Monday, 28 May 2012

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு வெற்றியா? தோல்வியா?


பிள்ளையானின் பின்னால் ஒன்று பட்ட மட்டக்களப்பு மக்கள்

தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாடு 25, 26, 27ம் திகதிகளில் மட்டக்களப்பில் இடம் பெற்று முடிந்திருக்கின்றன. இந்த மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்ததா அல்லது தோல்வியில் முடிவடைந்ததா என்பதனை ஆராய்வதற்கு முன்னர் இம் மாநாடு ஆரம்பிப்பதற்கு முன்னரும் இறுதி வரையும் நடைபெற்ற சில சம்பவங்களையும், விடயங்களையும் நாம் ஆராய வேண்டும்.

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மட்டக்களப்பில் இடம்பெற இருக்கின்றது எனும் செய்தி வெளியாகிய நாள்முதல் இம் மாநாட்டுக்கு மட்டக்களப்பில் பாரிய எதிர்ப்பு இருந்தது என்பதனை எவராலும் மறுக்க முடியாது. இன்று சில இணையத்தளங்கள் பிள்ளையான் குழுவினர் மாநாட்டை குழப்ப சதி செய்தனர் என்று குறிப்பிட்டு இருக்கின்றன. இது முற்று முழுதான உண்மையல்ல என்பதனை மட்டக்களப்பு மக்கள் அறிவர்.

உண்மையில் இன்றைய கால கட்டத்தில் மட்டக்களப்பு மக்கள் மத்தியிலே முதலமைச்சர் பிள்ளையான் மீது நம்பிக்கையும் ஒரு பற்றும் இருக்கின்றது. காரணம் அவரது அயராத உழைப்பும் கிழக்கின் துரித அபிவிருத்தியுமாகும். இன்று எந்த ஒரு விழா மட்டக்களப்பில் இடம்பெற்றாலும் முதலமைச்சரை பிரதம அதிதியாக அழைத்து விடுவார்கள். அவர் மீது மக்களுக்கு நம்பிக்கையும் மதிப்பும் இருக்கின்றது.

மறு புறத்திலே கிழக்கில் ஒரு தனித்துவ கட்சி இருக்கின்றபோதுதான் கிழக்கை துரிதமாக அபிவிருத்திப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்பதனையும் மக்கள் உணர்ந்திருக்கின்றனர். இது ஒரு புறமிருக்க  கூட்டமைப்பினரின் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பாக பாரிய அதிருத்தியில் மட்டக்களப்பு மக்கள் இருந்தனர்.  பல அமைப்புக்கள் இம் மாநாட்டினை புறக்கணிக்கும்படி அழைப்பு விடுத்திருந்ததுடன் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு கறுப்பு கொடி போராட்டத்தினையும் நடாத்தி இருந்தனர். 

தமிழரசுக் கட்சியினர் தமது மாநாட்டை தேவநாயகம் மண்டபத்திலே நடாத்துவதற்கு  ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.  மட்டக்களப்பு மக்களின் ஆதரவு தமக்கு இல்லை என்பதனை படிப்படியாக உணர்ந்து கொண்ட தமிழரசுக் கட்சியினர். மாற்று வழிகளிலே தமக்கு ஆதரவு தேடவும் முன் வந்திருந்தனர்.

தமிழரசுக் கட்சியின் மாநாடு இடம்பெற இருந்த தேவநாயகம் மண்டபம் தீப்பிடித்து மேடைப்பகுதி எரிந்தது. இது மாநாட்டைக் குழப்ப சிலர் சதி செய்வதாக கூட்டமைப்பினர் கூறினர். சின்னச்சின்ன விடயங்களுக்கெல்லாம். பெரிதுபடுத்தி அறிக்கைகளைவிடும் கூட்டமைப்பினர் இத் தீப்பிடித்த விடயத்தினை சாதாரண விடயமாக மட்டுமே எடுத்துக் கொண்டு சிலர் சதி செய்கின்றனர் என்று பிரச்சாரம் செய்தனர். 

மட்டக்களப்பில் தமக்கு ஆதரவு இல்லை என்பதனை உணர்ந்த கூட்டமைப்பினர். ஆதரவு தேடுவதற்கு தாம் மேற்கொண்ட யுக்தியே மண்டபத்தின் மேடைப்பகுதி எரிப்பு. இது கூட்டமைப்பினர் திட்டமிட்டு செய்த செயலாகும்.

உடனடியாக மாநாடு இடம்பெறும் இடம் மட்டக்களப்பு ஊறணி அமேரிக்கன் மிஷன் மண்டபத்திற்கு மாற்றப்பட்டது. 27ம் திகதி மாநாடு இடம்பெற்றது. இம் மாநாடு வெற்றியா? தோல்வியா? பாரிய வெற்றியாக கூட்டமைப்பினர் மார் தட்டிக் கொள்கின்றனர். 
உண்மையில் வெற்றியா? அமேரிக்க மிஷன் மண்டபத்தில் 300ர-400 பேர்தான் இருக்க முடியும். இம் மாநாட்டுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து இரண்டு பஸ்களிலும், திருகோணமலையிலிருந்து இரண்டு பஸ்களிலும், அம்பாறையிலிருந்து ஒரு பஸ்ஸிலும் கொழும்பிலிருந்தும் மலையகத்திலிருந்தும் ஆதரவாளர்கள் வந்திருந்தனர். 

யாழ்ப்பாணம் , திருகோணமலை, அம்பாறை மாவட்ட்ளிலிருந்து வருகை தந்தவர்கள் ஒரு பஸ்ஸில் 50 பேர் வீதம் பார்த்தால் 250 பேர். தனிப்பட்ட வாகன்களிலும் பலர் மூன்று மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்திருந்தனர். அதனைவிட கொழும்பு மற்றும் மலையகத்திலிருந்தும் ஆதரவாளர்கள் வருகை தந்திருந்தனர். அதனைவிட கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் 50 மேற்பட்டவர்கள். 

மொத்தமாக மண்டபத்தில் 300-400 பேர் மட்டுமே இருக்க முடியும் மேலே சொன்ன கணக்கின்படி பார்த்தாலே மண்டபம் நிநை்துவிடும். ஆனாலும் மாநாட்டை குழப்ப வந்ததாக  கூட்டமைப்பினர் கூறும் மண்டபத்திற்குள்ளே சர்ச்சையை ஏற்படுத்தியவர்கள் 50 க்கு மேற்பட்டவர்கள். இவை அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்கின்றபோது மாநாட்டுக்கு மட்டக்களப்பிலிருந்து சென்றவர்கள் 50 க்கும் குறைவானவர்களே எனது களுதாவளைக் கிராமத்தினைச் சேர்ந்தவர்தான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை களுதாவளைக் கிராமத்திலிருந்து மாநாட்டுக்கு சென்றவர்கள் இரண்டு பேர் மட்டுமே. கனகசபை மற்றும் இன்னொருவர். இந்த மாநாட்டின் உப தலைவரான கனகசபை தனது சொந்தக்காரர்களைக்கூட மாநாட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு களுதாவளையில் இருந்து சென்றவர்கள் 374 பேர். இவர்களை யாரும் வற்புறுத்தி அழைக்கவில்லை தாமாகவே மாநாட்டுக்கு வந்தவர்கள்.

