Tuesday, 8 June 2010

இதெல்லாம் ஒரு பதிவுலக அரசியல்?

இன்று பதிவுலகம் ஒரு போட்டி நிறைந்த ஒன்றாக மாறிவிட்டது.  போட்டி இருப்பது ஆரோக்கியமான விடயமே.  ஆனால் இன்றைய நிலையைப் பார்க்கின்றபோது ஒரு சிலர் பதிவுலகை சீரழித்துக் கொண்டிருப்பது வருத்தப்படவேண்டிய விடயமே.

ஒரு பதிவர் நன்றாக எழுதுகின்றார் பிரபல்யமாகிவிட்டார் என்பதற்காக அந்தப் பதிவருக்கு எதிராக சில பதிவர்கள் அனானியாகவும் இன்னும் வேறு பல வழிகளிலும் வீழ்த்த நினைப்பது வெட்கித்தலை குனிய வேண்டிய விடயமே. அண்மையில் இடம் பெற்ற சில நிகழ்வுகள் இதற்கு சான்று பகர்கின்றன. இதில் சில பதிவர்கள் ஈடுபடுவதுதான் கவலைக்குரிய  விடயம். இவர்கள் திருந்தப் பார்க்கணும்.

நான் எதனை எழுதுவதானாலும் நன்கு ஆராய்ந்த பின்னரே எழுதுவேன். பொய்களை எழுத நினைப்பவன் நானல்ல. உண்மைகள் வெளிவரவேண்டும். தவறுகளும், அநீதிகளும் வெளிவர வேண்டும் என்று நினைப்பவன்.

என்கருத்துக்களுக்கு எதிர்க்கருத்துள்ளவர்கள் இருக்கலாம். அவர்களது கருத்துக்களையும் நான் வரவேற்கின்றேன். அனானியாக கருத்துரயிட்டாலும் நல்ல சொட்பிரயோகங்களாக இருந்தால் அதனை வெளியிடாமல் விடுபவனுமல்ல.

மாற்றுக் கருத்துக்களை எதிர் பார்ப்பவன் நான். மாற்றுக் கருத்துக்கள் முட்டி மோதுகின்றபோதுதான் உண்மைகள் வெளிவரும்.

இன்றைய பதிவுலக அரசியல் என்பது வித்தியாசமான கோணத்தில் சென்று கொண்டிருக்கின்றது. இன்று எத்தனை பதிவர்கள் உண்மைகளை எழுத தயங்குகின்றனர். காரணம் என்ன? மாற்றுக் கருத்துக்களை எழுதுகின்றபோது அச்சுறுத்தப் படுவார். உயிருக்கே உத்தரவாதமில்லாத நிலை. இது கடந்த காலங்கள் சொல்லும் பாடங்கள்.

அதே போன்றுதான் இன்று பதிவுலக அரசியல் என்பது இருக்கின்றது. இன்று உண்மைகளை எழுதினால் தவறுகளை சுட்டிக் காட்டினால், எதிர்க் கருத்துக்களை எழுதினால் ஏனைய பதிவர்கள் கருத்துரை இடமாட்டார்கள், ஓட்டு போடமாட்டார்கள் என்று அனைத்து பதிவர்களோடும் ஆமா போட்டுக்கொண்டு ஒத்து ஓடிக்கொண்டிருக்கும் பதிவர்கள் எத்தனை பேர். இதை பலர் என்னிடம் சொல்லி இருக்கின்றனர்.

ஆனால் என்னைப் பொறுத்தவரை உண்மைகள் எழுதப்பட வேண்டும், தவறுகள் சுட்டிக் காட்டப்பட வேண்டும் என்று நினைப்பவன். என் எழுத்துக்களில் தவறிருந்தால் நேரடியாக நாகரிகமான வார்த்தைகளால் சுட்டிக் காட்டலாம். ஏற்றுக் கொள்ள தயங்கமாட்டேன்.

அண்மைக் காலமாக நான் தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் எனும் தொடர் பதிவினை எழுதி வருகின்றேன். பலர் நான் பொய்யான விடயங்களை எழுதி வருவதாக குற்றம் சாட்டி இருக்கின்றனர். எங்கே பொய் இருக்கின்றது என்பதனை சுட்டிக் காட்டுங்கள்.  நான் சொல்வது பொய்யாக இருந்தால் உண்மையை சுட்டிக் காட்டுங்கள்.

