Tuesday 23 March 2010

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலில் விலை போகும் தமிழர்கள்

இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல்  சூடு  பிடித்திருக்கும்  காலமிது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ம் திகதி இடம்பெற இருக்கின்ற இந்த பாராளுமன்றத் தேர்தலிலே.   தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் முயற்சியிலே பல தீய சக்திகள்  சதித்திட்டங்களை தீட்டி வருகின்றன.

இந்தத் தேர்தலிலே   தமிழர்கள் சிந்தித்து செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம். சிங்கள பேரினவாத அரசும், தீய சக்திகளும் தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் முயற்சிக்கு சில தமிழர்களே அவர்களின் அடிவருடிகளாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

இந்தத் தேர்தலை பொறுத்தவரை மட்டக்களப்பு மாவட்டத்திலே பல தமிழ் கட்சிகளும் , சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.   இந்த தமிழ் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் ஏன் இவ்வாறு பிரிந்து தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்கின்றார்கள் என்று பார்க்கும்போது. அங்கே தமிழர்களுக்கெதிராக பல சதித்திட்டங்கள்  இருப்பது புலனாகின்றது.

பேரினவாதக் கட்சிகளும், ஏனைய சில தீய சக்திகளும் தமிழர்களின் வாக்குகளை சிதறடிப்பதன் மூலம் தமிழர்களின் பாராளுமன்றப் பிரதிநித்தித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு முயற்சி செய்து வருகின்றார்கள். இங்கே பணம் கொடுத்து சில தமிழ் வேட்பாளர்கள் வாங்கப்பட்டிருக்கின்றனர். பணத்துக்கும், சுகபோக வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு இவர்கள் தமிழினத்தையே விற்கவும் துணிந்து விட்டனர்.


 சிங்கள பேரினவாதக் கட்சிகளிலே பல தமிழர்கள் களமிறக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் சிலர் அரசியலுக்கு புதியவர்கள். ஆனாலும் தமிழர் உரிமைகளை  வென்றெடுக்கப் போகின்றோம். நாங்கள் தமிழர்கள், தமிழர்களுக்காக குரல் கொடுக்கப்போகின்றோம் என்றெல்லாம் வீர வசனம் பேசியவர்கள்.  இன்று எங்கே போனது இந்த வீர வசனங்கள். இவர்கள் தமிழ் பற்றாளர்கள் என்றால் ஒரு தமிழ் கட்சியிலே போட்டியிட்டிருக்கலாமே.

அன்று தமிழ் தேசிய  கூட்டமைப்பிலே இருந்து கொண்டு புலிகள்தான் தமிழர்களின் ஏக பிரதி நிதிகள் என்றும், இந்த அரசாங்கம் தமிழர்களை கொலை செய்கின்றது, என்றெல்லாம் அரசாங்கத்துக்கு எதிராகப் பேசியவர்கள் இன்று பேரினவாதக் கட்சியிலே போட்டியிடுகின்றனர். இவர்களின் நோக்கம்தான் என்ன? தமிழர்களை முட்டாள்கள் என்று நினைத்துவிட்டார்களா? இவர்களுக்கு இன்று ஒரு கொள்கை நாளை ஒரு கொள்கை. இப்படிப்பட்டவர்கள் மக்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள்?

கடந்த பாராளுமன்றத் தேர்தலிலே 22 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலிலே கோட்டை விட்டுவிடும் போலிருக்கிறது.  இவர்களால் நிறுத்தப் பட்டிருக்கின்ற வேட்பாளர்களுக்கு மக்கள் மத்தியிலே செல்வாக்கு இருக்கின்றதா என்று பார்த்தால் கேள்விக்குறியே. அது ஒரு புறமிருக்க இவர்கள் தமிழர்களுக்காக என்ன செய்தார்கள்? அன்று பல்லாயிரக் கணக்கான மக்கள் முள்ளி வாய்க்காலிலே கொலை செய்யப்பட்டபோது ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராயினமா செய்தாரா? தமிழர்களுக்காக குரல் கொடுத்தாரா? வெளி நாடுகளிலே சுகபோக வாழ்க்கைதான் வாழ்ந்தார்கள்.

இது ஒரு புறமிருக்க அரசியலிலே இன்னொரு சக்தியாக இன்று உருவெடுத்திருக்கின்றது சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)  தலைமையிலான கட்சியினர்.  இவர்களைப் பொறுத்தவரை பாராளுமன்றத் தேர்தலுக்கு புதியவர்களாக இருந்தாலும் கிழக்கு மாகாண சபையை தன் வசம் வைத்திருப்பதோடு கிழக்கு மாகாண சபையின் மூலம் பல அபிவிருத்தி திட்டங்களை செய்து  மக்கள் மத்தியிலே இவர்களுக்கு வரவேற்பு இருக்கின்றது.

இவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மானோடு பிரிந்து வந்தாலும் சில காரணங்களினால் கருணா அம்மானிடமிருந்து பிரிந்து தனி ஒரு தமிழ் கட்சியாக இன்று ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்திருக்கின்றனர். இவர்களால் இந்தத் தேர்தலிலே களமிறக்கப் பட்டிருக்கின்றவர்கள் மக்கள் மத்தியிலே செல்வாக்குள்ள பல துறை சார்ந்தவர்களாக இருக்கின்றனர். இத் தேர்தலிலே   தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (T.M.V.P) கட்சியும் மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒரு பலம் பொருந்திய கட்சியாக இருக்கின்றது.

அடுத்து பார்க்கின்றபோது தமிழர் விடுதலைக் கூட்டணியும் மட்டக்களப்பு மாவட்டத்திலே இத்தேர்தலிலே களமிறங்கி இருக்கின்றது. இக் கட்சியின் அண்மைக்கால செயற்பாடுகள் காரணமாகவோ என்னவோ மக்கள் மத்தியிலே வரவேற்பு குறைந்திருப்பது போன்று தெரிகின்றது.

தேர்தல் தினம் நெருங்க, நெருங்க தேர்தல் பிரச்சாரங்களும் அதிகரித்த வண்ணமிருப்பதோடு.  ஒரே கட்சியின் வெட்பாளர்களுக்குள்ளே அதிக விருப்பு வாக்குகளை யார் பெறுவது என்பதிலே பலத்த போட்டி நிலவுகின்றது. இதன் காரணமாக ஒரே கட்சியின் வேட்பாளர்கள் தங்களுக்குள்ளே முட்டி மோதிக் கொள்கின்றனர்.  தங்களுக்குள்ளே முட்டி மோதிக்கொள்ளும் இவர்களால் தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியுமா?

இத் தருணத்திலே தமிழ் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 comments: on "இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலில் விலை போகும் தமிழர்கள்"

கலா said...

அங்கே தமிலர்களுக்கேதிராக\\\\\\\
தமிழர்களுக்கெதிராக


உரிமைகளை வேன்றேடுக்கப்போகின்றோம்\\\\\\
வென்றெடுக்கப் போகின்றாம்

கலா said...

சந்ரு நலமா?ஓஓஓ... நான் கவனிக்கவில்லை
உங்கள் இடுகைகளை இப்போதுதான் பார்வையிட்டேன்

ஒரு துடிப்பான இளைஞனின் ஆதங்கத்தின்

வெளிப்பாடு நன்றாக உள்ளது சந்ரு

நல்ல உள்ளம் உள்ளவர்கள் வரப் பிராத்திப்போம்.

ஆமா!! உங்க ஓட்டு யாருக்கென்று.......????

Post a Comment