கறுப்புக் கொடிகள் கட்டியது துண்டுப் பிரசுர்கள் வெளியிட்டது பிள்ளையான் குழுவினர் என்று யோகேஸ்வரன் சொல்கின்றார். அப்படியானால் மட்டக்களப்பு மக்கள் ஏன் மாநாட்டுக்கு வரவில்லை. மாநாட்டை புறக்கணித்தனர். பிள்ளையான் சொல்வதனை கேட்கின்றனர். பிள்ளையானின் பக்கம் மட்டக்களப்பு மக்கள் நிக்கின்றார்கள் அல்லவா?

இந்த மாநாடு தோல்லியா வெற்றியா என்பதனை மட்டக்களப்பு மக்கள் புறக்கணித்ததனை வைத்தே தீர்மானிக்கலாம். இம் மாநாடு மட்டக்களப்பு மக்கள் கூட்டமைப்பினரை தூக்கி எறிந்துவிட்டனர் பிள்ளையானின் பின்னால் ஒன்று பட்டுவிட்டனர் என்பதனை பறை சாற்றுகின்றன. 
இறுதியாக யோகேஸ்வரனிடம் ஒரு கேள்வி உங்கள் ஊரிலிருந்து எத்தனைபேர் மாநாட்டுக்கு வந்திருந்தனர்  என்று சொல்ல முடியுமா?

read more...

Wednesday, 23 May 2012

யார் இந்த இராஜதுரை பகுதி -02

அடுத்துவந்த 1956 ஆம் ஆண்டு தேர்தலுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தொகுதிகளிலும் தமிழரசுக்கட்சியை போட்டியிட வைப்பதிலும் இராஜதுரை மும்முரமாக உழைத்தார். கல்குடாவில் மாணிக்கவாசகரும், பட்டிருப்பில் இராஜமாணிக்கமும் இராஜதுரையால் தமிழரசுக்கட்சிக்காக உள்வாங்கப்பட்டனர். மட்டக்களப்புத் தொகுதியில் தானே முன்வந்து போட்டியிட துணிந்தார்.
பகுத்தறிவு இயக்கம், மட்டக்களப்பு முற்போக்கு வாலிபர் சங்கம், வரியிறுப்பாளர்கள் சங்கம், இலக்கியம், எழுத்துலகம் என்று விரிந்துகிடந்த தனது ஆற்றல்களையும் அனுபவங்களையும் தமிழரசுக்கட்சிக்காக தாரைவார்த்தவர் இராஜதுரையாகும். தமிழரசுக்கட்சியால் வளர்ந்தவர்கள் பலர் உண்டு. இன்றும் தமிழரசுக்கட்சியின் பெயரை உச்சாடனம் செய்வது ஒன்றே பதவி சுகத்தை தக்கவைப்பதற்கான அரசியல் மந்திரமாக பலருக்கு இருக்கின்றது. (இந்த பட்டியல் இரா.துரைரெட்ணம் வரை நீண்டு செல்கிறது) இராஜதுரை விடயத்தில் இந்த சூத்திரம் தலைகீழானது. இராஜதுரை தமிழரசுக்கட்சியால் வளர்ந்தார் என்பதைவிட இராஜதுரையால்தான் தமிழரசுக்கட்சி வளர்ந்தது என்பதே சாலப்பொருத்தமும் சத்தியமுமாகும். 1956 ஆம் ஆண்டு தேர்தலில் மட்டக்களப்பு தொகுதியின் இரண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை கட்டுக்காசு இழக்கவைத்து அபார வெற்றியீட்டினார் இராஜதுரை. அன்று தொடங்கி ஆறு தேர்தல்களில் தொடர்ச்சியாக ஒரே தொகுதியில் வெற்றியீட்டிய தமிழ் தலைவர்கள் இராஜதுரையை தவிர வேறு யாருமிலர்.
தமிழர்களுடன் முஷ்லிம்களும் இணைந்து வாழும் மட்டக்களப்பு தொகுதியில் தன்னால் தோற்றகடிக்கப்பட்ட சின்னலெவ்வை அவர்கள் பதவியை இழந்ததன் ஊடாக முஷ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டதென்பதை இராஜதுரை உணர்ந்துகொண்டார். அதன் அடிப்படையில் முஷ்லிகளின் பிரதிநிதித்துவத்தை தொடர்ச்சியாக உறுதிப்படுத்திக்கொள்ள மட்டக்களப்பு தொகுதியை இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கும் முயற்சியில் இராஜதுரை இறங்கினார். தேர்தல் ஆணையாளர் தல்கொட பட்டியா முன்னிலையில் சாட்சியம் அளித்து மட்டக்களப்பில் இரட்டை அங்கத்துவ தொகுதியின் அவசியம் பற்றி விளக்கிக் கூறினார்.
அதன்பலனாகவே மட்டக்களப்பு தொகுதியானது இரட்டை அங்கத்துவ தொகுதியாக்கப்பட்டமையும் தொடர்ச்சியாக முஷ்லிம்களின் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்படவும் ஏதுவாயிற்று.
1956 ஆம் ஆண்டு முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான போது மட்டக்களப்பு நகரின் கூலித்தொழிலாளர்களும், நகரசுத்தித் தொழிலாளர்களும் உரிய வசிப்பிடம் இன்றி அல்லலுற்றதை கண்ணுற்றார். புகையிரத நிலையத்தை அண்டிய முடிக்குரிய காணிகள் அனைத்தையும் காடுவெட்டி குடிசைகள் அமைக்கத் தூண்டினார். அதற்காக அரசஅதிகாரிகளால் நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட்டார். தனது பாராளுமன்றப் பதவியை பயன்படுத்தி பாராளுமன்றில் தொழிலாளர்களின் காணிப்பிரச்சனையை எழுப்பியதின் ஊடாக அன்றைய காணிஅமைச்சர் சி.பி.டி.சில்வாவைக் கொண்டு அவர்களுக்கு காணி உறுதி வழங்கச்செய்தார். அந்த குடியேற்றப்பிரதேசங்களை இன்று இருதயபுரம் எனும் பெரும் பிரதேசமாக எழுந்துநிற்கின்றது.
கடல் கடந்த நாடுகளில் நிறுவப்பட்ட முதலாவது காந்திசிலையை மட்டக்களப்பு மாநகரில் இராஜதுரையே திறந்துவைத்தார். அண்மையில் மட்டக்களப்பு நகரில் உடைக்கப்பட்ட மகாத்மாகாந்தியின் சிலையே அதுவாகும்.

