கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற வலைப்பதிவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சந்திப்பு ஒன்று மட்டக்களப்பில் இடம்பெற இருக்கின்றது என்று பதிவு போட்டதும் பலரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இச் சந்திப்புத் தொடர்பான இன்னும்பல விடயங்களை இப் பதிவினூடாக தருகின்றேன்.
கிழக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவர் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது ஆசை . காரணம் கிழக்கு மாகாணத்திலிருந்து பதிவு எழுதுபவர்கள் மிக மிகக் குறைவு இதற்குக் காரணம் வலைப்பதிவு தொடர்பாக பலருக்கு தெரியாது அல்லது வலைப்பதிவு எழுதுவது தொடர்பாக போதிய அறிவு இன்மை. வலைப்பதிவர் சந்திப்பொன்றை செய்கின்றபோது இன்னும் பலரை பதிவுலகத்திற்குள் உள்வாங்கலாம் என்பது என் நோக்கம்.
இன்று பலர் கிழக்கு மாகாணத்தில் வலைப்பதிவெழுதுகின்றனர். ஆனாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே வெளி உலகிற்கு தெரியும்படி இருக்கின்றனர். இவ்வாறான சந்திப்புக்கள் மூலம் அவர்களை வெளிக்கொண்டு வரமுடியும். அதிகமான பதிவர்கள் வெளி உலகிற்கு தெரியாமல் இருப்பதற்குக் காரணம் வலைப்பதிவு மற்றும் தொழிநுட்பங்கள் தொடர்பான போதிய அறிவின்மையாகும். பலருக்கு திரட்டிகளில் இணைக்கக்கூட தெரியாது.
நான் பல புதிய பதிவர்களை உருவாக்கியிருக்கின்றேன் அவர்கள் இடைநடுவில் பதிவெழுதாமல் விடவேண்டிய நிலையில் இருக்கின்றனர். பலருக்கு எழுதவேண்டும் என்ற ஆர்வம் இருக்கின்றது. ஆனாலும் பதிவிடுதல் சார்ந்த தொழிநுட்ப அறிவு இன்மையால் அக்கறை இல்லாதவர்களாக இருக்கின்றனர்.
அடுத்து கிழக்கு மாகாணத்தில் அதிகமான எழுத்தாளர்கள் கலைஞர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு தமது படைப்புக்களை இணையத்தில் பகிர்வது தொடர்பாக எந்தவித அறிவுமற்றவர்களாக பலர் இருக்கின்றனர். கிழக்கிலே இருக்கின்ற வலைப்பதிவர்களையும் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் ஒன்று திரட்டி சந்திப்பொன்றை ஏற்பாடு செய்வதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் இணைய எழுத்தாளர்களை அதிகரிக்க முடியும்.
கிழக்கு மாகாணம் என்ற வரையறை எதற்கு?
மட்டக்களப்பில் பதிவர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ய வேண்டுமென்பது எனது அவாவாக இருந்தது. கிழக்கு மாகாணத்தில் வலைப்பதிவு எழுதுபவர்கள் மிகக் குறைவு பதிவர் சந்திப்புடனான கருத்தரங்கு ஒன்றினை மட்டக்களப்பில் செய்யலாமா என்று இலங்கையில் இருக்கின்ற சில பதிவர்களிடம் ஆலோசனை கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன் ஒரிரு பதிவர்கள் பதில் அனுப்பியிருந்தனர் நான் எதிர்பார்த்தவர்கள் பதில் அனுப்பவில்லை.
இலங்கை வலைப்பதிவர் குழுமத்தில் விரைவில் பதிவர் சந்திப்பொன்றை நடாத்துவது நல்லதென கேட்டிருந்தேன் குழுமத்தில் இருப்பவர்களில் பலர் பதில் போடவில்ல. ஒரு சிலரது கருத்துக்களிலும் பதிவர் சந்திப்பு சாத்தியமற்றது என்பது போல் இருந்ததனை உணர்ந்தேன்.
உடனடியாக கிழக்கிலே இருந்து பதிவெழுதும் மற்றும் இணைய எழுத்தாளர்கள் ஒரு சிலரிடம் மட்டக்களப்பில் பதிவர் சந்திப்பினை நடாத்துவது தொடர்பாக பேசினேன் அவர்கள் பூரண ஆதரவு தெரிவித்ததுடன் கட்டாயம் செய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். மட்டக்களப்பில் பதிவர் சந்திப்பை செய்வோமா என்று நான் முதலாவதாக கேட்ட மட்டக்களப்பு பதிவர் சொன்ன பதில் இதற்குமுதல் பதிவர் சந்திப்பில் எதனைச் சாதித்தீர்கள் என்பதாகும்.
அதே போன்று கிழக்கு மாகாண செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு செய்திகள் இணையத்தள நிர்வாக நண்பருடன் தொடர்பு கொண்டு பதிவர் சந்திப்பு தொடர்பாக பேசியபோது அவர் தனது பூரண ஆதரவினையும் ஏற்பாடுகளை செய்வதற்கு தானும் முன்வருவதாக சொன்னார். பின்னர் பிரபாவுடன் தொடர்பு கொண்டேன் அவரும் பச்சைக்கொடி காட்டினார்.
கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற பதிவர்கள் எழுத்தாளர்கள் கலைஞர்கள் விபரங்களை திரட்டிவருகின்றோம். கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற பதிவர்கள் எழுத்தாளர்கள் கலைஞர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.
இச் சந்திப்பானது வெறுமனே சந்திப்பாக மாத்திரம் அமையாது. பயனுள்ள விதத்திலே வடிவமைக்கப்பட வேண்டும் என்பதில் நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இச் சந்திப்பின் நோக்கம் பல புதிய பதிவர்களை பதிவுலகிற்குள் உள்வாங்கிக் கொள்வதாகும். எனவே உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கின்றோம்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பதிவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கலைஞர்கள் தொடர்பு கொள்ளுங்கள் (வெளிநாட்டில் உள்ளவர்களும்)
தொடர்புகளுக்கு :-
. info@battinews.com
shanthruslbc@gmail.com
0 comments: on "கிழக்கு மாகாண வலைப்பதிவர்கள் எழுத்தாளர்கள் சந்திப்புக்கான அவசியம் என்ன?"
Post a Comment