ஆதாரங்களை காட்டும்படி பலர் கேட்டிருந்தார்கள். நான் எதனையும் ஆதாரமின்றி எழுதவில்லை. நான் என்னுடைய முதலாவது பகுதியிலே சொல்லி இருக்கின்றேன். (தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 1 )   ஒவ்வொருவரும் ஒவ்வொரு வரலாற்றை சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.  எது உண்மை எது பொய் என்பதில் தெளிவு பெற வேண்டும் என்பதே என் நோக்கம்.

நான் முதல் பதிவிலே சொல்லி இருக்கின்றேன். இந்த தொடர் வேறு ஒரு இணையத் தளத்திலே எழுதப் பட்டவை என்று. அவர்களின் அனுமதியோடுதான் நான் பதிவிடுகின்றேன். அந்தத் தொடரிலே சொல்லப்படுகின்ற விடயங்களுக்கு அந்த அந்த இடத்திலே சில ஆதாரங்களை குறிப்பிடுகிறேன். உதாரணமாக யாழ்ப்பாணம் பற்றி எழுதும்போது யாழ்ப்பான வரலாறு சொல்கின்ற நுல்களை புத்தகங்களை யாழ்ப்பாணம் பற்றி குறிப்பிடும் பக்கங்களை ஆதாரங்களோடு குறிப்பிட்டிருக்கின்றேன்.

நான் எழுதும் இத்தொடருக்கான ஆதாரங்களை முடிந்தவரை பெற்றுக்கொண்டுதான். எழுதுகின்றேன். கடந்த காலங்களிலே எழுதப்பட்ட இணையத்தள செய்திகள், தொடர்கள், புத்தகங்கள், சஞ்சிகைகள், வெளிநாடுகளிலே இடம்பெற்ற மாகாநாடுகளிலே முக்கியமான தமிழ் தலைவர்கள் பேசிய பேச்சுக்கள், அந்த மாநாடுகளிலே எடுக்கப்பட்ட முடிவுகள் என்று ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றையும்  வெளியிடத் தயங்கவும்  மாட்டேன். விரைவில் வெளியிடுவேன்.

நான் பொய்களை பதிவிடுகிறேன் என்று சொல்பவர்கள் நான் சொல்வதில் எது பொய் என்று சொல்லுங்கள் பிழைகளை சுட்டிக் காட்டுங்கள். விவாதிக்கவும் நான் தயார். கருத்துரை இடமாட்டார்கள் ஓட்டு போடமாட்டார்கள் என்று பதிவர்கள் உண்மைகளை சுட்டிக் காட்ட தயங்காதீர்கள்.

என் நேர்மையான பயணம் தொடரும்.....

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

9 comments: on "இதெல்லாம் ஒரு பதிவுலக அரசியல்?"

பொன்னர் said...

யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வளவு கொடியவர்களா? அங்கேயும் பிராமணர்களின் ஆதிக்கமா?

Jana said...

உங்கள் பதிவுகளில் காத்திரமான, அதேவேளை உபயோகமான பதிவுகளை இடவேண்டும் என்று துடிப்புள்ளவர் நீங்கள் என்பதை தங்களின் பல பதிவுகளில் கண்ணுற்றேன். ஒருவர் உங்கள் பதிவு ஒன்றை குறைகூறினாலும் மனதார பாராட்டும் வலை வாசகர்கள் பலர் கண்டிப்பாக இருப்பார்கள். எனவே தங்கள் காத்திரமான பதிவுகள் தொடரவேண்டும் என்பதுடன் தங்களுக்கு எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் சந்ரு

Admin said...

//பொன்னர் கூறியது...
யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வளவு கொடியவர்களா? அங்கேயும் பிராமணர்களின் ஆதிக்கமா?//


யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் கொடியவர்கள் இல்லை. பல அரசியல் தலைவர்களும், சில தலைமைகளும், எங்களைப் போன்றவர்களை ஏமாற்றி வந்திருக்கின்றார்கள். உண்மையை சொல்ல நினைத்தவர்களை இல்லாதொழிக்க நினைத்திருக்கின்றனர். இதனால் உண்மைகளை சொல்ல பலரும் தயங்கியதால் உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன.