1960 ஆம் ஆண்டுவரை சிறுநகரசபையாக இருந்துவந்த மட்டக்களப்பை பெருநகரமாக மாற்ற இராஜதுரை அவர்கள் பெருமுயற்சி எடுத்தார். மட்டக்களப்பின் புறநகர் பகுதியாக இருந்துவந்த கல்லடி கிராமசபைக்குட்பட்ட கிராமங்களை மட்டக்களப்பு நகருடன் இணைத்து மாநகரசபையாக மாற்றினார். மட்டக்களப்பு மாநகர சபைக்கு முன்னே வெறிச்சோடிக்கிடந்த முற்றவெளி மைதானத்தை புனநிர்மானம் செய்து ஷ்ரேடியங்கள் அமைத்து மட்டக்களப்பின் விளையாட்டுத்திறனை தேசிய அளவில் பரிணமிக்கச் செய்த அருட்தந்தை வெபர் அவர்களின் பெயரை அந்த ஷ்ரேடியத்துக்கு சூட்டி மகிழ்ந்தார்.
1961 ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சியில் முதற்தடவையாக மே தினக்கூட்டம் ஒன்றை மட்டக்களப்பில் நடத்தி சாதனை படைத்தவர் இராஜதுரை. வைரமுத்து என்கின்ற ஒரு சாதாரண தொழிலாளியை அம்மேதின ஊர்வலத்திற்கு தலைமை ஏற்கச்செய்து தமிழரசுக்கட்சியின் பாரம்பரிய மேட்டுக்குடிப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றார். அதுமட்டுமன்றி தமிழரசுக்கட்சியின் சார்பிலான அந்த மே தினக்கூட்டத்தை கம்ய+னிசக்கட்சிக்காக மட்டக்களப்பில் அயராது பாடுபட்டுக்கொண்டிருந்த கிரு~;ணகுட்டியை கௌரவிக்கும் விழாவாக மாற்றினார். மட்டக்களப்பு மக்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளையாற்றி தொடர்ச்சியாக பாடுபட்டுவந்த இராஜதுரைக்கு உரிய கௌரவம் கட்சியில் வழங்கப்படவில்லை. தந்தை செல்வா இறந்தபின்னர் தலைமைப் பொறுப்புக்கு தகுதியாக இருந்த இராஜதுரை திட்டமிட்டவகையில் கட்சியால் ஒதுக்கப்படத் தொடங்கினார். கட்சியின் உருவாக்க காலத்தில் இருந்து தந்தை செல்வாவின் வலதுகையாக செயற்பட்டுவந்த இராஜதுரை அவர்கட்கு தந்தையின் மறைவை அடுத்து தலைமைப்பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும். அந்த உரிமை மறுக்கப்பட்டது மட்டுமல்ல அவரை கட்சியில் இருந்து நீக்கிவிடுவதற்கான சதிகள் மெதுமெதுவாக பின்னப்பட்டன.

1977 ஆம் ஆண்டு தேர்தலையொட்டி கட்சியில் அவருக்கு தேர்தலில் நிற்பதற்கான வாய்ப்பை மறுப்பதற்கு கூட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. கட்சிக்காக இராஜதுரையால் வளர்த்தெடுக்கப்பட்ட காத்தமுத்து சிவானந்தன் எனும் இளைஞனுக்கு பதவியாசை ஊட்டி மட்டக்களப்பு தொகுதியில் இராஜதுரையை போட்டியிடாமல் தடுக்கும் முயற்சி அமிர்தலிங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது. இராஜதுரையை தன் அரசியல் குருவாகவே எண்ணிவளர்ந்த காசி ஆனந்தன் மட்டக்களப்பு தொகுதியில் “நான் களையெடுக்கப்போகின்றேன்” என்று கட்சிப்பத்திரிகையான சுதந்திரனில் அறிக்கை விட்டார். கட்சிக்குள்ளேயே இரண்டு பேர் மட்டக்களப்பு தொகுதியில் ஒரே நேரத்தில் போட்டியிட சதி தீட்டப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த இராஜதுரை கட்சித்தலைமையை அணுகியபோது அதனை தேர்தல் நியமனக் குழு பார்த்துக்கொள்ளும் என்று அமிர்தலிங்கம் பதிலளித்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான வேளை வந்தபோது 1952 ஆம் ஆண்டில் இருந்து 1970 ஆம் ஆண்டுவரை கட்சியின் தேர்தல் நியமனக் குழு உறுப்பினராக இருந்து வந்த இராஜதுரை அப்பதவியில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் தலைமை ஒருதலைப்பட்சமாக அறிவித்தது. இது இராஜதுரைக்கு விழுந்த முதுலாவது அடியாகும். அதுமட்டுமல்ல தொடர்ச்சியாக ஐந்து தேர்தல்களில் (இருபது ஆண்டுகள்) வெற்றியீட்டிய இராஜதுரையை தேர்தல் நியமனக் குழுவின் முன்னர் நேர்முகப்பரிட்சைக்கு ஆஜராகுமாறு அழைத்து அவமானப்படுத்தினார் அமிர்தலிங்கம். அந்த நேர்முகப்பரிட்சைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் செல்லக்கூடாது என்றும் ஆதரவாளர்கள் இராஜதுரையை வேண்டிக்கொண்டனர். ஆனபோதிலும் கட்சி ஒழுங்கும், கட்சியின் நன்மையையும் கருதி தேர்தல் நியமனக்குழு முன்னர் ஒரு புதுமுக வேட்பாளரைப்போன்று இராஜதுரை ஆஜராகினார். அங்கு மட்டக்களப்பு தொகுதிக்கு புதிய வேட்பாளர்கள் எவரையும் போடவேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்பதற்கான காரணங்களை எடுத்துச் சொன்னதோடு இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில் ஒரு பிரதிநிதித்துவம் தொடர்ச்சியாக முஷ்லிம்களுக்குரியதாகவே இருந்துவரும் நிலையில் தமிழரசுக்கட்சி சார்பில் இரண்டு வேட்பாளர்கள் களத்தில் நிற்பதுவும் முஷ்லிம்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை மறுக்கும் செயலாகும் என்றும் விளக்கிக் கூறினார். அவரது எந்த விளக்கங்களும் தேர்தல் நியமனக்குழுவின் தலைமை நீதிபதியாக இருந்த அமிர்தலிங்கத்திடம் எடுபடவில்லை. இறுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இராஜதுரையையும், தமிழரசுக்கட்சியில் காசி ஆனந்தனையும் நிறுத்த கட்சி முடிவுசெய்தது. வடக்கு கிழக்கின் அனைத்து தொகுதிகளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியாக பரிணமித்து சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தமிழரசுக்கட்சியினர் மட்டக்களப்பில் மட்டும் மேலதிகமாக தமிழரசுக்கட்சியை இராஜதுரைக்கு போட்டியாக களமிறக்கினர். சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் தமிழரசுக்கட்சியின் சின்னமாக இருந்துவந்த வீட்டுச்சின்னம் காசி ஆனந்தனுக்கு வழங்கப்பட்டமை, புதிய சின்னத்தில் போட்டியிட நேர்ந்த இராஜதுரையின் ஆதரவாளர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

