ஆசை இல்லா மனிதர்கள் இல்லை. எனக்கு அதிகமான ஆசைகள் இருக்கின்றது என்பது நிலாமதி அக்காவுக்கு தெரிந்துவிட்டது போலும். என்னிடம் வரம் தரும் தேவதையை அனுப்பிவிட்டார். என்னை பத்து வரங்கள் மட்டுமே கேட்க வேண்டும் என்றும் நிபந்தனையும் விதித்துவிட்டார்.
சரி நிறையவே ஆசைகள் எந்த வரத்தை முதலில் கேட்பது. எனக்கு இருக்கின்ற ஆசைகளை பட்டியலிடுகின்றேன்.
1. பாரதி மீண்டும் பிறக்கவேண்டும் பாரதியிடம் நான் தமிழ் படிக்க வேண்டும்.
பாரதியின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டவன் பாரதியின் கண்ணன் பாடல்களில் அடிக்கடி தொலைபவன். இன்று பாரதி இல்லையே என்று கவலைப்படுபவன்.
2. யுத்தத்தின் கொடுமையால் தாய், தந்தை, சொந்தங்களை இழந்து சிறுவர் இல்லங்களிலே தவிக்கின்ற அந்தச் சிறுவர்களின் தாய், தந்தையர்கள் மீண்டும் கிடைக்கக் வேண்டும்.
இன்று எத்தனை சிறுவர் இல்லங்கள் சிறுவர் இல்லங்களிலே நம் சிறார்கள் படும் இன்னல்கள்தான் எத்தனை. அவர்களின் ஏக்கங்கள்தான் என்ன? அவர்களின் எதிர் காலம் பற்றி சிந்திக்க உரியவர்கள் முன்வரவில்லை என்பது கவலைக்குரிய விடயமே. இல்லங்களிலே இருக்கின்ற ஆண்சிறார்களைவிட பெண் பிள்ளைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவர்களின் எதிர்கால நிலை என்ன?
3. உலகில் இருக்கின்ற மொழிகளிலே தமிழ் மொழி முதலிடத்தில் இருக்க வேண்டும்.
உலக மொழிகளிலே தமிழ் மொழி முதலாவது மொழியாக அங்கிகரிக்கப்பட வேண்டும். உலகெங்கும் தமிழ் மொழி கட்டாய பாடமாக பல்கலைக்கழகங்களிலே சேர்க்கப்பட வேண்டும்.
4. ஏழைகள் இல்லாத பூமி வேண்டும்.
பணம் இருந்தால் எதனையும் செய்யமுடியும் ஏழையிடம் பணமில்லை அவன்படும் வேதனை அவனுக்குத்தான் தெரியும். கஷ்டப்பட்டு படித்து, பட்டம் பெற்று என்ன பயன் வேலை கிடைப்பதென்றால் பணம் கொடுக்கவேண்டும். எத்தனை ஏழைகள் நிம்மதியைத் தொலைத்தபடி...
5. மறைந்து தமிழர் கலைகளை வளர்க்க கேட்பேன்.
மறைந்து வரும் தமிழர் கலைகளை வளர்க்கவேண்டும் என்ற ஆசை நம் கலைஞர்களை ஒன்று திரட்டி சில கலைத்துறை படைப்புக்களை வெளி உலகுக்கு கொண்டு வரவேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. அதற்கு உதவும்படி கேட்பேன்.
6. சாதி, மத பேதமற்ற உலகம் வேண்டும்.
இன்று உலகில் சாதி, மதம் என்று எத்தனை பிரச்சனைகள். எத்தனை உயிர்கள் பறிக்கப்படுகின்றன.
7. மீண்டும் என் இளமைக்காலம் வேண்டும்.
என் தந்தை என் சிறு வயதிலே இறந்து விட்டார் சாதாரண குடும்பத்தை சேர்ந்த எனக்கு சிறு வயதிலே குடும்ப சுமைகள் காரணமாக என் தந்தையின் வழியில் பிழைப்புக்காக விவசாயத்திலே ஈடுபடவேண்டிய கட்டாய சூழ்நிலை. இளமைக்காலங்கள் விவசாயத்தோடும் படிப்போடும் கடந்துவிட்டது. சிறுவர்கள் அனுபவிக்க வேண்டிய எதனையும் அனுபவித்ததில்லை. மற்றைய சிறுவர்களை பார்த்து கவலைப்பட்டதுண்டு.
8. கவலைகள் இல்லாத மனது வேண்டும்.
என் மனது நிறைய கவலைகள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை சந்தோசங்கள் சில நேரங்களில் வந்து எட்டிப்பார்த்துவிட்டுச் செல்கின்றன.
9. தமிழரை அழிப்பவர்களும், அழிக்க நினைப்பவர்களும் மறு பிறவியில் தமிழராய் பிறக்க வேண்டும்.
அப்பொழுதுதான் தமிழர் பண்பாடு , தமிழின் இனிமை , தமிழர் வேதனை ...... என்று எல்லாவற்றையும் அவர்கள் அறிவார்கள்.
10. நான் கடவுளாய் நினைக்கின்ற ஒரு மனிதர் என்றும் இறவாத வரம் வேண்டும்.
இலங்கையில் இருக்கும் பல பதிவர்களுக்கு நிறையவே ஆசை இருப்பதை அறிந்தேன். என்னிடம் வந்த தேவதையை அவர்களில் ஐவரிடம் அனுப்புகின்றேன்.
உஞ்சலில் ஆடும் சுபானு
******************************
எனது மருமகள் ஏழாம் தரம் படிக்கின்றார். படிப்பு மட்டுமல்ல எல்லாவற்றிலும் கெட்டித்தனம். அவளது நீண்டநாள் ஆசையினை நிறைவேற்றி இருக்கின்றேன். தானும் வலைப்பதிவு ஆரம்பித்து சிறுவர்களுக்கு பயனுள்ள தகவல்களை பதிவிட வேண்டுமென்பது என்பது அவரது ஆசை...
எனது உதவியோடு சிறுவர் உலகம் என்றும் வலைப்பதிவினை ஆரம்பித்துவிட்டார். இனி அவரும் எங்களோடு....