Thursday 7 September 2017

திட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.


விடுதலை நோக்கிய பயணத்தின் 30 வருடகால கொடுர யுத்தத்தால் நாம் சாதித்தவைகள் என்ன? பெற்றுக்கொண்டவைகள் என்ன?

விடுதலைப் போராட்டத்தில் நாம் பல வீரவரலாற்றுச் சாதனைகளை படைத்துள்ளோம் என்பது ஒருபுறமிருந்தாலும், விடுதலைப்பயணத்தின் பலனாக நாம் பல வடுக்களை சுமந்துகொண்டு வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

பல்லாயிரக்கணக்கான உயிர், உடமை இழப்புகளுக்கு அப்பால் பல ஆயிரக்கணக்கான இளம் விதவைகளை விதைத்துச் சென்றுள்ளது இந்த யுத்தம். 

இன்னொருபுறம் தனது அவயவங்களை இழந்த விடுதலை வீரர்கள் பலர் செய்வதறியாது பல இன்னல்களை, அவலங்களை சந்தித்து வருகின்றனர்.

இவ்வாறு நாளாந்த உணவுக்குக்கூட வழியின்றி பல அவலங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் மக்களுக்கு உதவுவதற்கு தனி நபர்களும் சமூக சேவை அமைப்புக்களும் முன்வருவது அதிகரித்து காணப்படுகின்றன.

இங்கு அல்லல்படும் எமது மக்களுக்கு உதவவேண்டும் என்ற நோக்கோடு வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர் உறவுகள் பலர் முன்வந்து சமூக சேவை அமைப்புக்கள் ஊடாக தனிநபர் வாழ்வாதார திட்டங்களுக்கு உதவி வருகின்றனர். நாமும் பலருக்கு உதவியுள்ளோம்.
ஆனாலும் தனிநபர் வாழ்வாதார திட்டங்கள் பயனுள்ளதாக உள்ளதா எனக்கேட்டால் இல்லை என்றே சொல்லவேண்டும். (ஒருசில விதிவிலக்குகளும் உண்டு) சுயதொழிலுக்காக உதவி செய்கின்றபொழுது அவர்களால் அத்தொழிலை தொடர்ந்து கொண்டு நடாத்தாமல் இடைநடுவில் விட்டுச் செல்கின்ற நிலை அதிகம் காணப்படுகின்றது.
இதற்கான காரணங்கள் பல உண்டு.
1. சரியான வாழ்வாதார திட்டத்தை தேர்ந்தெடுக்காமை
2. குறித்த தொழில் தொடர்பில் அனுபவமின்மை
3. சந்தை வாய்ப்பை பயன்படுத்தத்தெரியாமை
4. சரியான திட்டமிடலின்மை
5. மேற்பார்வையின்மை
இவ்வாறு பல காரணங்களை குறிப்பிடலாம்.
இவற்றுக்கும் மேலாக இலவசங்களை எதிர்பார்த்து பழக்கப்பட்ட மக்களும் இல்லாமல் இல்லை. நாம் எதைக்கொடுத்தாலும் அதை வாங்கி அத்தோடு முடித்துக்கொள்வது.
இவ்வாறான தனிநபர் வாழ்வாதாரத்திட்டங்களில் ஈடுபடுபவர்கள் மாற்றுத் திட்டங்கள் பற்றி சிந்திப்பது நல்லது.
உதாரணமாக 100 பேருக்கு தனியான வாழ்வாதாரத்திட்டங்கள் வழங்கப்படுவதாக இருந்தால் அந்த 100 பேருக்கும் வழங்கப்படும் வாழ்வாதார நிதியை பயன்படுத்தி சிறு கைத்தொழில் ஒன்றை ஏற்படுத்தி 50 பேருக்கு வேலைவாய்ப்பை கொடுத்தாலே பயனுள்ளதாக இருக்கும். ஒரு குறித்த பிரதேசத்தில் இனங்காணப்பட்டவர்களை வைத்து ஒரு சமூக மட்ட அமைப்பினை ஏற்படுத்தி அவர்களுக்கூடாகவே இதனை செயற்படுத்தலாம்.
முடிந்தவரை தனிப்பட்ட வாழ்வாதாரத்திட்டங்களை குறைத்து மாற்றுத்திட்டங்களை பற்றி சிந்திப்பது நல்லது.
மாற்றுத்திட்டங்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
சந்ரு

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "திட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்."

Post a Comment