தேர்தல் நெருங்கிய வேளைகளில் இராஜதுரையின் தேர்தல் மேடைகளில் உரையாற்ற எந்தவொரு கட்சி முக்கியஷ்தர்களும் முன்வரவில்லை. ஈழவேந்தன், கோவை மகேசன், மாவை சேனாதிராஜா போன்றோர் மட்டக்களப்பில் களமிறக்கப்பட்டு காசி ஆனந்தனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். அவர்களது விசமத்தனமான பேச்சுகளும் கட்சிப்பத்திரிகையான ‘சுதந்திரனில்’ இராஜதுரைக்கு எதிராக வெளிப்படையாகவே எழுதிய பண்புகெட்ட எழுத்துகளும் அளவற்றன. பட்டிருப்பு தொகுதியிலும் கல்குடா தொகுதியிலும் உதயசூரியனை ஒளிரச் செய்யுங்கள் என்று பேசிய கட்சித் தலைவர்கள் அதே வாயால் மட்டக்களப்பு தொகுதியில் உதயசூரியனை உதிக்காமல் செய்யுங்கள் என்று பேசினர். 1977 ஆம் ஆண்டு தேர்தலில் ஒரே கட்சிக்குள்ளேயே இராஜதுரைக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அவமானங்களுக்கும் குத்துவெட்டுகளுக்கும் நிகர்த்த பிறிதொன்று இலங்கை வரலாற்றில் எங்கேனும் நிகழ்ந்ததில்லை.
1977 ஆம் ஆண்டு தேர்தலில் இராஜதுரைக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட இந்த சதி மட்டக்களப்பு மக்களால் தோற்கடிக்கப்பட்டது. வழமைபோலவே அந்தத் தேர்தலிலும் இராஜதுரை அமோக வெற்றியீட்டினார். வெற்றியின் பின்னர் தேர்தலில் நடந்த கழுத்தறுப்புகளை எல்லாம் மறந்துவிட முயன்று கட்சியில் தொடர்ந்து பணியாற்ற அவர் சித்தம் கொண்டேயிருந்தார். அதன் காரணமாகவே பட்டிருப்பு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்த ப+.கணேசலிங்கத்தின் வீட்டில் இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு வருமாறு விடப்பட்ட அழைப்பை ஏற்று அங்கு சென்றார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போன்று அங்கு சமரச முயற்சியில் யாரும் ஈடுபடவில்லை. செயற்குழுக்கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் கூட்டம் இடம்பெற்ற வீட்டைச்சுற்றி திட்டமிடப்பட்ட வகையில் குவிக்கப்பட்டிருந்த கட்சித் தொண்டர்களால் இராஜதுரை கேவலப்படுத்தப்பட்டார். அன்று மாலை பாட்டாளிபுரத்தில் இடம்பெற்ற கட்சியின் நன்றி நவிலல் பொதுகூட்டத்தில் இராஜதுரைக்கு பேச சந்தர்பம் மறுக்கப்பட்டது. தேர்தலில் தோற்ற காசி ஆனந்தன் முன்னணி பேச்சாளராக திகழ்ந்தார். மேடையிலே வீற்றிருந்த அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் செய்த சதியே அதுவாகும். தமிழரசுக்கட்சியின் தூணாக இருந்து கட்சியை வளர்த்தெடுத்த இராஜதுரைக்கு மட்டக்களப்பு மண்ணிலேயே பேசும் சந்தர்ப்பம் மறுக்கப்பட்டமை அவமானத்திலும் அவமானமாகும்.
இந்த நேரத்தில்தான் 1978 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தையே அழித்தொழித்த ‘சூறாவளி” வீசியது. வரலாறு காணாத பேரழிவுக்கு இலக்காகி நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துகிடக்க, பதினைந்து அடிகளுக்கு மேல் எழுந்த கடல்கொந்தளிப்பு பல கிராமங்களை தடைமட்டமாக்கிவிட, 14 லட்சம் தென்னைமரங்கள் வீழ்ந்துகிடக்க, வீதிகள் எங்கும் உடைந்து மறிபட்டு சிதிலமடைந்து சீரழிந்த நிலையில் அவ்வழிவுகளை பார்வையிட பிரதமர் பிறேமதாசா மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தார். மக்கள் முன்னிலையில் மட்டக்களப்பின் அழிவுநிலையை எடுத்துச் சொல்லவேண்டிய பொறுப்பும் அவசரமும் மட்டக்களப்பு பாராளுமன்ற பிரதிநிதி எனும் வகையில் இராஜதுரைக்கு இருந்தது. அந்தவகையில் இராஜதுரை பிரதமர் பிறேமதாசாவை சந்தித்து மட்டக்களப்பின் அழிவுநிலையை எடுத்தியம்பினார்.

மட்டக்களப்பின் பரிதாபநிலையை ஆதரவற்றுக்கிடந்த மக்களுக்கான அவசரத் தேவைகளை பிரதமரிடம் எடுத்துக்கூறியது மன்னிக்க முடியாத குற்றம் என்று கட்சியின் மேலிடம் குற்றம் சுமத்தியது. இதற்கான விளக்கம் கோரி உடனடியாக பதிலிறுக்குமாறு கட்சி மேலிடம் இராஜதுரைக்கு நெருக்கடி கொடுத்தது. அந்த வேளையில் யாழ்ப்பாணம் செல்வதோ கட்சியினுடனான சமரச முயற்சிகளில் ஈடுபடுவதற்கோ கால அவகாசம் இருக்கவில்லை. மட்டக்களப்பு மண் அழிந்துகிடக்க உடனடியாக யாழ்ப்பாணம் செல்லமுடியாத நிலை முப்பது நாட்கள் அவகாசம் கேட்டு கட்சி மேலிடத்திற்கு கடிதம் எழுதினார் இராஜதுரை. முப்பது வருடங்கள் கட்சி வளர்த்தவனுக்கு தன் மீது சுமத்தப்பட்ட அபாண்டமான பழி பற்றி சுயவிளக்கம் சொல்ல முப்பது நாட்கள் அவகாசம் மறுக்கப்பட்டது. இன்னிலையில் கட்சித் தலைமையினால் தனக்கு எதிராக இழைக்கப்பட்டு வந்த அலட்சியங்கள், அநீதிகள், உபத்திரவங்கள், உத்தரிப்புகள், கழுத்தறுப்புகள் அனைத்துக்கும் முடிவாக கட்சியை விட்டே விலகிவிடுவதென்ற முடிவுக்கு இராஜதுரை வந்தார். தனது அரசியல் லாபத்திற்காக நாளொரு கட்சிதேடி அலைந்தவர் அல்ல இராஜதுரை. யாழ்ப்பாணத்து மேட்டுக்குடி அரசியல் மட்டக்களப்பானை எப்படியெல்லாம் அலைகழிக்கும் என்கின்ற பாடங்களை வருடக்கணக்கில் அனுபவித்த பின்னரே தமிழரசுக்கட்சி அரசியலை விட்டுத்தொலைக்க அவர் முடிவெடுத்தார். தர்மத்தின் ஆவேசம் அது.

