இன்று பரவலாகப் பேசப்படுகின்ற விடயம் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் - தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை தொடர்பான விடயமும் மாகாண சபைகளுக்கான பொலிஸ் காணி அதிகாரங்கள் தொடர்பான விடயமுமாகும். 01.01.2012 அன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தார். அக் கடிதத்தில் அரசு - கூட்டமைப்பு பேச்சுக்களின்போது வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்ந்த மாகாணசபைகளுக்கான பொலிஸ் காணி அதிகாரங்கள் பற்றி பேசப்படுமானால் தாம் அதற்கு ஆதரவு வழங்குவதாகவும் இவ்விடயம் தொடர்பில் தாம் கூட்டமைப்புடன் பேச தயாராக இருப்பதாகவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் முதலமைச்சர் அவர்கள் நல்ல முடிவினை எடுத்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விடயம்
முதலமைச்சரின் இக் கடிதமும் முதலமைச்சரின் நிலைப்பாடு தொடர்பிலும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது. ஆனாலும் குறுகிய நோக்கம் கொண்ட சிலர் இவ்விடயத்தை எதிர்ப்பது கவலைக்குரிய விடயம். ஒரு சமூகத்தைப் பிரதிநிதிப் படுத்துகின்ற தலைவர்கள் அம் மக்கள் தொடர்பாக எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. இவ்விடயத்தில் கட்சிகளுக்கிடையில் கருத்து வேறுபாடு இருப்பினும் மக்களுக்கான நல்ல திட்டங்கள் யாரால் முன் வைக்கப்பட்டாலும் அதற்கு ஆதரவு வழங்க வேண்டியது அச் சமூகம் சார்ந்த தலைவர்களின் கடமையாகும்.
கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டதன் பின்னரே கிழக்கு மாகாணம் துரித அபிவிருத்தி கண்டு வருகின்றது. ஆனாலும் மாகாண சபைக்கு பல அதிகாரங்கள் இல்லை. பல விடயங்களில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் முதலமைச்சரின் கையில் இல்லை. இவ்வாறு பல பிரச்சினைகள் இருக்கின்றன. பொலிஸ் காணி அதிகாரங்கள் இல்லாமையால் மாகாணசபை பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டி இருக்கின்றது.
பல உயிர் உடமை இழப்புக்களுக்குப்பின் தமிழருக்கு கிடைத்திருக்கும் தீர்வு மாகாணசபை முறமைதான். கிடைத்திருக்கும் மாகாணசபை முறமை மூலம் இன்னும் பல சலுகைகளையும் தீர்வுகளையும் பெற்றுக்கொள்ள தமிழர்களும் தமிழ் தலைவர்களும் ஒன்றுபட வேண்டிய நேரமிது.
இன்று மாகாண சபைக்கு பொலிஸ் காணி அதிகாரங்கள் வழங்கப்படுதல் தொடர்பாக பேசப்படுவது தமிழர்கள் சந்தோசப்படவேண்டிய விடயம். ஆனாலும் அற்ப சலுகைகளுக்காக இதனை சில தமிழ் தலைவர்கள் எதிர்ப்பது கவலைக்குரிய விடயமாகும்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) அவர்கள் மாகாண சபைகளுக்கு பொலிஸ் காணி அதிகாரங்கள் தேவையில்லை எனவும் சிறுபிள்ளைத்தனமான விளக்கங்களையும் கொடுத்திருக்கின்றார். இவரின் இவ்வாறான செயற்பாடுகளும் கருத்துக்களும் தமிழர்களுக்கு கிடைக்க இருக்கின்ற தீர்வுகளை இல்லாமல் செய்யலாம்.
இவருடைய செயற்பாடுகள் தமிழ் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கின்றதா என்றால் கேள்விக்குறிதான். இவர் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வரும்போது இவர் என்ன சொன்னார்? கிழக்குக்கென்று ஒரு தலைமைத்துவம் வேண்டும். கிழக்குக்கென்று ஒரு கட்சி வேண்டும் என்று புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்தவர். பிரிந்து வந்தபோது அவரை கிழக்கு மாகாண மக்கள் அனைவரும் அவரை நம்பினார்கள். பிரிந்து வந்தபோது புலிகளின் தலைமைப்பீடத்திற்கு எதிராக கிழக்கு மக்கள் வீதியில் இறங்கினார்கள். ஆனால் அவரை நம்பிய மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு தான் எதற்காக புலிகளில் இருந்து பிரிந்து வந்தாரோ அந்த நோக்கத்தை கைவிட்டு சலுகைகளுக்காக அரசுடன் இணைந்தார். அன்றுமுதல் இன்றுவரை தமிழர்களுக்கு தீர்வுத்திட்டங்கள் கிடைக்க இருக்கும் தருணத்தில் அவ்வப்போது வந்து குறுக்கிட்டுக் கொண்டிருக்கின்றார்.
மறு புறத்தில் முதலமைச்சர் அவர்கள் பல சவால்களுக்கு மத்தியில் மாகாணசபை மூலம் கிழக்கினை துரிதமான அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்கின்றார். வடக்கு கிழக்கில் இ்ன்றைய தேவை என்ன? யுத்தத்தால் அழிவடைந்த எமது தேசத்தை கட்டி எழுப்ப வேண்டும். எதிர்க்கட்சி ஆசனத்தில் இருந்தால் எந்த அபிவிருத்தியும் நடக்கப்போவதில்லை. அரசுடன் பேரம்பேசி அரசுக்கு நிபந்தனைகளுடன் ஆதரவு வழங்கி எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இருக்க வேண்டும்.
அதற்காக தமிழர்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்கக்கூடாது. இங்கு முதலமைச்சர் அரசாங்கத்துடன் இருந்தாலும் எடுத்திருக்கும் முடிவு பாராட்டப்பட வேண்டியது. அரசுடன் இருந்தாலும் எமது மக்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும். முதலமைச்சர் அவர்கள் அரசுடன் இருந்தாலும் பல தடவை அரசுடன் முரண்பட்டு வந்த சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. மாகாணசபைகளுக்கான பொலிஸ் காணி அதிகாரங்கள் தொடர்பிலும் பல சவால்களுக்கு மத்தியிலும் குரல்கொடுப்பது நல்ல விடயமே.
தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் தமக்கு வழங்கப்படும் அற்ப சலுகைகளுக்காக விலை போகாமல் ஒவ்வொரு தமிழ் தலைவர்களும் செயற்படுவது நல்லது.
0 comments: on "மாகாணசபைக்கு பொலிஸ் காணி அதிகாரங்கள் தேவை ஆதரிக்கும் பிள்ளையான் எதிர்க்கும் கருணா"
Post a Comment