Monday, 23 January 2012

யார் இந்தப் பிள்ளையான்?


மாற்றுக் கருத்துக்கள் வேறு நட்பு வேறு மாற்றுக் கருத்துக்களுக்காககவும் கருத்து மோதல்களாலும் நட்பினைப் பிரியவும் விரோதிகளாகவும் மாறவேண்டாம். கருத்துக்களை கருத்துக்களால் வெல்வோம்.
இக் கட்டுரையில் என்னைப்பற்றிய சில விடயங்களை முதலில் குறிப்பிடுகின்றேன். பதிவுலகு மூலம் ஆரம்பகாலத்தில் எனக்கு நண்பர்களாக இருந்த சிலர் இன்று நண்பர்களாக இல்லை. அத்தோடு சிலர் என்னை கருணா பிள்ளையானின் கைக்கூலி என்றும் அவர்கள் போடும் பணத்துக்காக செயற்படுவதாகவும் சொல்வதும் நினைப்பதும் உண்டு. மறுபுறத்தில் எனக்கு எதிராக துரோகி என்றும் கைக்கூலி என்றும் எழுதியவர்களும் உண்டு.

என்னைப்பற்றிய சில விடயங்கள்...

நான் மரணத்துக்கு பயந்தவனல்ல. தமிழ்மொழிமீது அதிக பற்றுக் கொண்டவன் அதேபோல் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள் ஒடுக்கு முறைகளை பார்த்துக்கொண்டிருக்கும் மனநிலையும் எனக்கு இல்லை. பிரதேசப்பற்று அதிகம் கொண்டவன். யார் தவறு செய்தாலும் பயமின்றி தைரியமாக சுட்டிக்காட்டவும். தட்டிக் கேட்கவும் தயங்காதவன். 

வலைப்பதிவுலகிற்கு நான் வந்ததன் நோக்கம் பொழுதுபோக்குக்காக அல்ல எமது மக்கள் படுகின்ற அவலங்களை வெளியிடவேண்டும். தவறு செய்பவர்களுக்கெதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதுமாகும். முடிந்தவரை எனது வலைப்பதிவினை எனது சமூகத்தின் குரலாக வைத்துக்கொள்ள முயன்றுகொண்டிருக்கின்றேன்.

நான் பிரதேசவாதம் பேசுகின்றேன். பிள்ளையானின் கைக்கூலி என்று சொல்பவர்கள் எனது அத்தனை பதிவுகளையும் படித்துப் பாருங்கள்... நான் ஒருத்தருக்கு ஆதரவாக எழுதுகின்றேன் என்றால் நான் அவரின் கைக்கூலி இல்லை. பிள்ளையானுக்கு எதிராக பல பதிவுகள் இட்டிருக்கின்றேன். யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டும் அதேவேளை நல்ல விடயங்கள் செய்தாலும் அவற்றையும் சுட்டிக்காட்டுவேன். இலங்கையின் ஜனாதிபதிக்கு எதிராக எழுதி இருக்கின்றேன். கருணாவிற்கு எதிராக எழுதி இருக்கின்றேன். முள்ளிவாய்க்கால் படுகொலைகளின்போது இலங்கையிலிருந்து இவ் அவலங்களுக்கு எதிராக அதிகமான பதிவுகளை இட்டவன் நான்.

என்மிது சில நண்பர்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கின்றது. நான் இலங்கை அரசாங்கத்தின் கைக்கூலியா? அல்லது கருணாவின் கைக்கூலியா? பிள்ளையானின் கைக்கூலியா என்பதுதான் அந்தச் சந்தேகம். பலர் என்னை கைக்கூலி என்றும் துரோகி என்றும் விமர்சிக்கின்றனர். இன்று தமிழர்கள் இந்தளவிற்கு அழிவுகளை சந்திக்கக் காரணம் எமது முன்னைய அரசியல் தலைவர்கள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. கடந்தகால அரசியல் தலைவர்கள் பல வரலாற்றுத் தவறுகளைச் செய்திருக்கின்றனர். அவர்களால் விடப்பட்ட தவறுகளை புரட்டிப் பார்க்கின்றபோது எமது சமூகம் இனிமேலும் அவ்வாறான தவறுகளை தவிர்த்துக் கொள்ள முடியும்.

அதனடிப்படையிலே கடந்தகால அரசியல்தலைவர்களின் வரலாற்றுத் தவறுகளை ஆதாரங்களுடன் தொடர்பதிவு இட்டபோது சிலர் எதிர்ப்பலைகளையும் பிரதேசவாதம் பேசுகின்றான் எனும் மாயையை தோற்றுவித்திருந்தனர். 

நான் பிள்ளையானின் கைக்கூலியா?