யாழ் மேட்டுக்குடி அரசியலில் மொத்த வடிவமாகிவிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து அவர் தன்னை விலக்கிக்கொண்டார். சூறாவழி காரணமாக நிர்கதியாக கிடந்த மட்டக்களப்பு மக்களின் துயர்துடைக்க அரசாங்கத்தில் இணைவதா? அன்றில் அரசியலை விட்டே ஒதுங்கிவிடுவதா? என்கின்ற கேள்வியில் சிக்கித் தவித்தார். தமது ஆதரவாளர்களினதும் மட்டக்களப்பு புத்திஜீகளினதும் ஆலோசனையின் பேரில் அரசியலில் இருந்து ஒதுங்குவதில்லை எனும் முடிவுக்கு வந்தார். அரசாங்கத்தில் இணைய முன்வந்தபோது அரசாங்கம் அவருக்கு அமைச்சுபதவி வழங்கி கௌரவித்தது. பிரதேச அபிவிருத்தி, இந்துசமய கலாசார தமிழ்மொழி அமூலாக்கல் அமைச்சு எனும் புதிய அமைச்சு ஒன்றை உருவாக்கி வடக்கு கிழக்கு மக்களின் பல அரசியல் கோரிக்கைகளை தீர்க்க அவருக்கு சந்தர்ப்பத்தைக் கொடுத்தது. இலங்கையில் முதன் முதலாக இரண்டு மாகாணங்களை விசேடமாக குறிப்பிட்டு அப்பிரதேசத்திற்கான அபிவிருத்தி செய்வதை நோக்காகக் கொண்டு பிரதேச அபிவிருத்தி அமைச்சு உருவாக்கப்பட்டது. இதனூடாக கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வேலைவாய்ப்பு …. போன்ற அனைத்து துறைகளிலும் வடகிழக்கில் அபிவிருத்தி மேற்கொள்ள இவ்வமைச்சுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல, கொழும்பு பல்கலைக்கழகத்திலும் தமிழ் பேராசிரியராய், இராஜாஜியின் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்ட தமிழ் கலைச்சொல் அகராதி கழகங்கள் அனைத்துக்குமான பொதுத்தலைவராய், 2000 ஆண்டுகால தமிழ் இசையை மீட்டெடுத்து யாழ் நூல் ஆக்கித்தந்த இசைமுனியாய் வாழ்ந்த தமிழ் இலக்கியப் பேரூலகின் ஒரே முத்தமிழ் வித்தகன் விபுலானந்தனின் ஒப்பற்ற சாதனைகளை பிரதேசநலம் பேணும் தமிழ் அறிவுலகம் பேரூவகை கொண்டு அணுக மறுத்து வந்தபோது இராஜதுரை தமது அமைச்சு பதவி உதவியுடன் விபுலானந்தருக்கு பெரும் கௌரவம் அளித்தார்.
விபுலானந்தா இசைநடனக்கல்லூரி என்கின்ற பென்னம்பெரு மையத்தினை அமைத்து அப்பெருமானரின் பெயரை நீக்கமற நிலைக்கச்செய்தார். அந்த இசைநடனக் கல்லூரியே இன்று கிழக்கு பல்கலைக்கழத்தின் நுண்கலைத்துறையாக பரிணமித்துள்ளது. அதுமட்டுமன்றி இலங்கை அரசைக்கொண்டே (1979 ஆம் ஆண்டு) அப்பெருமகனாருக்கு நினைவு முத்திரை வெளியிடச்செய்தார். மட்டக்களப்பு நகரின் மீன்பாடும் வாவியை அழகுபடுத்தும் பெரும்திட்டத்தை ஆரம்பித்தார். விபுலானந்தருக்குரிய மணிமண்டபத்தை அமைத்தது மட்டுமல்ல, யாழ்ப்பாண மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு நாவலர் மணிமண்டபத்தை அமைத்தது இந்த இராஜதுரையேயாகும்.
இராஜதுரை தமிழ் மொழி அமுலாக்க அமைச்சராக இருந்த காலத்திலேயே இலங்கையில் தமிழ் மொழி அரசகரும மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசகருமமொழிச் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி 12 வது சட்டதிருத்தத்தை உருவாக்கியதினூடாக தமிழ் மொழிக்கும் சம அந்தஷ்து வழங்கப்பட்டது. இதனை வரலாற்றில் திட்டமிட்டு அனைவரும் மறைத்துக்கொண்டிருக்கின்றார்கள். சட்டமேதைகள் நிறைந்த தமிழரசுக்கட்சியினரால் வாதப்பிரதிவாதங்களை எழுப்ப முடிந்ததே தவிர எதையும் சாதிக்க முடியவில்லை. ஆனால் தமிழ் மொழிக்கு அரசகருமமொழி அந்தஷ்து வழங்கப்பட்டது இந்த இராஜதுரையால் நிகழ்த்தப்பட்ட சாதனையேயாகும். அமைச்சராக இருப்பது துரோகமாய் இருந்தால் அதுவரை காலமும் தமிழ் தலைவர்கள் யாரும் அரசுடன் இணைந்து அமைச்சராய் இருக்கவில்லையா? 1947 இல் ஜி.ஜி.பொன்னம்பலம் அமைச்சராகி பத்து லட்சம் மலையகமக்களின் வாக்குரிமைகளைப் பறிக்க அரசுக்கு துணைபோனாரே, அவரை துரோகி என்று வரலாற்று ஆசிரியர் யாரும் குறிப்பிடுவதில்லையே?
1965 இல் ஐம்பதுக்கு ஐம்பது பெற்றுத்தருகிறேன் என்று அதே ஜி.ஜி.பொன்னம்பலமும் சம~;டி ஒன்றே தீர்வாகும் என்று தமிழரசுக்கட்சியும் கன்னை பிரித்து நின்று தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டு டட்லி சேனநாயக்காவின் அரசாங்கத்தில் பதவிகளுக்காக சங்கமமானது துரோகமில்லையா? தமிழரசுக்கட்சியினரை சமாளிக்க பட்டிருப்பு இராசமாணிக்கத்திற்கு அமைச்சர் பதவியை வழங்குகிறோம் என்று ஆசை காட்டிவிட்டு தமிழரசுக்கட்சியின் கொழும்பு புறோக்கறான திருச்செல்வத்திற்கு அமைச்சுபதவியை வழங்கியது செல்வநாயகம் செய்த நம்பிக்கைத்துரோகம் இல்லையா? தமது பங்கிற்கு ஜி.ஜி.பொன்னம்பலம் வாங்கிய உபசபாநாயகர் பதவியை பெற்றுக்கொண்ட சிவசிதம்பரத்தை துரோகி என்று யாரும் சொல்வதில்லையே?

இராஜதுரை யாழ் மேட்டுக்குடி தமிழரசுக்கட்சியினால் வஞ்சிக்கப்பட்டு ஆறாத ரணங்களை நெஞ்சிலே சுமந்துகொண்டு அரசாங்கத்தில் இணைந்தது மட்டும் எப்படிக் குற்றமாகும்?
read more...