Admin said...

//Jana கூறியது...
உங்கள் பதிவுகளில் காத்திரமான, அதேவேளை உபயோகமான பதிவுகளை இடவேண்டும் என்று துடிப்புள்ளவர் நீங்கள் என்பதை தங்களின் பல பதிவுகளில் கண்ணுற்றேன். ஒருவர் உங்கள் பதிவு ஒன்றை குறைகூறினாலும் மனதார பாராட்டும் வலை வாசகர்கள் பலர் கண்டிப்பாக இருப்பார்கள். எனவே தங்கள் காத்திரமான பதிவுகள் தொடரவேண்டும் என்பதுடன் தங்களுக்கு எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் சந்ரு//

வெறுமனே பொழுது போக்குக்காக எழுதுபவன் நானல்ல. உண்மைகள் வெளிவரவேண்டும், மக்களின் அவலங்களை வெளியிட வேண்டும் என்று நினைப்பவன் நான். நான் ஒருபோதும் ஆதாரங்களின்றி எழுதுபவனல்ல. இது உங்களுடைய முதலாவது கருத்துரையாக இருந்தாலும். உண்மையை சொல்லி இருக்கின்றீர்கள். உங்கள் வாழ்த்துக்கள்தான் என்னை மென்மேலும் வளர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

உங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள். தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

Admin said...

பலரும் என்னிடம் ஆதாரத்தை காட்ட முடியுமா என்று கேட்கின்றனர். இந்தத் தொடர் முன்னர் வேறொரு இணையத் தளத்திலே வெளியாகியது. நான் அந்த இணையத் தள நிர்வாகிகளிடம் கேட்டேன் உங்களால் ஆதாரங்களை காட்ட முடியுமா என்று அவர்கள் பல ஆதாரங்களை வைத்திருக்கின்றனர். ஆகவேதான் உண்மைகள் வெளிவர வேண்டும் என்பதற்காகவே. நான் தொடர் பதிவாக இடுகின்றேன். எனது பதிவில் எங்கே பொய் என்று சுட்டிக் காட்டுங்கள் நான் பதிலளிக்கிறேன்.

Anonymous said...

அந்த இணையத்தளத்தை குறிப்பிடுங்கள் சகோதரா...

Admin said...

//பெயரில்லா கூறியது...
அந்த இணையத்தளத்தை குறிப்பிடுங்கள் சகோதரா...//

எனது இந்த தொடரை சிலர் எதிர்த்தாலும் வாசித்து ஆதரவு வழங்குபவர்கள் பலர் இருக்கின்றனர். அந்த இணையத் தளத்திலே இந்தத் தொடர் நிறைவு பெற்றுவிட்டது. அந்த இணையத்தளத்தை நான் குறிப்பிட்டால் என் வலைப்பதிவு வாசகர்கள் அங்கே சென்று தொடரை முற்று முழுதாக வாசிக்கின்றபோது என் தொடரிலே அவர்களுக்கு எதிர்பார்ப்பு இருக்காது.

எனது பதிவிலே எங்கே தவறு இருக்கின்றது என்று சுட்டிக் காட்டுங்கள் பதில் தருகிறேன். அத்தனை ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன. அத்தனை ஆதாரங்களும் இத் தொடரின் இறுதியில் வெளியிடுவேன்.


என் பதிவிலே பிழை கண்டால் அல்லது உங்கள் மாற்றுக் கருத்துக்களை சுட்டிக் காட்டுங்கள் வரவேற்கின்றேன். பதில் தருகிறேன்.

Anonymous said...

தவறாக எடுத்துக் கொள்ளமாட்டீர்கள் எனும் நம்பிக்கையில் சில விடயங்களுக்கான தெளிவுபடுத்தல்களை வேண்டுகின்றேன்.

1. ஏற்கனவே ஒரு இணையத்தளத்தில் வெளிவந்து முற்றுப் பெற்ற ஒரு தொடரை திரும்பவும் உங்கள் தளத்தில் பிரசுரிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?