இன்று கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு சார்பாக பல விடயங்களை எழுதி வருபவன் நான். நான் ஒரு விடுதலைப் போராளியோ அல்லது கருணா குழுவோ பிள்ளையான் குழுவையோ சார்ந்தவன் அல்ல. விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகச் செயற்பட்டவனும் அல்ல. தமிழீழம் மலரும் என்று கனவு கண்டவன்.

எதனையும் மறைக்க விரும்பவில்லை நேரடியாகவே சொல்கின்றேன். நான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினதும் முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்களதும் தீவிர ஆதரவாளன். முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்களுக்காக உயிரைக்கூட கொடுக்க தயங்காதவன்.
முன்னர் சந்திரகாந்தனுக்கு எதிராக பல தடவைகள் பதிவிட்டிருக்கின்றேன். அன்று உண்மைகளும் சந்திரகாந்தன் அவர்களுடைய நோக்கங்களும் செயற்பாடுகளும் கொள்ளைகளும் எனக்கு தெரியாது. அவருடனான தொடர்பு எனக்கு இல்லை. ஊடகங்கள் சொல்கின்ற செய்திகளையும் பிரச்சாரங்களையும் நம்பினேன். ஊடகங்கள் அதிலும் குறிப்பாக தமிழ் ஊடகங்கள் சந்திரகாந்தன் தொடர்பாக பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றன என்ற விடயங்கள் எனக்கு தெரியாது. ஊடகங்கள் சொல்வதனை வைத்து நானும் சந்திரகாந்தனுக்கு எதிராக எழுதிக் கொண்டிருந்தேன். என்போன்றுதான் பலரின் நிலை ஊடகங்கள் சொல்வதனை நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

நான் சமூக சேவை நோக்கம் கொண்டவன். எமது பிரதேச மாணவர்களின் கல்வி முன்னேற்றம் தொடர்பாக சில உதவிகளை பெறுவதற்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்களை நானும் எனது நண்பர்களும் சென்றோம். அப்போது நாம் கேட்ட உதவிகளை உடனுக்குடன் பெற்றுத் தந்ததுடன் அவர் அன்று எங்களுடன் பேசியபோது அவர் எமது பரதேச அபிவிருத்தி தொடர்பிலும் கல்வி அபிவிருத்தி தொடர்பிலும் அதிக அக்கறை கொண்ட ஒருவர் என்பதனை என்னால் உணர முடிந்தது. 

தொடர்ந்து அவரைப்பற்றிய விடயங்களையும் அவரின் கொள்கைகள் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயத் தோடங்கினேன். பல தடவைகள் அவரைச் சந்தித்து பல அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாகவும் எமது சமூகம் தொடர்பிலும் பல கருத்துக்களை நாம் முன்வைத்தபோது நாம் நினைத்ததனைவிட  அதிகமாக அவரின் செயற்பாடுகள் அமைந்திரந்தன. 

அப்போது மிகவும் கவலைப் பட்டேன் எமது மக்களுக்காக  பிரதேச அபிவிருத்திக்காக பாடுபடும் ஒருவரை தவறான செய்திகள் மூலம் நானும் தவறாக புரிந்து வைத்திருக்கின்றேனே என்று. அப்போது நான் முடிவெடுத்தேன் இவரின் செயற்பாடகளில் நானும் பங்கெடுக்க வேண்டும் என்று.

இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினதும் தலைவர் சந்திரகாந்தனதும் தீவிர ஆதரவாளனாக செயற்படும் நான் எந்தவிதமான பிரதிபலனும் இல்லாமல் சமூக சேவை மற்றும் எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்காகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன். 

முதலமைச்சரவர்கள் அரசியலில் இருந்து சொத்துச் சேர்க்க வேண்டும் என்று அரசியலுக்கு வரவுமில்லை செயற்படவுமில்லை. பிரதேச அபிவிருத்தியிலும் மக்கள் நலனிலும் அதிக அக்கறையோடு இரவு பகலாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். இன்று கிழக்கு மாகாணத்திலே துரிதமாக அபிவிருத்தி இடம்பெற்று வருகின்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் தொடர்பாக ஊடகங்கள் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்வது ஏன்?
இறுதியிலும் சொல்கின்றேன் நான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினதும் முதலமைச்சர் சந்திரகாந்தனதும் தீவிர ஆதரவாளர். ஆனாலும் அனைவருடைய கருத்துக்களையும் விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்கவமுடையவன். மாற்றுக் கருத்தக்கள் கொள்கைகள் இருக்கலாம் கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல வேண்டும். மாற்றுக் கருத்துக்களும் கருத்து மோதல்களும் இடம்பெறும் பொழுதுதான் உண்மைகள் வெளிவரும்.

இப்போது பல நண்பர்களுக்கு சந்தேகம் திர்ந்திருக்கும் என்று நினைக்கின்றேன். 

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "யார் இந்தப் பிள்ளையான்?"

Post a Comment