Thursday, 17 May 2012

தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்கும் இரகசிய முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பா.அரியநேந்திரன் - பின்னனியில் சில திரைமறைவு சக்திகள்.

தமி;ழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான திரு.பாக்கியசெல்வம் அரியநேந்திரன், புலம்பெயர்ந்தவர்களால் நடாத்தப்பட்டுவரும் இணையத்தளமான – தினக்கதிருக்கு தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தொடர்பில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இவ்வறிக்கையை வெளியிடுகின்றது.
 
தனது செய்தியில், திரு அரியநேந்திரன் -  எமது அமைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு அங்கமாக இணைத்துக் கொள்வதை ஆட்சேபித்திருப்பதுடன், இதனை மீறி நாம் இணைத்துக் கொள்ளப்பட்டால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்திருக்கின்றார். மேலும் அரியநேந்திரன், எமது அமைப்பை இராணுவத்துடன் தொடர்புபடுத்தி உண்மைக்கு மாறான ஒரு அபிப்பிராயத்தையும் மக்கள் மயப்படுத்த முற்பட்டிருக்கின்றார். அவர் எமது அமைப்பு தொடர்பில் குறிப்பிட்டிருக்கும் அனைத்து விடயங்களும் அடிப்படையற்றவை.
 
சமீபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஐவரோதயம் சம்பந்தன் அவர்களின் தலைமையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் ஓர் ஆரோக்கியமான சந்திப்பு இடம்பெற்றிருந்த சூழலில், உருத்திரண்டு வரும் ஒற்றுமைக்கான சூழலை சீர்குலைக்கும் வகையில், அரியநேந்திரன் திட்டமிட்டு இத்தகையதொரு செய்தியை வெளியிட்டிருக்கின்றார். இதனை நாம் வன்மையாக கண்டிப்பதுடன், இவ்வாறான சீர் குலைவு நடவடிக்கைகள் குறித்து மக்களை விழிப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். 
 
தமிழ் மக்களுடைய விடுதலைக்கான போராட்டத்தில் பங்குகொண்ட எந்தவொரு அமைப்போ அல்லது கட்சிகளோ விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. அந்தவகையில், நாம் கடந்தகாலம் குறித்த ஆரோக்கியமான விமர்சனங்களை எப்போதுமே வரவேற்று வந்திருக்கிறோம். ஆனால் இரண்டாம்தரமான வார்த்தை பிரயோகங்கள் மூலம், எமது அமைப்பை கொச்சைப்படுத்த முற்படும்போது அது குறித்து நாம் அமைதியாக இருக்க முடியாது. இந்த அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனின் அரசியல் நம்பகத்தன்மை குறித்தும், அவரது சமீபகால தீய உள்நோக்கம் கருதிய செயற்பாடுகள் குறித்தும் சில உண்மைகளை மக்கள்முன் வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நாம் ஆளாகியுள்ளோம்.
 
நாம் கடந்த காலத்தில், விடுதலைப்புலிகளின் அணுகுமுறைகளையும், அவர்களால் திணிக்கப்பட்ட ஏகப்பிரதிநிதித்துவ அரசியலையும் எதிர்த்து வந்திருக்கிறோம். இது அனைவரும் அறிந்த உண்மை. கடந்த காலத்தில் விடுதலைப்புலிகள் எமது அமைப்பின் உறுப்பினர்களை கொல்லும் நோக்கத்துடன் எதிர்கொண்ட போது, எமது உறுப்பினர்களும் தங்களை தற்பாதுகாத்துக் கொள்வதற்காக புலிகளின் உறுப்பினர்களை எதிர்கொண்டிருக்கின்றனர். இதுவும் அனைவரும் அறிந்த உண்மை. இவற்றை நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மறைக்க முயன்றதும் இல்லை. அப்படி மறைத்து அரசியல் செய்ய வேண்டிய எந்தவொரு அவசியமும் எமக்கில்லை. நாம் அப்போது மட்டுமல்ல, இப்போதும் எந்தவொரு ஏகப்பிரதிநிதித்துவ அரசியல் வாதங்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏகப்பிரதிநிதித்துவ வாதம் என்பது ஒரு சமூதாயத்தின் பன்முகத் தன்மையை மறுக்கும் ஒரு ஜனநாயக விரோத செயலாகும்.
 
ஒரு கொள்கைநெறியால் வழிநடத்தப்பட்ட அரசியல் இயக்கம் என்ற வகையில் எம்மால் எம்மை பகிரங்கமாக வெளிப்படுத்த முடியும். ஆனால் எம் மீதான அவதூறுகளை பரப்ப முற்படும் அரியநேந்திரனால் அது முடியாது.
 
பாக்கியசெல்வம் அரியநேந்திரனின் அரசியல் நம்பகத்தன்மை எத்தகையது?
 
தொழில் ரீதியாக மிருக வைத்தியரின் உதவியாளரான(மிருக சினைப்படுத்தும் அலுவலர்), திரு.அரியநேந்திரன், அடிப்படையில் ஓரு ஜக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளராவார். அன்று மட்டக்களப்பில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த தினக்கதிர் என்னும் செய்தி பத்திரிகையில் ஒரு செய்திசேகரிப்பாளராக இவரும் இணைந்து கொண்டார். மிருகவைத்திய உதவியாளர்(மிருக சினைப்படுத்தும் அலுவலர்), செய்தியாளர் என்னும் இரு முகங்களுடனும் சமூகத்துடன் ஊடாடிய அரியநேந்திரன், அப்போது விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்த கௌசல்யனுடன் இருந்த உறவுமுறையைப் பயன்படுத்தி புலிகளின் விசுவாசியாக தன்னை உருமாற்றிக் கொண்டார். புலிகளின் தொடர்பு ஜக்கிய தேசியக் கட்சியின் அரியநேந்திரனை, தமிழ் தேசியவாதியாக காட்டிக்கொள்ள உதவியது.
 
2004 இல் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் புலிகளின் மட்டக்களப்புக்கான வேட்பாளர்கள் பட்டியலில் கௌசல்யனூடாக இடம்பிடித்துக் கொண்ட அரியநேந்திரனால்  தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. அன்று புலிகள் இயக்கத்தில் கருணாவின் பிரிவால் ஏற்பட்டிருந்த குழப்பநிலையை சாதுரியமாக பாவித்து அப்போது வெற்றிபெற்றிருந்த சிறந்த சமூக சேவையாளரான கிங்ஸ்லி ராசநாயகத்தை பதவியில் இருந்து விலக்குவதன் மூலம் தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வருவதற்கான சதி முயற்சியை அரியநேந்திரன் எடுத்தார். கௌசல்யனின் ஊடாக கிங்ஸ்லி ராசநாயகத்தை இராஜினாமா செய்யுமாறு அரியநேந்திரன் தூண்டியிருந்தார். ஆனால் ராசநாயகம் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்றவகையில் புலிகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்திருக்கவில்லை. இதன் விளைவாக ஒக்டோபர் 14-2004 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி ராசநாயகம் படுகொலை செய்யப்பட்டு அவரது இடம் அரியநேந்திரனுக்கு வழங்கப்பட்டது. கிங்ஸ்லியின் கொலைக் குருதியால் பாக்கியசெல்வம் அரியநேந்திரன் தனது பட்டாபிசேகத்தை நிறைவு செய்து கொண்டார்.
 
