந்த வீட்டுக்காரரிடம் உங்கள் வீட்டுக்கு வரப்போகின்றோம் என்று சொன்னால் வீட்டுக்காரர் வரவேண்டாம் என்று சொல்லமாட்டார். அதுதான் இங்கேயும் நடந்திருக்கின்றது. இவ்வாறுதான் அமேரிக்கா இவர்களை அமைத்தது. இதனை அமேரிக்க இராஜதந்திர வட்டாரங்களே தெரிவித்தன.
அமேரிக்காவில் யார், யாரைச் சந்திக்கப்போகிறோம் எந்தெந்த விடயங்களைப்பற்றி பேசப்போகின்றோம் என்ற ஒரு திட்டங்கள்கூட அவர்களிடம் இருக்கவில்லை. அமேரிக்காவிற்குச் சென்ற கூட்டமைப்பினர் யார், யாருடன் பேசினர். எதைப்பற்றிப் பேசினர் என்ன தீர்வுகள் எட்டப்பட்டன போன்ற விடயங்களை இதுவரை மக்களிடம் தெரியப்படுத்தாமை ஏன்? கனடாவிற்குச் சென்றவர்கள் கனடாவில் என்ன செய்தனர் யார், யாரைச் சந்தித்தனர்? அவர்களின் இரு நாட்டு விஜயத்தின் மூலம் எட்டப்பட்ட தீர்வுதான் என்ன?
கூட்டமைப்பினரின் இவ்விஜயம் தமிழர்களின் உரிமைக்காக இரு நாட்டு தலைமைகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தும் நோக்கத்துடன் அமைந்த ஒன்றல்ல. அமேரிக்கா, கனடா போன்ற நாடுகளிலே புலம்பெயர் தமிழர்கள் அதிகம் வாழ்கின்றனர். இவர்கள் தமிழீழ ஆதரவாளர்கள் மட்டுமல்லாது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர்களும்கூட. புலம்பெயர் தமிழர்கள் யுத்தத்தால் அழிவடைந்த தமிழர் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்காக கூட்டமைப்பினருக்கு பாரிய தொகைப்பணங்களை வழங்கி வருகின்றனர். அத்துடன் கூட்டமைப்பினரின் சொந்தங்கள், உறவினர்கள் இவ்வாறான நாடுகளிலே இருக்கின்றனர்.
இரு நாடுகளிலும் இருக்கின்ற தமது ஆதரவாளர்களை சந்தித்து தமது இருப்பினை நிலை நிறுத்திக் கொள்ளவும். பெருந்தொகைப் பணங்களை சுருட்டிக் கொள்ளவும், தமது குடும்ப உறவுகளுடன் உறவாடவும், மீண்டும் தமிழர்களை ஏமாறும் சமூகமாகவும் நிலை நிறுத்தவுமே இவர்களின் விஜயம் அமைந்திருந்தது.
அமேரிக்கா, கனடா போன்ற நாடுகள் தம்மை அமைத்து பேச்சுவார்த்தை நடாத்துவது போன்ற மாயையை ஏற்படுத்தி மக்களை தங்கள் பக்கம் திசை திருப்பும் ஒரு முயற்சியாகவே அமைந்திருந்தது இந்த விஜயம். இவ்விஜயத்தை பெரிது படுத்தி ஊடகங்கள் கருத்துக்களை வெளியிட்டதனால் இவ்விஜயத்தின் மூலம் தமிழர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று பலர் நினைத்தனர். தமிழீழம் கிடைத்து விடும் என்று நினைத்தவர்களும் உண்டு. அந்தளவிற்கு இவர்களின் அமேரிக்க, கனடா விடயம் மிகைப்படுத்தப்பட்டிருந்தன. அன்று பக்கம் பக்கமாக எழுதிய, செய்திகளை வெளியிட்ட தமிழ் ஊடகங்கள். இவர்களின் விஜயத்தின் மூலம் எட்டப்பட்ட விடயங்களை வெளியிடாமல் இருப்பது தொடர்பாக கேள்விகளை கேட்காமல் இருப்பது ஏன்? இவ் ஊடகங்களும் கூட்டமைப்பினருடன் சேர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி மீண்டும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்ல நினைக்கின்றனரா?
தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சினைகள் இல்லை என்றால் கூட்டமைப்பினரால் அரசியல் நடாத்த முடியாது. அதே போன்று தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சினை இருந்தால்தான் ஊடகங்களால் பிழைப்பு நடாத்த முடியும். உணர்ச்சி வார்த்தைகளை முன் வைக்கின்றபோது தமிழன் எதனையும், நம்பும் அளவிற்கு மட்டுமல்ல எதனையும் செய்யும் அளவிற்கு தமிழன் பழக்கப்பட்டுவிட்டான்.தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும், தமிழ் ஊடகங்களும் இதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். கூட்டமைப்பினரும், தமிழ் ஊடகங்களும் தமிழன், தமிழர் உரிமை, தமிழீழம், தமிழிPழம் என்று பேசிப்பேசியே தமிழர்களை உசுப்பேற்றி, உணர்ச்சிவசப்படுத்தி தமிழர்களை குழப்பமடையச் செய்து தமது இருப்பை நிலை நிறுத்திக் கொள்கின்றனர்.
இவர்களின் இவ் விஜயத்தின்போது கனடாவில் என்ன நடந்தது. நட்சத்திர ஹோட்டலில் பாரிய விருந்துபசாரம் இடம்பெற்றது. இதற்கு புலம்பெயர் தமிழர்கள் பலர் எதிர்ப்புக்களை தெரிவித்திருந்தனர். இவ் விருந்துபசாரத்துக்கு பாரிய தொகைப்பணம் விரயமாக்கப்பட்டிருந்தது. இன்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது தமிழ் பிரதேசங்களிலே ஒரு வேளை உணவு இல்லாமல் எத்தனையோ பேர் தவிக்கின்றனர். அங்கே செலவு செய்த பெருந்தொகைப் பணத்தை உணவின்றி வாடும் எமது மக்களின் பசியைப் போக்கியிருக்கலாமல்லவா? இவ்வாறான விருந்துபசாரங்கள் தேவையா? விருந்துபசாரத்துக்காகவும், நட்சத்திர விடுதிகளில் கும்மாளம் அடிக்கவுமா கனடாவிற்குச் சென்றனர். கனடாவிற்குச் சென்ற கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு சினிமா நட்சத்திரங்கள் வரவேற்கப்படுவதுபோல் வரவேற்கப்பட்டனர். இவர்கள் சினிமா நட்சத்திரங்களா? மக்கள் பிரதிநிதிகளா? இவர்கள் அரசியலுக்கு வராமல் சினிமாவிற்கு வந்திருக்கலாம். இவர்களை சினிமா நட்சத்திரங்களை வரவேற்பதுபோல் வரவேற்கப்பட்டமையினை புலம்பெயர் தமிழர்கள் பலர் விமர்சித்திருந்தனர்.
இந்த வெளிநாட்டு விஜயம் ஒருபுறமிருக்க விஜயத்தை நிறைவு செய்து இலங்கை வந்த கூட்டமைப்பினரின் நிலைப்பாடு என்ன? அவர்களின் நிலைப்பாட்டையாவது மக்களுக்கு தெளிவு படுத்துவார்களா? உண்மையிலேயே கூட்டமைப்பினர் கொள்கை இல்லாக் கூத்தாடிகள் போன்றுதான் செயற்படுகின்றனர். ஒரு புறத்திலே அரசாங்கத்துக்கு எதிராக உண்ணாவிரதம் போன்ற எதிர் நடவடிக்கைகளிலே ஈடுபட்டு வருகின்றனர். மறு புறத்திலே அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே அரசுடன் இடம் பெற்ற பேச்சுவார்த்தைகளில் பேசப்பட்ட விடயங்கள், எட்டப்பட்ட விடயங்கள் தொடர்பாக மக்களுக்கு இன்னும் தெளிவு படுத்தப்படவில்லை. மீண்டும் அரசுடன் பேச்சுவார்த்தைகளில் கூட்டமைப்பினர் ஈடுபடுகின்றனர். கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் இரகசிய ஒப்பந்தங்களை செய்கின்றார்களா?
இன்று இலங்கையின் பாராளுமன்றத்திலே ஜனாதிபதியினால் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் நடவடிக்கைகளை நன்கு அவதானித்திருந்தால் சில விடயங்களை உணர்ந்திருக்க முடியும். வழமையாக வரவு, செலவுத்திட்டத்தை எதிர்ப்பவர்கள், அல்லது பகிஸ்கரிப்பவர்கள் இன்றைய வரவு செலவுத்திட்டத்தில் அமைதியாக இருந்தனர். அதற்காக ஜனாதிபதி நன்றிகளையும் தெரிவித்தார். அத்துடன் நிதி அமைச்சரினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேனீர் உபசாரத்திலும் கலந்து கொண்டனர்.










தொடரும்....

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "தமிழீழம் எனும் அடைய முடியாத இலக்கு நோக்கிய பயணத்தில் சிக்குண்ட கிழக்கு மாகாணம். பகுதி - 5"

Post a Comment