2. //அத்தனை ஆதாரங்களும் இத் தொடரின் இறுதியில் வெளியிடுவேன். //
கருத்துக்களை எழுதும் போது அதற்கான ஆதாரங்களை முன்வைக்காமல் (அப்படி செய்வது தானே முறைமை), இறுதியில் தர முயற்சிப்பதற்கு என்ன காரணம்?

3. அன்றைய வரலாறு தெரியாத ஒருத்தரால் (என்னைப்போல), யார் என்ன எழுதினாலும் குற்றம் சுமத்த முடியாது. ஆனால், எழுதுபவரிடம் ஆதாரம் கேட்கும் போது தருவது தானே ஊடக தர்மம். எதுவுமே தெரியாது என்பதற்காக எல்லாவற்றையும் ஆமோதிக்க முடியாதல்லவா...?

பி.கு: சொந்தப்பெயரில் வராதததை கணக்கிலெடுக்க மாட்டீர்கள் என நம்புகின்றேன்.

Admin said...

//பெயரில்லா கூறியது...
தவறாக எடுத்துக் கொள்ளமாட்டீர்கள் எனும் நம்பிக்கையில் சில விடயங்களுக்கான தெளிவுபடுத்தல்களை வேண்டுகின்றேன்.//

என் கருத்துக்களுக்கு எதிரான மாற்றுக் கருத்துக்களாக இருந்தாலும். நான் அதனை வரவேற்கின்றேன். நாகரீகமான வார்த்தைகளாக இருந்தால்.

//1. ஏற்கனவே ஒரு இணையத்தளத்தில் வெளிவந்து முற்றுப் பெற்ற ஒரு தொடரை திரும்பவும் உங்கள் தளத்தில் பிரசுரிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?//

இந்த உண்மையான விடயங்கள் பலர் அறியாத விடயங்களை இன்னும் பலர் அறிந்து கொள்ள வேண்டும். இன்னும் பலரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கமே. ஒரு தொடர் ஒரு இணையத் தளத்தில் மட்டும்தான் இடம்பெற வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இல்லையே.

//2. //அத்தனை ஆதாரங்களும் இத் தொடரின் இறுதியில் வெளியிடுவேன். //
கருத்துக்களை எழுதும் போது அதற்கான ஆதாரங்களை முன்வைக்காமல் (அப்படி செய்வது தானே முறைமை), இறுதியில் தர முயற்சிப்பதற்கு என்ன காரணம்?//

முடிந்தவரை ஆதாரங்களை அந்த, அந்தப் பதிவுகளிலே குறிப்பிடுகிறேன். என் பதிவுகளைப் பாருங்கள் புரியும். சில புத்தகங்களின் பக்கங்களை குறிப்பிட்டிருக்கின்றேன். சில விடயங்களை பதிவுகளில் உள்ளடக்க முடியாது அவற்றை தனியாகவே தர முடியும். உதாரணமாக கருணா பிரிந்து வந்து வெளியிட்ட மூன்று பக்க அறிக்கையினை குறிப்பிட்ட பதிவிலே உள்ளடக்க முடியாது அவற்றை தனியாகத்தான் தரமுடியும். அத்தனை ஆதாரங்களும் பதிவாக வரும்.

//3. அன்றைய வரலாறு தெரியாத ஒருத்தரால் (என்னைப்போல), யார் என்ன எழுதினாலும் குற்றம் சுமத்த முடியாது. ஆனால், எழுதுபவரிடம் ஆதாரம் கேட்கும் போது தருவது தானே ஊடக தர்மம். எதுவுமே தெரியாது என்பதற்காக எல்லாவற்றையும் ஆமோதிக்க முடியாதல்லவா...?//
உண்மைதான் ஆதாரங்கள் விரைவில் கிடைக்கும், பதிவிடுவேன். தொடர்ந்து படியுங்கள்.

////பி.கு: சொந்தப்பெயரில் வராதததை கணக்கிலெடுக்க மாட்டீர்கள் என நம்புகின்றேன்.////
சொந்தப்பெயரில் வராவிட்டாலும் நல்ல கருத்துக்களை, நாகரிகமான கருத்துக்களை வெளியிடுபவன், எதிர்பார்ப்பவன் நான்.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Post a Comment