விடுதலைப் புலிகளிலிருந்து கருணா பிரிந்தபோது, கருணாவின் பிளவை நியாயப்படு;த்தி அரியநேந்திரன் செயற்படலானார். ராஐன் சத்தியமூர்;த்தி, ஜெயானந்த மூர்;த்தி, சிவராம் ஆகியோருடன் இணைந்து கருணாவின் செயற்பாட்டை பிரதேசவாதம் பேசி நியாயப்படுத்தினார். ஜக்கிய தேசியக் கட்சியில் இருந்து தமிழ்  தேசியத்திற்கு தாவிய அரியநேந்திரன் இறுதியில் மட்டக்களப்பு வாதத்திற்கு தாவினார். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மை மீளவும் ஸ்திரப்படுத்திய பின்பு அரியநேந்திரன் தடாலடியாக கருணாவிற்கு எதிராக திரும்பியதுடன், புலிகளின் ஆதரவாளனாகவும் தன்னை காட்டிக் கொண்டார். ஒருவேளை கருணாவின் கை மட்டக்களப்பில் ஓங்கியிருந்திருந்தால், இன்;றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் கருணாவின் விசுவாசியாக இயங்கியிருப்பார். இத்தகைய சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொண்டு வரும் அரியநேந்திரன் என்பவரே, எமது அமைப்பின் நம்பகத் தன்மை பற்றி பேசியிருக்கிறார்.  
 
அரியநேந்திரன் இவ்வாறு செயற்படுவதன் பின்னணி என்ன?
                                            
சமீபகாலமாக அரியநேந்திரன் அவ்வப்போது அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் தன் மீதான கவனஈர்ப்பை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றார். இதன் தொடர்ச்சியாகவே தற்போது மட்டக்களப்பு தமிழசுக் கட்சியை மீறி, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் எமது அமைப்பை இணைத்துக் கொண்டால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என்றும் எச்சரிக்கை ஒன்றை விட்டிருக்கின்றார். இதன் மூலம், தன்னை மட்டக்களப்புக்கான தமிழரசுக் கட்சியின் தலைவராக காண்பிக்க முயன்றிருக்கிறார். இந்த இடத்தில் கருணாவின் மட்டக்களப்பு அரசியலை ஆதரித்து புலிகளை உடைக்கத் துணைபோனது போன்று, மட்டக்களப்புக்கான தமிழசுக் கட்சியின் தலைமையாக காட்டி, தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்க முற்படுகின்றார். நாம் மேலே குறிப்பிட்ட பாக்கியசெல்வம் அரியநேந்திரனின் தீய உள்நோக்கம் இதுவே ஆகும். சூழ்ச்சியாலும் சதியாலும் நாடாளுமன்ற கதிரையில் அமர்ந்த அரியம், தன்னை மட்டக்களப்பின் ஏகதலைவனாக காட்டிக்கொண்டு தனது பதவி-பட்டங்களுக்கு இடைய+று வந்துவிடக்கூடாதென்ற  முன்னெச்சரிக்கையுடன் தமிழ் மக்களின் ஒற்றுமையையும், கட்சிகளின் கூட்டினையும் சவாலுக்கு உட்படுத்துகின்றார். அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூட்டத்தின்போது கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை பல தடவைகள் துரோகி என விளித்துப் பேசியதும் கூட்டமைப்பை சிதைக்கும் முயற்சியின் ஒரு அங்கம் என்பதில் சந்தேகமில்லை.
 
இலங்கைக்குள் ஒரு நியாயமான அரசியல் தீர்வுக்கான முயற்சியில் தமிழ் மக்களாலும், சர்வதேசத்தாலும் தலைவராக அங்கீகரிகப்பட்டிக்கும் திரு. இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் எடுத்துவரும் முயற்சிகளை சீர்குலைக்கும் வகையில், இலங்கைக்குள்ளும் வெளியிலிருந்தும் சில தீய சக்திகள் மிகவும் நுட்பமாக செயற்பட்டுவருவதாகவே எமது அமைப்பு திட்டவட்டமாக நம்புகிறது. அத்தகையதொரு சக்தியின் ஏவலாளியாக நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அரியநேந்திரன் செயற்பட்டு வருகின்றாரா என்னும் சந்தேகம் வலுக்கின்றது.
 
இதன் மூலம் அத்தகைய சக்திகள் இரண்டு விடயங்களை எதிர்பார்க்கின்றன…
 
1.    இன்றைய இக்கட்டானதொரு அரசியல் சூழலில், தமிழ் மக்களின் அரசியல் சக்தியாகவும், மக்களின் ஒன்றுபட்ட குரலாகவும் செயற்பட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைபபில் இருந்து ஒரு சில கட்சிகளை வெளியேற்றுவதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதற்கான அரசியல் கட்டமைப்புசார் பலத்தை சிதைப்பது.
2.    ஜக்கியப்பட்ட இலங்கைக்குள் நியாயமான தீர்வு என்னும் இலக்கில் முன்னேறி வரும் இராசம்பந்தருக்கு உள்ளுக்குள்ளும் வெளியிலும் நெருக்கடிகளை கொடுப்பதன் மூலம் அவரின் மீது ஒருவகை உளவியல் தாக்குதலை தொடுப்பதன் மூலம் அவரை அரசியலில் இருந்து ஒரங்கட்டுவது. 
 
இந்த இரண்டு விடயங்களையும் மேற்கோள்ளும் நோக்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேந்திரன் களமிறங்கியிருக்கின்றார். இது போன்ற செயற்பாடுகளை எமது அமைப்பு வன்மையாக எதிர்த்து நிற்கும் என்பதை நாம் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம். இது போன்று எத்தகைய அவதூறுப் பிரச்சாரங்களை அரியநேந்திரன் போன்றவர்கள் மேற்கொண்டாலும், எமது அமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமது மக்களை மேலும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் எந்தவொரு செயற்பாடுகளையும் அனுமதிக்கப் போவதில்லை என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
 
 
ரி. பாலசிங்கம்,
மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர்,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்,
15.05.2012.

read more...

Wednesday, 16 May 2012

வடக்கு அரசியல்வாதிகள் கிழக்கிற்கு வந்தால் கறுப்புக்கொடி போராட்டம் நடத்துவோம் - மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு

மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு 
People Organization for Change

அண்மையில் வடக்கில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் நினைவு தினத்திற்கு கிழக்கு மக்களால் சொல்லின் செல்வர் என போற்றப்படுகின்ற இராஜதுரை அழைக்கப்பட்டு சிவாஜிலிங்கம் அவர்களால் கறுப்புக்கொடி காட்டப்பட்டு மட்டக்களப்பான் துரோகி என்றும், சக்கிலியன் என்றும் திட்டமிட்டு அவமானப்படுத்தப்பட்டார்.

இவ் விடயம் இடம்பெற்று வாரங்கள் கடந்துவிட்ட இன்றைய நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சிவாஜிலி்ங்கம் அவர்களின் இச் செயற்பாடு தொடர்பில் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை. கூட்டமைப்பினர் இவ்வாறு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமை சிவாஜிலி்கத்தின் கூற்றை ஆதரிப்பது போன்று அமைந்திருக்கின்றது.

ஆகவே மட்டக்களப்பான் மடையன் என்றும் சக்கிலியன் என்றும் கூறிய சிவாஜிலிங்கத்துக்கு எந்தவித நடவடிக்கையும் எடு்காமல் அவரின் கூற்றை ஆதரிக்கும் கூட்டமைப்பின் வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் யாராவது மட்டக்களப்புக்கு வருவார்களானால் அவர்களுக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டத்தினை முன்னெடுப்பதோடு மக்கள் அவர்களுக்கெதிராக வீதியில் இறங்கிப் போராடுவார்கள்

மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு 
கிழக்கிலங்கை
15.05.2012
read more...

கிழக்கில் இடம்பெற இருக்கின்ற மாகாணசபை தேர்தல் தொடர்பில் கிழக்கிலங்கை மாற்றத்துக்கான மக்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை

மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு 
people Organization for Change (POC)

கிழக்கு மாகாணசபை கலைக்கப்படும் என பரவலாக தமிழ் ஊடகங்களில் பேசப்படுகின்ற இன்றைய நிலையில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் என்று மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டி இடுவதன் உண்மை நோக்கம் வெறுமனே கிழக்கு மாகாணத்தின் மீதும் கிழக்கு மக்கள் மீதும் இருக்கின்ற அக்கறை அல்ல. கிழக்கிலே இடம்பெறுகின்ற துரித அபிவிருத்தியினை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் உண்மை நோக்கம்.

பரவலாக அவர்கள் இப்போது மேடைகளில் பேசுகின்ற விடயம் பிள்ளையான் முதலமைச்சராக வரக்கூடாது என்பதாகும். இவர்கள் மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவது கிழக்கு மக்களின் மீதும் கிழக்கின் மீதும் இருக்கின்ற அக்கறை இல்லை. கிழக்கில் பிள்ளையான் அவர்கள் முதலமைச்சராக இருக்கக்கூடாது. என்பது மட்டுமே.

கிழக்கில் பிள்ளையான் முதலமைச்சராக இருப்பதனால் கூட்டமைப்பினர் கிழக்கு மக்களை ஏமாற்ற முடியாது. மறு பக்கத்தில் கிழக்கு மாகாண துரிதமாக அபிவிருத்தி கண்டு வருகின்றது கிழக்கை அபிவிருத்தி அடைய விடக்கூடாது எனும் யாழ்ப்பாண தலைமைகளின் எண்ணங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் செயலுருவம் கொடுத்து வருகின்றனர். 

உண்மையாகவே கிழக்கில் மாகாணசபை தேர்தல் ஒன்று நடக்குமாக இருந்தால் கூட்டமைப்பு தனித்து போட்டியிட்டால் தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு தமிழ் முதலமைச்சரை இழக்க நேரிடும். இது கூட்டமைப்பினருக்கு தெரியும். அதனையே கூட்டமைப்பினரும் விரும்புகின்றனர். தமிழ் முதலமைச்சரை பெற முடியாமல் போணால் கிழக்கின் அபிவிருத்தி தடைப்படும் கூட்டமைப்பினரின் நோக்கமும் அதுதான்.

அது ஒரு புறமிருக்க வடக்கு, கிழக்கு இணைப்பே கூட்டமைப்பின் கொள்கை ஆனால் தனியாக பிரிந்திருக்கின்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது. அவர்களின் கொள்கைக்கு முரணானது இல்லையா? அல்லது கொள்கைகளை கைவிட்டு விட்டனரா? அல்லது தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற நினைக்கின்றனரா எனும் கேள்விகள் எழுகின்றன.

கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அமைக்கவும் முடியாது தமிழர்கள் எதிர்க் கட்சிக்கே செல்ல வேண்டும். அதனால் தமிழர்களால் எதுவும் செய்ய முடியாது என்பதும் கூட்டமைப்பினருக்கு தெரியும். இவை அனைத்தையும் அறிந்தும் கிழக்கில் பிள்ளையான் முதலமைச்சராக இருக்கக்கூடாது கிழக்கில் அபிவிருத்தி இடம்பெறக்கூடாது என்பதற்காக மாகாணசபை தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கும் கூட்டமைப்பின் செயற்பாட்டை நாம் வண்மையாகக் கண்டிப்பதோடு வடக்கு மேலாதிக்க தலைமைகளின் கிழக்கு மீதான மேலாதிக்க சிந்தனைகளுக்கு துணைபோகும் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டும் 

மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு
கிழக்கிலங்கை
06.05.2012
read more...

Saturday, 12 May 2012

இன்னும் சில நிமிடங்களில் நேரடியாக ஒளிபரப்பாகும்

இன்னும் சில நிமிடங்களில் நேரடியாக ஒளிபரப்பாகும். குமாரதுரை அருணாசலம் அவர்கள் எழுதிய "இலங்கை அரசியல் வரலாறு இழப்புக்களும் பதிவுகளும்" எனும் நூல் வெளியீடு நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட இருக்கின்றன 




Watch live streaming video from puthiyavidiyal at livestream.com
read more...

Friday, 11 May 2012

இலங்கை அரசியல் வரலாறு இழப்புக்களும் பதிவுகளும்" எனும் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் நேரடி ஒளிப்பரப்பப்படும்

குமாரதுரை அருணாசலம் அவர்கள் எழுதிய "இலங்கை அரசியல் வரலாறு இழப்புக்களும் பதிவுகளும்" எனும் நூல் வெளியீடு நாளை (12.05.2012) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற இருக்கின்றது. இப் புத்தக வெளியீட்டு நிகழ்வுகள் காலை 10.00 மணிமுதல் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட இருக்கின்றன .

நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இணையத்தளங்கள்

www.meenmagal.net
www.puthiyavidiyal.com
www.shanthru.com
www.unmaikal.com
www.makkalinkural.com





Watch live streaming video from puthiyavidiyal at livestream.com
read more...

Tuesday, 1 May 2012

மட்டக்களப்பில் இடம்பெறும் மேதின நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு

மட்டக்களப்பில் இடம்பெறும் மேதின நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கின்றன. இவ் ஒளிபரப்பானது இன்று (01.05.2012) மாலை 03.00 மணிமுதல் மட்டக்களப்பிலிருந்து நேரடியாக ஒளிபரப்பாகும்.
ஒளிபரப்பாகும் இணையத்தளங்கள்

www.shanthru.com
www.puthiyavidiyal.com
www.meenmagal.net
www.unmaikal.com
www.makkalinkural.com




read more...